சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்- 25 & 26

25) டிராஜடி 

சிறுமி கற்பழித்துக் கொலை என்ற தகவல் கிடைத்தபின் சம்பந்தப்பட்டவனச்  சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்ற ஆக்ரோஷம் எனக்கு ஏற்பட்டது. அவன் எங்கோ ஓடி விட்டான். நான் ஒரு சப் இன்ஸ்பெக்டர் இரண்டு போலீசாருடன் அவனின் வீட்டுக்கு விசாரணைக்குச் சென்றேன். ஒரு சந்துக்குள் அந்த வீடு இருந்தது. அதை வீடு என்றே சொல்லமுடியாது. அவ்வளவு மோசமான ஒரு கட்டிடம். வாசலில் அவனுடைய அம்மா உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். ஆக்ரோஷமாகச் சென்ற நான் திகைத்து நின்றுவிட்டேன். ஒரு  வளர்ச்சியில்லாத பெண் பாவாடை சட்டையில் உட்கார்ந்திருந்தது. காலில்லாமல் ஒரு பெண் பாவாடை சட்டையில் தவழ்ந்து வந்தது. அவனின் அம்மா கதறி அழுதாள். மகனின் சேர்க்கை சரியில்லை என்றாள் . கணவர் வேறு ஒருபெண்ணுடன் பம்பாயில் இருப்பதாகத் தகவல் என்றாள் . விட்டு விட்டுப் போய்விட்டார் என்று அதற்காகவும் அழுதாள். மகன் இருக்குமிடம் பற்றி இவளிடம் விசாரிப்பதோ அல்லது இவளைக் கொண்டு போய் ஸ்டேஷனில் வைப்பதோ பயனில்லை என்று நினைத்து அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

விரைவிலேயே அவனையும் அவனுடைய சேக்காளியையும் புளியந்தோப்பில் பார்த்துவிட்டோம். ஒல்லியான பையனாக இருந்தான். இவன்  தற்செயலான குற்றவாளியா அல்லது கிரிமினல் உள்ளம் கொண்டவனா என்று யோசித்தேன். கிரிமினல் உள்ளம் கொண்டவனாக இருக்க மாட்டான் என்று நினைத்தேன்., நான் தடுப்பதற்குள் சப் இன்ஸ்பெக்டர் அவனைச் சுட்டு விட்டார். அவன் மல்லாந்து விழுந்தான்.அவன் செய்தது பெரிய குற்றம். அதற்கான தண்டனையை அவனுக்குக்  கொடுத்தாகிவிட்டது. எனினும் இந்தச் சம்பவத்தில் ஒரு டிராஜடி இருக்கிறது என்று நான் நினைத்தேன்.

26 ) அன்புள்ளவன்

அரசியல்வாதியால் எதையும் செய்ய முடியும் என்ற பேதமை  கொண்ட என் அம்மா கணேசனைக் கூட்டிக் கொண்டு அந்த அரசியல்வாதியைப் பார்க்கச் சொன்னாள். நான் அந்த அரசியல்வாதியைப் பல முறை பார்த்துவிட்டேன். எப்போது சென்றா லும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். நான் அவரிடம் சென்று வேலை வாங்கித் தருமாறு கேட்க வேண்டும். இரக்கமில்லாத அந்த அரசியல்வாதி புன் சிரிப்புடன் எனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறுவார். நானும் அதை ரோட்டில் இட்லி சுட்டு விற்கும் என் அம்மாவிடம் கூறுவேன். ஒவ்வொரு தடவையும் அவள் அதை நம்புவாள் . அவளுடைய நம்பிக்கை எனக்கு அவள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இட்லி சுட்டு விற்கும் ஒரு பெண்ணுக்குத்  தெரிந்த உலகம் இப்படித்தான் இருக்கும். அவள் சொன்ன அன்று நான் கணேசனைக் கூட்டிக்கொண்டு அவரை பார்க்கச் செல்லவில்லை.

 

இன்று நான் இருக்கும் ஸ்தானம் வேறு. போலீஸ் அதிகாரி. அரசாங்க நியமனம். இட்லி சுட்டு விற்ற அம்மா இப்போது மற்றவர்களுக்கும் அம்மா. அதிகாரியின் அம்மா அல்லவா. அந்த அரசியல்வாதி என்னிடம் வந்தார். எப்போதும் சிரிக்கும் முகம் அவருடையது. அவர் ஒரு காரியத்திற்காக வந்தார். திடீரென்று  அவர் தொழிலை அவர் செய்கிறார் என்று எனக்குத் தோன்றியது. அவரை அலைக்கழிப்பது  முறையில்லை என்று என் அன்பு மனத்திற்குத் தோன்றியது. அவருக்கு நான் உதவி செய்தேன்.