66 அரசு ஊழியர்கள் அடங்கிய குழு ஒன்று குடியரசுத் தலைவருக்குத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தங்கள் வேதனையை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர்.
“தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், நேர்மை, பாரபட்சமற்ற தன்மை, எவ்வளவு கடும் இன்னல்களும் சிக்கல்கள் வந்தாலும் நேர்மையான தேர்தலை நடத்துவது போன்றவை அதன் பெருமையாகவும் நீண்ட சாதனையாகவும் இருந்தது. ஆனால் இன்று அவர்களின் தொடை நடுங்கித்தனமான செயல்பாடுகள் அவர்களின் நேர்மையைச் சந்தேகிக்கும் வகையில் உள்ளது.” இது இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குழு என்ற வகையில், கடந்த அறுபது வருடங்களாக, எந்தவொரு அரசியல் கட்சியுடனும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் நாங்கள் நேர்மையுடன் ஈடுபட்டுள்ளோம் என்று கடிதம் கூறுகிறது.
இந்த கடிதத்தின் பிரதிகள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் மற்ற தேர்தல் ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த குழுவில் உள்ள முன்னாள் சிவில் ஊழியர்களின் பட்டியலில் சாலஹுதின் அகமது, முன்னாள் தலைமைச் செயலாளர், ராஜஸ்தான்; S.P.ஆம்ப்ரோஸ், முன்னாள் கூடுதல் செயலாளர், கப்பல் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சகம்; முன்னாள் பிரதம ஆலோசகர் என்.பால பாஸ்கர், வெளி விவகார அமைச்சகம், இந்திய அரசு., வப்பாலா பாலச்சந்திரன், முன்னாள் சிறப்புச் செயலாளர், அமைச்சரவை செயலகம், இந்திய அரசு. கோபாலன் பலகோபால், முன்னாள் சிறப்புச் செயலாளர், அரசு மேற்கு வங்காளம். ஆகியோர் அடங்குவர்.
மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறியதைத் தேர்தல் ஆணையம் கடுமையாக மட்டுமல்ல சாதாரணமாகக் கூட எதிர்க்கவில்லை. என்று குற்றம் சாட்டிய அக்குழு பாஜகவின் வீதி மீறல்களை அக்கடிதத்தில் பட்டியலிட்டுள்ளது.
1) மார்ச் 27 அன்று பிரதமர் மோடி மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவித்தார். இந்த சோதனை நடத்திய நேரம் சர்ச்சைக்குரியது. இதை பாஜகவின் சாதனையைப் போல அவர்கள் கொண்டாடுகிறார்கள். இது போன்ற சோதனைகளைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தான் முடிவு செய்யவேண்டும். அப்படியிருக்கத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில் இதை நடத்தியது தவறு.
2) பிரதமர் மோடியைப் பற்றிய திரைப்படம் ஏப்ரல் 11 2019 தேர்தல் நாளன்று வெளியாக இருக்கிறது. இது பின் வாசல் வழியாக விளம்பரம் தேடும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கிறோம்.
3) இதே போன்று “மோடி: ஒரு சாதாரண மனிதனின் பயணம்” என்ற பெயரில் பத்து பாகங்கள் கொண்ட இணையத் தொடர் ஒன்று ஈரோஸ் நவ் எனும் சேனலில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதற்கும் தேர்தல் ஆணையம் ஒன்றும் செய்யவில்லை.
4) நமோ டிவி என்ற தொலைக்காட்சி மார்ச் 31, 2019 அன்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து எந்த வித அங்கீகாரமும் பெறாமல் ஆரம்பிக்கப்பட்டு. முழுக்க முழுக்க மோடியின் பிரசாரங்களை, படங்களை ஒளிபரப்புகின்றனர். இதிலும் தேர்தல் ஆணையம் மிக மந்தமாகவே உள்ளது.
5) தேர்தல் ஆணையம் ஆந்திராவில் உள்ள மூன்று முக்கிய உயர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் மற்றும் மேற்கு வங்காளத்திலுள்ள நான்கு முக்கிய உயர் காவல் துறை அதிகாரிகள் ஆகியோரை பணிமாற்றம் செய்துள்ளது. ஆனால் இது போன்ற நடவடிக்கை எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை. அங்கு சிபிஐ ஆல் குட்கா வழக்கில் விசாரிக்கப்படுபவரே இன்னும் காவல்துறைத் தலைமை இயக்குநராக உள்ளார். இது பற்றி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
6) உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு தேர்தல் மேடையில் “இந்தியா ராணுவத்தை மோடியின் படை” என்று குறிப்பிட்டார். இதே போன்று வேறொரு மேடையில் முக்தார் அப்பாஸ் நக்வி எனும் பாஜக தலைவரும் இவ்வாறே குறிப்பிட்டார். இது இந்தியப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அவமானம் என்றும் இது போன்ற பொறுப்பற்ற கருத்துகளைப் பொதுவெளியில் அவரது கட்சி பரப்புவது கண்டனத்திற்குரியது. மேலும் இது இந்தியாவைப் பாதுகாக்கும் முப்படைகளுக்கு அரசியல் சாயம் பூசுவதுபோல இருக்கிறது.
7) பிரதமர் மோடி நியூஸ் 18 சேனலுக்கு ஏப்ரல் 1 2019 அன்று “காங்கிரஸ் ஹிந்துக்களை அவமானப்படுத்தியுள்ளது. மக்கள் அவர்களை இந்த தேர்தலில் தண்டிக்க முடிவெடுத்துள்ளார்கள். ஆதலால் தான் அவர்கள் பயந்துபோய் மற்ற மதத்தினர் அதிகமாகவும் ஹிந்துக்கள் குறைவாக இருக்கும் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.” என்று கூறினார். இது போன்ற பிரிவினையைத் தூண்டும் பேச்சுகளைப் பேச தடை இருந்தும் அவர் பேசியதைத் தேர்தல் ஆணையம் கண்டும் காணாததுபோல இருக்கிறது.
அரசியல்வாதிகள் மீதிருந்த மதிப்பும் அபிமானமும் எப்போதோ நொறுங்கிவிட்ட நிலையில், மக்கள் இந்த நாட்டில் நம்பும் மிகச்சில அமைப்புகளில் ஒன்றான தேர்தல் ஆணையம் கூட தனது மெத்தனமான மற்றும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மூலம் அவர்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்ல செய்தி அல்ல.