1.செயலாகும் சொற்கள்
இந்தத் தொடரை ஆணிடமிருந்து தொடங்குவதா, இல்லை பெண்ணிடமிருந்து தொடங்குவதாக என்று குழப்பம் வந்தது.அப்போது திருநங்கை நர்த்தகி நடராஜ் மற்றும் அவரின் சக்தியும் நினைவுக்கு வர நான் இந்தத் தொடரைத் திருநங்கையிடமிருந்தே தொடங்குகிறேன்.
அதற்கு முன்பாக எனது துப்பறியும் அனுபவத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தை உங்களிடம் முதலில் பகிர்ந்துகொள்கிறேன்:
கோவையில் கல்யாணமான பொண்ணு. நல்ல வேலை. அவள் வேலையை வேறு இடத்துக்கு மாற்ற வாய்ப்பில்லை. கணவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை. அப்புறம் கோவைக்கு மாறி வந்து விடுவதாகச் சொல்லியிருந்தார். கல்யாணமான பத்து நாளில் அவர் சென்னைக்குக் கிளம்பிட்டார். ஒரு மாதம் கழித்து வீட்டுக்குத் தெரியாமல் என்னைச் சந்தித்தால் அந்தப் பெண் கல்யாணமாகிப் பத்து நாளில் கிளம்பிட்டார். எப்போ வருவீங்கன்னா இதோ அதோன்னு இழுக்குறார். சரியா பேசல. அந்தப் பத்து நாளில் அவர் செக்ஸ்ல நல்ல ஈடுபாடு காட்டல. அவருக்கு வேற வழியில்லாம ஏதோ கட்டாயத்தின் பேரில் முழுமையற்று இருந்தார்.எனக்கு என்னமோ மனசுல உறுத்தல்.அவர் வேலை செய்யுற இடம் எங்க ? அவர் பழக்கம் வழக்கம்? அவரைப் பற்றிய முழுத் தகவல் வேணும்னு கேட்டார் டிடெக்டிவ் பண்ணனும்னு இது அவரோட போட்டோ அவரின் சென்னை அட்ரஸ் அவர் போன் நெம்பர் கொடுத்தாங்க .
ஆக .நாங்க டிடெக்டிவ் பண்ண ஆரம்பிச்சதும் முதல் தகவலே அவங்க தந்த விலாசத்தில் சென்னையில் அப்படி ஒரு கம்பெனி இல்ல., அது போலி. போன் நெப்பர் மூலம் கொஞ்சம் மெனக்கெட்டுப் போராடி அவர் இருக்கும் இடக்கும் கண்டுபிடிச்சோம். அவர் இருப்பது பாண்டிச்சேரி. அவர் வேலைசெய்வது பியூட்டி பார்லர். அங்கு இவருக்கு என்ன வேலைன்னு ஒருவேளை மானேஜரா இருக்காரோன்னு ஆச்சரியப்பட்டு நான் பாண்டிச்சேரி போய் அந்தப் பியூட்டி பார்லருக்குள் நுழைந்தேன். எனக்கு ப்ரெளன் ஹேர் கலரிங்க பண்ணமுடியுமான்னு அந்தப் பியூட்டி பார்லரில்விசாரித்தேன்..உட்கார சொன்னாங்க..
பார்லரில் இருந்து ஒரு பெண் ,பெண் தான் என்னை நன்றாக உபசரிச்சாள். அதிகம் பேசல . சில ஹேர் மாடல்களைக் காட்டினாள்..எனக்கு இது பொருந்தும்னு அவளே சில போட்டோ காட்டினாள். ஆனாலும் நான் அவளை உத்து பாத்துக்கொண்டே இருந்தேன். குரலில் ஒரு வித்யாசம், ஏதோ மிமிகிரி செய்து பேசுவது போல். பிறகு ஊர்ஜிதமானது.. அவள் பெண் இல்ல.அந்த முகம் நான் யாரைத் தேடி வந்தேனோ அதே முகம்..ஆனால் ஆணாக இல்லை பெண்ணாக.. பின் அந்தப் பியூட்டி பார்லர் நடத்தும் இயக்குனரிடம் வேறு ஒரு நபர் மூலம் விசாரித்துப் பார்த்து அது ஆண் தான் என உறுதி செய்து கோவை வந்தேன்..
