ராஜா கைய வச்சா 8

காற்றிலே பரவிச் சட்டென்று நம்மைப் பீடித்துவிடும் வைரஸ்களைப் போல் நம்மைச் சட்டென்று பிடித்துக் கொள்ளும் மெட்டுக்கள் இசைஞானியின் மெட்டுக்கள் என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். அதற்குக் காரணம் அவரது மெட்டுக்கள் நம்ப முடியாத அளவுக்கு எளிமையாக இருப்பன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றில் மிக முக்கியமான ஆட்டத்திற்கு முந்தைய நாள். நள்ளிரவு வரை கோச் , கேப்டன், வீரர்கள் எல்லாம் பல்வேறு வகையான ஆலோசனைகளையும் வியூகங்களையும் ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர் மட்டும் பேசாமல் படுத்துவிட்டார். அவரிடம் ‘ என்ன உங்கள் யோசனை ஒன்றுமே சொல்லவில்லையே?’ என்று கேட்டதற்கு அவர் ‘ எதிரணி அடித்ததை விட ஒரே ஒரு ரன் கூட அடிக்க வேண்டும் . அவ்வளவுதான். ‘பேசாமல் மூடிக்கொண்டு தூங்குங்கள்’ என்று சொல்லிவிட்டுப் புரண்டு படுத்துவிட்டார்.

மிகப்பெரிய விஷயங்கள் இதுபோல் மிக எளிமையாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அந்த எளிமையைக் கண்டு நம்மாலும் இப்படி செய்ய முடியும் என நினைத்தால் அதைவிடப் பெரும் அறியாமை எதுவும் கிடையாது. சச்சின் டெண்டுல்கர் மிகச் சுலபமாக அடிக்கிறார் என்று நாமும் மட்டையை எடுத்துக் கொண்டு வாக்கார் யூனிஸ் போன்ற பந்து வீச்சாளரை எதிர்கொள்ள முடியுமா?

நான்கூட முன்பெல்லாம் இப்படி நினைத்ததுண்டு. இசைஞானியின் பாடல்களை டீகோட் செய்யும் போது- அதாவது ராகங்களாகவும் ஸ்வரங்களாகவும் மாற்றும்போது மிக எளிமையாகத் தோன்றும். உதாரணத்துக்கு ஷண்முகப்ரியா என்ற ராகத்தில் ’  ஸரிக ஸரிக ஸரிக ஸரிக ஸ..ரி..க
ஸரிக ஸரிக ஸரிக ஸரிக க..ரி..ஸ’ என ஒரு கீ போர்டில் வாசித்தால் சலங்கை ஒலி (1983) திரைப்படத்தில் வரும் ’தகிட தகமி தகிட தகமி தந்தானா’ என்ற பாடல் வந்துவிடும்.
அட இசையமைப்பது இவ்வளவுதானா என எண்ண வைக்கும். ஆனால் புதிதாக ஒரு மெட்டை உருவாக்குங்கள் என நம்மிடம் ஆர்மோனியத்தைக் கொடுத்தால்தான் தெரியும். க்ரியேட்டிவிட்டி என்றால் எவ்வளவு கடினம் என்று.

அதாவது சில விளம்பரங்களில் இந்த விளம்பரத்தில் வரும் ஆபத்தான செயல்கள் அதற்கென்றே தயாரான வீரர்களால் செய்யப் படுபவன, நீங்கள் இதைப் பார்த்து முயற்சிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்வார்கள் அல்லவா? அதேபோல் தான் இசைஞானி வேகமாகவும் எளிதாகவும் இசை அமைப்பதைப் பார்த்துவிட்டு மற்றவர்களும் முயற்சிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யலாம்.பாரதி , கண்ணதாசன் போன்றோர் சடசட எனப் பாடல்களை இயற்றுவதைப் பார்த்தவர்களும் அப்படி நினைத்திருக்கலாம். அப்படி வேகமாகவும் எளிமையாகவும் இளையராஜா இசையமைப்பதன் பின்னணியில் எல்லா பாணி இசைகளையும் ஒன்றாகப் பார்க்கும் அவரது இசைத்திறமை ஒரு முக்கிய காரணம். அவரது முக்கியமான இசை அமைக்கும் பாணி என்னவென்றால் கர்னாடக இசையில் புழங்கிவரும் ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு அதன் இலக்கணத்தைப் பெரும்பாலும் மாற்றாமல் மேற்கத்திய பாணியிலோ நாட்டுப்புற பாணியிலோ மெல்லிசையாகவோ அமைத்திருப்பது.

அப்படி அவர் எடுத்துக் கையாண்ட கீரவாணி ராகத்தின் தங்கச் சங்கிலி என்னும் பாடலைப் போன கட்டுரையில் பார்த்தோம். இக்கட்டுரையில் அதே ராகத்தில் தங்கச் சங்கிலியைவிட விலைமதிக்க முடியாத ப்ளாட்டினப் பாடல் ஒன்றைப் பார்க்கப் போகிறோம். தலைப்பைப் பார்த்தவுடனேயே தெரிந்திருக்கும். ஜானி (1980) திரைப்படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் என்னும் பாடல்தான்.

