ஆயிரம் சொற்கள்-3 

வாழ்க்கை மனிதர்களால் ஆனது.மனிதர்கள் உணர்வுகளால் தங்கள் வாழ்வுகளை நிரப்பிக் கொள்கிறார்கள்.மானுடம் என்பது மற்ற சொற்களோடு கலந்து நிற்கிறது.ஆகப்பெரிய சொற்களில் ஒன்று அது.மொழி வாழ்க்கையின் தருணங்களை அர்த்தமூட்டுகிறது.சொல்லாகவும் பொருளாகவும் உணர்தலாகவும் மௌனமாகவும் எல்லாம் இருந்துவிடுவதோடு இசையாகவும் இருப்பதனால் இருப்பதிலேயே அழகாகிறது மொழி.வாழ்வின் ஓரத்தில் சென்றமர்ந்து கொண்டு தான் தவம் செய்ய வேண்டும் என்பதில்லை.நன்றாகப் புரிந்து கொண்ட பலரும் வாழ்வினூடாகவே தவங்களை மேற்கொண்டவர்கள் தான்.சொற்களை மனதின் ஆழத்தில் அமிழ்த்திக் கொண்டு வளையவருவதன் மௌனகால யாத்திரை விசித்திரமானது.மௌன விரதங்கள் தன்னை அகழ்வதற்கான மனங்கொத்திகள்.
அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வேன்.ஏன் மனிதர்கள் மழை என்றதும் இந்தப் பயம் கொள்கிறார்கள்..?வாகனங்களில் செல்பவர்கள் விரைகிறார்கள் அல்லது ஓரமாய் நிறுத்தி விடுகிறார்கள்.அதிலொரு அர்த்தம் இருக்கிறது.சாலையின் பிடிமானம் தொடங்கி எதிர்வரும் வாகனங்களின் பிம்பக் கொள்முறை வரை எல்லாமும் தண்ணீரின் சாகசத்தினால் மாற்றம் கொள்ளும் என்பதால் ஓரமாய் வண்டியை நிறுத்திக் காத்திருந்து மழை மீண்ட பிறகு தொடர்வது அர்த்தமுள்ள செய்கையாகிறது.இதையே சாலையில் நடப்பவர்கள் ஏன் செய்கிறார்கள்..?இப்படி யோசிக்கலாம் மழையின் மேடும் பள்ளமும் தெரியாமல் எங்காவது நடை பிறழ்ந்து விழ நேரிடுமோ என்ற பயமாக இருக்கலாம்.மனிதன் தான் தடுமாறுவதையும் விழுவதையும் அகந்தையிலிருந்து பெற்றுக் கொள்கிறான்.அதனால் தான் குழந்தை கூட நடக்க எத்தனித்து நாலு எட்டு வைக்கையில் நாமெல்லாம் கை தட்டும் போது பெருமிதம் கொள்வதும் அதுவே தப்பிக் கீழே விழ நேர்கையில் ஓங்கி அழுவதும் நிகழ்கிறது.

மழை ஒரு சொல்லாக என்றைக்கு என் மனதில் பதிந்தது.?அவரவர்க்கு முதல் மழையின் ஞாபகம் என்ற ஒன்றும் இருக்கும் அல்லவா.?மறக்க முடியாத மழை எனும் கணக்கில் நாலைந்து மழைகள் உண்டு தானே..?என் தந்தையின் எரியூட்டுக்குச் சென்று திரும்புகிற பாதையெல்லாம் மழை பெய்தது.அவரற்ற வெறுமையை எங்களோடு வானமும் அழுதாற் போல் அதற்கும் சேர்த்துக் கலங்கினேன்.சற்றைக்கெல்லாம் சில மணி நேரங்கள் கழித்து இரவின் நிசப்தமும் ஈரத்தின் வாசனையும் ராவுயிரிகள் மழைப்பாடிகளின் கலந்து கட்டியான குரலெழுப்புதல்களுமாய் அதே மழையின் அடுத்த அத்தியாயம் யூகிக்க முடியாத கனவொன்றின் திருப்பத்தைப் போல நிகழ்ந்தது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு அப்பால் என் அம்மாவின் இறுதி யாத்திரை துவங்குவதற்கு முன்பும் அதே மழையின் வேறொரு மழை பொழிந்து அடங்கிற்று. மழை என்பது ஒரே ஒரு மழை தான்.விட்டு விட்டுப் பெய்வது அதன் சுபாவம் என்று புரிந்துகொள்ள முடிகிறது
மழையைப் பற்றிய உரையாடலும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கவல்லது தான் இல்லையா..?

