அசைவறுமதி 14
பொதுவாக ட்ரூ காலரில் சிவப்பு நிறத்தில் ஸ்பேம்(spam) என வந்தால், அந்த அழைப்புகளை நான் எடுப்பதில்லை. இருந்தபோதும் இயர்ஃபோன் சகிதம் இருப்பதால் யாரெனத் தெரியாமல் அப்படி ஓர் அழைப்பு எடுக்க நேர்ந்தது. நான் வைத்திருக்கும் ஏர்டெல் நெட்வொர்க்கிலிருந்து அழைத்திருந்தார்கள். ஓர் ஆண் (சிறுவன் ) பேசினார். ஏன் அடைப்புக்குறிக்குள் சிறுவன் எனச் சொல்லியிருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன்.
கொரோனா ஊரடங்கின்போது அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், அவர்களது ஷோ ரூமும் அடைக்கப்பட்டு இருப்பதால் அவர் அழைத்ததாகச் சொன்னார். ஷோரூமில் கேட்கவேண்டும் என்று ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் சொல்லுங்கள் என்றார். என் பில் வகைமையைச் சொல்லி உங்களுக்கு அளிக்கப்படும் இன்டர்நெட் டேட்டா போதுமா என்றார். அதை மேம்படுத்த எதுவும் ப்ளான் மாறவேண்டுமா என்றார். அப்படியானால் அவரே ஆன்லைனில் மாற்றித்தருவதாகக் கூறினார். அப்படி மாறும்பொழுது என்னென்ன பயன் கள் கிடைக்கும் எனச் சொல்லட்டா என்றார்.
அமேஷான் ப்ரைம் ஒரு வருடம் இலவசம் என்றார். அதை நான் வோடாஃபோன் இணைப்பு வைத்திருப்பதால் அதை உபயோகிக்கிறேன் என்றேன். அதற்கானக் கட்டணத்தை விசாரித்தவர் இன்னொரு வருடம் இலவசமாய் செய்திருக்கலாமே சார் என்றார். அதற்கான ப்ளான்கள் இருப்பதை விளக்கினார். என் முதலீடு 100 ரூபாய் என்றவர் பயன் 1000 என்றார். அதுபோல் சர்வீஸ் வழங்கப்படும் மூன்று சானல்களைச் சொன்னார். நான் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. அவற்றைப் பற்றியும் நான் தெரிந்திருக்கவில்லை. ஒவ்வொன்றாய் அவற்றைக் கேட்டேன். எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். கூடுதலாய் அவற்றில் இருக்கும் வித்தியாசத்தையும் அவர்கள் அளிக்காத வசதி ஒன்றையும் அது எந்த நிறுவனம் என்பதையும் அப்டேட் செய்து வைத்திருந்தார். அவர்களது நிறுவனம் அளிக்காத ஒரு சர்வீஸைப் பற்றிக் கேட்டபோதும் கூட அதைப் பற்றித்தெரிந்துவைத்திருந்து அதற்கானத் தரவுகளைத் தருவது அவரது பெருந்தன்மை. individuality அதாவது ஒரு நிறுவனத்தில் வேலைபார்ப்பவரின் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் அவரது திறமை. அவரது குரல் மற்றும் அவரது பேசும் பாங்கை வைத்து ஓரளவிற்குத் தீர்மானித்து அவரிடம் கேட்டேன். நான் யோசித்தது சரி. அவர் வேலைக்குச் சேர்ந்து சில காலம் தான் ஆயிருக்கிறது. அது தான் அவரது முதல் நிறுவனம். அதனால் தான் சிறுவன் என்றேன். சிறுவன் என்பது அவரது வயதைக் குறிக்கும் சொல்தானே. புற வயதை நீங்கள் யோசிக்கலாம். நான் அக வயதைச்சொல்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு புதுவித முயற்சியில் சில அனுபவங்களை வைத்து நான்கு நிலைகளாய் நம் மன நிலையைப் பிரிக்கலாம். மன முதிர்ச்சியின் அடிப்படையில் பிரிக்கப்படுபவை. அப்பத்தமாக இருக்கலாம் ஆனால் உதாரணத்திற்குச் சில ..