சில இயக்குனர்கள் அருகில் வந்து அமர்ந்தால் இளையராஜாவின் ஆர்மோனியம் உற்சாகமாகிவிடும். ( அவரிடம் கேட்டால் தான் எல்லோரையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன் என்பார்) . பாரதிராஜா, ஸ்ரீதர், மணிரத்னம், பாலுமகேந்திரா வரிசையில் முக்கியமானவர் மகேந்திரன். இவரது படங்களில் முக்கிய கதாபாத்திரமாக இசைஞானியின் இசை அமைந்திருக்கும். பாடல்கள் மட்டுமன்றிப் பின்னணி இசைகூட. அப்படிப் பாடல்களால் செறிவுற்ற படங்களுள் ஒன்று ஜானி.

இசையால் உணர்வுகளைத் தூண்டக்கூடிய வித்தையில் தலை சிறந்தவர் ராஜா. இந்தப் பாடலின் அசாதாரணமான சூழ்நிலையின் விரியம் நமக்கு உறைக்குமாறு இசைக் கருவிகளால் ஒரு உன்னதமான விருந்தைச் சமைத்திருக்கிறார். காதலன் கட்டாயம் வருவான் என்பதற்காக மேடையில் பாடும் நாயகியின் பரிதவிப்பு, காவல்துறையினரால் தேடப்பட்டு துரத்தப்படும் அதே நேரம் காதலி பாடுவதைக் கேட்டே ஆக வேண்டும் என ஓடிவரும் காதலனின் பதற்றம், பின்னணியில் எல்லா உணர்வுகளையும் மிகைப்படுத்திக்காட்டும் பேய்மழை என உணர்ச்சிக் குழம்பான ஒரு கட்டம்.

இதற்கு அவர் கீரவாணியை எடுத்துக் கொள்கிறார். மேற்கத்திய மற்றும் அரேபிய நாட்டு இசைபாணிகளில் இந்த ராகத்தின் கூறுகள் நிறைய இருக்கும். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய விநாயகனே வினைதீர்ப்பவனே என்ற பாடலை எல்லோரும் கேட்டிருப்போம். அந்தப் பாடல் அமைந்த ராகம் கீரவாணிதான். அதே ராகத்தை காற்றில் எந்தன் கீதம் பாடலில் எப்படிப் பாலிஷ் போட்டு மாற்றியிருக்கிறார் பாருங்கள்!

இதுபோன்ற கொந்தளிப்பான உணர்வுகளைக் குரலில் கொடுக்க ஜானகியம்மாவைத் தவிர யாரால் முடியும்? பாடலின் பல்லவியில் கிதார் மட்டுமே. கிதாரின் தந்திகளிலிருந்து எழும்பும் ஒலிகள் ஒரு அடித்தளத்தை அமைக்க கீரவாணி ராகத்தில் ஆகச்சிறந்த ஒரு ஆலாபனையை எஸ் .ஜானகி பாடியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகப் பொங்கிப் பொங்கி உணர்வுகள் மேலெழுந்து வருவது போல் கீழ்ஸ்தாயியிலிருந்து மெதுவாக மேல்நோக்கி நகர்ந்து ஒரு இடத்தில் வெடித்துச் சிதறுகிறது. உள்ளக் குமுறல் போன்றே இடியும் குமுறுகிறது. உள்ளக் கொந்தளிப்பைப் போல் சூறைக் காற்று வீசுகிறது. எல்லா ஒலிகளையும் இசையாக்கும் இளையராஜா இசையில் இடியும் புயலும் இசைக்கருவிகளே. அதிலும் காற்றில் என்று பாடலில் வரும்போது புயல்காற்றின் ஓசை வரும்.

சரணங்களுக்கு இடையே கித்தார் ,வயலின், ட்ரெம்பெட் போன்ற கருவிகளின் கூட்டணியில் மகத்தான ஒரு இசைக்கோர்வை ரஜினி ஓடும் பரபரப்பைக் கூட்டுகின்றன. “நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்” என கங்கை அமரனின் வரிகளில் சரணம் கஜல் பாணியில் தொடங்குகிறது. அரேபிய ,ஹிந்துஸ்தானி இசையில் கீரவாணி அதிகம் இருக்கும் என்றோம் அல்லவா? கொஞ்சம் கொஞ்சமாகக் கொந்தளித்து “வாழும் காலம் நெஞ்சம் தேடும் ” என முடிக்கும் இடத்தில் கீரவாணி ராகத்தில் அற்புதமாக வளைந்து நெளிந்து சர்க்கஸ் சாதனை செய்கிறது இசையும் குரலும். அதிலும் நெஞ்சம் தேடும் என்ற இடம் மட்டும் மேலும் கீழும் குறைந்தது பன்னிரண்டு ஸ்வரங்கள் வழியாகச் செல்கிறது.

ஸ்ரீதேவியின் கண்களில் கொப்புளிக்கும் உணர்வுகள் இப்பாடலை காட்சித்தளத்திலும் ஒரு ஒப்பற்ற அனுபவமாக்குகின்றன. காற்றில் எந்தன் கீதம் பாடல் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் கழிந்தும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. புயலும் மழையும் கொந்தளிக்கும் மனமும் இருக்கும்வரை இப்பாடலும் இருக்கும்.

https://youtu.be/0mCLw42xVYs

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
  2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
  3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
  4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
  5.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
  6. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
  7. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
  8. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
  9. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
  10. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
  11. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
  12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
  13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்