எப்போதும் பச்சை வேட்டி மட்டுமே கட்டியிருப்பார் பால்ராஜ்.அவரை முதன் முதலில் மூன்றாவது ஸ்டாப் அலிஃப் கடை வாசலில் சந்தித்தேன்.நல்ல மழை.நாலு பேர் நன்றாகப் புழங்கக் கூடிய இடங்களிலெல்லாம் நாற்பது பேர் நின்றுகொள்வது மழையின் முதல் காட்சி.அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வேன்.ஏன் இந்த மனிதர்கள் மழையைப் பார்த்ததும் தலை தெறிக்க ஓடி எதாவதொரு இடத்தில் ஒண்டிக் கொள்கிறார்கள்..?

பால்ராஜ் அண்ணன் மழையில் நனைவதற்காகவே பிறந்தாற் போல் மெல்ல நடப்பார்.மதுரைக்கு நாற்பது மைல்கள் தாண்டியிருக்கிற ஊருக்கு தினமும் பணி நிமித்தம் சென்று வருபவராக அவர் இருந்தார்.திருநகர் 3ஆவது ஸ்டாப்பில் சிலபல பேருந்துகள் அவரை ஏற்றிச் செல்வதற்காகவே சில நிமிடங்கள் ஓரமாய் நின்றதைப் பார்த்திருக்கிறேன்.அவர் ஒரு போஸ்ட் மாஸ்டர்.அந்த வேலையின் விளைதலாக எழுந்த மரியாதையும் பரிச்சயமும் அவருக்கு அப்படியானதொரு சலுகையைப் பெற்றுத் தந்திருக்கக் கூடும்.அவரை எங்கே பழகினேன் என்று ஞாபகமில்லை.இருவருமே ஒரே ஊரின் சில சாலைகளைப் பெரும்பாலும் பகிர்ந்து கொள்கிற சிலருள் அடங்கியிருந்தோம்.நாங்கள் கடந்து மீள்கிற நேரங்களும் ஒருமித்திருந்தன.இவையெல்லாம் எங்களுக்குள் சின்னதொரு ஸ்னேகபாவத்தை ஏற்படுத்தித் தந்திருந்தது.

அந்த மழையில் அலிஃப் கடை வாசலில் நானும் அவரோடு நிற்க வாய்த்த போது தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு கேரிபையை எடுத்து பக்கத்திலிருந்த கதவின் கொக்கியில் மாட்டினார்.அதனுள் இருந்ததைப் பார்த்ததும் எனக்கு வியப்பாய் இருந்தது.அவை எல்லாம் பாட்டுப் புத்தகங்கள்.இந்த உலகின் எடை குறைவான புத்தகங்களாக நம் தேசத்தின் பாட்டுப் புத்தகங்களை தாராளமாக முன் மொழியலாம்.ஸ்டாப்லர் பின் இரண்டோ மூன்றோ அடிக்கப் பட்டிருக்கும் ஒரே காரணத்தினால் சில காகிதங்கள் என்றழைக்க வேண்டிய அதுகளைப் பாட்டுப் புத்தகங்கள் என்றழைக்க முடிந்தது,அந்தப் பெயர் தந்த அந்தஸ்து அது.

சற்றைக்கெல்லாம் மழை விட்டு மறுபடி வெளுக்க ஆரம்பித்தது வானம்.சாலைகளெங்கும் மழையின் மீள்தலுக்கே உரிய சப்தங்கள் காரணமே தெரியாத கூட்டு நிம்மதி ஒன்றின் திசைகளில் வலியற்ற பாதங்களை எடுத்து வைத்து நடந்து செல்கிற சனக்கூட்டம் என மழைக்கு மட்டுமே விளைவிக்கத் தெரிந்த மந்திரவிளைச்சல் அது.

இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்திருந்தால் என்னென்ன புத்தகங்கள் என்பது தொடங்கி என் ஆராய்ச்சிகளை செய்திருக்க முயன்றிருப்பேன்.இன்னொரு சந்தர்ப்பத்தில் பால்ராஜ் அண்ணனை ஐந்தாவது ஸ்டாப் சுதா  டீ ஸ்டாலில் யதேச்சையாகப் பார்க்க வாய்த்தது.அன்றைக்கு மறுபடி நினைவிலாடியதால் கேட்டேன்.ஒன்றுமே பேசாமல் தன் திசையில் திரும்பி எங்கோ ஒரு இருளை முறைத்தபடி நின்றார்.நான் கேட்டது அவர் காதில் விழவில்லையா எனத் தெரியாமல் உடன் பதிலொன்றை எதிர்பார்த்தவன் அர்த்தமற்ற வெறுமையை மேலாண்மை செய்யத் தெரியாமல் இருமினேன்.கனைத்தேன் என்றால் தகும்.அவர் திரும்பவே இல்லை.
ரவீ…எங்கக்கா மக விடுமுறைக் காலங்கள்ல  அதோட அம்மாச்சி வீட்டுக்கு வட்டா வட்டம் வர்றது தான்.அப்பிடி வந்தப்ப  பாட்டுப் புத்தகங்களை வச்சி தனக்கு தெரிஞ்ச ராகத்துல சன்னமா பாடிட்டே இருந்திருக்கு.எங்க அம்மா வயசாளி அதுக்கு பிடிக்கலை.என்னத்தையோ ஒரு சொல்லு கூடச் சொல்லிருச்சி போல விசுக்குன்னு தன் உசுரை மாச்சிக்கிச்சிப்பா..சின்னதுக்கும் பெரிசுக்கும் நடுவாந்திர வயசுல எதை எப்பிடி எடுத்துக்கணும்னு தெரியாத புள்ளை.கெழவி சொன்னதுக்கு ரோசப்பட்டு போயிடிச்சி.எங்காத்தாவும் அடுத்த ஒரு வருசத்துக்குள்ற காலமாயிடுச்சிப்பா..எம் மருமக நெனப்பா தான் அதோட நினைவு நாள்ல வச்சிக் கும்பிடுறதுக்காக பாட்டுப் புத்தகங்களை வாங்கியாந்தேன்.வழில தான் மழை வந்திச்சா அது நனஞ்சிறக் கூடாதேன்னு ஒதுங்கி நிண்டப்ப தான் நீ பார்த்தது ஹூம்..
தனக்குத் தெரிந்த ரகசியத்தை ஒப்புக்கொடுத்த வதங்கலுக்குப் பின்னதான சிறு திருப்தி அவர் முகத்தில் ஒளிர்ந்தது.
ஏண்டா கேட்டோம் என்றானது.என் சமீபத்திய வாட்டத்தைத் தான் பொறுக்க மாட்டாதவராய் அட நீ ஏன்ப்பா கலங்குறே..இதை சொல்லாம இருந்திருப்பேன் நீ சின்னப்பய்யன் பால்ராஜ் அண்ணன் இந்த வயசுல பாட்டுப் புத்தகங்களை தூக்கிட்டு அலையுறாப்ல அப்டின்னு யார்ட்டயாச்சும் சொல்லிருவன்னு தான் சொல்லிபுட்டேன்.அப்பறம் வேற என்ன என சகஜமானார்.
சற்றைக்கெல்லாம் இன்னொரு மழை தொடங்கிற்று.அது மழைக்காலம்.அடிக்கடி மழை வருவது சகஜம் என்றாலும் சென்ற மழைக்கு எனக்கும் பால்ராஜ் அண்ணனுக்கும் இடையில் நிலவிய அந்நியமொன்று முற்றிலுமாய் உடைந்து போய் நெருக்கமான நட்பின் ஒரே வெம்மையோடு தவித்தபடி  இன்னும் எதாவது சொல்லப் போகிறாரா எனக் காத்திருந்தேன்.கண்கள் லேசாய்க் கலக்கத்தில் இருப்பதை மறைத்துக் கொள்ள முடியாமல் தவித்தேன்.
வாவேன் மழையில நடப்போம் என என் கைபற்றி அழைத்துச் சென்றார்.முந்தைய சந்திப்புக்கும் சேர்த்தாற் போல் மழை மெல்ல வருடிக்கொண்டிருக்க அவராகவே தெரு தாண்டும் போது சொன்னது தான் இந்த முதல் அத்தியாயத்தின் சாரமாகவே எனக்குள் சேகரமாயிற்று.
பாட்டுன்னா என்னா தெரியுமா ரவீ..?அனுமதிக்கப் பட்டதுக்கு மேல ஒத்தை சொல்லுக்குக் கூட எடம் தராது.எடம் இருக்காதுன்றது தான் உண்மை.இதைப் புரிஞ்சுக்கிட்டவன் வித்தைக்காரன்.மருமகளும் ஒரு பாட்டு மாதிரி எம்புட்டு ஒலிக்கணுமோ அம்புட்டு ஒலிச்சி நிறைஞ்சிட்டா.இதுல கலங்குறதுக்கு எதுவுமில்லை.ஹூம்..வரேன் என்று மழையின் திசையில் தான் மட்டும் விரைந்து நடக்கத் தொடங்கினார்.
என் மழையும் நானுமாய் அங்கேயே நின்று கொண்டிருந்தோம்.

