காதல் எனும் வார்த்தை இந்தியாவில் நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சும்மா பஸ் ஸ்டாண்டில் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்ததுமே அவளை காதலிக்க ஆரம்பித்து விடும் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். பார்ப்பது கூடப்பரவாயில்லை. பார்க்காமலே கடிதத்தில் காதல் புரிந்ததையும் கண்டிருக்கிறோம். ‘லவ் ப்ரோபோசல்’ என்பது தமிழ் கூறும் நல்லுலகத்துக்கே உரித்தான ஒரு பதம். அதையும் தாண்டி 96 மாதிரி படங்களில் பள்ளிக்காலத்தில் பிடித்த மாணவி மேல் வரும் வசீகரத்தைக் கூட காவியக்காதலாக நம்பி கன்னிப்பையனாக வாழுபவர்களையும் பார்க்கிறோம்.

 

காரணம், காதல் பற்றி நம்மிடம் இருக்கும் மாபெரும் தவறான புரிதல்தான். நீங்கள் பஸ் ஸ்டாண்டில் விழுந்த  பெண் மேல் உங்களுக்கு வருவது காதல் அல்ல. அது அழகின் மயக்கம். தீபிகா படுகோன் போஸ்டரை பார்ப்பதும் வரும் உணர்வும் பஸ் ஸ்டாண்ட் பெண்ணிடம் வருவதும் ஒன்றுதான். போஸ்டரை பார்த்ததுமே தீபிகா மேல் காதல் கொண்டு ‘ப்ரொபோஸ்’ செய்ய அலைந்தால் உங்களுக்கு கவுன்சிலிங் தேவை. அதே போல, பள்ளியில் வருவது நரம்புகளில் ஊறும் ஹார்மோன் பெருக்கு மட்டுமே. அதனால்தான் ஒரு முறை பெண் பார்த்து பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு உடனே செய்யும் திருமணத்துக்கும் பஸ் ஸ்டாண்டில் ஒருமுறை பார்த்து, உடனே டூயட் பாடி செய்யும் திருமணத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே ‘அரேஞ்ட் மேரேஜ்’-தான். ஒன்று பெற்றோர் அரேஞ்ச் செய்தது; இன்னொன்று நீங்களே அரேஞ்ச் செய்து கொண்டது.

 

காதல் என்பது இருவரையும் பற்றிய புரிதலில் வருவது. அதற்கு பேச வேண்டும். பழக வேண்டும். ‘வாங்க பழகலாம்,’ என்று சிவாஜி ரஜினி மாதிரி குடும்பத்தோடு வீட்டுக்குப் போய் பழகுவது அல்ல. இருவரையும் பற்றி புரிந்து செய்வது. இருவருக்கும் பிடித்த ஹீரோ யார், விஜய்யா அஜித்தா? பிடித்த இசை அமைப்பாளர் யார் ராஜாவா, ரஹ்மானா போன்ற விஷயங்களிலேயே சில வகை புரிதல் வந்து விடும். ‘எனக்கு சுந்தர ராமசாமி, லாசரா எல்லாம் பிடிக்கும்.’ என்று அவள் சொல்லி ‘உங்களுக்கு எந்த வகை புத்தகம் பிடிக்கும்?’ என்றால் அதற்கு அவன் ‘நான் வண்ணத்திரை விரும்பிப் படிப்பேன்!’ என்று பதில் சொன்னால் முடிந்தது கதை. அல்லது அவள் ‘நான் ரேடியோஹெட் குழுவின் ஆல்பங்கள் விரும்பிக் கேட்பேன், நீங்கள்?’ என்றால் அதற்கு அவன் ‘எனக்கு தேவா ரொம்பப் பிடிக்குங்க!’ என்றால் காலி.

 

நிற்க, இங்கே வண்ணத்திரை, தேவா இவர்கள் கேவலம் ரேடியோஹெட், லாசாரா உயர்வு என்று சொல்ல வரவில்லை. ஆனால் இவை இரண்டுமே ரசனையின் இரண்டு அதீத எல்லைகள். பிரச்சினை என்னவென்றால் இந்த முரண் ரசனைகள் நிறைய நேரம் முரண்பாடான சிந்தனைகளால் வருபவை. அப்படி வடக்கு தெற்கு எல்லையில் உழலும் இரண்டு பேர் ஒத்த கருத்தோடு இயைந்து வாழ்வது நடைமுறையில் பிரச்சினைகளை கொண்டு வரலாம். இசை, இலக்கியமே இந்த லட்சணம் என்றால் மற்ற கேள்விகள் எப்படி இருக்கும்? உங்கள் இருவரின் அரசியல் சார்பு என்ன, வாழ்வியல் பற்றிய கருத்தாக்கங்கள் என்ன? குழந்தை வளர்ப்பு பற்றிய இலக்கு என்ன? பெண்ணியம் பற்றி, குடும்ப அமைப்பு பற்றி, உங்கள் இருவரின் நிலைப்பாடு என்ன? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 

இது எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது. உணர்வுபூர்வமாக இருவரும் பிரச்சினைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதும் ஒருவருக்கு ஒருவர் புரிய வேண்டும் அந்த அணுகுமுறை இருவருக்கும் உகந்ததாக, ஏற்புடையதாக இருக்க வேண்டும். பாதி குடும்பப்பிரச்சினைகள் இதில்தான் தோன்றுகின்றன. நிதி மேலாண்மை பற்றி இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமை என்ன? இது மணவாழ்வில் வரும் அடுத்த முக்கிய தகராறு. மூன்றாவது பாலியல் பற்றி. இதிலும் இருவருக்கும் நல்ல புரிதல், ஒத்த கருத்துகள் இருக்க வேண்டும்.