புது நிறுவனத்தில் சேர்ந்து அந்தப் பையன் என்னிடம் பேசியது அடிப்படை நிலை. பால்ய வயதில் நாம் பழகுவது போல் இருக்கும். கிட்டத்தட்ட எந்தத் துறையிலும் நாம் கற்றுக்கொள்ளும் பருவம் இது தான். மென்மையானப் போக்கைக் கடைபிடிப்போம். தவறுகள் இருந்தால் வருந்துவோம். அதைத்திருத்த வேகமாய் துடிப்போம்.உதாரணத்திற்கு வண்டி ஓட்டக் கற்க ஆரம்பிக்கும்பொழுது வெகு ஆர்வமாய் இருப்போம். செய்தத் தவறை உடனே திருத்திக்கொள்ளத் துடிப்போம். கல்லூரியில் படிக்கச் சேர்ந்தபொழுது வழங்கப்பட்ட நூலக டோக்கனை பயனுள்ளதாகவும் பிரம்மிப்பாகவும் பாத்திருப்போம். நூலகம் போவதற்கான வாய்ப்பு எப்பொழுது எல்லாம் யோசித்திருப்போம்.
அடுத்ததாக நடுத்தர நிலை. இப்பொழுது என்னிடம் பேசிய பையன் இரண்டு வருட அனுபவத்தில் எப்படி மாறுகிறான் என்பதே நடுத்தர மன நிலை. அதில் அவனது அப்டேட்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவேண்டும். கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறான் என்றால் அவன் நடுத்தர நிலையில் இருக்கிறான் என்று பொருள். அவனால் அடிப்படையையும் விடமுடியாது .ஆனால் அதைச் செய்யவேண்டுமா என்ற வெறுப்பும் மேலோங்கும். வண்டி ஓட்டிப்பழகிய பின் நமக்கு பயம் இருக்கும். நம்மால் ஓட்டமுடியும் என்ற நம்பிக்கையை மீறி கூட்ட நெரிசலில் பயம் மனதைக் கவ்வும். கல்லூரியில் நமக்காக இல்லையென்றாலும் நண்பர்கள் நூலகத்திற்கு அழைத்தால் போக வாய்ப்பு இருக்கலாம்.
அடுத்ததாக அனுபவ நிலை. அதாவது ஒரு முயற்சியில் நல்ல அனுபவங்களைப் பெற்ற நிலை. ஒரு நிறுவனத்தில், வீட்டில் அல்லது ஒரு தொழிலில் நாம் ஓர் அனுபவசாலியாக மாறியிருப்பது. என்னிடம் பேசிய அந்தப் பையன் ஓர் அனுபவஸ்தானாகப் பேசுதல். வோடாஃபோனில் எனக்கு ப்ரைம் வசதி இருக்கிறது என்றும், ஏற்கனவே அதை நான் உபயோகிக்கிறேன் என்றும் நான் கூறியவுடன் அது சம்பந்தப்பட்ட உரையாடலகளை அவன் நிறுத்த வாய்ப்பிருக்கும் நிலை அது. அப்போதைய தேவைக்கும், நிரந்தரத் தேவைக்கும் வித்தியாசம் தெரியாமல் செயல்படுவது. வண்டி ஓட்ட இப்பொழுது நமக்குப் பயம் இருக்கப்போவதில்லை.அனுபவம் ஒருவித அலட்சியமனப்பான்மையைத் தரும். ஹெல்மேட் போடத்தேவையில்லை, நம்மால் லாவகமாக ஓட்டமுடியும் என்பதால் ஒருவழிப்பாதையில் செல்லத்தயார் ஆகுதல். கல்லூரியில் நண்பர்கள் அழைத்தால் கூட நூலகத்திற்குப் போகாத ஒரு மனநிலை வரும் அல்லவா, அப்படி.
