ராஜா கையை வச்சா – 6

இசைக்கும் மழைக்கும் என்னதான் தொடர்போ தெரியவில்லை. சென்ற கட்டுரையில் ‘அந்தி மழை பொழிகிறது’ பாடலைப் பற்றி எழுதினேன். இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் பாடல்களுக்கும் மழைக்கும் தொடர்பு இருக்கிறது. இப்பாடல்கள் அமைந்த ராகத்தில் பாடினால் மழை பெய்யும் என்று ஒரு நம்பிக்கை. ஆம். அம்ருத வர்ஷினி ராகம்தான் அது!

ஸரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களும் வரக்கூடிய ராகத்தைத் தாய் ராகம் என்கிறோம். மேளகர்த்தா ராகம் என்றும் சொல்லலாம். இதில் ரி,க,ம,த,நி. ஆகிய ஸ்வரங்களில் இரண்டு இரண்டு இருக்கும். அவற்றின் வேறுவேறுவிதக் கூட்டணிகளால் 72 வகையான தாய் ராகங்கள் உருவாகின்றன என்று பார்த்தோம். இந்தத் தாய் ராகங்களிலிருந்து ஓரிரு ஸ்வரங்களை நீக்கினால் கிடைக்கும் ராகங்களைச் சேய் ராகம் என்கிறோம்.

அதிலும் ஐந்து ஸ்வரங்கள் மட்டுமே உள்ள ராகங்கள் மிகவும் பிரசித்தமானவை. Pentatonic என அழைக்கப்படுகின்றன இந்த ராகங்கள். மோகனம், ஹம்ஸத்வனி, இந்தோளம், மத்தியமாவதி, சுத்த தன்யாசி எனப் பல ராகங்களும் இது போன்றவையே. இந்த pentatonic ராகங்கள் இசைஞானி இளையராஜாவின் பேட்டை. ஏராளமான பாடல்களை விதவிதமாக அமைத்திருக்கிறார்.

அப்படி ஒரு ஐந்து ஸ்வர ராகம்தான் அம்ருத வர்ஷினி. கல்யாணி ராகத்தில் ‘ரி’யையும் ‘த’வையும் நீக்கிவிட்டால் வருவது. ஸ க ம ப நி ஸ் தான். இந்த ஐந்து ஸ்வரங்களை வைத்துக்கொண்டு ஒரு அழியாத இசைக் காவியத்தைப் படைத்திருக்கிறார் இளையராஜா. அந்தப் பாடலுக்குப் போகுமுன் இந்த ராகத்தைப் பற்றிய வரலாறு சில வரிகள்.

வர்ஷினி என்றால் மழையாய்ப் பொழிபவள் என்று பொருள். அமுத மழையாய்ப் பொழிபவள் என்று அர்த்தம். இந்த ராகத்தை இசைத்தால் மழை வரும் என்று ஒரு நம்பிக்கை. எட்டையபுரம் என்று சொன்னால் நமக்கு பாரதியார்தான் நினைவுக்கு வருவார். ஆனால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் முக்தி அடைந்த இடம் அது. அவர் சாத்தூரில் அமிர்தவர்ஷிணி ராகத்தில் ‘ஆனந்தாம்ருத கர்ஷினி’ என்ற பாடலைப் பாட மழை பொழிந்ததாகக் கூறுவார்கள். இதுபோன்ற பகுத்தறிவால் ஒத்துக்கொள்ள முடியாத விஷயங்களை நம்ப முடியாவிட்டாலும் மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்கள் அந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்டால் நமது கண்கள் நனையும் என்பது உண்மைதான்.

இந்த அம்ருத வர்ஷினி ராகத்தில் திரைஇசையில் பாடல்கள் எதுவும் பெரிதாக இல்லை. ‘பாட்டும் பரதமும்’ என்ற படத்தில் ‘சிவகாமி ஆடவந்தால் நடராஜன் என்ன செய்வார்’ என்று பார்க்கப் பயங்கரமான நடனப் பாடல் ஒன்று இருக்கும். அப்பாடல் ஆரம்பம் மட்டும் அம்ருதவர்ஷினி ராகத்தில் அமைந்திருக்கும். ஊருக்கே மழை கொடுக்கும் என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டீர்களா? என்ற இந்த ராகத்தின் சோகத்தைப் போக்கும்விதமாக காலத்துக்கும் நிலைத்து நிற்கும் ஒரு அற்புதமான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார் இளையராஜா.

அப்பாடலுக்குப் போகும் முன் அம்ருத வர்ஷினி ராகத்தில் வேறு சில பாடல்களும் இசைஞானி இசையில் உள்ளன. அவற்றில் இரண்டு பாடல்கள் இந்த ராகத்தின் தன்மையான மழை பொழிய வைப்பதோடு தொடர்புடையன. முதலாவது பாடல் ஸ்ரீ ராகவேந்திரர் (1985) திரைப்படத்தில் வருவது. பாடல் என்று சொல்ல முடியாது. ஓரிரு வரிகள்தான். ‘மழையே வருக’ என்று ஒரு பாடல். யேசுதாஸின் குரலில் ஒரே நிமிடம் ஒலிக்கும் அப்பாடல் திரைப்படத்தில் எரியும் நெருப்பை அணைக்க மழையை வரவழைப்பதுபோல் அமைந்திருக்கும். சின்னப் பாடல் என்றாலும் அருமையான ஆலாபனையுடன் அமைந்திருக்கும்.

