ஆயிரம் சொற்கள் –1

பாட்டுப் பாடுவதைப் பற்றிப் பேசலாம். பாட்டே பிடிக்காது என்று சொல்கிறவர்கள் கூடத் தங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு பாட்டின் சில வரிகளையாவது முணுமுணுக்காமல் இருக்கமாட்டார்கள். பாட்டு என்பதை முழுவதுமாக வாழ்வுகளினின்றும் பிய்த்து எறிந்துவிட முடியாது. பாடல்களின் காலம் தானே வாழ்வும்

கோயிலில் தன்னை மறந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பவர்களில் திடீரென்று ஒருவர் ஆன்மீகப் பாடலொன்றைப் பாடுவார். மூடிய கண்களோடு பக்திப் பெருக்கில் பரவசமாகப் பாடி முடிக்கும் வரை சாமி கும்பிடுகிறவர்களில் பலரும் அதை வரவேற்பது போலப் பார்த்தாலும் ஒருசிலர் அதை அத்தனை ரசிக்காதது போலவும் தோன்றும். எனக்குப் பாட வராது என்கிற விலக்கமாகவும் அதற்கான காரணம் இருக்கக் கூடும்.

பாடுவதன் மீது மக்களுக்கான பிடிமானம் பெரியது. எங்க ரமேஷ் சூப்பராப் பாடுவான் என்று சுட்டுவதாகட்டும் அந்த ரமேஷ் முதலில் மறுத்து பிறகு பிகு பண்ணிக் கொண்டு ஒருவிதமாய்த் தான் நிறைய முறை பாடிப் பழகிய ஒரே ஒரு பாட்டைத் தன் ஆழத்திலிருந்து மீட்டெடுத்துப் பாடுவது வரைக்குமான முஸ்தீபுகள் பார்க்க வெகு சிறப்பாக இருக்கும். முக்கியமாக விசேச வீடுகளிலும் சுற்றுலாக்களிலும் நீ பாடு என்று உத்வேகம் செய்து பாட்டுக்குள் அப்படியாப்பட்ட ரமேஷைத் தள்ளி விடுவதும் அவரும் ஒருவழியாக அந்தப் பாடலைப் பாடிச் சிறப்பதெல்லாம் காண்பதற்கு அழகான சித்திரம்.

நன்றாக பாடுவதற்கான அளவீடு இடத்துக்கு இடம் மாறக்கூடியது. உலகில்  பாடத் தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை சுமாராக பாடுபவர்கள் என்கிற பெரும் கூட்டம் தான் ரசிகர்களாக எப்போதும் எங்கேயும் பாடல்களை பெற்றுக்கொண்டு ரசித்துக்கொண்டு கைதட்டி ஆதரித்துக் கொண்டு வரவேற்று கொண்டு இருக்கிறது மிக மிக நல்ல குரல் என்பது அரிதினும் அரிதாக கிடைக்கிற உடல் வரம் அது ஒரு இனியவிபத்து. என்னதான் பாடிப் பழகிக் கற்றுத் தேர்ந்தாலும் கூட குரல் அமைவு என்பது நிச்சயமாகத் தன்னிச்சையாக நடப்பதுதான்.

யாரும் இல்லாத இடங்களில் தான் மட்டும் இருக்க வாய்க்கையில்  மனிதன் செய்ய விரும்புகிற முதல் சில காரியங்களில் ஒன்று பாடுவது. தனக்கு பிடித்தமான பாடலின் விள்ளலை மட்டும் எடுத்துப் பாடுகிற சிலரை எனக்குத் தெரியும்.

