சைவுறு மதி

வெளிநாட்டிலிருந்து ஒரு நபர் வருகிறார்.  அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது.  குடும்பத்தாரே அவரைச் சற்று தனிமைப்படுத்திக்கொள் என்கிறார்கள். அவர் மறுக்கிறார். அரசாங்க அதிகாரிகளிடம் சொல்லி தனிமைப்படுத்துலின் முக்கியத்துவத்தைச் சொல்லி அவரைத் தனிமைப்படுத்துகிறார்கள். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து உறவினர் நண்பர்களைப் பார்க்கலாம் என வந்தவருக்குத் தனிமையாயிருத்தல் ஏமாற்றத்தைத்தருகிறது.  உளவியல் பிரச்சினைகளைத் தருகிறது. தற்கொலைக்கு முயல்கிறார்.

இன்னொரு நண்பர் இந்த ஊரடங்கின்பொழுது வீட்டிலேயே இருப்பது பைத்தியம் பிடிக்கிறது என்கிறார்.

உண்மையில் நாம் தனிமையில் இருந்ததே இல்லை அல்லவா.?

மனிதன் சமூகப் பிராணி. அதிலும் இந்தியர்கள், தமிழர்கள் கூட்டுச்சமூகப் பிராணி. நம் கலாச்சாரம் எந்தையும் தாயும் கூடிக்குழாவித் திரிந்த கலாச்சாரம்.

ஒரு காஃபிக்கடைக்குக் கூடத் தனியாய் போகாத இளைஞர்களைக் கொண்ட மாநிலம் நம் மாநிலம்.  தனியே வீட்டில் கிட என்பதை அவர்கள் எப்படி ஏற்பார்கள் என்றால் அது தான் சிகிச்சை.  அது தான் தீர்வு. பிறகு, இந்த தனித்திருத்தலை எப்படி எதிர்கொள்வது.


கிறிஸ்டியனா, யூனிசெஃப் பின் இயக்குனர்களில் ஒருவர். இந்த லாக்-டவுன் நாட்களுக்கென்று ஒரு வீடியோ எடுத்திருந்தார். அதில் அவர் பேசுவது பொத்தம்பொதுவாய் இந்த நாட்களை எப்படிக் கையாள்வது. அந்த துணுக்குகளை நம் கலாச்சாரத்திற்கு மாற்றிப் பார்த்தால் எப்படி நம் மனநிலையைத் தக்கவைக்கலாம் என்று ஒரு சோதனை செய்யலாமா?

  1. தினமும் காலையில் சரியான நேரத்திற்கு எழுதல் வேண்டும். அது போல் தினமும் சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்லல் வேண்டும்.
  2. காலையில் எழுந்து இதுவரை செய்து பழகியவர்களும் சரி, செய்து பழகாதவர்களும் சரி, உடற்பயிற்சி செய்யலாம். என்னென்ன பயிற்சி என்பதை இணையதளத்தில் அல்லது நண்பர்களுடன் கேட்டு செய்து பார்க்கலாம்.

( ஒரு புது விசயத்தைச் செய்வதன் மூலம் மூளை உற்சாகமடைகிறது, எந்தக் காரணத்திலும் செய்துகொண்டிருக்கும் விசயத்தை நிறுத்தாமல் செய்துக்கொண்டே இருக்கும்பொழுது மூளை துடிப்புடனே இருந்துகொண்டிருக்கும்)

  1. வேலைக்குக் கிளம்பும்படிக்கே குளித்து நல்ல ஆடை அணிந்து (பெண்கள் பிரத்யேகமாய் ஆடை அலங்காரம் ) கொள்ளவேண்டும்.
  2. அலுவலக வேலை (WORK FROM HOME) இருந்தால் அதைத் தொடரலாம். அது தவிர்த்து புத்தகங்கள் படிக்கும் பழக்கதை இந்த நாட்களை ஒரு வாய்ப்பாகக் கருதிக்கொண்டு படிக்கலாம். பிடித்தப் புத்தகங்களைத் தேர்வு செய்துகொள்ளல் வேண்டும். ஒருவருக்கு என்னென்னத் தலைப்புகள் பிடிக்கும் என்பது அவரவர்க்கே தெரியும். அந்தந்தத் தலைப்புகளில் புத்தகங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

