ராஜா கைய வச்சா 10

மேதைகளின் தன்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவற்றில் முக்கியமான ஒன்று புதுமைகளைச் செய்து கொண்டே இருப்பது. தலைசிறந்த கலைஞர்களுக்கு ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்க அலுத்துவிடும். அவர்களது சாதனைகளை அவர்களே உடைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துப் படமெடுப்பது, வசனங்களே இல்லாமல் படமெடுப்பது என்று இயக்குநர்கள் புதுமையாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். நடிகர்களாக இருந்தால் வயதானவர்போல் நடிப்பது, உயரத்தைக் குறைத்துக் கொள்வது , பெண்ணாக நடிப்பது என்றெல்லாம் தங்களுக்குத் தாங்களே இலக்கு வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சிப்பார்கள்.

ஆனால் சமயங்களில் அந்தப் பரிசோதனை முயற்சிகள் விபரீதமாகப் போய்விடும். புதுமையான முயற்சி மட்டுமே இருக்கும். ரசிக்கும்படியாக இல்லாமல் கோரமாகப் போய்விடும். திரைப்படப் பாடல்களுக்கான இசையிலும் பின்னணி இசையிலும் பல்வேறு புதுமைகள் மற்றும் பரிட்சார்த்த முயற்சிகளைப் பரிசோதித்தவர் இசைஞானி. ஆனால் அந்தப் புதுமைகள் புதுமையானவை, பரிசோதனை முயற்சி என்றே ரசிகர்களுக்குத் தெரியாத அளவில் இன்பமாக இருக்கும். திரைப்படங்களில் ஆர்ட் டைரக்டர் செய்த பணிகள் வெளியே தெரியும்படி இருந்தால் அவர் மோசமானவர் என்பார்கள். அதாவது வித்தியாசமே தெரியாதபடி இயற்கையோடு இயல்பாக ஒன்றியிருக்க வேண்டும். அது போன்றே இசைஞானி செய்த பல புதுமை முயற்சிகள் பலவும் அவரது பிற பாடல்களைப் போன்றே எந்த வித்தியாசமும் தெரியாமல் வழக்கம்போல் இனிமையாக இருக்கும்.அப்படி அவர் செய்த புதுமைகளில் ஒன்றான பாடல்தான் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போவது.

இந்த ஒரு பத்தி மட்டும் கொஞ்சம் டெக்னிக்கலாகப் பேசுவோம். கர்னாடக இசையில் ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்கள். இவற்றில் ரி க ம த நி என்னும் ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு இரண்டு இருக்கும். ஆக மொத்தம் பன்னிரண்டு என்று அடிக்கடி இக்கட்டுரைத் தொடரில் பார்த்தோம். ஒரு ராகத்தில் ரி க ம த நி ஆகிய ஸ்வரங்களில் ஒவ்வொன்றிலும் உள்ள இரண்டில் ஏதாவது ஒன்றுதான் வரும். அதாவது ஒரு ராகத்தில் ரி1 வந்தால் ரி2 வராது . ம1 வந்தால் ம2 வராது. இவற்றின் வெவ்வேறு விதமான சேர்க்கையினால் வெவ்வேறு ராகங்கள் உருவாகின்றன. இதுதான் பெரும்பாலான தாய் ராகங்களின் இலக்கணம். ஆனால் சில அபூர்வமான ராகங்களில் இந்த ஐந்து ஸ்வரங்களில் உள்ள இரண்டுமே இடம் பெறும். உதாரணம் ரி1 இருக்கும் .அடுத்து க விற்குப் பதிலாக ரி2 வே இருக்கும். இல்லை த1 ன்னும் த2 வும் அடுத்தடுத்து இருக்கும் நி இருக்காது. இது போன்ற ராகங்களை விவாதி ராகங்கள் என்பார்கள். இவை அவ்வளவாகப் பிரபலமாகாதவை. காரணம் இவற்றைக் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்காது. புதுமை, பரிட்சார்த்த முயற்சி என்ற பெயரில் கச்சேரிகளில் இவற்றைப் பாடுவார்கள் .ஆனால் நான் முதலில் சொன்னதுபோல் புதுமை இருக்கும். இனிமை பெரும்பாலும் இருக்காது.

அப்படிப் பல விவாதி ராகங்களை இசைஞானி சர்வ சாதாரணமாகத் தனது பாடல்களில் கையாண்டு சூப்பர் ஹிட்டாகக் கொடுத்திருப்பார். உதாரணத்துக்குப் பனிவிழும் மலர் வனம் (நினைவெல்லாம் நித்யா-1982) என்ற பாடல் . அந்தப் பாடலைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம். இது போன்ற பல பாடல்களில் பல்வேறு வகையான அபூர்வ ராகங்களைப் பயன்படுத்தியிருப்பார்.

அப்படி இன்னொரு அபூர்வமான ராகம் பாவனி. இந்த ராகத்தில் பிரபலமான பாடல்கள் ஏதும் கர்னாடக இசையில் இல்லை. இந்த ராகத்தில் க கிடையாது ரி1 ரி2 ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வரும். இது போன்ற ராகங்களில் இசையமைக்க அபாரக் கற்பனை வேண்டும். அந்த மேதமையைத் தூண்டிவிட ஒரு அற்புதமான காரணி வேண்டும். அப்படி அமைந்த ஒரு திரைப்படம் குணா(1991).

