நவீன வேட்டையாடிகளாக பூவுலகின் பிற உயிர்களின் இடத்தை பெரு வேகத்தில் ஆக்கிரமித்த, அவர்களது வாழ்விடங்களை அழித்த மனித இனம் இன்று தனது இல்லங்களில் பதுங்கி வாழ்கிறது. நிலத்தின், கடலின் உயிரினங்களை மிக சுலபமாக வேட்டையாடிய மனிதனை இன்று வேட்டையாடி வருகிறது ஒரு சிறிய, பழைய கிருமி. இது மனிதனின் ஆணவத்தின் மீது விழுந்த அடி என எடுத்துக்கொள்ளலாமா?
டைனோசர்களுக்கு அடுத்த மிகப் பெரிய வேட்டைக்காரன் மனிதன் என்றுதான் இதுவரை எல்லோரும் நம்பி வந்தார்கள். பாதுகாப்பிற்காகவும் உணவிற்காகவும் நீண்ட பயணங்கள் மேற்கொண்டாலும் உலகமயமாதல் என்ற நிகழ்வு வரும் வரை மனிதன் கிருமிகளைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. ஆயுதங்கள் தயாரிப்பு, நெருப்பின் கண்டுபிடிப்பு முதல் வாகனங்களின் கண்டுபிடிப்பு வரை அவனது ஆணவத்தை அதிகமாக்கவே செய்தன. காலனி ஆதிக்கத்தின் காலத்தில் மிகப் பெரிய கண்டங்களை மிக எளிதாக வென்றெடுத்த ஐரோப்பியர்களுக்கு மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் மிகப் பெரிய எதிரியாக இருந்தன. அமெரிக்க கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு சென்ற புதிய கிருமிகள் அந்த மண்ணின் இனத்தையே பெருமளவு அழித்தது. இப்போது சீனர்களின் வன விலங்கை புசிக்கும் வழக்கம் கிருமிகளின் அடுத்த கட்ட தாக்குதலுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்க வைக்கிறது. ஆனாலும் மனிதர்கள் தங்களை இந்த மண் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள்.
மனிதக் குடலில் மட்டுமே 1,000 வகையான நுண்ணுயிரிகள் உள்ளன. பல மில்லியன் ஆண்டுகளாக மனிதனுடன் வாழும் நுண்ணுயிரிகள் இவை. “நான்” என ஒரு மனிதன் சொல்வது இந்த நுண்ணுயிரிகளையும் சேர்த்துத்தான். நோய் எதிர்ப்பு சக்தியற்ற இன்கா நாகரீகத்தை அழித்த அதே புதிய கிருமிதான் நோய் எதிர்ப்பு சக்தியற்ற 21ஆம் நூற்றாண்டு உலக வாசிகளை கொரோனா வடிவில் தாக்குகிறது. இன்கா நாகரீகத்தின் மீது ஸ்பெயின் ராணுவம் “கடவுளின் பெயரால்” கொலை வெறித் தாண்டவம் நிகழ்த்தியது. அந்தக் கணக்குப்படி கொரோனா தொடுத்திருக்கும் போர் வன விலங்குகள் மனிதர்கள் மீது நடத்தும் யுத்தம். சீனாவில் வன விலங்குகளை சாப்பிட்டதன் வழியாகத்தானே இந்த கோவிட்-19 கிருமி மனிதர்களுக்குள் புகுந்து, மனிதர்களிடையே மரணத் தாண்டவம் ஆடுகிறது.
