அசைவறு மதி 22

ஒரு குளிர்கால இரவில், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு நகரத்திலிருந்து அந்த ஆகாயவிமானம் புறப்படத்தயாராய் இருந்தது. அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டுக்கொள்ள அறுவுறுத்தப்பட்டனர். விமானம் கிளம்புவதற்கான முன்னேற்பாடுகளை ஓடுதளத்திலும், கன்ட்ரோல் பேனல் அதிகார மட்டத்திலும்  செய்துகொண்டிருந்தார்கள். விமான பணிப்பெண்கள் சரிவர மூடப்படாத கேஸ் ரூம்களை மூடிவிட்டு அவர்களும் அமர்ந்துகொள்ளத் தயாராய் இருந்தனர்.

விமானத்திற்கான பைலட் ஒரு சீனியர். அதிகப்படியான நேரங்களில் பறந்தவர். அவருடன் இருக்கும் துணை பைலட் ஒரு ஜூனியர். தனித்து இயங்கும் அளவிற்குத் திறமை இருந்தாலும் மூத்தவர்கள் முன் அவர் ஒரு கத்துக்குட்டியாகவே இருந்தார். இரு விமான ஓட்டிகளும் விமானத்தை நகர்த்துவதற்கான ஆயத்தங்களை ஆரம்பித்தனர். விமான பணிப்பெண்களும் இன்டர்காமில் அழைத்து ‘ ரெடி ஃபார் டேக் ஆஃப்” என்று கூறினர்.

விமானம் நகரவதற்கானக் கட்டளைகளை மூத்தவர் இட, இளைய விமான ஓட்டியும் செயல்பட விமானம் நகர்ந்து , மெல்ல மெல்ல தரையை விட்டு எழும்பி பறக்க ஆரம்பித்தது.

குளிர்காலத்தின் தன்மையான பனிப்பொழிவும் அதனால் உறைந்திருந்த பனிக்கட்டிகள் இறக்கைகளில் பிரச்சினையை உண்டாக்க, எழும்பிய சில நேரங்களிலேயே விமானம் விபத்தைக் கண்டது.

விமானம் விபத்துக்குள்ளானதும் சிலர் இறந்ததும் உண்மைக் கதை தான்.

விமானம் விபத்துக்கு உள்ளானதை விசாரித்தபோது அந்தப் பனிக்கட்டி விசயம் தெரியவந்தது.

விமானம் கிளம்பும்போது பதிவான காட்சிகளும் இறக்கைகளில் பனிக்கட்டி இருந்ததற்கானத் தடயங்களை உறுதி செய்தது.

ஒரு மூத்த விமான ஓட்டி, இந்த விசயத்தை எப்படி கவனிக்கத்தவறினார் என்ற கேள்வி எழுந்தது.

இதில் இந்தக் கட்டுரையில் நாம் பேச வந்திருப்பது, விமானம் விபத்துக்குள்ளானதன் அறிவியல் காரணங்கள் பற்றியது அல்ல.

மூத்த விமான ஓட்டிக்கு அருகில் அமர்ந்திருந்த இளைய விமான ஓட்டி அந்தப் பனிக்கட்டிகள் உறைந்து இறக்கைகளில் படிந்திருப்பதைத் தான் பார்த்ததாகவும், இதனால் விபத்து நேருமே என்று கணித்ததாகவும் விபத்திற்குப் பின் பேட்டி அளித்திருக்கிறார்.

தன்னை விட வயதில் மற்றும் அனுபவங்களில் மூத்தவருமான ஒரு சீனியர் பைலட்டிடம் இதை எப்படி சொல்வது என்று தான் சொல்லாமல் விட்டதாகக் கூறியிருக்கிறார்.

இந்த இடத்தில் இருந்து இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். எது அந்த இளைய விமான ஓட்டியின் கணிப்பை வெளியில் சொல்லவிடாமல் செய்தது?

ஒரு வேளை , அவர் தன் கணிப்பை மூத்த விமான ஓட்டியிடம் சொல்லி செயல்பட்டிருந்தால் அந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் தானே? இருந்தபோதும் அவரை அப்படிச் செய்யவிடாமல் செய்தது எது?

தன்னை விட மூத்தவர், அனுபவஸ்தர் . இவரிடம் இதைச் சொன்னால் அவர் நம்மைத் தவறாக எடுத்துக்கொள்வாரோ என்ற சந்தேகம் இருந்ததாக அவர் பேட்டியளித்திருக்கிறார்.

தான் கணிப்பது சரியாக இருப்பினும் அதைச் சொல்ல யோசித்து அல்லது சொல்ல தவிர்த்து எத்தனை இடங்களில் நாம் நல்ல முடிவுகளைத் தவற விடுகிறோம்.

நிறைய மார்க்கெட்டிங்க் நிர்வாகங்களில் மாதாந்திரக் கூட்டங்கள் அல்லது வருடாந்திரக் கூட்டங்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு வணிகவியலில் முனைவர் பட்டம் படித்த பலர் கொண்டு வரும் பல திட்டங்கள் ( SCHEMES) சந்தையில் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. களத்தில் வேலை பார்க்கும் கடைநிலை விற்பனைப்பிரதிநிதிகளுக்கும் அல்லது அவர்களது மேலாளர்களுக்கும் சில திட்டங்கள் வெற்றியடையப்போவதில்லை என்பதை முன் கூட்டியே கணித்திருப்பார்கள். ஆனாலும் நாம் எப்படி சொல்வது என்று அமைதி காப்பார்கள்.

ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவரோ அல்லது தலைவியோ எடுக்கும் முடிவு தவறான விளைவுகளைத் தரும் என்று தெரிந்த பின்னரும் அமைதி காத்து, எதிர்மறையான விளைவுகள் நேரும்பொழுது எனக்கு முன்னரே தெரியும் என்று இன்னொரு ஆள் மேல் பலி போடும் நிகழ்வுகளை நாம் நம் வாழ்வில் சந்தித்திருப்போம்.

ஒரு நல்ல முடிவிற்காக முரண்படுவது என்பது சவாலான ஒன்று. ஆனால், நம் எதிரில் இருக்கும் நமக்கும் மேலானவர் அல்லது நமக்குப் பிரியமானவர்கள் நம்மைத் தவறாக எடுப்பார்கள் என்று முரண்படாமல் அமைதி காத்துவிடுகிறோம். விளைவு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியான இழப்பு குடும்பத்திற்கு , நிர்வாகத்திற்கு என ஒட்டு மொத்த பெரிய இழப்பாய் நேரும்.

நமக்குத் தோன்றும் கணிப்புகளைச் சரியோ தவறோ அதை வெளிப்படுத்துவதில் இருக்கும் சிக்கல் , அதை இடம் பொருள் ஏவல் பார்த்து வெளிப்படுத்துவதில் தான்.

வெற்றியாளர்களிடம் இருக்கும் பல தனித்தன்மைகளில் ஒன்று, தான் சொல்ல வந்ததைப் பிறருக்கு எத்தகைய எதிர்மறையான எண்ணங்களையும் ஏற்படுத்தாதபடிக்குச் சொல்லிவிடும் கலை தான்.

ஒரு நிறுவனத்தில், ஒரு குடும்பத்தில் ஒரு பொது அமைப்பில் நாம் வெற்றியாளராக இருக்கவேண்டுமானால், நம் கண் முன் நிகழும் அபத்தங்களைப் பார்த்து அமைதியாக இருப்பதிலிருந்து வெளிவரவேண்டும். எந்த நிறுவனமும் எல்லா சமயங்களிலும் சரியான முடிவுகளையே எடுக்கும் என்று அவசியம் இல்லை. தனிமனிதனுக்கும் இந்த விதி பொருந்தும்.

எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளை ஒரு நிர்வாகம் அல்லது ஒரு குடும்ப உறுப்பினர் எடுக்கிறார் என்றால் , அனுபவஸ்தராக , தாம் நினைப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் சொல்ல நாம் பழகுவதே, நாம் வெற்றியாளராக மாறுவதற்கான முதல் படி.

நாம் ஒரு விசயத்தில் முரண்படுகிறோம் என்றால் அதைச் சொல்லுகையில் எதிரில் இருப்பவர்களின் வெறுப்பைச் சம்பாதித்து விடுகிறோம். அல்லது அவர்களது கோபத்தை வாங்கிக்கொள்கிறோம். அல்லது அவர்களை மனதளவில் காயப்படுத்திவிடுகிறோம் அல்லது நாம் மனதளவில் காயப்பட்டுவிடுகிறோம். சில இடங்களில் கைகலப்பு கூட நேரிடுகிறது. இத்தகைய எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடாது என்ற பயத்திலேயே பலர் அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.

பல தன்னம்பிக்கையாளர்கள் தான் முரண்படுவதைத் தைரியமாக அதே நேரத்தில் தான் முரண்படும் கருத்துகளை ஆழமாக மனக்கோடிட்டுக் காண்பிக்கத் தவறுவதில்லை. அவர்களது தன்னம்பிக்கையும், தான் சொல்லவரும் கருத்தின் பின் இருக்கும் நியாயமானக் காரணமும் அதுசார் தான் கொண்டிருக்கும் அனுபவமும் அர்த்தமுள்ளதான உரையாடலை நிகழ்த்தும்.

ஓர் உரையாடலை சர்ச்சையாகவும், கலந்துரையாடலாகவும் ஓர் உரையாகவும் எந்த நேரத்திலும் நாம் மாற்றலாம். அது பேசுபவரின் கையில் தான் இருக்கிறது.

நமக்கு வேண்டிய ஒரு முடிவை தனக்குக் கீழ் இருக்கும் வேலையாட்களிடம் இருந்தும் அல்லது தன்னைச் சார்ந்திருக்கும் அனைவரிடம் இருந்தும் கேட்டுப்பெறுதல் என்பது எப்படி ஒரு கலையோ, அதே போல் தான் தனக்கு மேல் இருக்கும் முதலாளிகளிடமிருந்தும், மேலாளர்களிடமிருந்தும் , குடும்பத்தில் உள்ள சக உறுப்பினர்களிடமிருந்தும் தனக்குச் சாதகான முடிவுகளைக் கேட்டுப் பெறுதலும் பெரிய கலை.

நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளைத் தரும் முடிவுகளைப் பற்றியக் கூராய்வு நாம் பெற்றுக்கொள்வதன் மூலம் அவற்றைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

நேர்மறை விளைவுகளுக்காக முரண்படுங்கள். உங்கள் கருத்துகளின் நியாயங்களை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் உரையாடல் அர்த்தம் செறிந்ததாக இருக்கவேண்டும். உங்களின் நேர்மறை கருத்துகளும், தன்னம்பிக்கையும் நேர்மறை மனிதர்களையும் நேர்மறை விளைவுகளையும் உங்கள் பக்கம் கொண்டு வரும். அது தான் பிரபஞ்சத்தின் இயல்பு. அது தான் ‘அசைவறு மதி’ யின் நோக்கமும் கூட…

தொடரும்….

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  2. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  3. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
  4. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
  5. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
  6. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  7. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
  8. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  9. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
  10. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  11. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  12. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
  13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
  15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்