ஒரு பெண்ணின் மனம் கொண்ட ஆண் ..பெண்ணாக வாழ விரும்பும் ஆண் ஏன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இப்படி விட்டுச் செல்லவேண்டும். வீடு கெளரவம் பேரண்ட் தொல்லைக்குக் கல்யாணம் பண்ணதா தெரிந்தது. இரவும் பகலும் வேலை செய்வது. தான் ஒரு திருநங்கையாக மாறத்தானோ தெரியாது. நான் அவரிடம் பேசல.விசாரிக்கல..கேஸ் கொடுத்தவர் தரும் எந்தத் தகவலும் வேறு யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. அது அறம்.
பின் கோவை வந்து சம்பந்தப்பட்ட கேஸ் கொடுத்தவளிடம் நான் கண்டறிந்த உண்மையைச் சொல்லி அவளைத் தேற்றினேன் . ‘ கணவன் பொருளாதாரத்தில் நீ நிற்காம உன் திறமையில் உன் சம்பாத்தியத்தில் நிற்பதுதான் அசலான விடுதலை, முன்னேற்றம்’ என்று சொல்லிப் பேசி விட்டு வந்தேன்
பின்னர்ச் சில மாதங்களில் தெரிந்தது இரு குடும்பத்தார்களும் பேசி ,பரஸ்பர விவாகரத்து வாங்கி விட்டதாகவும் கல்யாணச் செலவுதொகையை முழுதும் அவர் கொடுத்து மன்னிப்பு கேட்டதாகவும். இப்போது அவள் யாரையோ காதலிப்பதாகவும் விரைவில் கோவிலில் திருமணம் நடக்கப் போவதாகவும் சொன்னாள். இப்போது இருவரும் அவரவர்களாக வாழ்கிறார்கள். அவரவர் வாழ்வு அவரவர் ருசி அவரவர் பயணம்..அதை மாற்றத் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. சரிதானே…
கோவையில் மாடியில் எனது டிடெக்டிவ் அலுவலகத்தின் பக்கத்தில் ஒரு பியூட்டி பார்லர் நடந்துக்கொண்டிருந்தது… சில நேரம் மாடியிருந்து வேடிக்கை பார்க்க, ரிலாக்ஸ் பண்ண அந்தத் துண்டு வராண்டா சுவரைப் பிடித்தபடி பார்த்துக்கொண்டிருப்பேன். அன்று அப்படி நிற்கும் போது இரு திருநங்கைகள் பியூட்டி பார்லருக்கு வருவதைக் கண்டேன். பின் ஒரு திருநங்கையை நிறுத்தி நிறையப் பேசினேன். என் சந்தேகங்களை எல்லாம் கேட்டேன். ’’அக்கா நாங்க இங்க வரும்போது உங்களோடு பேசலாமா ?’’ என்றார். ‘’தாராளமா என்றேன். முதன் முறையாக நான் அக்காவானேன். நான் அவர்களை அங்கிகரித்து மதித்து ஒரு பெண்ணாகப் பாவித்துப் பேசுகிறேன் என்பதே பெருமிதமாய் உணர்ந்தார்…மன்னிக்க.. ’உணர்ந்தாள் அவள்’..அது எனக்குப் பாடம்..
ஒரு முறை சென்னையில் சில பெண்களுக்கு விருது அளிக்கும் விழா. அதில் எனக்கு ஒரு விருது .சிறப்பு அழைப்பாளர் திருநங்கை நர்த்தகி நடராஜ் வந்திருந்தார்..என் நண்பர் அமிர்தம் சூர்யா என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார்.. ‘’ஓ நீங்க தான் அந்த டிடெக்டிவ் யாஸ்மினா..மகிஷா சொல்வார்’’ என்றார். ‘’ யார் மகிஷா?’’ என்றேன்.. ’’அமிர்தம் சூர்யா தான் ..நான் அவரை மகிஷா என்பேன்..அவர் என்னை மர்த்தனி என்று அழைப்பார்..’’(பின்னர்த் தான் தெரிந்தது மகிஷாசுரமர்த்தனி என்று ஒரு பெண் கடவுள் இருப்பது.)தொடர்ந்து உரையாடல் போனது.. நான்கேட்டேன் ’’மேடம்.. பெண்களின் துயரத்துக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?’’ நர்த்தகி நடராஜ் சொன்ன பதில் ‘’ பெண்கள் தாம் ஒரு அரியச் சக்தி என்று உணரவில்லை. பெண் என்பதைக் கொண்டாடத் தெரியல.அதை உணர்ந்து கொண்டாடத் தெரிந்தால் துக்கத்துக்கு இடமே இல்லை..நாங்க முழுமையா அதை உணர்ந்துள்ளோம்’’ என்றார்.. ஏற்கனவே நான் பெண் என்பதில் பெருமிதம் கொண்டவள்..இந்த பதிலுக்குப் பின் பெண் என்ற கர்வமே எனக்கு வந்து விட்டது.பெண்கள் தங்களைக் கொண்டாடத் தெரியணும் தன்னைப் பெருமையா உணரணும்.
