அசைவறு மதி 17

வழக்கமாக நம் அசைவறுமதி தொடர்களில் கதையோ இல்லையென்றால் பிரபலங்களின் வாழ்வியல் முறைகளைக் கொண்டோ பேசுவோம். வித்தியாசமாக ஏதாவது பாடம் படிக்கலாமா.

அறிவியல் பாடம் படிக்கலாமா?

யாரும் தெறிக்கவேண்டாம். ஒன்பதாம் வகுப்பு இயற்பியல் பாடப்புத்தகத்தில் ஒரு வரியை மட்டும் எடுத்துப் புரட்டுவோம். அதிலிருந்து ஏதாவது நமக்குக் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

நாம் பள்ளிக்கூடத்தில் பல தியரங்கள், விதிமுறைகள், விளக்கங்கள் படித்திருக்கிறோம். உதாரணத்திற்கு ஆற்றல் என்றால் என்ன?  அதன் வகைகள் யாவை என்று படித்திருப்போம். உந்தம் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. விசை என்று ஒரு வார்த்தை இருக்கிறது. எல்லாம் எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கிறதா? அந்த வரிசையில் வேலைதிறன் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. workdone என்று ஆங்கிலத்தில் வந்திருக்கும்.

நாம் தமிழ்வழி படித்திருந்தால் கூட ஆங்கிலத்தில் தான் அறிவியல் சொல்லாடல்கள் படித்திருப்போம். வேலைதிறன் என்பதை வரையறு என்று கேள்வி கேட்டிருப்பார்கள்.

ரொம்ப உள்ளே போகவேண்டாம். நிறைய அறிவியலாளர்கள் அசைவறுமதி வாசிக்கிறார்கள்.

ஒன்றும் இல்லை. நாம் செய்யும் வேலைக்கான அறிவியல் வரையறை பார்க்கப்போகிறோம்.

ஒரு குறிப்பிட்ட விசை செயல்பட்டு (FORCE) ஓர் இடப்பெயர்வு நிகழும். அதன் பெருக்குத்தொகையே செய்யப்பட்ட வேலை ஆகும். சமன்பாட்டின் படி

     W= FD

               WORKDONE = FORCE  X DISPLACEMENT

நாம் எந்த வேலையைச் செய்தாலும் இந்தச் சமன்பாட்டின்படி வரையறுத்துக்கொள்ளலாம்.

ஆனால், இங்கே நாம் பேசப்போவது, இந்தச் சமன்பாட்டின்படி நாம் எங்குலாம் வேலை செய்யவில்லை என்று தான்.

நாம் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்திருப்போம். போகும்வழியில் நெடுஞ்சாலை உணவகங்கள் இருந்திருக்கும். வாசலில் ஒரு செக்யூரிட்டி குடையுடன் நின்றுகொண்டிருப்பார். அல்லது கையில் மீல்ஸ் ரெடி என்று போர்ட் வைத்துக்கொண்டு நிற்பார்.  இந்தச் சமன்பாட்டின் படி அவர் வேலை செய்யவில்லை என்று நிறுவலாம். கொஞ்சம் அபத்தமானதாகத்தான் இருக்கும். எப்படி என்று பார்க்கலாம்.

அவர் நின்று கொண்டே தான் இருப்பார். ஏதாவது இடப்பெயர்வு இருக்கிறதா, ஏதாவது நகர்ந்திருக்கிறாரா என்றால் இல்லை. ஆதலால் அவர் வேலை செய்யவில்லை என்று தான் ஆகும்.

விசை நிகழ வேண்டும். அது சார்  இடப்பெயர்வையும் நிகழ்த்தவேண்டும். அது தான் வேலைதிறன். இடப்பெயர்வு பூச்சியம் என்றால் வேலைதிறனும் பூச்சியம் தானே. உடல் உழைப்பின் படி, மனிதாபிமான அடிப்படையில் அவர் வேலை செய்திருப்பார் தான். ஆனால் அறிவியல் விதிப்படி அவர் வேலை செய்யவில்லை தான்.