மதுரை திருநகரில் நான் வசித்த போது காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவருடைய மகள் தட்டச்சு படிக்கும்போது எனக்குப் பழக்கம். ஏற்கனவே எனக்கு அவளது தந்தையைத் தெரியும். மாலை நேரங்களில் சைக்கிளில் செல்லும்போது மிக மெதுவாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்வார் தன் மனதுக்குப் பிடித்த பாடலை வீசுகிற காற்றுக்கு மட்டும்  கேட்பதாகச் சன்னமான குரலில் பாடியபடி செல்வார். கடந்து செல்லும்போது சாலையில் நடப்பவர்களுக்கு  ஏதோ பாடுகிறார் என்று தெரியும்.  என்ன என்று கவனிப்பதற்குள் கடந்து விடுவார். ஆட்களைத் தாண்டும் போது சற்று வேகமாகவும் ஆளற்ற சாலைகளில் மெதுவாகவும் வண்டியை செலுத்துவார் எல்லா நாளுமே இப்படிக் குறைந்தது ஒரு மணி நேரமாவது திருநகரைத் தன் பாடல் சைக்கிளிலேறி வலம் வருவதை பார்த்திருக்கிறேன். எப்போதுமே அந்தப் பெண் எனக்கடுத்த நாற்காலியில் அமர்ந்து தட்டச்சு பழகியதால் எங்களுக்குள் இயல்பாக நட்பு முகிழ்ந்தது. ஒரு நாள் டைப்ரைட்டிங் வகுப்பில் மின்சாரம் இல்லாமல் போகவே சற்று நேரம் அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம் அப்படி நாங்கள் பேசும்போது ‘எனக்கு உங்களை முன்பே தெரியும் உங்களை விட எனக்கு உங்கள் தகப்பனாரை நன்றாகத் தெரியும்” என்றேன்

அவர் பாடிய படி சைக்கிளில் உலா வருவதை பற்றிச்  சொன்னபோது சட்டென்று எதிர்பாராத வெட்கத்தால் அவளுடைய கன்னங்கள் சிவந்து விட்டன. அந்தக் கணம் சற்றும் அந்த வார்த்தைகளை  எதிர்பார்க்கவில்லை என்பது கண்களில் தெரிந்தது. அந்தரங்கமான ஒரு விஷயத்தை பேசும்போது மனமானது பெரிய திரையாகி முகத்தை மறைத்து விடுகிறது. அப்படியான திரை மலரும் தருணத்தில் தன்னைத் தணிக்கை செய்துகொள்வதோ உணர்வுகளை மேலாண்மை செய்துகொள்வதோ முடியாத காரியங்களாகின்றன. எல்லோருக்குமே தாங்கள் சந்திக்க விருப்பமற்ற சட்டகங்கள் குறித்த விருப்பமின்மை எப்போதும் இருக்கத் தான் செய்கின்றது. நான் அவளிடம் சொன்னது எந்தவகையிலும் அந்தரங்கமானதா அல்லது பொதுவானதா என்பது விஷயமே இல்லை. அதனை அவள் எடுத்துக் கொண்டது எவ்வண்ணம் என்பது தான் விஷயம். மீண்டும் ஒருமுறை “என் தந்தையை உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள். அப்படிக் கேட்டதை நான் ரொம்பவே ரசித்தேன்.

“அவர் ஒரு இடத்துலயும் நிற்கவே மாட்டாரே…அப்புறம் எப்படி உங்களுக்கு அவர் பாடுவதைக் குறித்து இத்தனை தெரிகிறது” எனக் கேட்டாள். நான் உடனே “தேநீர்க் கடையின் மறைவில் யாரும் பார்க்காமல் ஒளிந்து கொண்டு வழக்கமாகப்  புகைபிடிப்பவர்கள் நாள்பட அவர்களுக்குள் சிறிய பரிச்சயம் ஏற்படும் அல்லவா..? அது நட்பு என்பதன் கீழ் வராதென்றாலும் ஒரு செயல் தொடர்ச்சியின் விளைவாக ஏற்படக் கூடிய அணுக்கம். நான் செய்கிற அதே விஷயத்தை இன்னொருவன் செய்கிறான் என்பதான பங்காளித்துவ ஒற்றுமை எங்களுக்குள் உண்டு. நானும் என் டூவீலரை ஓட்டிக் கொண்டு தனியே செல்கையிலெல்லாம் பிடித்தமான பாடல்வரிகளைப் பாடியபடி செல்வேன். அப்படித் தான் உங்கள் தந்தை சைக்கிளில் பாடிக் கொண்டே செல்வதைக் கவனித்திருக்கிறேன்” என்றேன். அதுவரை தன் தந்தையின் செய்கையை வெறும் வினோதம் என்று கொண்டிருந்தவள் அந்தக் கணத்தில் கொஞ்சம் நெகிழ்ந்து போனாள்.