பாலியல் தொழிலாளியின் மகனாக மன நிலை பிறழ்ந்தவனுக்குச் சுற்றுச் சூழலே நரகமாகத் தெரிகிறது. அதிலிருந்து தன்னை மீட்கும் மீட்பராகக் கடவுளின் அவதாரமாக அபிராமி என்னும் பெண் தன்னைப் புனிதப் படுத்துவாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை. உளவியலில் டெல்யூஷன் (Delusion) எனப்படும் இந்த தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவன் ஒரு கோவிலில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தற்செயலாகப் பார்க்கும் பெண் ஒருத்தியை அபிராமி என்று நினைக்கிறான். தன் வாழ் நாள் லட்சியம் ஈடேறி விட்டதை என்ணிப் பரவசமடைகிறான். தெய்வீகக் காதல் இது என நம்புகிறான்.

இப்படிப் பட்ட ஒரு களம். கிறுக்குத்தனம், பக்தி, காதல், காமம், கவிதை (அபிராமி அந்தாதி) எனக் கலந்து கட்டிய ஒரு உணர்வுக் குவியலான தருணம்.அந்த இடத்துக்கு எப்படி இந்த ராகத்தை எடுத்துக் கையண்டார் என்பது ஆச்சரியம். பாடல் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிட பின்னணி இசை ஒலிக்கும். சரியாக ஒரே நிமிடம்தான். அது பாவனி ராகம் அல்ல. அதற்கு நெருங்கிய சாரங்க தரங்கிணி என்னும் ராகம். அந்த பின்னணி இசை இப்பாடலுக்கு ஒரு பலமான அஸ்திவாரம் போடுகிறது.

பின்னணி இசை புல்லாங்குழலில் தொடங்குகிறது. முதல் இருபது வினாடிகளுக்கு . நாயகி நாயகனைக் கடந்து செல்கிறாள். பாதை கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படுகிறது. கதவுகள் மெதுவாகத் திறக்கின்றன. அடுத்த இருபது வினாடிகளுக்குச் சிதார் இசை கிண்கிணி ஓசையாய் ஒலிக்கத் தான் அடைய வேண்டிய இடத்தை நோக்கி ஓடும் பரபரப்பை இசையால் உணர்த்துகிறார். பின்னர் இறுதி இருபது வினாடிகளில் மீண்டும் புல்லாங்குழல். அடைய வேண்டிய இடம் வந்தவுடன் அடைந்த ஒரு நிம்மதியும் பரவசமும் வெளிப்படுகிறது. கோவிலில் உள்ள கைகாட்டி சரியாக அவளை அடையாளம் காட்டுகிறது.

அதன்பின் தான் ஆட்டமே ஆரம்பிக்கிறது. ‘ நாயகி நான்முகி நாராயணி ‘ என்று பாவனி ராகத்தில் அபிராமி அந்தாதி கோரஸாக ஒலித்து ஒரு தெய்வீக அனுபவத்தைத் தருகின்றது. அது முடிந்தவுடன் சொர்க்க வாசல் திறப்பதற்கான கட்டியம் கூறுவது போல் ஒரு அற்புதமான சங்கொலி. தொடர்ந்து கே.ஜே.ஏசுதாஸின் கந்தர்வக் குரலில் பாடல் ஒரு பரவசத்தை வெளிப்படுத்தித் தொடர்கிறது. பக்கத் துணையாக செண்டை மேளம் ஒலிக்கிறது . வாலியின் நான்கு வரிகளை அருமையாகப் பாடி முடித்ததும் மீண்டும் அபிராமி அந்தாதி நாயகியின் தெய்வீக அழகை வர்ணிக்க அவளது கையால் பிரசாதம் பெற்ற நாயகன் மெய்மறந்து மீண்டும் அதே ‘பார்த்த விழி பார்த்த படி’ என்னும் வரிகளை உச்சஸ்தாயியில் பாடுகிறான். கொஞ்சம்கூடப் பிசிறில்லாமல் கம்பீரமாக தாசேட்டன் குரல் உச்சஸ்தாயியைத் தொட்டு ஒரு உன்னத உணர்வை அளிக்கிறது.

பாவனி என்னும் அபூர்வ ராகத்தின் இனிமை கெடாமல் இவ்வளவு அற்புதமான இசையமைத்தது ஒரு புதுமை என்றால் பாடலின் தாளத்திலும் இன்னொரு புதுமை செய்திருப்பார். தகதகிட என்று ஒலிக்கும் கண்டசாபு தாளத்தை வெகு அபூர்வமாகவே திரை இசையில் பயன்படுத்துவார்கள். அதனைச் செண்டை மேளத்தில் பாடல் முழுதும் கொண்டுவந்து பாடல் முடியும் இடத்தில் ஒரு சிறு துணுக்குடன் உச்சமாக முடித்திருப்பார்.

பாடலை வர்ணிக்க வார்த்தைகள் போதாமல் மீண்டும் மீண்டும் பரவசம் தெய்வீகம் என்ற வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.பாடலில் நான்கே நான்கு வரிகள்தான். பாடலும் இரண்டு நிமிடம்தான். பாடலின் தொடக்கம் போன்றே பாடல் முடிந்த பின்னும் ஒரு நிமிடம் ஒலிக்கும் புல்லாங்குழலும் வீணையும் இறைவியுடன் கலந்து இறைவனாகிப் புனிதமடையும் ஒரு நிகழ்வின் உணர்வு வெளிப்பாடாக அமைகிறது. மொத்தத்தில் இப்பாடலும் அதன் முன்னும் பின்னும் ஒலிக்கும் இசைக் கோர்வையும் காட்சி அமைப்பும் ஒரு நான்கு நிமிட சொர்க்கம்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
 2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
 3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
 4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
 5.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
 6. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 7. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 8. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
 9. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
 10. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
 11. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
 12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
 13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்