பாட்டுப் புத்தகம்
*****************
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்

அப்பர் பெருமான் எழுதிய இந்தப் பாடல் பார்த்திபன் கனவு படத்தில் வேதா இசையமைப்பில் எம்.எல்.வசந்தகுமாரி பாடி இடம்பெற்றுள்ளது. காணொளிப்பாதையில் மேலும் பலரது சுய-கான-பகிர்தல்களாகவும் கிடைக்கிறது. அழகான தமிழால் ஆதுரம் செய்யும் பாடல்!

https://www.youtube.com/watch?v=LNpUXxr1ERk

 

 

பழைய புஸ்தகம்
****************
மௌனியின் கதை மாந்தர்கள் மனங்களால் வாழ்பவர்கள். இந்த உலகில் பெயருக்கு ஏதோ நடமாடுகிறார்களே தவிர இந்த உலகத்தின் சட்டதிட்டங்களுக்கு அவர்கள் கட்டுப்படுகிறாற் போல் தெரியவில்லை.அவருடைய மனங்கள் காட்டுகின்ற வழிகளில்தான் அவர்கள் அடிமைகள் போல் நடக்க முற்படுகிறார்கள். மனம் இவர்களை வலிய அடிமையாக்கி விட்டது என்று கூறுவதை விடவும் இந்த அடிமையை  விரும்பி ஏற்றுக் கொண்டது போல் தான் இவர்கள் செயல்படுகிறார்கள் என்று கூறுவது தான் பொருந்தும். யோசனை இல்லாத யோசனைகளில் ஆழ்வதும் புற நிகழ்ச்சிகளுக்கும் மனம் தரும் விளக்கங்களையும் சமாதானங்களையும் மட்டும்  ஏற்பதும் பின் அது காட்டுகின்ற வழியில் கண்மூடி நடப்பதும் தான் இவர்கள் பிறப்பெடுத்ததன் லட்சியங்களாகத்  தோன்றுகின்றன.

ஆழ்ந்து நோக்கும் போது, சிலர் கூறுவது போல, மௌனியின் கதைமாந்தர்கள் மனக்கோளாறு பிடித்தவர்களாக தெரியவில்லை வினோதப் பிறவிகள் என்று வேண்டுமானால் கூறலாம். வினோத கனவுகளில் வாழ்வதை விரும்பி ஏற்றுக் கொண்டவர்களை வேறு எப்படித்தான் அழைப்பது?

பக் 161
தமிழ்ச்சிறுகதை முன்னோடிகள்
முதற்பதிப்பு டிசம்பர் 1972
ஆசிரியர்: டாக்டர் இரா தண்டாயுதம் எம்.ஏ. பிஹெச்டி (இந்தியப் பகுதி மலேயப் பல்கலைக் கழகம்)
விற்பனை உரிமை தமிழ்ப் புத்தகாலயம்

 

புதியBOOK
*************

காலம் யாரையும் வெறும் கையோடு விடுவதில்லை காத்திருப்பவனை வாழ்க்கை வெறுங்கையோடு விட்டு விடுவதில்லை. அவனவனுக்கு வாழ்க்கையோடும், இந்த  உலகத்தோடும் ஏதாவது ஒரு பிடிப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை எந்த மனிதனும் முழுதாய் அறிந்திருக்கிறான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சிலவற்றை மட்டுமே அறிந்து கொண்டு அதை கண்காணிப்பதிலும் அதைப் பாதுகாப்பதிலேயுமே  தன்னை அர்ப்பணிக்கும் போது இவன் யோசிக்காத, இவன் பார்வையில் சிக்காத இவன் அறிவுக்குள் அகப்படாத ஏதோ ஒன்று இவனைக் கடந்து செல்கிறது

சினேகன் எழுதிய தன் வரலாற்று நூல். கவித்துவம் மிக்க வரிகளால் விரிகிற சுயநதி. 458 பக்கங்களில் நூற்றி இரண்டு அத்தியாயங்கள் பயணிக்கிற போதும் சலிப்புத் தட்டாத சொலல் முறை ஈர்க்கிறது. சினேகனின் கவிப்பூர்வ எழுத்து நடையும் பல அத்தியாயங்களில் வெளிப்படுகிற கவிதைகளும் வாசிப்பை சுவாரசியப்படுத்துகிறது.

“அவரவர் வாழ்க்கையில்”
சினேகன்
புலம் பதிப்பகம் வெளியீடு
விலை ரூ 500

 

இந்தக் கணத்தின் கவிதை

***************************
மார்கழி முதல் வாசலில்

சிக்குக் கோலம் இடுபவள்
நெற்றியில் இருந்து
ஒரு முத்து உதிர்கிறது
புள்ளியாகும்
ஆசையில்.
***
கதிர்பாரதி
உயர்திணைப் பறவை
இன்சொல் பதிப்பகம் வெளியீடு
விலை ரூ 260

தொடரலாம்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்காது : ஆத்மார்த்தி
  2. உன் பேர் சொல்ல ஆசைதான் : ஆத்மார்த்தி
  3. சைக்கிளில் சுற்றி வருபவரின் பாடல்: ஆத்மார்த்தி