பூமி வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்களின் உழைப்பு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல; வரலாற்றையும் மாற்றிக் கொண்டிருக்கிறது கொரோனா. இந்தக் கொடுந்தொற்று நோயிலிருந்து உலகம் மீளலாம். ஆனால் இந்நோய் உருவாக்கியிருக்கும் தாக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இருக்கும்.
மக்கள் உள்ளடங்கி வாழும் சூழல், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை நினைவுபடுத்தியுள்ளது. ‘இந்த உலகம் எவற்றால் இயங்குகிறது அல்லது எவை இல்லாமலும் இந்த உலகம் இயங்கும்’ என்பது மாதிரியான சிந்தனைகளை கொரோனா கற்றுத் தந்திருக்கிறது.
சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள், நகைக்கடைகள், பியூட்டி பார்லர்கள், ஷாப்பிங் மால்கள், சமய வழிபாட்டுத் தலங்கள், நட்சத்திர விடுதிகள், கல்யாண மண்டபங்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. டிவி சீரியல்கள், கிரிக்கெட் போட்டிகள், கட்சி மாநாடுகள், ஆடம்பர பவனிகள் எதுவும் இல்லை. இவை இல்லாதது பற்றி மக்களும் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை. இவை எதுவும் இல்லாமல் இயல்பாக உயிர்வாழ முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தொழிற்சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதுதான் அவர்களுக்குக் கலக்கத்தைத் தருகிறது. சீருடை அணிந்த பள்ளி மாணவர்களைக் காண முடியாத கண்கள் பனிக்கின்றன.
கொரோனா உருவாக்கப் போகும் சமுக, பொருளாதார மாற்றங்கள் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். கடந்த ஒரு நுற்றாண்டில் மக்களின் பெரும் பொழுது போக்காக உருவான சினிமாவுக்கு அந்திமக் காலம் வந்துவிட்டது. இன்னும் சில காலத்துக்கு சினிமா தியேட்டர்களுக்குக் கூட்டம் வருவதற்குச் சாத்தியமில்லை. சமுக விலகல், கொரோனா தொற்று பயம் மட்டுமின்றி, ஊரடங்குக் காலத்தில் சினிமா (தியேட்டர்களில்) இன்றி வாழப் பழகிக் கொண்டுவிட்ட மக்களின் மனநிலையும் இதற்குக் காரணியாகும். பல தியேட்டர்கள் காணாமல் போகும். தியேட்டர்களைத் தவிர்த்த மாற்று வழிகளை சினிமாத்துறை முயற்சித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் கடவுளின் ஆற்றலே கேள்வி கேட்கப்பட்ட நிலையில் மாஸ் ஹீரோக்களின் ‘சூப்பர் பவர்’ காட்சிகளை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
கல்விமுறையின் அடிப்படைக் கட்டமைப்பு மாறும். கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘ஆசிரியர் இல்லாத வகுப்பறைகள்’ அரசுகளால் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்களும் தகவல் வடிவில் (data) மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக, திறன்மிகு வகுப்பறைகள் (smart classrooms), கணினி வழி கற்றல், மின் தொகுப்புகள் (e-content) போன்றவை உயர்கல்வி நிலையங்களில் பெரிதளவில் வலியுறுத்தப்பட்டன. இவை தவிர இணைய வழிக் கற்றலுக்குக் (e-learning) குழந்தைகளைப் பழக்கப்படுத்த ஏராளமான களங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய கொரோனா நாட்களில் ஏற்பட்டுள்ள கல்விப் பாதிப்பைக் காரணமாகக் கொண்டு இனி வரும் காலத்தில் ‘வகுப்பறைகளே இல்லாத கல்வி முறை’ தீவிரமாக வலியுறுத்தப்படும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறும்.
