சென்னை போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6). கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி, அதேபகுதியை சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர், கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொலை செய்தார். இதையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், கடந்த ஜனவரி 2ஆம் தேதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தனது தாயை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 25 சவரன் நகைகளை திருடிக்கொண்டு மும்பைக்கு தப்பி சென்றுவிட்டார். பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கருணையின் அடிப்படையில் தூக்கு தண்டனையை ரத்து செய்து, தண்டனையைக் குறைக்கவேண்டும் என தஷ்வந்த் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தஷ்வந்த் குற்றவாளி என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. தஷ்வந்துக்கு ஆயுள் தண்டனையாக இருந்திருந்தால் கண்டிப்பாக மனுவை தள்ளுபடி செய்திருப்போம். ஆனால் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.
அரசியல் சாசன பிரிவு 302இன் படி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது சரிதானா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தஷ்வந்த்க்கு விதித்த தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 4 வாரகாலத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.