( எந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்யலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதில் கவனம் தேவை. உங்களுக்கு எதில் ஆர்வம் என்று சொல்லி அதன் தலைப்புகளைப் பெறவேண்டும். பொத்தம்பொதுவாகக் கேட்டு நண்பர் அவருக்குப் பிடித்தத் தலைப்பைக் கூற அதில் உங்களுக்கு ஆர்வம் இல்லையென்றால் உங்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விடும். )

  1. உங்கள் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுங்கள். வீடியோ சாட் செய்யுங்கள். அதிலும் எந்த நண்பர் , உறவினர் தனிமையில் இருப்பதாய் அதிகமாய் இருக்கிறாரோ அவரிடம் அதிகமாய் பேசுங்கள். இன்றைய நாள் எப்படி போனது என்று அவரிடம் கேளுங்கள். உங்களது நாள் எப்படி இருக்கிறது என்று அவரிடம் பகிருங்கள். பேசி வெகு நாட்கள் ஆன ஒரு நண்பரிடம் உறவினரிடம் இதுபோன்ற சமயங்களில் பேசுவது உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாய் மாற்றும். அவர் மனநிலையும் மாறலாம்.
  2. உங்கள்திறமையை, அறிவை வளர்க்கும் படிக்கு தினமும் ஏதாவது ஒரு முயற்சி செய்யுங்கள். ஓவியம் வரைந்துபாருங்கள், பாடல் பாடிப் பாருங்கள்.

அப்படி இன்று கற்று தேர்ந்ததை( தேறாததையும் கூட) உங்கள் உறவினருடன் நண்பர்களுடன் பகிருங்கள். எப்பொழுதும் புதிய விசயங்கள் புதிய பழக்கவழக்கங்கள் நம்மை அயர்ச்சியாக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும். வார்த்தை விளையாட்டு ஆடிப்பாருங்கள். தினம் ஒரு வார்த்தை என்று வேற்றுமொழியில் தெரிந்துகொள்ளலாம். தினம் ஒரு தமிழ் செய்யுள் என்பது உத்தமம்.

  1. உங்கள் குடும்பம் என்பது உங்கள் உலகம் . அதில் உங்கள் பங்கை அதிகமாக்கிவிடுங்கள். வீட்டைச் சுத்தப்படுத்துங்கள். உங்கள் சகஉறவினருக்கு இந்த ஊரடங்கின் முக்கியத்துவத்தைச் சொல்லுங்கள்.

ஒரு வீட்டினுள் நீங்கள் செய்யாதக் காரியம் என்று ஒன்று இருப்பின், அதைக் கண்டுபிடியுங்கள். என் நண்பர் சொன்னார், பழனிக்குமார், தினம் நான் பாத்திரம் கழுவிகிறேன். இப்பொழுது அது எனக்குப் பிடித்துவிட்டது என் கிறார். காஃபி குடித்துவிட்டு அப்படியே வைத்துவிடுவாராம். இப்பொழுது அப்படி கசடு படிந்த டம்ளரை அவர் கழுவும்பொழுது இனி அப்படி வைப்பது தவறு என்று புரிந்துகொண்டாராம். பல வேத வாக்கியங்கள் சொல்லாததை பல இல்லத்தரசிகளின் செல்ல இடி சொல்லாததை ஒரு கிருமி சொல்லிவிட்டது.

  1. குழந்தைகள் இருப்பின், அவர்களது உலகத்திற்குள் நுழைய முயற்சி செய்யுங்கள். அவர்களது ஓவியத்திறமையை, படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர உதவியாயிருங்கள். ஒரு மரம் நடுதலைப் பற்றிப் பேசுங்கள், சுகாதார விழிப்புணர்வின் அவசியத்தைப் பகிருங்கள். அவர்களுடன் இந்த சமயத்தில் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல் அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாகக் கூட இருக்கலாம். உங்களைப் பற்றிய நினைவுகூறலுடன் இது இருந்துபோகலாம். அவர்களது உலகத்தில் அவர்களது சகப் பிரயாணியாய் அவர்களை அரவணைத்துப் பயணியுங்கள்.