நான் ஒரு 25 லிட்டர் தண்ணீர் வாளியைத் தூக்கிக்கொண்டு காலையிலிருந்து மாலை வரை வெயிலில் நின்றுள்ளேன். அது வேலையா என்றால், இல்லை. இல்லவே இல்லை. நீங்கள் வேலை  செய்யவில்லை என்கிறது இயற்பியல். இடப்பெயர்வு இல்லையே. ஆதலால் வேலை நடக்கவில்லை. நீங்கள் வேலை செய்யவில்லை என்பதற்கு அறிவியல் சொல்லும் காரணம் கூட நியாயமானதாய்தான் இருக்கிறது.

உங்களுக்குத் தலை சுற்றும். அறிவியலில் ஒவ்வாமை உள்ளோருக்கு இந்தச் சூத்திரம் புரியாது தான். அறிவியலிலிருந்து வாழ்வியல் முறைக்கு நாம் எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கு இது உதாரணம்.

உங்களுக்கு ஒரு பெண்ணிடம் அல்லது ஆணிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்தவேண்டும்.  அது தான் வேலை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வேலை என்பது என்ன? ஒரு விசை செயல்படவேண்டும்.  இங்கு நம் வாழ்வியல் முறையில் விசை என்பது நம் எண்ணம். ஏனென்றால் எண்ணம் தானே நமக்கு DRIVING FORCE.  உங்களுக்கு அந்தப் பெண்ணின்/ஆணின் மீது காதல். அது தான் எண்ணம். அந்த எண்ணம் உங்கள் மீது செயல்பட அனுமதிக்கிறீர்கள். அடுத்ததாக விசை செயல்பட்டு, எண்ணம் அதிகமாகி இடப்பெயர்வு நடக்கவேண்டும். இங்கு இடப்பெயர்வு என்பது அந்தப் பெண்ணின் அல்லது ஆணின் மனதை மாற்றுவது. நீங்கள் ‘இதயம்’ முரளி போல் ஒரு தலை ராக பரட்டை கதாநாயகர்கள் போல் ஒற்றை ரோஜாவை உங்களுக்குள் வைத்துக்கொண்டே திரிகிறீர்கள். அந்தப் பெண்ணிடம் அல்லது ஆணிடம், உங்கள் மனதைத் தெரியப்படுத்தவில்லை என்றால் அங்கு வேலை நடக்கவில்லை என்றே அர்த்தம்.

காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் (FORCE) செயல்பட்டு அந்தப் பெண்ணின் / ஆணின் மனதை மாற்றியிருக்கவேண்டும் (DISPLACEMENT). பல காதல் படங்களில் வரும் தத்துவங்களில் ஒன்று, ‘காதலிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, போய் அந்தப் பெண்ணிடம் சொல்லத்தைரியம் வேண்டும்’ என்று வரும்.  நீங்கள் வேலை செய்யவில்லை என்று நிறுவியாகிவிட்டதா?

உங்களுக்கு வீடு கட்ட வேண்டும்.  அதை வேலை என்று வைத்துக்கொள்ளுங்கள். வீடு கட்ட வேண்டும் என்பது எண்ணம் அது தான் FORCE. விசை. வீடு கட்டுவதற்கு இடம் பார்த்துவிட்டீர்களா, கடன் எங்கு கிடைக்கும் என விசாரித்துவிட்டீர்களா, உங்கள் வீட்டிற்கான பட்ஜெட் எவ்வளவு என்று தீர்மானம் வைத்துவிட்டீர்களா, அதற்கான இடமும், கள நிலவரமும் விசாரித்துவிட்டீர்களா, உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு திரட்டமுடியும் என்று கணக்கு போட்டீர்களா? இது எல்லாம் இடப்பெயர்வுகளின் வகைகள் தான்.

இதில் ஏதேனும் ஒன்றாவது நடக்கவில்லை என்றால், உங்களுக்கு அந்த வேலை இன்னும் நடக்கவில்லை என்று அர்த்தம்.

