கிழியாத பக்கங்கள்  3

பத்திரிக்கையாளன் ஆக வேண்டும் என்று சிறு வயது முதலே கலாம் கனவெல்லாம் கண்டு பத்திரிக்கைகள், புத்தகங்களைப் படித்தேன் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. படித்தது பின்னர் பத்திரிக்கைத் தொழிலுக்கு வலுவான ஆதாரமாக இருந்து வருகிறது என்றுதான் சொல்கிறேன்.

பத்திரிக்கைத் துறைக்குப் போக வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு ஒரு வருடம் முன்பு வரை விண்வெளி வீரனாக வேண்டும் என்றுதான் ஆசை.  சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த அறிவியல் புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் படித்தவர்கள் பலருக்கு இப்படி ஒரு ஆசை வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மனிதர்களுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்றது நாய்கள்தாம். சோவியத் யூனியன் ஆராய்ச்சிக்காக லைக்கா என்கிற நாயை 1957 இல் விண்வெளிக்கு ஸ்புட்னிக் 2 என்கிற கலத்தில் அனுப்பியது. விண்வெளிக்குச் சென்ற முதல் பூமி வாழ் உயிரினம் அதுதான். விண்வெளிக்குச் சென்ற சில நாட்களுக்குள்ளேயே லைக்கா இறந்து விட்டது. இதனால் ஒரு பெரும் சர்ச்சை உண்டான போதிலும் சோவியத் யூனியன் நாய்களை விண்வெளிக்கு அனுப்பி நடத்திய ஆராய்ச்சிகள் நிற்கவில்லை.

சோவியத் யூனியனைச் சேர்ந்த யூரி காகரின்தான் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற மனிதர்.  வோஸ்டோக் 1 என்கிற விண்கலத்தில் ஏறி பூமியை முழுமையாகச் சுற்றி வந்து ஏப்ரல் 12, 1961 அன்று தரையிறங்கினார். அந்தப்  பயணம் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் விண்வெளி ஆராய்ச்சிப் போட்டியைத் தூண்டியது

உலகிலேயே விண்வெளியில் பறந்த முதல் பெண்மணியான வாலண்டினா தெரெஷ்கோவா, வோஸ்டோக் 6 என்கிற விண்வெளிக் கலத்தில் தனியாகப் பறந்து மூன்று நாட்களில் பூமியை 48 முறை சுற்றி வந்தார். இது நடந்தது 1963இல். இன்று வரை தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஒரே பெண்ணான இவர் ஒரு துணி ஆலைத் தொழிலாளி. வானத்தில் குட்டிக் கரணம் அடிக்கும் ஸ்கை டைவிங்கில் ஆர்வம் உள்ளவர்.  சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினரான இவர் பின்னர் ரஷ்ய பாராளுமன்றமான டூமாவின்  உறுப்பினராகவும் ஆனார்.

பள்ளியில் தமிழ் மீடியத்தில்தான் அனைத்துப் பாடங்களையும் படித்தேன் _ ஆங்கிலம் தவிர.  எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் பாஸாகி பியூசியில் கணிதம், இயல்பியல், வேதியியல் பாடங்களைத் தேர்ந்தெடுத்தேன். இது விண்வெளிக்குச் செல்ல முதல்படி என்று நினைப்பு. (எஸ்.எஸ்.எல். சி, பியூசி படித்த கடைசித் தலைமுறை எங்களுடையது).

அப்போதெல்லாம் பியூசியில் வகுப்புகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடக்கும். இருக்கும் 9 மாதங்களுக்குள் அறிவியல் மொத்தத்தையும் மூளைக்குள் திணித்து எஞ்சினியர்களை உருவாக்கி நாட்டைக் கட்டமைக்க வேண்டுமே என்கிற கவலைதான் அவர்களுக்கு.

முதல் நாள் கணக்கு வகுப்பில் அல்ஜீப்ரா கணக்குதான் பாடம். இந்த வகைக் கணக்கு குறித்து அப்போது வேடிக்கையாகச ஆங்கிலத்தில்  சொல்லப் படும் ஒரு விஷயத்தையும் அவர் எங்களிடம் சிரித்துக் கொண்டே கூறினார்.

Algebra is a cobra (அல்ஜீப்ரா என்பது ஒரு நாகப்பாம்பு)

If you go on writing it (அதை நீ தொடர்ந்து எழுதினால்)

It becomes a zebra (அது ஒரு வரிக்குதிரையாகி விடும்)

அன்று நான்கே எளிய கணக்குகள்தான் சொல்லிக் கொடுத்தார். ஏற்கெனவே கணக்கில் 90க்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கி வந்த எனக்கு இவ்வளவுதானா அல்ஜீப்ரா என்று தோன்றியது.  அந்த வார இறுதியில் அந்த நான்கு கணக்குகளை மட்டும் வைத்து ஒரு தேர்வு.  ஒரு முறை கூட அந்தக் கணக்குகளைப் போட்டுப் பார்க்காமல் தேர்வெழுதச் சென்றேன். அவ்வளவு தன்னம்பிக்கை.