க்ளாஸ் முடித்து வீட்டுக்குப் போகும் போது நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கிளம்பினோம். அவளுடைய சைக்கிளை நான் தள்ளிக் கொண்டு நடந்தேன். தன் கரங்களின் சுதந்திரத்தைக் கொண்டாடியவளாக கைகளைத் தொடர்ந்து அசைத்துக் கொண்டு காற்றில் கோலமிட்டுக் கற்பனை மலர்களைப் பறித்தபடி துள்ளலோடு உடன் வந்தாள் அவள்.

“நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்வதற்கு ஏன் நமக்குத் தனி இடங்கள் தேவைப்படுகின்றன?” என்று அவள் கேட்டாள்.
நான் “இந்த உலகமே அதற்கான தனியிடம் தான் இல்லையா?” என்றேன். என் பதில் அவளுக்குப் பிடித்திருந்தது.
“உங்களைப் பற்றி என் தந்தையிடம் சொல்வேன். அவர் உங்களை சந்திக்க விரும்பக் கூடும் என்றாள். நிச்சயம் நான் உன் வீட்டுக்கு வருவேன்” என்றதற்கு மகிழ்ந்தாள்.

தன் தந்தையின் பாட்டுக்களைக் குறித்து என்னிடம் மேலும் அவள் பேச விரும்பியதை உணர்ந்தேன்.
“என் அப்பாவிடம் நீங்கள் இதனைக் கேட்கத் தேவையில்லை” என்றவாறே தொடங்கினாள்.
“எங்கள் வீட்டில் என் அப்பாவால் பாட முடியாது அவருக்கு பாடுவது மிகவும் பிடிக்கும் கர்நாடக சங்கீதத்தை கற்று தேர்ந்தவர் அவர் முறைப்படி அதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டவர் ஆனாலும் அவர் பாடுவது என் அம்மாவுக்குப் பிடிக்காமற் போயிற்று பாடல் என்கிற பண்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய அம்மா அதுவே வானொலியில் கேட்கும் பொழுது வெறும் குரலாக அந்த பாடலை அணுகுவதை முற்றிலுமாக விரும்பாததை நான் பார்த்திருக்கிறேன் வெகு இயல்பாக அந்த இடத்திலிருந்து வேறிடம் நோக்கி சென்று விடுவார் அல்லது வானொலியின் வேறு சேனலுக்கு மாற்றுவார்.

எங்கள் பால்யத்தில் அப்பா பல பாடல்களைத் தாலாட்டாக மாற்றி என்னையும் என் தம்பியையும் உறங்கச் செய்திருக்கிறார். எங்கள் குடும்பத்தின் கதையில் அது ஒரு கருப்பு வெள்ளை ஞாபக காலமாக ஒளியூற உறைந்துவிட்டது. பாடல்களைத் தவிர்த்து எந்தப் பேதமும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே நாங்கள் எல்லோரும் இருந்து வருகிறோம். அப்பா தண்டனை போலன்றி ஒரு தவம் போலவே தன் பாடாத மௌனத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறார். எதோவொரு முள்கணத்தைத் தாண்டி என் அப்பா எங்கள் வீட்டில் பாடவே இல்லை.அதற்கெல்லாம் மாற்றாகத் தான் அப்பா தன் சைக்கிளில் வலம் வர ஆரம்பித்தார்.  கடை கண்ணிக்கு போவது அலுவலகத்துக்கு செல்லுவது ஏதேனும் நிமித்தமாக யாரையேனும் அழைத்து போவது ஆகிய சந்தர்ப்பங்களில் அவர் பாட மாட்டார் பாடுவதற்காகவே அவர் ஒவ்வொரு தினமும் தன் சைக்கிளை எடுத்துச் செல்வார். பாடல்களுக்கான பிரத்தியேக சாலைகள் அவருக்கு தெரியும் அந்த வழிகளில் செல்லும் பொழுது அவர் பாடித்  திரும்புவார் அப்படி அவர் செய்கிறார் என்பது எனக்கும் என் தம்பிக்கும் தெரியும் எங்களுக்கு பொதுவானவர்கள் “உங்கள் அப்பா பாடிக் கொண்டே சைக்கிள் ஓட்டுகிறார்” என்பதை எங்களிடம் லேசாக கிண்டலோடு கிசுகிசுப்பாக  சொல்லும் பொழுது எந்த விதமான குணம் மணம் நிறம் இன்றி அதை எங்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது ஒவ்வொரு முறை அதை கேள்விப் படும் போதும் அதை முதல்முறை கேள்விப்படுவது போல நாங்கள் கடந்து போவோம்.