அம்ருத வர்ஷினி ராகத்தில் இன்னொரு பிரமாதமான பாடல் அமைத்திருப்பார் ஒருவர். வாழும் ஆலயம் (1988) என்னும் படத்தில். சில படங்களில் இசைஞானி ஃபுல்ஃபார்மில் அடித்து வெளுத்திருப்பார். படம் அவ்வளவு பிரபலமாக இருக்காது. அப்படி ஒரு படம்தான் ஒருவர் வாழும் ஆலயம். இந்தப் படத்தின் இயக்குனர் ஷண்முகப்பிரியன் இப்போது என்ன செய்கிறார் என்று தெரியாது. ஆனால் அவரது ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும்போது இளையராஜாவைச் சந்திக்கப் போயிருப்பார். அப்படி இனிய பாடல்களால் நிரம்பி வழிந்த படம் அது. அதனால் வேறு வழியின்றிப் படத்தில் இடம் பெறாத பாடல் ஒன்று அம்ருத வர்ஷினி ராகத்தில் அமைந்திருக்கும். ‘வானின் தேவி வருக’ என்னும் பாடல் அது. எஸ்பிபியும் ஜானகியும் பாடிய இனிமையான பாடல். அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. ஆனால் நூறு சதவிகிதம் இந்த ராகத்தில் அமைந்த பாடல் இது.

ஆனால் எப்படி சச்சின் என்றால் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த செஞ்சுரிகளோ அதுபோல் இசைஞானி இசையில் அம்ருதவர்ஷினி என்றால் அது அக்னி நட்சத்திரம் (1988) படத்தில் அமைந்த ‘தூங்காத விழிகள் இரண்டு ‘பாடல்தான். இந்த ராகத்தை இப்படி ஒரு வித்தியாசமான கோணத்தில் விறுவிறுப்பான வேகத்தில் அமைக்க முடியும் என நம்புவதே கடினமாக இருக்கிறது. பலமுறை சொன்னதுபோல் அபூர்வமான ஒரு ராகத்தில் வெறும் மெட்டுப் போடுவது மட்டும் இளையராஜாவின் சாதனை அல்ல. அதற்கு ஏற்ற இசைக்கருவிகளில் அந்த ராகத்தைக் கொண்டுவந்து பிரமிக்கவைக்கும் அளவுக்கு இசை ஒருங்கிணைப்பை அமைத்திருப்பார்.

பாடல் தொடங்குவதே என்னவொரு வேகம் பாருங்கள். சிந்தசைஸரில் அதிவேகத்துடன் ஆரம்பிக்கிறது தந்தி இசை. பின் வழக்கம்போல் இனிமையான ஒரு கோரஸ் ஹம்மிங்கில் இந்த ராகத்தை ஆலாபனை செய்வார்கள். வயலினும் புல்லாங்குழலும் அந்த அதிவேகத்தை ரிலே ரேஸ் போல் வாங்கிகொள்ள பின் ஜானகியின் குரலில் பாடல் ஆரம்பிக்கும். ‘அன்பே நீ இல்லாது’ என்ற இடத்தில் அம்ருதவர்ஷினியில் ஒரு அதிவேக உலா வரும் அவரது குரல்.

முதல் சரணத்துக்கு முன் கித்தாரும் வயலிமும் ஹம்மிங்கும் இணைந்து ஒரு உன்னதமான ஒருங்கிணைப்பில் அமைந்த ஒரு இசைத்துணுக்கு வரும். பின் சரணத்தை ஏசுதாஸ் ‘மாமர இலை மேலே’ என்று ஆரம்பிப்பார். ‘அந்திமழை பொழிகிறது’ பாடலில் ஜானகியின் குரல் முதன்முதலாகச் சரணத்தில் ஒலிப்பதுபோல் இப்பாடலிலும் சரணத்தில்தான் ஏசுதாஸின் குரல் முதன்முதலில் ஒலிக்கிறது. இது இசைஞானியின் டெக்னிக்களில் ஒன்று. சரணங்களில் ஆ… என்று வரும் ஆலாபனையில் இருவரின் குரல்களிலும் அம்ருதவர்ஷினி ராகத்தைச் சாறு பிழிந்து கொடுத்திருப்பார் இசைஞானி.

விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடலில் உணர்ச்சிகள் போன்றே ஸ்வரங்களும் ஊஞ்சல் ஆடுவதுபோல் அமைத்திருப்பார். படத்திலும் அமலா அழகாக ஊஞ்சலில் ஆடுவார். அது இயக்குனர் மணிரத்தினத்தின் அழகியல் உணர்வின் வெளிப்பாடு. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பாடலை வேறு தளத்துக்குச் சென்று ஒலியும் ஒளியும் இணைந்த இன்பமாக மாற்றும்.

இசைஞானி இப்பாடலை ஒலிப்பதிவு செய்த அன்று மழை பெய்ததாகச் சொல்வார்கள். நிஜமாகவே பெய்திருக்கலாம். அல்லது அப்துல்கலாம், காமராஜர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று வாட்ஸப்பில் வரும் கதைகளைப் போன்ற ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால் இப்பாடலைக் கேட்டதும் நமது மனதுக்குள் இசை மழை பொழிந்து நம்மை நனைக்கும் என்பதில் ஐயமில்லை.

 

முந்தைய தொடர்கள்:

5. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் ” – https://bit.ly/2TZ5Tka
4.‘ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!’ – https://bit.ly/2WBErej
3.‘தலையைக் குனியும் தாமரையே’ – https://bit.ly/2IUS4gv
2.என்றைக்குமே இந்த ஆனந்தமே! – https://bit.ly/39YlZAa
1. இசையில் தொடங்குதம்மா… – https://bit.ly/3b6w7H7

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
 2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
 3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
 4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
 5.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
 6. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
 7. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 8. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 9. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
 10. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
 11. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
 12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
 13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்