 

இதெல்லாம் பஸ் ஸ்டாண்டில் பார்த்தவுடன், அல்லது ‘நலம் நலமறிய ஆவல்,’ என்று கடிதம் எழுதியவுடன் புரியாது. இரண்டு குடும்பங்களும் உட்லண்ட்ஸ் போய் காபி, வெங்காய பஜ்ஜி சாப்பிட்ட உடன் புரியாது.

 

அதற்குத்தான் டேட்டிங் என்கிற சிஸ்டம் இருக்கிறது. டேட்டிங் என்றால் செக்ஸ் என்ற தவறான புரிதல் நம்மிடையே இருக்கிறது. (குறிப்பாக பெற்றோர் அப்படி நினைக்கிறார்கள்.) டேட்டிங் என்பது ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளும் பருவம். ஒருவரின் உணர்வுபூர்வமான அணுகுமுறைகளை அடுத்தவர் தெரிந்து கொள்ள, அது தனக்கு ஒத்துவருமா என்று எடை போட எடுத்துக்கொள்ள வேண்டிய கால அவகாசம். நம் தாத்தா காலத்தில் பாட்டிக்கு சமைத்து கொடுப்பது, துணி மணி துவைப்பது, பிள்ளை பெற்று வளர்ப்பது தவிர தாத்தாவுடன் பெரிய அந்நியோன்னியம் பாட்டிக்கு இருந்திருக்காது. அம்மா அப்பா காலத்தில் இது சற்றே மாறியது; ஆயினும் அம்மா, அப்பா நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்தது குறைவே.

 

ஆனால் இன்றைய தலைமுறை இருவருமே படித்த, வேலைக்குப் போகும் தலைமுறை. இங்கே இருவருமே புரிதலுடன், நட்புடன், அன்புடன் வாழ வேண்டிய சூழல் வந்திருக்கிறது. அப்போது அந்தப்புரிதலை கொடுக்கும் வாய்ப்பு இருக்கும் ஒரே விஷயம் டேட்டிங்தான்.

 

இது இருவருக்கும், குறிப்பாக ஒரு பெண்ணுக்கு தேவையான விஷயம். ஏனெனில் பிரச்சனையான ஒரு மணவாழ்வினால் இந்தியாவில் ஆணை விட பெண்தான் அதிகம் பாதிக்கப்படுகிறாள். தொல்லையுற்ற மணவாழ்வில் இருந்து அவளால் சுலபத்தில் வெளியே வர இயலுவதில்லை. வந்தாலும் மரியாதையாக, தலை நிமிர்ந்து வாழ இந்திய சமூக அமைப்பு அனுமதிப்பதில்லை. அதுவும் ஆணாதிக்க சிந்தனையை ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட நமது ஆண்களைப் புரிந்து கொள்ளாமல் மணவாழ்வில் நுழைவது என்பது எட்டிப்பார்க்காமலே கிணற்றில் குதிப்பது போன்றது.

 

எனவே பார்த்தவுடனே காதல், கடிதத்தில் காதல் என்பதை நிறுத்துங்கள். பார்த்தவுடன் டேட்டிங், கடிதத்தில் டேட்டிங் என்று மாறுங்கள். அதுவும் ஒரு டேட்டிங், ரெண்டு டேட்டிங் என்று நிற்காமல் தேவைப்படும் அளவுக்கு போகட்டும். முழுமையான புரிதல் வருகிறதா என்பதில் கவனமாக இருங்கள். அந்த டேட்டிங் பருவத்தில் போரடித்துப் போயோ அல்லது வெறுப்பு தோன்றியோ உங்கள் டேட்டிங் நின்று விடக்கூடும். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் அதிகமாகிக்கொண்டே ஒரு நாள், வாழ்ந்தால் இந்தப்பெண்ணுடன்தான், அல்லது இந்தப்பையனுடன்தான் என் வாழ்வை கழிக்க வேண்டும் என்ற மன உறுதி தோன்றும்.

 

உண்மையில் அதுதான் காதல் என்பது. அப்போது உங்கள் காதலை சொல்லுங்கள். ‘லவ் ப்ரொபோஸ்’ பண்ணுங்கள். அப்போதுதான் அந்தக்காதல் உறுதியாக, அன்பு நிறைந்ததாக இருக்கும். ஹார்மோன் சுரப்பிகள் தாண்டிய ஒரு நிலையாக இருக்கும்.  (அதிலும் கூட உடனே தாலி கட்டாமல், சேர்ந்து வாழ்தலை முயற்சி செய்கிறார்கள். அது இன்னமும் உத்தமம். பாதுகாப்பான விஷயம். ஆனால் இன்னமும் நம் ஊரில் அப்படி சொன்னால் நடு முதுகில் குத்துவார்கள். இன்னொரு முப்பது வருடம் கழித்து காதலர் தின சிறப்பு  கட்டுரை எழுதும் வேறொருவர் இதனை ஊக்குவித்து முழுக்கட்டுரை எழுதலாம்.)

 

பாரதி காலத்தில் காதலே ஒரு புதிய, நவீன விஷயமாக இருந்தது. அதனால் அவன் ‘ஆதலினால் காதல் செய்வீர்!’ என்று முழங்கினான். இன்று காதலுக்கு பெருமளவு அங்கீகாரம் கிடைத்து விட்டது. இப்போது இந்திய ஆண் பெண் உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் நேரம் வந்து விட்டது.

 

எனவே, ஆதலினால் டேட்டிங் செய்வீர் உலகத்தீரே!