வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், வாதங்களும், கேள்விகளும் முன்வைக்கப்பட்டு காரசாரமாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

வேலூரில் தேர்தல் ரத்து

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததிலிருந்து வருமானவரித் துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சோதனை நடத்தி வந்தனர். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வேலூர் தொகுதியில் வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்யப் பணம் பதுக்கப்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பல கோடி ரூபாயை கைப்பற்றினர். இந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்டது என்று வருமான வரித்துறை உறுதி செய்ததை தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை, தேர்தல் ஆணையம் நேற்று (ஏப்ரல் 16) மாலை ரத்து செய்தது.

தேர்தலை நடத்தக்கோரி மனு

இந்தச் சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சீனிவாசன் என்பவரது வீட்டிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கும், தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனத் தெரிவித்துள்ளார். மேலும் வருமான வரித்துறை அளித்த தவறான அறிக்கையின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது. எனவே, வேலூரில் திட்டமிட்டபடி மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

காரசாராமான விவாதம்

இதைதொடர்ந்து, இந்த மனு நீதிபதி மணிக்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை (ஏப்ரல் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில் திடீரெனத் தேர்தல் ரத்தாகியுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கூடாது. “ என்று ஏ.சி.சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், “தேர்தலை ரத்து செய்ய வேண்டாமெனில், பணப்பட்டுவாடா செய்தவர்களைப் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

”புகாருக்குள்ளான வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் வாதம் மற்றும் அந்த கட்சிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ஏ.சி.சண்முகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதைகேட்ட நீதிபதிகள், “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதிநீக்க முடியும். குறிப்பிட்ட சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும்?” எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில், “வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்தது ஆணையத்தின் முடிவு. நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறப்பட்ட பின்புதான் தடை செய்யப்பட்டது.” எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து, வாதங்களும், கேள்விகளும் முன்வைக்கப்பட்டு காரசாரமாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.