“டிக்டாக்” செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், டிக்டாக் செயலிமூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகவும், அதனால் அந்தச் செயலிக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக்டாக் செயலியைத் தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து டிக்டாக் செயலிக்குத் தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் டிக்டாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிப்பதாகத் தெரிவித்தது.

அதன்படி இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக்டாக் செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை வரும் 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.