கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் கனவாகி போய்விட்டது. சிறுவர் சிறுமிகள் தெருக்களில் விளையாடிய காலம் மாறி இன்று தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவது ஒருபுறமிருக்க, அதன் விளைவாக மனித குலத்தின் மறதி அதிகமாகி கொண்டே இருக்கின்றது. மக்களுக்கு இன்றைய காலத்தில் நவீன சாதனங்களில் ஒன்றான ‘ஸ்மாட் போன்’ மகிழ்ச்சி  என நம்பப்படுகின்றது. அவை நம் குழந்தைகளை சோம்பேறிகளாக ஆக்கி பாரம்பரியத்தையும் பாரம்பரிய விளையாட்டுகளையும் அவர்கள் நினைவிலிருந்து அழித்து குழந்தைகளின் மூளையை அழுக்காக்கி வருகின்றது என்பதை யாரும் உணர்வதாக தெரிவதில்லை. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்.

அழிக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகள்:                                                                                                                                                                                                                                பம்பரம்

பம்பரக்கட்டை மற்றும் சட்டையை கொண்டு இந்த விளையாட்டை துவங்க வேண்டும். இருவர் அல்லது பலர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம். முதலில் கீழே ஓர் வட்டத்தை இட்டு,பின்  பம்பரத்தை சுழற்ற வேண்டும். இதனை சிறுவர்கள் ஒரே நேரத்தில் கீழே விட்டு சுழற்றி விட்டுவிளையாடுவார்கள். அதன் பின் சுழன்றுகொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுத்து வெற்றி தோல்வியை உறுதி செய்வார்கள். தெருக்களில் மட்டுமல்ல அந்தக்கால சினிமாக்களில் கூட பம்பர விளையாட்டு காட்சிகள் அதிகம் இடம்பெறும். தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.

பல்லாங்குழி

வட்டமாக குழி உள்ள பலகையில் புளியங்கொட்டை அல்லது சோழி அல்லது முத்துக்கள் சேர்த்து ஆடும் விளையாட்டு தான் பல்லாங்குழி. பெரும்பாலும் வயது வந்த பெண்கள் தங்களது தோழிகளுடன் வீட்டினுள் அமர்ந்து இவ்விளையாட்டு விளையாடுவது வழக்கம். இக்காலத்தில் சதுரங்க விளையாட்டும் புழக்கத்தில் இல்லாமல் இருக்கும் நிலையில் பல்லாங்குழி ஆட்டம் மட்டும் எப்படி நினைவில் இருக்கும்?

                                                                                                                                                                                                                                                                                                           ஆடுபுலி ஆட்டம்

பெயருக்கு ஏற்றார் போல் புலி ஆட்டை வேட்டையாடுவதுதான் விளையாட்டு. இருவர் அல்லது இரு குழுவினராக சேர்ந்து விளையாடுவார்கள். ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர். புலி ஆட்டை வேட்டையாட முயல ஆடுகள் புலியை முடக்க வேண்டும். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டாகும்.

பாண்டியாட்டம்

ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் எட்டு தொடர் பெட்டியை தரையில் வரைந்து கொண்டு, போட்டியாளர்கள் முதல் பெட்டியில் கல்லை போட்டு அந்த பெட்டியையும் கோடுகளையும் தொடாமல் நொண்டி அடித்து கடைசி பெட்டி வரை சென்று திரும்ப வர வேண்டும். பெரும்பாலும் அனைத்து சிறுமிகளும் விளையாடும் மிக பிரபலமான விளையாட்டு இது. ஆனால் தற்போதைய சூழலில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதே ஆபத்தாக என நம்பப்படுகின்றது.

                                                                                                                                                                                                                                                                                                                       கோலி

ஒரு போட்டியாளரின் கோலியை மற்றொருவர் தனது கோலியை கொண்டு அடிக்க வேண்டும். இலக்கை நோக்கி சரியாக அடித்துவிட்டால் வெற்றிபெற்றவர் தோற்றவர் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம்.இந்த விளையாட்டை சிறுவர்கள் விடுமுறை நாட்களில் தெருவில் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். ஆனால் இப்போதைய குழந்தைகள் ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளில் பந்தயம் கட்டவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பது வருத்தத்திற்குள்ளான ஒரு விஷயம்.

 

இன்றைய இளைஞர், யுவதிகள் ‘ஸ்மாட் போன்’ என்ற சாதனத்துடனேயே எந்நேரமும் உறவாடிக் கொண்டிருக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் மனிதர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. கைத்தொலைபேசியைக் கையில் ஏந்தியபடி அவர்கள் பித்துப் பிடித்தவர்களைப் போல இருப்பதைப் பார்த்தால் ஒருவிதமான வியாதி போன்றே உள்ளது.

நவீன சாதனங்களின் வருகையானது மனித குலத்தை எங்கே கொண்டு சென்று விட்டிருக்கிறதென்பது இப்போது புரிந்து விட்டது. இவ்வாறான போதையிலிருந்து மீள்வது இலகுவானதல்ல. நவீன தொலைபேசி சாதனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தயாரித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது வர்த்தகப் போட்டியில் இளைஞர்களே பிரதான இலக்காக உள்ளனர்.