வெள்ளைத் தாளை வாங்கி மேசையில் வைத்தவுடன் அப்படியே உறைந்து போய் விட்டேன். அந்தக் கணக்குகள் எதுவுமே நினைவுக்கு வரவில்லை.  தாளின் மீது அல்ஜீப்ரா என்கிற நாகம் படமெடுத்து ஆடி வரிக் குதிரையாக மாறியது.

அடுத்த நாள் வகுப்புக்கு வந்த ஆசிரியர் தேர்வுத் தாளை ஒரு ஏளனப் புன்னகையுடன் திருப்பிக் கொடுத்தார். நான்கு கணக்குகளின் மதிப்பெண்களை எப்படிக் கூட்டினாலும் பூஜ்யம்தான் விடையாக வந்தது.

வாழ்க்கையில் முதன்முதலாக தேர்வில் தோற்றது மட்டுமின்றி, படு கேவலமாக ‘டக்’ அடித்து வெளியேறினான் இந்த விண்வெளி வீரன்.

அன்று முதல் அறிவியல் மீதிருந்த பற்று மறைந்தது. பியூசி இறுதித் தேர்வில் இயல்பியலில் 175க்கும் மேல் (டிஸ்டிங்ஷன் என்கிற தனிச்சிறப்பு மதிப்பெண் அது) வேதியியலிலும் கணிதத்திலும் 150க்கு மேல் மதிப்பெண்கள் என்று நினைவு. இருந்தாலும் அறிவியல் மீது ஆர்வம் திரும்பவில்லை.

அடுத்து என்ன படிப்பது என்று முடிவு செய்ய குடும்ப கவுன்சில் கூடியது. அறிவியல் படிக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறி விட்டேன். அப்போது பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா வீட்டிற்கு வந்தார். கவுன்சில் விவாதத்தில் கலந்து கொண்டார். ’நீ ஏன் ஜர்னலிஸ்ட் ஆகக் கூடாது?’ என்று கேட்டார். சட்டென்று பல்பு எரிந்தது. என் வாழ்க்கையில் இப்படிப் பல தருணங்களில்  ’கிருஷ்ண பரமாத்மாக்கள்’ தோன்றி ஒரு வரி உபதேசம் கூறி வாழ்க்கைப் பாதைக்கு வெளிச்சம் பாய்ச்சுவது  நடந்தது.

மேற்படிப்புக்கு ஆங்கில இலக்கியம் அல்லது பொருளாதாரம் படித்தால் ஊடகத் துறைக்குச் செல்லலாம் என்றும் அறிவுரை கொடுத்தார். அப்போதெல்லாம் ஜர்னலிசம் என்கிற படிப்பு இவ்வளவு பிரபலமாக இல்லை. ஊடகம் என்கிற துறை குறித்த பொதுமக்களின் புரிதலும் மிகக் குறைவு.  நான் அறிவியலிலிருந்து இலக்கியத்திற்கு மாறிச் சென்ற போது, உன் வாழ்க்கையையே வேஸ்ட் செய்து விட்டாய் என்று கூறிய ஒரு எஞ்சினியரை எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.  அந்தக் காலத்தில் லுங்கியும் டீ ஷர்ட்டும் நீண்ட தலைமுடியுமாக  உறையூர் தெருக்களில் சுற்றி வந்த என்னைப் பார்த்த யாருக்கும் இவன் உருப்படுவான் என்ற நம்பிக்கை வந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி ஒரு கிசு கிசு என்னப் பற்றி இருந்தது என்பதும் எனக்குத் தெரியும்.

 நான் இலக்கியத்தைப் பிடித்துக் கொண்டேன். பி.ஏ., எம். ஏ. என ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில்.இலக்கியம் படித்தேன். அற்புதமான ஆசிரியர்கள் இலக்கியத்துடன் வாழ்க்கையும், அரசியலையும் சொல்லிக் கொடுத்தார்கள். சென்ற மாதம் மறைந்த யூஜின் டிவாஸும், பேராசிரியர் ரிச்சர்டும் இவர்களில் மறக்க முடியாதவர்கள்.

இதுதான் இலக்கு என்று நிர்ணயித்த பின் என் சிந்தனை முழுவதும் அதை நோக்கியே இருந்தது. குடும்பச் சூழல் காரணமாக எழுத நேரிட்ட வங்கிப் பணி, எல்.ஐ.சி. தேர்வுகளில் வேண்டுமென்றே தோற்றேன்.

அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மலையாள ஏடான தேசாபிமானியின் ஆசிரியர் பி. கோவிந்தப் பிள்ளை, “உன் மகன் ஜர்னலிஸ்ட் ஆக வேண்டுமானால் சூரியனுக்குக் கீழிருக்கும் அனைத்தையும் படிக்கச் சொல்,” என்று அப்பாவிடம் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார். (இரண்டாவது கிருஷ்ண பரமாத்மா!)

தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகளை வேதம் படிப்பது போல் படித்தேன். ஒரு ஆங்கிலச் சொல் தெரியவில்லையென்றாலும் செய்தி அல்லது கட்டுரையின் அடுத்த வரிக்குச் செல்ல மாட்டேன். இந்தியா டுடே, சண்டே, ஆன்லுக்கர், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஹிம்மத், மெயின்ஸ்ட்ரீம் போன்ற பருவ இதழ்களையும் தொடர்ந்து படித்து வந்தேன் (அப்போது ஃபிரண்ட்லைன் இல்லை). தமிழ்ப் பத்திர்க்கைகளில் தினமணி, தினமணிக கதிர், ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கண்டு, முத்தாரம், துக்ளக் என்று எதையும் விட்டு வைக்க வில்லை.

ஒரு முறை மார்க்சிஸ்ட் தலைவர் வி.பி. சிந்தன் திருச்சிக்கு வந்திருந்தார். திருச்சியிலிந்து சென்னை செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரசில் அவரை வழியனுப்பி வைக்க ஜங்ஷன் ரயில் நிலையத்துக்குச் சென்றேன். ‘என்னப்பா, ஜர்னலிஸ்ட் ஆகப் போகிறாயா?’ என்று கேட்டார். ஆம் என்றதும், ”ஆங்கில இலக்கியம் மொழியறிவு பெற நல்லதுதான்.. உனக்கு அரசியல் புரிதல் பிரச்சினை இல்லை. ஆனால் நீ இடையிடையே பொருளாதாரம் தொடர்பான விஷயங்களையும்படி. பொருளாதாரம் இல்லாமல் என்ன அரசியல்..” (What is politics without economics? என்று ஆங்கிலத்தில் சொன்னார்). இது கிருஷ்ண பரமாத்மா 3 மோமெண்ட்!

இவ்வளவு விளக்கமாக என் கல்வியைப் பற்றி எழுதக் காரணம் தற்பெருமைக்காக இல்லை. காரணம் இதுதான்: ஜர்னலிசத்தில் பி.ஏ. மூன்றாண்டுகள், எம்.ஏ. இரண்டாண்டுகள் என்றெல்லாம் படிப்பது தேவையில்லை. அதற்குப் பதிலாக பொருளாதாரம், வரலாறு, சமூகவியல், சர்வதேச உறவுகள் போன்றவற்றில் கற்றுத் தேர்ந்து வருவது அவசியம். ஆங்கில இலக்கியக் கல்வி கூட சமூக, கலாச்சாரச் சூழலோடு  ஒரு அன்னியத் தன்மையை உருவாக்கி விடுகிறது. ஒர் அரசியல் குடும்பச் சூழலில் வளர்ந்ததாலும் தமிழ் மொழி மீது பற்று இருந்ததாலும் என் கால்கள் தரையிலேயே நடந்தன.  எனக்குக் கூட பொருளாதரமோ அல்லது வரலாறோ படித்திருக்கலாம் என்று எண்ணம் வருவதுண்டு.

சோஷியல் சயின்ஸஸ் எனப்படும் சமூக அறிவியல் பாடங்களில் ஒரு வலுவான அடித்தளம் ஏற்படுத்திக் கொண்ட பிறக ஒரு ஆண்டு இதழியல் டிப்ளோமா போதுமானது என்பதே அனுபவம்.  வேலை கேட்டு விண்ணப்பம் செய்யும் பலருக்கு நாட்டின் தற்கால வரலாறு கூட தெரியவில்லை என்பதே பிரச்சினை.

ஊடகத் துறை என்கிற ஒரே குறிக்கோளுடன் ஐந்து வருடங்கள் கல்விப் பயணம் செய்த நான் இதழியல் படிப்புக்காக டெல்லி பட்டணத்திற்கு சென்றது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பு முனை!

(இப்படி முடித்தால்தானே தொடரைத் தொடர்ந்து படிப்பீர்கள்?)

(vijay62@gmail.com)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்
  2. புதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்
  3. இளம் பத்திரிகையாளர்கள் படிக்கிறார்களா? - ஆர். விஜயசங்கர்
  4. கிழியாத பக்கங்கள் - ஆர். விஜயசங்கர்