என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் ஒரு நெடுங்காலக் காதல் இன்றும் உடையாமல் இருப்பது வேறு விஷயம். நாங்கள் இந்தப் பாடுவதைப் பற்றி பேசுவதன் மூலமாக சைக்கிளில் என் அப்பா தன் பாடற்சாலைகளில் சென்று திரும்புவதை பாதித்து விடுவோமோ என்கிற பயத்தால் அதை பேசாமல் இருக்கிறோம் என்றாள். தான் மட்டுமே சுமந்துகொண்டிருந்த பெருங்கனம் ஒன்றைப் பகிர்ந்து என்னிடம் பாதியைக் கரமளித்துவிட்டாற் போன்ற நிம்மதி அவளிடம் தெரிந்தது. அதன் பிறகு அவள் எதுவும் பேசாமல் நடந்தாள்

நான் அவளிடம் “இதில் எந்த வினோதமும் இல்லை. ப்ரைவஸி என்றொரு சொல்லின் உட்புறம் கனமான அமைதியால் ஆவது அதன் தன்மை தான். உங்கள் அப்பா அம்மா மற்றும் உங்களது தனித்த உலகங்கள் ஒவ்றையொன்று உரசாமல் ஓரே சுற்றுப் பாதையைப் பகிர்ந்துகொள்கின்றன. அவ்வளவு தான்” என்றேன். என் பதில் போதுமானதில்லை என்றாலும் அவளுக்குள் சொல்ல முடியாத திருப்தியை ஏற்படுத்தியது போலும். நன்றி சொல்லி விட்டுத் தன் வீடிருக்கும் குறுக்குச் சந்தில் சைக்கிளுடன் திரும்பி இருளில் கலந்து மறைந்தாள்.

அவளது அம்மாவுக்கு ஏன் தன் கணவரது பாடல்கள் பிடிக்காமல் போயின என்றொரு கேள்விக்கான பதில் தேவையற்றது என்றெனக்குத் தோன்றியது. அதன் பின் வந்த வேறொரு தினத்தில்  அந்தப் பெண்ணின் தகப்பன் “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு” என்ற பாடலை ஆலாபனை செய்தவாறு என்னைக் கடந்து போனார். அந்தப் பாடலோடு எப்போதும் சேர்ந்தே வருகை புரிவதான சகபயணியாகவே அவரது ஞாபகத்தை மாற்றிக் கொண்டேன். இன்றைக்கும் அந்தப் பாடலைக் கேட்க வாய்க்கையிலெல்லாம் அந்தப் பெண்ணின் தந்தை தன் சைக்கிளின் ஹேண்ட்பாரை இஷ்டத்துக்கு வளைத்து நெளித்துக் கொண்டே தன் சன்னக் குரலால் அதே பாடலைப் பாடியபடி  பாதிப் புன்னகையோடு என்னைக் கடந்து செல்கிறார். பாடல்கள் தீர்வதில்லை.

https://www.youtube.com/watch?v=AGuuEpdDpTY

இந்தக் கணத்தின் கவிதை

துறக்கம்
********
மடி பயின்ற பூனைகள்
பிறகெப்போதும்
படிவிட்டிறங்கத்
துணிவதில்லை

க.மோகனரங்கன்
கல்லாப்பிழை

விலை ரூ 90 தமிழினி  வெளியீடு

தொடரலாம்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்காது : ஆத்மார்த்தி
  2. வழியெலாம் மழை -ஆத்மார்த்தி
  3. உன் பேர் சொல்ல ஆசைதான் : ஆத்மார்த்தி