மனித உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் உலகெங்கும் வேட்டையாடப்படுவது ஒரு தொடர் நிகழ்வாகிவருகிது. அது ஜனநாயக நாடாக இருந்தாலும் சரி , மதவாத நாடாக இருந்தாலும் சரி மனித உரிமைகள் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் அதிகாரத்திற்குமிடையேனா போராட்டம் தொடர்ந்து கூர்மையடைந்து வந்திருக்கிறது.

ஈரானிய வழக்கறிஞர் அமிர்சலார் தவூடிக்கு அவரது மனித உரிமை சார்ந்த பணிகளுக்காக  30 ஆண்டுகள் சிறைமற்றும் 111 கசையடிகள்  விதிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா அம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை இயக்குநர் ஃபிலிப் லூதர் தெரிவித்தார்.

“அதிர்ச்சியளிக்கும் இந்த கடுமையான தண்டனை ஒரு பெரும் அநீதி. அமிர்சலார் தவூடி தன்னுடைய மனித உரிமை சாரந்த பணிகளுக்காக  அப்பட்டமாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்…. மனித உரிமை மீறல்களை உலகிற்கு வெளிப்படுத்தியது குற்றம் அல்ல. ஈரானிய அதிகாரிகள் அமிர்சலார் தவூடியை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி உடனே விடுவிக்க வேண்டும்” என்று லூதர் தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்களைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களின் சேவைப்பணிகளைச் செய்யவிடாமல் ஈரானிய அரசு அதன் நீதிமன்றங்கள் மூலம் மூர்க்கமாக ஒடுக்கி வருகிறது. அதன் சமீபத்திய பலி அமிர்சலார்.

மேலும் லூதர் “இந்த தண்டனை மூலம் ஈரானிய அதிகாரிகள் மனித  உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்களைத் தேசத்தின் எதிரிகளாக நடத்துகிறது. அவர்களை ஒடுக்குவதற்கு அது எந்த எல்லைக்கும் செல்கிறது. அவர்களுக்கான நீதி இங்கே துளியும் கிடையாது.” எனத் தெரிவித்தார்.

அமிர்சலார் தவூடிக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கு ஈரானிய அரசு கூறும் காரணங்கள், அதிகாரிகளை அவமதித்தல், ஈரானின் முதன்மை தலைவரை அவமதித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தல் என மூன்று குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு இந்த கடும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய சட்டங்களின்படி மூன்று குற்றங்கள் செய்தால் அவர்களுக்கு மிக நீண்ட சிறைத்தண்டனை தரப்படும். அதன்படி அவருக்கு 30 வருடங்கள் 111 கசையடி கொடுக்கப்பட்டுள்ளது.

சில காலம் முன்பு தான் மற்றொரு மனித உரிமை வழக்கறிஞரான நஸ்ரின் சொடௌடேவுக்கு 38 வருடச் சிறையும் 148 சவுக்கடியும் கொடுக்கப்பட்டது. அதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்களும்  எதிர்ப்பும் எழுந்தது. அதே போல நஜாஃபி எனும் மற்றொரு வழக்கறிஞருக்கு 17 வருடச் சிறையும் 74 சவுக்கடிகளும் கொடுக்கப்பட்டது. கடந்த 2028 ஜனவரி முதல் ஆராஷ் கீஹோஸ்ராவி, காஸ்ஸம் ஷோலால்-சதி, ஃபரோக் ஃபோரூசான், முஸ்தபா டனெஷூ, மஸ்டபா டாக் ஹமாதானி, பாயம் தராஃப்ஷன் மற்றும் ஸேனாப் தஹேரி எனக் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்களின் பட்டியல் நீள்கிறது.

சர்வதேச பொது மன்னிப்புக் கழகமான அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக நாடுகளை குரல் கொடுக்க வேண்டுகிறது. ஈரானுடன் நட்புறவில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பையும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து மனித உரிமை வழக்கறிஞர்களை விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டது.

நாம் இருண்ட காலத்திலிருந்து நவீன யுகத்திற்கு வந்திருக்கிறோம் என்பதன் அடையாளமே தனி மனித சுதந்திரமும் உரிமைகளும்தான். ஆனால் தங்களது கேள்விகேட்பாரற்ற அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள விரும்பும் அரசுகளும் அமைப்புகளும் காலத்தை மீண்டும் பினோக்கி செலுத்துவதற்காக தமது மத்திய கால ஒடுக்குமுறை கருவிகளை உயர்த்துகின்றன.