அடுத்தது நிபுண நிலை. இங்கு மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு நிலையையும் அடைவதற்கு எத்தனையோ வருடங்கள் காத்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, ஏற்கனவே குறிப்பிட்டது போல இவை எல்லாம் புற வயது சார்ந்தது இல்லை. அக வயது சார்ந்தது. மன நிலை பொறுத்தது. வண்டி ஓட்டி பயமற்ற ஒரு நிலை அடைதலுக்கு ஒரு மணி நேரம் போதும் சிலருக்கு. கல்லூரியில் நூலக டோக்கன் உபயோகப்படுத்துவதற்கும் வேண்டாம் எனத் தள்ளிவைப்பதற்கும் ஒரு மணி நேரம் போதும்.
ஆனால் நிபுண நிலை என்பது எவ்வளவு அனுபவ மனநிலையைப் பெற்றாலும் அடிப்படைக் கற்பிதங்களை மனத்தில் இருத்திக்கொள்ளுதலே. என்னிடம் பேசிய பையன் ஸ்டோர் மேனேஜர் ஆனால் கூட அடிப்படையான கஸ்டமருடனான உரையாடலுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் பட்சத்தில் அவன் அதில் நிபுணத்துவம் பெற்றவனாய் மாறுவான். நிபுணத்துவம் என்பது நெடுநாளைய அனுபவம் அல்ல, ஒரு முயற்சியில், முதன் முதலில் எவ்வளவு ஆர்வமாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோமோ அதே ஆர்வத்தில் அந்த முயற்சியில் தேர்ந்தவராய் ஆனப் பின்பும் இருப்பதே ஆகும். வண்டி ஓட்டத்தெரிந்தாலும் ஹெல்மேட் மற்றும் சாலை விதிகளை மதிப்பதே அதில் நிபுணத்துவம் கொண்டிருப்பதற்கானச் சான்று. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கார் ஓட்டிப்பழகும் போது வேகமாக ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். கார் நன்றாக ஓட்டுகிறாய் என்று உங்களுக்கு ஒரு சான்றிதழ் வேண்டும் என்றால், நீங்கள் எவ்வளவு வேகமாக கார் ஓட்டுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அல்ல, எவ்வளவு சிக்கலானத் தருணங்களில் எப்படி நிதானமாக வண்டி ஓட்டுகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான். இதுவும் புற வயதைச் சார்ந்து அல்ல.
நான் ஒரு மருந்து கம்பெனியின் மேனேஜராக பல புதிய மெடிக்கல் ரெப்களைப் பார்த்ததுண்டு. புதியதாய் வருபவர்கள் குறைந்தது ஒரு மாதத்திற்காவது தங்கள் பைகளைத் துடைத்துச் சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். அடுத்த நடுத்தர நிலை வரும்பொழுது வாரத்திற்கு ஒரு முறை தான் செய்வார்கள். அடுத்து அனுபவ நிலை. அவர்கள் சீனியர் என்ற மிடுக்கோடு வரும்பொழுது பையைத் துடைத்தல் என்ற அடிப்படையிலிருந்து வெகு தூரத்தில் போயிருப்பர்.
நிபுண நிலை என்பது அடிப்படையாய் செய்யவேண்டியதைச் செய்துகொண்டே இருப்பது.