சமையலறையில் புகுந்துகொண்டு குழந்தைகளைச் சமையலில் ஈடுபடுத்திக் குறும்புத்தனங்களைச் செய்ய அனுமதியுங்கள். ஒவ்வொரு காய்கறிகளையும் அதிலுள்ள சத்துகளோடு அறிமுகப்படுத்துங்கள். உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள் செய்த , நீங்கள் பார்த்த , இப்பொழுது அவர்கள் பார்க்கத்தவறுகிற விசயத்தைச் சொல்லுங்கள். நிலம் பற்றியும் நீர் பற்றியும் பகிருங்கள். நீர் ஆதாரங்கள் உங்கள் ஊரில் என்னென்னெல்லாம் இருக்கின்றன என்பதைப் பகிருங்கள். அடுத்தத் தலைமுறையினருக்கு நம்மிடம் அமர்ந்து பேசும் நேரத்தை கொரோனா தான் ஒதுக்கிக்கொடுத்திருக்கிறது. அதை மிகவும் உன்னிப்பாக நாம் பயன்படுத்திக்கொள்ளல்வேண்டும்.

  1. உங்கள் வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களுடன் உரையாடுங்கள். இந்த நோய்தொற்றுகாலத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். அவர்களிடம் உரையாடுவது என்பது குழந்தைகளுடன் உரையாடுவது போன்றது. ஆனால் முக்கியமானது. நாங்கள் எல்லாம் காலராவைப் பார்த்தவர்கள் என்று சொல்வார்கள். கொரோனாவின் அபாயத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். அவர்களது சுகாதாரம் முக்கியம். அதற்கான உரையாடலைத் தொடர்ந்து மேற்கொள்ளல்வேண்டும்.
  2. ஏதாவது எழுதுங்கள். கணக்கு, அன்றாட நிகழ்வுகள் உங்கள் சந்தோசம் , உங்கள் கவலை, உங்கள் ஆசை இப்படி. அதை தேதியிட்டு எழுதிவையுங்கள். ஊரடங்கு முடிந்தக் கணம் அது மிகப்பெரிய பொக்கிஷமாக இருந்துவிடலாம் அதை ஒரு பழக்கமாகத் தொடர்ந்தால்.
  3. நேர்மறையான எண்னங்களைக் கொள்ளுங்கள். நாம் அரசு சொல்லும் எல்லாச் சுகாதார முறைகளையும் கையாள்வதால் நமக்கு நோய் தொற்று ஏற்படாது என்றும் , இந்த நிலைமை மாறிவிடும். மக்கள் எல்லோரும் நலம் பெறுவோர் என்றும் எப்பொழுதும் நேர்மறையாகவே பேசிப் பழகுங்கள் .

ஒருவர் செய்த வேலைக்கு அவருக்கு நன்றியைத் தெரிவியுங்கள். அன்று நடந்த நல்லவிசயங்களை நினைத்துப்பார்த்து அதற்கு நன்றியைத் தெரிவியுங்கள்.

இது எல்லாமே கிறிஸ்டியனா சொன்ன சில விசயங்களை நம் கலாச்சாரத்துடன் பொருத்திப்பார்த்து மேற்கொண்டது. நம் மனநிலை என்பது ஒரு சேட்டைக்காரக் குரங்கைப்போன்றது. இங்கே உட்கார் என்றால் உட்கார்ந்துவிடாது. நீங்கள் குரங்காட்டியாய் மாறவேண்டும் இல்லாவிட்டால் இன்னொரு முரட்டு குரங்காய் மாறி அதை அமர்த்தவேண்டும்.

கொரோனாவிற்கான காலம் என்பதில் பாதி அபாயகாலகட்டத்தில் இருக்கிறோம். இன்னும் சில நாட்கள் தான். முற்றிலும் நோய்தொற்று விலகி நம் அன்றாடத்திற்குள் நுழைந்துவிடுவோம். அப்பொழுது இன்னும் இதைவிட அதிகமாய் நாம் உழைக்கவேண்டும். அதற்கான ஓய்வும் ஆறுதலும்  அசைவறுமதியும் இந்த ஊரடங்கின் நாட்களில் பெற்றுகொள்வோம்.

தனித்திருப்போம் …