சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்-  23 & 24

23 ) வெற்றிகரமான ஹீரோ

ஆந்திர நடிகர் அல்லூரி ராமகிருஷ்ணா குமார் சென்னையில் கல்லூரியில் என் கூடப் படித்தவன். அவன்  நடித்த முதல் படமே சூப்பர ஹிட். அவன் ஓர் நாள் எனக்கு போன் பண்ணி ஹைதராபாத் வரச் சொன்னான். நான் சென்றேன். நல்ல உபசரிப்பு. அறைக்கு வந்து என்னைப்  பார்த்துவிட்டுச் சென்றான். ஷூட்டிங் ஸ்பாட் செல்ல எனக்கு கார் வந்தது. நான் காரில்  பகட்டாக ஏறி ஸ்டுடியோவிற்குச் சென்றேன். என்னை வரவேற்று குமார் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு கதாநாயகியும் இருந்தார். வசீகரமான உடற்கட்டு. நெற்றியிலிருந்து கால் வரை அழகான வித்தியாசமான அமைப்புகள். எங்கிருந்துதான் இது போல் இந்திக்காரிகளை கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை. என் நினைவு சரி என்றால் அவன் 9 படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறான். காதல் காட்சிகளில் கதாநாயகியை உதட்டில் நிமிண்டி கன்னத்திலும் கழுத்திலும்  வாயை வைத்து மார்பு அழுந்தக் கட்டிப் பிடிக்கும் கதாநாயகனாக இருந்தான். வயதான கதாநாயகர்கள் வழக்கமான முக பாவத்தைக் காட்டி வழக்கமான அங்க அசைவுகளுடன் புரியம் காதலுக்கு  மத்தியில் இவன் வித்தியாசமாக இருப்பதை மகா ரசிகர்கள் அறிந்திருந்தார்கள். . கதாநாயகிகள் பாடுதான் திண்டாட்டம்.அவன் காட்சிகளில் நெருங்கும்போது மார்புக்கு குறுக்கே  சாமர்த்தியமாக கைகளை வைத்துக் கொள்வார்கள். அவன் கதாநாயகியின்  கைகளையும் தொடைகளையும் தடவிக் கொண்டே நைசாக அவர்கள் கையை  எடுத்து விடுவான். ஆனால் முகத்தில் காமத்தை காண்பிக்க மாட்டான்.

அன்று ஒரு காதல் காட்சி. நான் பார்த்த இந்திக்காரி நடன ஆடைகளை மறைத்திருந்த துணியை நீக்கிவிட்டு நின்றிருந்தாள். குமார் புதுவிதமான ஆடைகளுடன் வந்தான். பாட்டு ஒலிபரப்பானது. வெட்டவெளியில் வெயில் கொளுத்தியது. அத்துடன் சுற்றி நிற்கும் ஆட்கள் மத்தியில் அவர்கள் இருவரும் கட்டித்தழுவிக் காதல்செய்தார்கள். இந்திக்காரி சமயங்களில் நழுவுவது தெரிந்தது. என் அருகில் குமாருக்குப் பல படங்களில் தாயாக   நடித்திருக்கும் நடிகை சேரில் உட்கார்ந்திருந்தாள் .

‘” நான் அம்மாக்காரியாக இவருக்கு பல படங்களில் நடித்திருக்கிறேன்.அம்மாவாக கட்டி பிடிக்கும் சீனில் கேமிராவின் கண்ணுக்குத் தெரியாமல் ஏதாவது சில்மிஷம் பண்ணிவிடுவார். வெற்றிகரமான ஹீரோ. ” என்றார்.

24) வயலின் இசை

எனக்கு ஓர் நண்பன்   இருந்தான் . அவன்  பெயர் ரகுராமன். பெரும் பணக்காரன் பெரிய கார் வைத்திருந்தான. காரில் எப்போதும் உயர்தர மது வகைகள்  இருக்கும். காரையே  பாராக உபயோகிப்பான். தேவையான ஸ்னாக்ஸ் எப்போதும் இருக்கும். மரங்கள்சூழ்ந்த இடத்தை  அல்லது நீர் செல்லும் இடத்தைப் பார்த்தால்  கார்  நின்றுவிடும்.பேப்பர் கப் ,நீர், குளிர் பானங்கள்  காரில் இருக்கும். ஒரு தடவை வயற்காட்டில் நீர் செல்லும் இடத்தருகே கார்  நிறுத்தப்பட்டு நண்பர்கள் இறங்கினோம் . சிவா என்பது டிரைவரின் பெயர். சிவா என்று ஒரு வித்தியாசமான குரலில் ரகுராமன் அழைப்பான். உடனே சிவா காரை பாராக மாற்றும் வேலையில் இறங்கிவிடுவான். அவ்வாறு  மாற்றி எல்லோருக்கும் ஆளுக்கொரு கிளாஸ் கொடுத்தான் சிவா. நாங்கள் அதை காரின் வெளியே நின்று அருந்திக் கொண்டிருந்தோம்.

அப்போது ஒருசங்கீதக் குரல் எனக்குக்  கேட்டது. மனிதக்குரல் மாதிரி இருந்தது. ஆனால் அது மனிதக்குரல் இல்லை. நான் தூரத்தே தெரியும் மலைத்  தொடரைப் பார்த்தேன். அதில் இருந்த மரங்களை பார்த்தேன். சாலையைப் பார்த்தேன். நெல் வயல்களை பார்த்தேன். வயல்களுக்குள் ஓடும் நீரைப் பார்த்தேன். மனம் மயங்கினாற்போல் இருந்தது. அந்தக்குரல் வேகமெடுக்க ராகம் பாட அப்போதுதான் நான் அறிந்தேன். அது மனிதக்குரல் அல்ல, வயலின் இசை என்று. அது சாதாரண வயலின் நாதமாக இருக்கவில்லை. கனமாக இருந்தது. ரகுராமன் மயங்கி விழுந்துவிட்டான். ரகுராமனின் நெருங்கிய நண்பன் டிரைவரை  நோக்கி ஏன் இந்த இசையை  ஒலிக்கவிட்டாய் என்று கத்தினான். நண்பர்கள் ஒவ்வொருவராக மயங்க ஆரம்பித்தோம். டிரைவர் அவசரமாகச் சென்று அந்த இசையை நிறுத்தினான்.