நான் பகல் கனவு என்கிற சொல்லை இங்கு எதிர்மறையாக பயன்படுத்தவில்லை. நடைமுறை வாழ்க்கை தரும் நிதர்சனமான நெருக்கடிகளிலிருந்து சற்றேனும் ஆசுவாசமளிக்கும் ஒரு வெளியாகவே பகல் கனவுகள் இருக்கின்றன. பகல் கனவுகளில் விரியும் கற்பனைகள் வழியே நாம் நமக்கேயான நமது அசௌகர்யங்கள் ஏதுமற்ற வெளியொன்றை உருவாக்கிக் கொள்கிறோம்.. அது இரு விதங்களில் நமக்கு உதவுகிறது. ஒன்று நடப்பு சிக்கல்களிலிருந்து ஒரு தற்காலிக உளவியல் விடுவிப்பை அளிக்கிறது. இரண்டு ஒரு நிரந்தரமான விடுவிப்பிற்காக இயங்க ஒரு உந்துதலைத் தருகிறது. மிகச் சோர்வுற்று துவண்டு விழும் தருணத்தில் உங்களின் வாழ்வின் ஆகச்சிறந்த விசயம் ஒன்றை அடைதல் குறித்து ஒரு கற்பனையை நிகழ்த்திப்பாருங்கள். அது எத்தனை மகத்தானதெனத் தெரியும்..

உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அதிகமும் பேசப்பட்ட விசயமாகவும் அனைத்து விதமான இசை மரபுகளிலும் பாடப்பட்ட விசயமாகவும் அனைத்து சமூகங்களிலும் கொண்டாட்டமாகவோ, குறுகுறுப்பாகவோ, அறுவெறுப்பாகவோ ஏதேனும் ஒரு நிலையில் அணுகப்பட்ட உணர்வாகவோ அது இருக்கிறது.

இதை சற்று உள்ளார்ந்து பார்த்தால் உலகின் அனைத்து மொழி இலக்கியச் சூழலிலும் நெடுங்காலம் ஆதிக்கம் செலுத்திய கற்பனாவாதத்திற்கும் (Romanticism) மனித  உளவியலுக்குமான தொடர்பினில் முடியும். நவீனத்துவம் (Modernism) எழுந்து வரும்வரை கற்பனாவாதமே உலகின் ஒற்றை இலக்கியப் போக்கு என்பது தற்செயலானதல்ல. கற்பனாவாதம் நமது ஆழ்மனதின் விழைவை ஒரு  மெய்நிகர் உலகில் (Virtual Space) நிகழ்த்திக்கொள்கிறது. மனிதனின் அடிப்படையான விலங்கியல்புகளை ஒரு மேம்பட்ட வெளிப்பாடாக முன்வைத்து தனிமனிதனுக்கான விழுமியங்களையும்  சமூகத்திற்கான அறத்தையும் கட்டமைக்கிறது. அதன் ஒரு பகுதியான மனிதனின் கச்சா உயிரியல்பான காமத்தைக் காதலாக சிற்சில மதிப்பீடுகளுடன் அழகியலுடன் சமூகத்தின் கூட்டு உளவியலில் நிகழ்த்தி நிலைநிறுத்தியிருக்கிறது.. கற்பனாவாத சிந்தனைகளே கிட்டத்தட்ட இரண்டாயிரமாண்டு மனிதகுலத்தின் அறத்தை, விழுமியங்களை, இலக்கியத்தை ஏன் வரலாற்றை நிர்ணயித்தன. மனிதகுல வரலாற்றின் பெரும் சமூகஅறிவியல் ஆவணமான   மார்க்ஸியமே  பொன்னுலகம் எனும் உருவகத்தில் தானே முழுமை பெறுகிறது.  கற்பனாவாதத்தின் கொடை முடிவிலிகளை தமக்கேயான முடிவுகளாக மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டு நம்மை முன்னகர்த்தும் இயல்பை ஊக்குவிக்கிறது.

நான் பகல் கனவுகளை விருப்பமுடன் நிகழ்த்திக்கொள்ளும் ஆள்.. ஏனெனில் தர்க்கமனம் உருவாக்கும் சோர்வில், வெறுமையையில், ஆயாசத்தில் இருந்து  சுயமீட்சியடைய  பகல்கனவுகளே உற்றத்துணை.. காதலும் அப்படியே… இன்னும் சொல்லப்போனால் பல கவித்துவ மனங்கள் உலகியல் வாழ்வின் சவால்களை இந்த கற்பனாவாத உளவியலின் துணையோடுதான் எதிர்கொண்டன. ஷெல்லி, பைரன், கீட்ஸ் பாரதி என பெருங்கவிகள் அனைவரும் மிகுதியாக காதலைப் பாடியதன் காரணமும் அதுவே. துறவியான ஆதிசங்கரர் சவுந்தர்ய லகரியை எழுதியதும் நம்மாழ்வாரும்,  மதுரகவி ஆழ்வாரும்,  கண்ணனின் காதலிகளாக தங்களைக் கற்பித்து பாடியதும் இந்தக் கற்பனாவாத உளவியலில் இருந்துதான். கற்பனாவாத சிந்தனையும் காதலும் ஒன்றுக்கொன்று கொண்டும் கொடுத்தும் வளர்ந்தன… நிலைபெற்றன…

இந்தியச்சூழலில் காதல்போல ‘நசுங்கிய சொம்பை’ பார்க்கவியலாது. ஆனால் ஒரு நவீனத்துவ மனதின் பிரதிநிதியாக நின்று எழுத்தாளர் பிரபஞ்சன் எழுப்பிய கேள்விகள் இந்திய சமூகத்தின் முன் அதன் ஒரு பகுதியான தமிழ்ச் சமூகத்தின் வாசலில் காத்திருக்கின்றன. அவையாவன;

  1. உலகெங்கும் குழந்தைகள் குழந்தைகளாக பிறக்க இந்தியாவில் மட்டும் ஏன் ஆண்குழந்தைகளாகவும் பெண்குழந்தைகளாகவும் பிறக்கின்றனர்?
  2. விபச்சாரத்தில் பிடிபடும் பெண்களை நமது ஊடகங்கள் ‘அழகிகள்’ என விளிப்பதன் தாத்பர்யம் என்ன?