இங்கு நிபுணத்துவம் என்பது வயதின் அடிப்படையிலும் அனுபவத்தின் அடிப்படையிலும் மட்டுமே வர்ணிக்கப்படுகிறது.அது மட்டும் அல்லவே. மன முதிர்ச்சியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்று ஒரு புதிய காரியத்தைச் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் அதை எப்படி கவனமாக செய்ய ஆரம்பிப்போமோ, அப்படியே தொடர்வது தான் நிபுணத்துவம் பெறுவதற்கான வழி. வாழ்க்கையில் வெற்றி என்பது ஏதோ ஒரு வீடியோ கேம் போல் ஒவ்வொரு நிலையையும் கடந்துசெல்வது போல் அல்ல. வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் பெறுகின்ற தோல்விகளையும் கற்பிதங்களையும் தூக்கிக்கொண்டு அடுத்த நிலைக்குச் சென்று அங்கு ஏற்படும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டு ஒவ்வொரு படியாக உயர்தல் தான் வெற்றி ஆகும். பழைய ஜோக் ஒன்று இருக்கிறது. கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்பார்கள். 20வது கேள்வியில் ஒரு கோடி பரிசு என்பார்கள். கூட்டத்தில் ஒருத்தன் 20வது கேள்வியை முதலில் கேட்டுவிடுங்கள் என்றானாம் என்று ஜோக் சொல்வார்கள். சிலருக்கு அப்படித்தான் ஆசை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையாக உயர ஆசையே இருக்காது. நேராக வெற்றி இலக்கை அடையும் நிலையைத் தொட வேண்டும் . அது வீடியோ கேம்மில் கூட வாய்ப்பில்லை. ஒவ்வொரு நிலையாகத்தான் நீங்கள் போக முடியும். ஒவ்வொரு நிலையிலும் வெற்றி தோல்வி எனக் கடத்தல் வேண்டும்.
ஒரு தொழிலில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள்,
ஒரு தொழிலை நீங்கள் ஆரம்பிக்கப்போகிறீர்கள்,
அல்லது
ஒருவருடன் நீங்கள் உறவில் வாழ்வை ஆரம்பிக்கிறீர்கள் எனப் பல்வேறு உதாரணங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படையான நிலை என்று ஒன்று இருக்கும். இன்று உங்களுடன் உரிமையுடன் இருக்கும் உற்ற நண்பனிடம் நீங்கள் பழக ஆரம்பிக்கும்போது அவரது அனுமதியையும் உணர்வையும் கவனத்தோடு கையாண்டிருப்போம்.
அந்த மாதிரியான அடிப்படை தருணங்களில் நீங்கள் மேற்கொள்ளும் நேரமும் ஆர்வமும் பொறுப்பும் தான் பிற்காலங்களில் பல வெகுமதிகளைப் பெற்றுத்தரும்.
ஒரு தொழிலில் சேர்ந்த நீங்கள் , அடிப்படைக் கற்பிதங்களைத் தொடரும் நேரமும் அதில் உங்களது ஆர்வமும், அதை மேற்கொள்ளும் பொறுப்பும் உங்களை அந்த நிறுவனத்தில் நிலைநிறுத்த வழிவகை செய்யும்.
ஒரு தொழிலை புதிதாய் ஆரம்பிக்கும் நீங்கள், அடிப்படைக் கற்பிதங்களோடு நீங்கள் செலவழிக்கும் நேரமும் , தொழிலில் முனையும் ஆர்வமும், அடிப்படைகளைத் தொடரும் பொறுப்பும் உங்களது இலாபத்தை நிலைநிறுத்தும்.
ஒரு புதிய உறவில் நீங்கள் கலக்கும்பொழுது, நீங்கள் இரு உறவுகளுக்கான அடிப்படைப் புரிதலில் செலவழிக்கும் நேரமும், அடுத்தவர் உணர்வுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும், அவர்களைக் காயப்படுத்தாது உணர்வுகளைக் கையாளும் பொறுப்பும் நீங்கள் தொடர ஆரம்பித்தீர்கள் என்றால் உறவுகள் வலுப்படும்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
- "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
- "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
- நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
- யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
- தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
- குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
- உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
- தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
- கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
- பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
- நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
- உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
- ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
- 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
- இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
- ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்