ஓர் இலக்கு வையுங்கள். அது எதுவாகக் கூட இருக்கட்டும். துணையைத் தேடுதல் அல்லது வீட்டைக் கட்டுதல். அல்லது உடல் எடையைக் குறைப்பது. எதுவாகவும் இருக்கட்டும். அதை இந்தச் சமன்பாட்டில் அமர்த்திப்பாருங்கள்.

வேலைதிறன் = விசை X இடப்பெயர்வு.

உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் எவ்வளவு தூரத்திற்கு உங்கள் மனதை நகர்த்தியிருக்கிறது. தின்பணடங்களை ஒதுக்க உங்கள் மனதை மாற்றியிருக்கிறதா? நடை பயில உடற்பயிற்சி செய்ய உங்கள் மனதை மாற்றியிருக்கிறதா? அனாவசிய உணவுகளைத் தவிர்க்க உங்கள் மனதை மாற்றியிருக்கிறதா? உங்கள் உடல் எடை குறைப்பிற்கான -வேலை இலக்கை நோக்கி, உங்கள் மனம் நகர, இடப்பெயர்வு செய்ய மனம் மாறியிருக்கிறதா?

இதில் ஏதேனும் ஒன்று கூட நிகழாமல் இருந்தால் கூட, உங்களுக்கு வேலை நடக்கவில்லை என்று அர்த்தம்.  எடை குறைப்பிற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று நிறுவியாகிவிட்டதா?

இப்படியான பல உதாரணங்களை நம் வாழ்வியல் முறையிலிருந்து எடுத்து இந்தச் சூத்திரத்தில் போட்டுக்கொண்டு நாம் போய்க்கொண்டே இருக்கலாம். எனக்கு ஒரு நண்பன் அழைத்தான். சதா அவனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை வந்துகொண்டே இருக்கிறது எனவும் அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை எனவும் கேட்டான். கொரோனோ ஊரடங்கில் வீட்டில் இருக்கும் காலகட்டங்களில் இது எல்லாம் ஒரு சாதாரண நிகழ்வாய் மாறிவிட்டது. கொரோனாவே பரவாயில்லை என்று சிலர் வீட்டிலிருந்து வெளியில் போவதாக எனக்குத் தெரிந்தது.

மனித மனங்கள் விசித்திரமானவை. ஒரு விற்பனை பிரதிநிதியாய் பல விசித்திர மனோபாவ மனிதர்களைத் தினமும் சந்திக்கிறேன். ஒருவரின் மனநிலையை அதன் மூலம் அவர் செயல்படும் விதத்தை ஒரு வாடிக்கையாளராக நான் பார்க்கையில் எனக்குப் பல ஆச்சரியமான மனிதர்கள் தென்படுவார்கள். ஒவ்வொருவரும் ஒருவித மன நிலையில் இருந்துகொண்டு அவர்களின் நியாய, தத்துவார்த்தச் செயல்பாடுகள் எனச் சிலவற்றைச் செய்வார்கள். அவரவர்களுக்கென்று ஒரு நியாயம் இருக்கும். இதை அந்த நண்பனிடம் கூறி, அவனது மனைவியின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதன் படி நடப்பதற்குச் சொல்லியிருந்தேன். அவனுக்கான இலக்கு என்பது வீட்டில் அமைதியைக் கொண்டுவருவது. அதுவே அவனுக்கு வேலை. மனைவியைச் சமாதானப்படுத்துவது எண்ணம். அதற்காக அவன் தன்னுடைய மனத்தை மாற்றுவதோ, அல்லது வீட்டில் அமைதி ஏற்படுத்தும்வண்ணம் தன் மனைவியின் மனதை மாற்றுவதோ தான் இடப்பெயர்வு. அவன் அதைச் செய்தானா செய்யவில்லையா என்று கேட்காதீர்கள். அது ஒரு சிந்துபாத் கதை. செய்யவேண்டிய வேலையை இலக்காகவும் அதை நோக்கி நகர்வதையும், அதற்கான எண்ணங்களையும் நாமே புரிந்து வைத்துக்கொண்டால் எல்லோர் வீட்டிலும் அமைதிதான்.

