புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியை சேர்ந்த ஆசிரியர் ரிஸ்வான் அசாத்தை விசாரணைக்காக காஷ்மீர் போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், அவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இதனால் அந்தப் பகுதியில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதால், அங்கு கடைகள் அடைக்கப்பட்டு, இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் ரிஸ்வான் அசாத். கடந்த 17ஆம் தேதி ஆசாத்தின் வீட்டைச் சோதனையிட்ட போலீசார், பயங்கரவாத அமைப்போடு ஆசாத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 18) ஆசாத் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அவர் உயிரிழந்த காரணம் குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.
“ஞாயிற்றுக்கிழமை இரவு, 11.30 மணி அளவில் வீட்டுக்கு வந்த போலீசார் வீடு முழுவதும் சோதனையிட்டனர். வீட்டிலிருந்து எங்கள் செல்போன்கள் மற்றும் இரண்டு லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். பின்னர், ஆசாத்தையும் அவர்களுடன் அழைத்துச் சென்றனர்’ என்று தெரிவித்தார் ஆசாத்தின் சகோதரர் முபஷிர். இதுதொடர்பாக, “விசாரணை என்ற பெயரில் வலுக்கட்டாயமாக ஆசாத்தை அழைத்து சென்று போலீசார் கொலை செய்துள்ளனர். இது திட்டமிட்டப் படுகொலை.” என்று ஆசாத்தின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆசாத் மரணம் குறித்து தனி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த காஷ்மீர் போலீஸ் அதிகாரி, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். காவல் துறை விசாரணையில் கைதி உயிரிழந்ததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் சிஆர்பிசி (CRPC)-176இன் கீழ் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசாத் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் ஆசாத்தின் வீட்டின் முன்னே குவிந்தபோது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து, இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, கல்வீச்சில் இளைஞர்கள் ஈடுபட்டத்தால், பாதுகாப்பு படையினருக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. பாதுகாப்பு காரணம்கருதி, அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு, பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதைதொடர்ந்து, அவந்திபோராவில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மொபைல் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும், குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு புல்வாமா மாவட்டத்தில் மவுல்வி அமீன் என்ற மத போதகரையும், 10 இளைஞர்களையும் கைது செய்துள்ளது காஷ்மீர் போலீஸ்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து காஷ்மீரில் 155 அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 18 பிரிவினைவாத அமைப்பின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்து பாதுகாப்பு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரத்து செய்தது மத்திய அரசு. அத்துடன் காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்த அமைப்பைச் சேர்ந்த 350க்கும் அதிகமான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்து, மக்களவை தேர்தலில் அனுதாப வாக்குகளை பெறுவதற்காக மத்திய அரசு முயல்கிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.