சிரமப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் வாழ்வதற்குக் பெரும்பாலான ‘குடிமகன்கள்’ பழகியிருக்கிறார்கள். இனி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது மக்களைப் பொறுத்த முடிவல்ல. அரசைப் பொறுத்தது. இன்னும் சில ஆண்டுகளுக்குக் கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்கள் பெருங்கூட்டம் சேர்த்து, பிரம்மாண்டமாக நடப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கெனச் செலவிடும் ஆடம்பரம் தேவையற்றது என்கிற எண்ணம் மக்களின் மனத்தில் கொஞ்சமாவது உருவாகியிருக்கிறது. சுற்றுலாத் தலங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல காற்றைச் சுவாசிக்கும். தங்கள் வசிப்பிடங்களை மறித்துப் போடப்பட்ட சாலைகளில் வனவிலங்குகள் சுதந்திரமாக உலவுகின்றன.
தன்னைச் சுற்றி நடக்கும் எதற்கும் தொடர்பில்லாதவர்களாக வாழ்ந்து பழகிய பலருக்கும், அடுத்தவரின் பசியையும் வலியையும் கொரோனா அடையாளம் காட்டியிருக்கிறது. பொது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, உணவு உற்பத்திப் பொருள் வினியோகம் போன்றவற்றில் பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக, உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதளவில் ஆதிக்கம் செலுத்தும் சேவைத் துறைகள் கொரானாவுக்குப் பின்னர் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். உற்பத்திப் பொருளாதாரத்தின் பக்கம் உலகின் கவனம் மீண்டும் திரும்பும். இதில் முதலாளித்துவ உற்பத்தித் துறைகளுடன் வேளாண் உற்பத்தியும் அடங்கும். மனித வளம் குறைந்தபட்ச மதிப்பையாவது பெறும். சுருங்கச் சொன்னால், உலகப் பொருளாதாரம் கடந்து வந்த பாதையில் U turn போட்டுத் திரும்பும். கால் நூற்றாண்டுக்கு முன்பிருந்த பொருளாதார நிலை நோக்கி உலகம் நகரும்.
சேவைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியால் தகவல் தொழில்நுட்பம், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போன்றவை கடும் சரிவைச் சந்திக்க நேரிடும். இத்துறைகளில் நிகழப் போகும் பெரும் வேலையிழப்பு எல்லா நாடுகளுக்கும் ஓர் அச்சுறுத்தலாக உருவெடுக்கும். வங்கிகள், காப்பீட்டுத் துறைகளின் வீழ்ச்சியால் தங்கத்தின் விலை உயரும். ரியல் எஸ்டேட் துறை வளரும். உற்பத்தியின்மையால் உண்டாகும் பொருளாதார வீழ்ச்சி சரியாகச் சில ஆண்டுகள் ஆகும். அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.
கொரோனாவிலிருந்து உலகம் மீளும் முதற்கட்ட ஆண்டுகள் பெருநுகர்வுக் காலமாக இருக்கும். ஊரடங்கு வாழ்க்கை உண்டாக்கிய சோர்விலிருந்து மீள்வதற்கு மக்கள் கொண்டாட்டங்களை நாடுவார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அது சலிப்பை உண்டாக்கி மறையும்; அல்லது குறையும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த உலக நாடுகளிடையே ஒருமித்த கொள்கைகளை வகுக்க வேண்டிய தேவை உணரப்பட்டது. அது போல் கொரோனாவுக்குப் பின்னர், உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology), உயிரி யுத்தம் (Bio-warfare) மருந்துப் பொருட்கள் உற்பத்தி மற்றும் வினியோகம் போன்றவற்றில் பொதுவான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியதன் தேவை உணரப்படும். வழக்கம் போல அந்தக் கொள்கைகள் அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கும். அல்லது அமெரிக்காவே அவற்றை உருவாக்கும்.
கொரோனாவுக்குப் பின்னர் தீண்டாமை நவீன வடிவத்தை அடையும். பொது வெளிகளில் சக மனிதனைத் தீண்டுவதும், அருகில் நிற்பதும், அமர்வதும் மனிதத் தன்மையற்ற செயலாகப் பார்க்கப்படாது. கை குலுக்குவது பெருங்குற்றமாகிவிடும். தவறி தீண்டி விட்டாலோ, தீண்டப்பட்டு விட்டோலோ சானிடைசர்கள் கொண்டு தீட்டு கழிக்கப்படும்.