எனக்குத் தெரிந்த ஒரு நபர் இருக்கிறார். ஒரு நாள் அவருடைய ஆசையைச் சொன்னார். அதாவது ஒரு கடை இருக்கிறது அவருக்கு. அதில் அவர் லாபத்தைச் சம்பாதிக்கவேண்டும். இன்னொரு வியாபாரத்தை ஆரம்பிக்கவேண்டும். அங்கு லாபம் பார்க்கவேண்டும். இங்கு இரண்டு வேலையாட்கள். அங்கு வேலையாட்கள். இவர் முதலாளியாக கல்லாவில் உட்காரவேண்டும். அவரவர்களுக்குப் பொறுப்பு கொடுத்துவிடவேண்டும். அவரவர்களின் உழைப்பில் லாபம் வரவேண்டும். அவர் மேற்பார்வை மட்டும் பார்க்கவேண்டும். இது தான் அவரது ஆசை. இந்தப் பத்தியை ஆரம்பிக்கும்பொழுது ‘ ஒரு நாள்’ அவருடைய ஆசையைச் சொன்னார் என்று ஆரம்பித்தேன் அல்லவா. அந்த ‘ஒரு நாள்’ 2006ம் ஆண்டு நடந்தது. இப்பொழுதும் அதே ஆசையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். காரணம் , என்ன என்று நினைக்கிறீர்கள். அவர் தான் காரணம். பெரும் முதலாளி என்பது வேலையாக இருக்கவேண்டியது. நிறுவன லாபமும் அதற்கான தொழிலை வேறுகட்டத்திற்கு நகர்த்துவதும் தான் நிகழ்ந்திருக்கவேண்டும். அவருக்கு ஆசை மட்டும் தான் இருந்ததே தவிர, விசை இல்லை. ஆசை என்பது வேறு. அது ஒரு கனவு போல். எண்ணம் என்பது வேறு. அது ஆசையிலிருந்து முளைத்து வருவது. பல நிறுவனங்களை ஆரம்பிக்க ஆசைப்பட்டு அதற்கான எந்த எண்ணமும் செயல்வடிவமும் இல்லாமல் அவரால் வாழ்வில் அடுத்த கட்ட நிலைக்கு இடம்பெயர முடியவில்லை.

எங்கள் விற்பனைத்துறையில் சொல்வார்கள், ஒரு வாடிக்கையாளரை எத்தனை மாதம் பார்க்கிறாய், அவரிடம் ஏதாவது ஆர்டர் எடுத்தாயா என்பார்கள். பிரதிநிதிகள் ஏதாவது காரணம் சொல்வார்கள். விற்பனைத்துறையில் பிரதிநிதிகள் சொல்லும் காரணங்களுக்கு எல்லாம் கதை சொல்லாதே என்று  எள்ளி நகையாடுவார்கள் மேலதிகாரிகள்.

ஒரு வாடிக்கையாளரை மாதம் இரு முறை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறீர்கள். அவரிடம் அழுத்தம் தருகிறீர்கள் (விசை) ஆனால் அவர் மனதை உங்களுக்கு ஆர்டர் தருவதற்கு ஏற்றார் போல் நீங்கள் மாற்றவில்லை. ஆதலால் நீங்கள் வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம்.

இங்கு நான் வாடிக்கையாளரைத் தேடிப்போயிருந்தேன். அவரது இடத்தில் மூன்று மணி நேரம் காத்திருந்தேன் என்பது எல்லாம் வேலை ஆகாது. ஆர்டர் எடுத்தியா என்பது தான் கேள்வி. அது தான் வேலை.  அது நடக்கவில்லை என்றால் நீ வேலை செய்யவில்லை என்றே அர்த்தம் என்று தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரதிநிதிகளைக் குறை சொல்லும். அறிவியலும் அதைத்தான் சொல்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள், உண்மையிலேயே நீங்கள் வேலை செய்கிறீர்களா?

 

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
  2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  4. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
  5. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
  6. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  7. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
  8. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  9. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
  10. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  11. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  12. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
  13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
  15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்