70,000 ஆயிரம் ஆண்டு கால மனிதனின் “அறிவுப் புரட்சி”யில் சமீபத்திய சில ஆயிரம் ஆண்டுகள் மனிதனுக்கு இயற்கையை வென்றுவிட்டது போன்ற கற்பனையை ஏற்படுத்தியிருக்கிறது. மனிதன் விலங்குகளை அழித்தான், அவற்றின் வாழ்விடங்களைக் கைப்பற்றினான். அதனால் விலங்குகளைவிட பலசாலி என நினைக்கத் தொடங்கினான். தனது விருப்பத்தின்படி காடுகளை அழித்தான், பிறகு புதிய காடுகளை உருவாக்குவதாக கற்பனை செய்தான். உலக வெப்பமயமாதல் எல்லாம் ’டுமீல்’ என்று நம்புவதால் காடுகளையும் வென்று விட்டதாகவே மனிதன் கருதுகிறான். நவீன மருத்துவத்தின் வழியாக மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் அதிக ஆரோக்கியமிக்கவர்களாக மனிதர்கள் இன்று இருக்கிறார்கள். மரபணுக் கூறுகளையும் பிரித்து மேய்ந்தாயிற்று. இரண்டாம் அறிவுப் புரட்சியில் மனிதன் இயற்கையை வென்று வருவதாக உறுதியாக நம்புகிறான். ஒரு சின்ன கிருமி வந்து கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வரை அவன் இயற்கையை வெல்ல முடியும் என்றே நம்பிக்கொண்டிருந்தான்.
இயந்திரமயமாதலுக்குப் பின்பு உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் அதிக நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வதாலும் குடலின் நுண்ணுயிரிகளின் தன்மைகள் மாறி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா கிருமியின் தாக்கம் நமது வாழ்வில் நுண்ணுயிரிகள் கொண்டிருக்கும் பங்கினைக் காட்டுகிறது. குறிப்பாக கொரோனா கிருமி 1956 முதல் நமது உடலில் சளி ஏற்படுத்தும் கிருமியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது புதிதாக வன விலங்குகளிலிருந்து வந்திருக்கும் புதிய வகை கோவிட்-19 கிருமி இது என்பதுதான் பிரச்சனை. இதற்கான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு கிடைக்கும் வரைதான் இதுவும் ஒரு பிரச்சனை. அந்தக் கட்டத்தை மிகக் குறைவான உயிரிழப்புடன் எட்டுவது எப்படி என்பதுதான் இப்போதைய பிரச்சனை.
ஹீலர் பாஸ்கர் சொன்னது போல “ஊசி போட்டு கொன்னுடுவாங்க” என நான் சொல்லவில்லை. ஆனால் அலோபதி மருத்துவமும் மருந்துகளும் ஹேண்ட் சானிடைஸர்களும் நமக்கு உடனடி உதவியாக மட்டுமே இருக்க முடியும். நிரந்தரமாக நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளவும் நமது தோழர்களாக நமக்குள் வாழும் பல லட்சம் நுண்ணுயிர்களை காத்துக்கொள்ளவும் அலோபதியும் பாரம்பரிய மருத்துவமும் கொண்ட முழுமையான புரிதல் நமக்கு அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு சார்ஸ், பறவைக் காய்ச்சல், கொரோனா வரும் போதும் அலோபதி மருத்துவமும் மருந்து கம்பெனி மாஃபியாவும் மனிதர்கள் மீதான ஆதிக்கத்தை மேலும் உறுதியாக்கிக்கொள்கிறது. உடனடி தீர்வுக்கு அதைவிட வேறு வழி இல்லை என்றாலும் நிரந்தமான மாற்றுக்கு அவர்களே தடை என்பதே உண்மை.
மருந்து கம்பெனி மாஃபியா மனித மார்க்கெட் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த பூமியின் மீது மனிதர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று நம்பியவர்களின் ஆணவத்திற்கு பதிலாக வந்திருக்கிறது கொரோனா. பாக்டீரியா முதல் பெரு விலங்குகள் வரையிலான பூமியின் உயிரினங்களில் மனிதர்களும் அடக்கம். மனிதர்களுக்குள் அத்தனையும் அடங்கும் என்று நினைக்கும் ஆணவம் இதோடி அழியட்டும். மேலாதிக்கம் செலுத்தும் ஒன்றை அழித்து, வாழ்க்கை சுழற்சியை சமநிலைப்படுத்தும் இயற்கையின் தொடர் இயக்கத்தின் முன்பாக மனிதர்கள் மண்டியிட்டு உணர வேண்டியது இதுதான்: கொரோனா எதிரி அல்ல, மனிதர்களுக்குத் தரப்பட்ட மற்றொரு வாய்ப்பு; தங்கள் பிழைகளை சரி செய்துகொள்ள.