2019 மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11ல் தொடங்கி மே19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைப்பெறவுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 149 புதுக்கட்சிகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 2,293 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவாகியுள்ளன. இதில் அங்கீகரிக்கப்பட்ட ஏழு தேசிய கட்சிகளும் 59 மாநில கட்சிகளும் அடக்கம்.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மார்ச் 9 ஆம் தேதி வரை மட்டும் 149 கட்சிகள் புதிதாக தேர்தல் ஆணையத்தில் பதிவாகியுள்ளன. இதில், பீகாரில் இருந்து பகுஜன் ஆசாத் கட்சி, தெலுங்கானாவிலிருந்து பரோசா கட்சி, கோயம்பத்தூரிலிருந்து புதிய தலைமுறை மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் அடங்கும். இந்த கட்சிகள் அனைத்திற்கும் நிரந்தர சின்னம்கூட ஒதுக்கப்படாத நிலையில், இவற்றிற்காக இலவச சின்னங்களாக ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்களிலிலிருந்து தான் ஒன்றைத் தேர்வு செய்துக்கொள்ள வேண்டியுள்ளது.