சரி இந்தத் திருநங்கைகளுக்கு அரசும் நீதி துறையும் எதாவது செய்துள்ளதா? கலைஞர் ஆட்சியில் மூன்றாம் பாலினத்தவர்களை ’திருநங்கைகள்’ என அழைக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அந்த வார்த்தையே அவர்களைக் குறிக்க அரசு ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டது.. தி.மு.கழக ஆட்சி யில் 15.4.2008 அன்று “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” தொடங்கப்பட்டு, 3,878 அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, 2,328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1,238 பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங் களும், 482 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களும், 585 பேருக்குக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன. 2008-2009இல் அரவாணிகள் நல வாரியத்தின் மூலம் 25 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. அரவாணிகளுக்காக 150 சுய உதவிக் குழுக்கள் அமைப்பதற்கு 6 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாயும், சுயத் தொழில் தொடங்க 64 இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டு ள்ளது. 2010-2011ஆம் ஆண் டில் அரவாணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரியத்திற்கென ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று கூகுள் ஆண்டவர் சொல்கிறார்..நீங்கள் சரிபார்த்துக்கொள்ளுங்கள்…இது என் கட்டுரைக்கான புள்ளிவிவரம் தானே ஒழியக் கட்சி சார்பானது அல்ல..நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லை..
மாற்று பாலினத்தவர் நலன் கோரி தேசியச் சட்ட ஆணைக்குழு தாக்கல் செய்த பேராணை விண்ணப்பத்தின் மீது நமது உச்ச நீதி மன்றம் 15-4-14ல் மாண்புமிகு நீதிபதி எ.கே.சிக்ரி, மாண்புமிகு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சேர்ந்து ஒரு தீர்ப்பு வழங்கினர். அது வெறும் தீர்ப்பு அல்ல, மாறு பாலினத்தவர்களுக்கான ஆவணம். மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டியவைகளை குறிப்பிட்டு மாறு பாலினத்தவரின் உரிமைகளை உறுதி படுத்தி, ஏதேனும் பிரச்னை நிகழுமானால் காவல்நிலையத்தில் எப்படிக் கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதையும் அந்தரங்கம் காத்தல்பற்றியும் அவர்களுக்கான கருத்து சுதந்திரத்தையும் அத்தீர்ப்பு உறுதி படுத்தியுள்ளது.
அதில் எனக்குப் பிடித்த ஷரத்தில் மாண்புமிகு நீதிபதி ஏ.கே.சிக்ரி சொல்லியிருக்கும் 105 ஷரத்து இப்படி சொல்கிறது ‘’மருத்துவ முன்னேற்றத்தால் ஒருவர் தமது பாலினப்பண்பை இசைந்து மாற்றிக்கொண்டால் அது மருத்துவ அறமாக இருக்கையில் சட்டதடை இல்லை. சட்ட சிக்கல் இல்லை. பாலின மறு நிர்ணயத்தை அங்கிகரிக்கிறோம்’’ என்பதாக அந்த நீதி எழுதிச் செல்கிறதி. நிச்சயம் இந்தத் தீர்ப்பைத் திருநங்கைகள் தமது வேத நூல் போல் போஷிக்க வேண்டியது என்பது வழக்கறிஞராய் எனது எளிய கருத்து.
நானும் இம்மாதிரியான திருநங்கை சிக்கல்களைத் தீர்வு காணவும் அவரின் திறமையை வெளிக்கொணரவும் மே மாதம் கோவையில் எங்கள் ஐ.எஸ். யாஸ்மின் அறக்கட்டளை மூலம்திருநங்கை திருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
சொல் செயலாவது இப்படித் தானே…