ராஜா கைய வச்சா  11

இசையமைப்பது என்பது சமைப்பது போலத்தான். காய்கறிகளுக்குப் பதிலாக ஸ்வரங்கள், ராகங்கள். அவற்றை மாற்றி மாற்றிக் கலந்து தயாரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரே விஷயத்தைச் செய்து கொண்டிருந்தால் சாப்பிடுபவருக்குச் சலிப்பு வந்துவிடும். அதைவிட முக்கியமான இன்னொரு விஷயம் நல்ல சமையற்காரராக இருந்தால் ஒரே விதமாக இட்லி ,தோசை என்று செய்து கொண்டிருந்தால் அவருக்கும் சலிப்பு வந்துவிடும். கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்வோம் என முயற்சி செய்வார்.

சமையலில் உருளைக்கிழங்கு,கேரட் போன்ற காய்கறிகள் பிரபலம். காரணம் எப்படியும் சுவையில் ஒரு மினிமம் கேரண்டி கொடுத்துவிடலாம். சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்களை எடுத்துக் கொண்டால் திறமையாகச் சமைக்கவில்லை என்றால் ரிஸ்க்தான். சகிக்க முடியாமல் போய்விடும்.

இசையிலும் கல்யாணி , மோகனம், சங்கராபரணம் , சிந்து பைரவி போன்ற மினிமம் கேரண்டி ராகங்கள் உண்டு. இவற்றில் இசையமைத்தால் எப்படியும் ஒரு சுமாரான பாடலைக் கொடுத்துவிடலாம்.  சில அபூர்வமான ராகங்கள் அவ்வளவாகப் பிரபலமாக இல்லாமல் இருப்பதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது அவற்றின் ஸ்வரங்களின் அமைப்பு மிகச் சிக்கலாகவும் கேட்பதற்கு இனிமையாக இல்லாமலும் இருக்கும் . அவற்றை வளைத்து நெகிழ்த்தி இனிமையாக்க அபாரத் திறமை வேண்டும்.  உதாரனம் சென்ற கட்டுரையில் சொன்ன ‘பார்த்த விழி பார்த்தபடி’ பாடல் அமைந்திருக்கும் பாவனி என்னும் ராகம். இரண்டாவது அவற்றின் அமைப்பு இறுக்கமாக இருப்பதால் அவற்றில் ஒரு வேளை இனிமையாக இசையமைக்க முடிந்தாலும்கூட அந்த மெட்டுக்கள் ஒரே மாதிரி அமைந்திருக்கும். வித்தியாசம் காட்ட முடியாது. மேலே சொன்ன சமையல் உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் பீர்க்கங்காயில் சுவையாக பிரியாணி செய்தாலும்கூட மீண்டும் மீண்டும் அதையே செய்தால் ‘பீர்க்கங்காய் பிரியாணியா?’ எனச் சலிப்படைந்து விடும். இதற்கு இசையில் ஒரு உதாரணம் ரீதி கௌளை என்னும் ராகம். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் ‘பாடல் அமைந்த ராகம். கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் புதுமையாக இந்த ராகத்தில் இசையமைப்பது கஷ்டம். சின்னக்கண்ணன் அழைக்கிறான் ஜாடையிலேயே மெட்டு இருக்கும். இசையமைப்பாளர் காப்பியடிக்கிறார் என்று குறை சொல்லி விடுவார்கள்.

அபூர்வமான ராகங்களை, அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத ராகங்களைப் புதுமையான இனிமையாக முறையில் திரைப்பட இசையில் தருவது இசைஞானியின் பாணி. இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் பாடல் மோகமுள் (1994)திரைப்படத்தில் அமைந்த ‘கமலம் பாத கமலம் ‘என்னும் பாடல். 72 தாய் ராக வரிசையில் 52 ஆவது மேளகர்த்தா ராகமான இந்த ராகம் அவ்வளவு பிரபலமானது அல்ல. இந்த முத்துஸ்வாமி தீட்சிதர் அமைத்திருக்கும் ‘ஸ்மராம்யஹம் மஹா ராகும்’ என்னும் பாடல் மட்டும்  பிரபலமானது. விரிவாக ஆலாபனை செய்யக் கொஞ்சம் கஷ்டமான ராகம். அந்த ராகத்தை எடுத்துக் கொள்கிறார் இளையராஜா.  இந்த ராகத்தில் ராஜமுக்தி (1948) என்னும் தியாகராஜபாகவதர் திரைப்படத்தில் குலக்கொடி தழைக்க என ஒரு சிறு பாடலை சி.ஆர்.சுப்புராமன் அமைத்திருப்பார். அதன் பின் நாற்பத்தி ஆண்டுகள் கழித்து மீண்டும் தூசி தட்டி இந்த ராமபிரியா ராகத்தை எடுத்து அழகுபடுத்துகிறார்.

 தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் தமிழின்  மிகச் சிறந்த நாவல்கள் வரிசையில் ஒன்றாகும். இசையை மையச் சரடாக வைத்து அமைந்தது. இசை புனிதமானது. உலக வாழ்க்கையின் சலனங்களால் அதை மலிவுபடுத்திவிடக்கூடாது என்பதன் லட்சிய அவதாரமாக உலவி வரும் ரங்கண்ணாவிடம் இசை பயில வரும் பாபு அந்தச் சலனங்களால் சபலங்களால் அலைக்கழிக்கப்பட்டு மீள்வதே கதை. பழமைவாதக் கருத்துக்களாக இருந்தாலும் நாம் நாவலை விமர்சிக்கப் போவதில்லை.   நாவலில் இசையைப் பற்றி ரங்கண்ணா பேசிக் கொண்டே இருப்பார். ஸ்ருதி சேர்ப்பதைப் பற்றியே இரண்டு மூன்று பக்கங்கள் விவரித்திருப்பார். அப்படி இசையே மையமான கதை படமாக்கப்படும் போது அற்புதமாக  இசையமைத்திருப்பதைப் பற்றிப் பார்க்கலாம். அந்த திரைப்படத்தில் இசைஞானி அமைத்திருக்கும் பாடல்கள் எல்லாமே அற்புதமானவை.  குறிப்பாகச் சொல்லாயோ வாய்திறந்து’ என்னும் பாடல்.  அந்தப் படத்தில் அமைந்த பாடல்களுள் ஆகச் சிறப்பானது ‘ கமலம் பாத கமலம் என்னும் பாடல்’.

‘ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில் காகங்கள் விழித்துக் கரைகின்ற பொழுதில்’ (வரிகள் வாலி) நாயகன் பாபு ( நடிகர் அபிஷேக்) ஆற்றில் குளித்துச் சாதகம் செய்கிறான். இசையே ஆறாக ஓடிய காவேரி! இசை மும்மூர்த்தி பிறந்து சாகித்யம் புனைந்து திருவீதி வலம்வந்த தலம்!! அப்படிப்  பட்ட தெய்வீக இடத்தில், தருணத்தில் நாயகன் பாடும் பாடலை அவனது குருவாகப் போகும் ரங்கண்ணா ( நடிகர் நெடுமுடி வேணு) கேட்கிறார். இப்படிப்பட்ட இசைமயமான ஒரு இடத்துக்கு இசைஞானி அற்புதமாக ராமப்பிரியா ராகத்தை எடுத்து உன்னதமான ஓர் இசையைத் தந்திருக்கிறார்.  இதுபோன்ற கடினமான ராகங்களைப் பாட அபாரமான குரல்வளம் வேண்டும். அதற்கு ஏசுதாஸை விட்டால் யார் இருக்கிறார்கள்?

அபாரமாக ஒரு ஆலாபனையுடன் ஆரம்பிக்கிறது பாடல். மெதுவாகப் புலரும் காலை போல் ராகம் தன்னை நெய்யத் தொடங்குகிறது.  கச்சேரிகள் போல் மிருதங்கமும் ஜால்ராவும் மட்டும்தான் பல்லவியில்.  சரணத்திற்கு முந்தைய பின்னணி இசையில் வயலின் எளிமையாக ஒலிக்க சிதாரும் சந்தூரும் தந்திகளிலிருந்து இந்த ராகத்தைச் சொரிகின்றன. பின் சரணம் முழுதும் மீண்டும் மிருதங்கமும் ஜால்ராவும்தான் பின்னணி. இரண்டாவது சரணத்துக்கு முந்தைய இசைத்துணுக்கில் கிதாரும் , புல்லாங்குழலும்  இணைந்து கொள்கின்றன. பெரிய சிக்கலான இசைக் கோர்வை எல்லாம் கிடையாது. ஆனால் மிக இனிமையான இசையமைப்பு. மினி மீல்ஸ் போல் ஐந்து நிமிடத்தில் இந்த ராகத்தில் ஒரு முழுக்கச்சேரியைக் கேப்ஸ்யூலில் அடைத்திருப்பார். இசையே இறைத்தன்மையாக மாறும் தருணம்.

இந்தப் பாடல் மட்டுமல்ல . இன்னொரு பாடலும் இந்த ராமப்ரியா ராகத்தில் இருக்கிறது. அந்தப் பாடலும் ஏசுதாஸ்தான். மிக அருமையாக ஸ்வரங்கள் ஜதிகளுடன் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். பாடல் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. பாடல் ஊரெல்லாம் உன் பாட்டு (1991) திரைப்படத்தில் அமைந்த ‘தோம் தோம் என நடமிடடி’ என்னும் பாட்டு.  மிகவும் வித்தியாசமான ஒரு களம். இடம்.  அதையும் கேட்டுப் பாருங்கள். அதுதான் ராஜா!

https://youtu.be/BHEWi8wHUm8

https://youtu.be/ZZNgD4-tXPg

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
  2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
  3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
  4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
  5. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
  6. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
  7. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
  8. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
  9. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
  10. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
  11. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
  12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
  13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்