கேள்வி: நான் திரைப்பட இயக்குனர் ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன், என் வயது 26. என் 20 வயது தொட்டு, நான் சினிமாவை நேசிக்கிறேன், அதற்காக நிறைய இழந்து இருக்கிறேன், என் பெற்றோர்கள் பாசம், கூடவே இருந்த நண்பர்கள், கல்லூரி காதலி, பின் சென்னை வந்து மிகுந்த கஷ்டப்பட்டு சினிமா பட்டைய படிப்பு படித்தேன், மீண்டும் பணம் பிரச்சனை, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்தேன், கொஞ்சம் சம்பாரித்தேன், ஒரு வருடம் கழிந்தது, பின் வேலையில் நாட்டம் இல்லை, வேலையை விட்டுவிட்டு, குறும்படம் எடுக்க முடிவுசெய்தேன், முடியவில்லை, ஒரு இயக்குநரை அணுகினேன், அவரும் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார். 2 வருட உழைப்பில், எனக்கு கிடைத்தது 50,000தான், அதுவும் என் ஊரிலே படப்பிடிப்பு என்பதால், 2 வருடம் வீட்டில் இருந்தேன், போதிய வருமானம் இல்லாததால் என் வீட்டில் யாரும் என்னை மதிப்பதே கிடையாது. இந்தநிலைமை என்னை உளைச்சல் மிகுந்தவனாய் மாற்றிவிட்டது, ஒரு நாளைக்கு 2 மணி நேரம் நல்ல மனநிலையில் இருக்கேன், மீதி நேரம் முழுக்க எதிர் காலத்தில் மேல் உள்ள பயம் தொற்றிக்கொள்கிறது, இன்னும் என் அப்பா மட்டுமே சம்பாரித்து குடும்பத்தைப் பார்க்கிறார், அது எனக்கு மிகுதியான குற்றவுணர்ச்சி தருகிறது. எல்லாம் கொஞ்சம் காலம் என்று மனதை தேற்றினாலும் முடியவில்லை. இந்த மன அவதியில் இருந்து என்னால் விடு பட முடியவில்லை, என் கல்லூரி நாட்களில் எனக்கு இருந்த productivity தற்போது மங்கி விட்டதோ என்ற பயம் வேறு, இதை யாரிடம் பேசினாலும் எனக்குத் தெளிவு கிடைக்க மாட்டேங்கிறது. சற்று புலம்பல் வாதியாக மாறிவிட்டேன்.
பெயர் குறிப்பிட விரும்பவில்லை
பதில்: லட்சியவாத கனவுகளுடன் நமது வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்ளும்போது அது நிமித்தம் எழக்கூடிய இழப்புகள் தவிர்க்க முடியாதவை. வாழ்க்கையுடன் நாம் எந்த அளவிற்கு சமரசம் செய்து கொள்கிறோம் என்பது அந்த வாழ்க்கை நிமித்தம் பெறக்கூடிய சங்கடங்களுக்கு அடிப்படையானது. உங்களது வயதில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு அன்றைய நாள் பற்றிய கவலைகள்தான் பெரிதாக இருக்கும். அன்றைய நாளை ஏதுவாக வைத்துக்கொள்ள, அன்றைய நாளை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ளதான் பெரும்பாலும் உங்களது வயதினில் இருப்பவர்களுக்கு தோன்றும். ஒரு உயர்ந்த லட்சியங்களுகாக அன்றைய நாளில் மிக சாதரணாமாய் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியான கணங்களை எல்லாம் நிராகரிக்கும் துணிவு மிக சில பேருக்கு மட்டுமே இருக்கும். அதில் நீங்களும் ஒருவர். உங்கள் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் கனவு வெறும் கனவு மட்டுமல்ல; அது நீங்கள் தேர்வு செய்த பாதை. அந்தப் பாதை கடினமானது என்பதை உணர்ந்தே நீங்கள் இந்த பாதையை தேர்வு செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
பொதுவாகவே உயர்ந்த லட்சியங்களை நோக்கி பயணிக்கும் ஒருவர் அந்த லட்சியத்தை அடைவதும் அதற்குப் பின்னர் அது ஏற்படுத்த போகும் விளைவுகளைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பார், அது ஒருவகையில் தற்கால உபாதைகளில் இருந்து அவரைக் காத்துகொள்ளும் தந்திரமாககூட இருக்கலாம். ஆனால் அதையும் மீறி நிகழ்காலம் ஒரு மனவுளைச்சலை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். மாறாக லட்சியத்தை நோக்கிய உங்கள் பாதையில் நீங்கள் இழக்கவேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. அந்த இழப்புகள்தான் உங்கள் முதலீடு அதை நீங்கள் உணரவேண்டும். நிகழ்காலத்தின் இன்பங்களைப் புறக்கணித்துதான் நீங்கள் எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் உணர வேண்டும். இந்த இழப்புகளை தாங்க நீங்கள் உங்களை மனதளவில் தயார் செய்த பிறகே இலக்கை நோக்கிச் செல்லும் பாதையை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த இழப்புகள் உங்களுக்கு ஒரு விரக்தியான மன நிலையை ஏற்படுத்திவிடும். உங்கள் productivity குறைந்து போனதற்கும், மனசோர்விற்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்களது பயத்திற்கும் இழப்பின் மேலுள்ள உங்களது விரக்தியே காரணம்.
இழப்புகளைக் குறைப்பது எப்படி என்பதை வேண்டுமானால் நீங்கள் திட்டமிட்டு கொள்ளலாம். அதனால் உங்களுக்கு நேர்ந்த இழப்புகள் என்பவை உங்களின் முடிவின் பால் உங்களுக்கு கிடைத்த விளைவுகள் அதையெல்லாம் தாண்டிதான் உங்கள் இலக்கை அடைய முடியும். அதேபோல உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் நீங்கள் மனரீதியாக தயார் செய்ய வேண்டும். “மற்றவர்களைப் போல சராசரி அன்றாட வாழ்க்கை அல்லது என்னுடையது, இது ஒரு நீண்ட பாதை, பல வலிகளுடன், இழப்புகளுடன்தான் இந்தப் பாதை இருக்க போகிறது, அதனால் மற்றவர்கள் வாழும் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நீங்கள் சோர்வுகொள்ள வேண்டாம், இதற்காக நீங்கள் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். என் மீது முழுமையாக நம்பிக்கையை வைத்து என் உடன் இருப்பது மட்டுமே போதுமானது. ஏனென்றால் இதற்காக எனது இந்த லட்சியத்திற்காக நான் அத்தனையும் இழக்க தயாராக தான் இருக்கிறேன். உங்களை தவிர” என்பதை உங்கள் உடன் இருப்பவர்களுக்கு புரிய வைப்பதின் வழியாக குறைந்தபட்ச அன்பை நீங்கள் உங்களுக்காக உறுதி செய்து கொள்ள முடியும்.
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com