காதல்  தொடர்பாக இரண்டு பிரதானமான கருத்துருவாக்கங்கள் இங்கு     நிலவுகின்றன.முதலாவது,காதலை புனிதமானதாக கொண்டாடுவது. உடலின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது, காதலிக்கும் ஒருவருக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும், ஒருவேளை தான் காதலிக்கும் ஒருவர் அந்த காதலை நிராகரித்தாலும் கூட அவர்மீது கொண்ட காதலை புனிதப்படுத்தி, உடல்ரீதியான அத்தனை சமிக்ஞைகளையும் புறக்கணித்து, அவர் மீதான காதலை மட்டும் சுமந்துகொண்டு வாழ்வதுதான் உண்மையானகாதல். இந்த கருத்துருவாக்கத்தின்படி காதலிப்பவரைவிட காதலை பிரதானமாகிறது. இது ஒரு நாடகத்தனமான கருத்தாக்கம். பெரும்பாலான சினிமாக்கள் இந்தகருத்தாக்கத்தை ஒட்டியே எடுக்கப்படுகின்றன.

 

இரண்டாவது, காதல் என்பது மிக எளிமையானது. அது ஒரு உடல்ரீதியான கவர்ச்சி.இன்னும் சொல்லப் போனால் ஒரு  பாலினகவர்ச்சியும் அதன் விளைவாக ஒருவர் மீது வரக்கூடிய ஈர்ப்பும்தான் காதல். இதன்படி காதல் என்பதற்கு வலிந்து திணிக்கப்பட்ட எந்த கோட்பாடுகளும் கிடையாது. சுஜாதாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் “காதல் என்பது ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சி”. இந்த கருத்துருவாக்கத்தின்படி, காதல் என்பது நமது பாலியல் விருப்பத்தின் வழியே இயல்பாக எல்லோரின்மீதும் ஏற்படுவது. ஒருவர் மீது நான் காதல் கொள்கிறேன் என்பது அவர் மீதான பாலியல் விருப்பம்அவ்வளவே. இந்த கருத்துருவாக்கம் காதலை மிகவும் சிறுமைப்படுத்தும் ஒன்று. வெறும் உடல்கவர்ச்சி, பாலியல் தேவை என்று காதலை சுருக்க முடியாது.

 

உண்மையில் காதல் என்பது இந்த இரண்டு  விதமான கருத்தாக்கங்களுக்கும் இடைப்பட்டது. காதல் புனிதமும் அல்ல வெறும் உடலியல் கவர்ச்சி என்ற அளவில் சிறுமையானதும் அல்ல.

 

 

நமது வாழ்நாள் முழுக்க ஏராளமான மனிதர்களை கடந்து போகிறோம், நிறைய மனிதர்களை விரும்புகிறோம், நிறைய மனிதர்கள் மீது அன்பாய் இருக்கிறோம் ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் நாம் காதலிப்பதில்லை. அப்படி என்றால் ஒருவர் மீதான அன்பு அல்லது விருப்பம் என்பதை தாண்டி காதல் எந்த வகையில் தனித்துவமானது?

 

ஏதோ சில சந்தர்ப்பங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் நம்மில் ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தும் போது அந்தநல்லுணர்வுக்காக அவர்களின் அருகாமையை விரும்ப தொடங்குவோம், முதலில் ஏற்படக்கூடிய அந்த உணர்வு வேண்டுமானால் ஹார்மோன்களின் விளைவாக இருக்கலாம், அதுகாதல்அல்ல. அவரின் அருகாமையை வேண்டி,கவனிப்பை வேண்டி நெருங்கி செல்வதின் வழியாக அவருடன் ஒரு முழுமையான பிணைப்பை ஏற்படுத்தி கொள்கிறோம் அதுவும் காதல் அல்ல. அப்படி அவருடன் ஏற்படுத்தி கொண்ட உறவின் மீது முழு அர்ப்பணிப்புடன்(commitment) இருப்பதும், அந்த உறவை தக்கவைத்துக் கொள்வதில் நமக்கு இருக்கும் பொறுப்பை(responsibility)  உணர்வதும், அவரின்மீதும், அவரின் உணர்வுகளின் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பும் (compassion) என இந்த மூன்று முதிர்ச்சியான மனநிலையும் ஒரு உறவின் மீது நமக்கு ஏற்படுமாயின் அந்த உறவே காதல். காதலர்களுக்கு இடையேயான பிரிவு ஏற்படுவதற்கு இந்த மூன்றில் ஏற்படும் சமநிலையின்மையே காரணமாக இருக்க முடியும்.

 

தன்னை ஒருவர் காதலிக்கிறார் என்பது தான் இந்த வாழ்க்கையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உணர்வு. அதற்கு காரணம் காதல் என்பது ஒரு அங்கீகாரம். நம்மை நாமாக, நமது பலவீனங்களுடன் முழுமையாக ஒருவர் ஏற்றுக்கொள்கிறார் என்பது அத்தனை மகத்துவமானது. அதற்காகவாவது நாம் காதல் செய்ய வேண்டும்.