முன்னுரை

பத்திரிக்கைத் துறைக்கு வந்து 34 வருடங்கள் கடந்து விட்டன. ஏப்ரல் 14, 1986 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் பெங்களூரில் பிரிவில் என்னுடைய அப்பாயின்மெண்ட் ஆர்டரை எடுத்துச் சென்று செய்தி ஆசிரியர் விஜயவர்த ராவிடம் கொடுத்த போது “நீ நிருபராக இருக்க விரும்புகிறாயா அல்லது எடிட்டிங் பிரிவில் சேர்கிறாயா,” என்று கேட்டார். எனக்கு கன்னடம் தெரியாததால் (இப்போதும் ஏன்ரீ, சென்னாகிதீரா, ஊட்டா எனக் கொஞ்சம்தான் கொஞ்சம்தான் அந்த மொழி தெரியும்) நிருபராகப் பணிபுரிவது சிரமம் என்று சொல்லி எடிட்டிங் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். பயிற்சி உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். பின் ஒரு வருடம் தகுதிகாண் பருவத்திலும் (ப்ரொபேஷன் பீரியட்) பணிபுரிந்தேன்.

இரண்டு வருடங்களுக்குப் பின் அதே ஏப்ரல் 14 அன்று (1988 இல்) உதவி ஆசிரியர் பணி உறுதி செய்யப் பட்ட அன்று சென்னையில் இருக்கும் தி இந்து பத்திரிக்கையில் உதவி ஆசிரியர் பணிக்கான நேர்காணலில் இருந்தேன் (இந்தியன் எக்ஸ்பிரஸ் மீது அவ்வளவு நிறுவன விசுவாசம்!) பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு மூன்று மாதத்திற்குப் பின் ஆகஸ்டு 18, 1988இல் தி இந்துவில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது ஃப்ரண்ட்லைன் தொடங்கி நான்கு ஆண்டுகளே ஆகியிருந்தன. அங்கு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் விடுமுறையில் சென்றதால் சிறிது காலம் அங்கு பணிபுரிந்தேன். 1989 பொதுத் தேர்தல் நேரத்தில் தி இந்துவில் பணியாற்றிய தேர்தல் சிறப்புக் குழுவுக்கு மீண்டும் அனுப்பப் பட்டேன். சிறிது காலத்தில் மீண்டும் ஃபிரண்ட்லைன். ஏறக்குறைய 31 ஆண்டுகளாக இங்குதான்.

உதவி ஆசிரியராகப் பணியாற்றிய நான் 2002 ஆம் ஆண்டில் பத்திரிக்கையின் பொறுப்பாசிரியரானேன். 2011இல் முதல் முறையாக இந்து குழுமத்தின் பத்திரிக்கைகளுக்கு உரிமையாளர்களின் குடும்பத்திற்கு வெளியிலிருந்து ஆசிரியர்களை நியமிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அப்போது ஃபிரண்ட்லைனின் ஆசிரியர் ஆனேன். ஒன்பது வருடங்கள் ஓடி விட்டன. சுய புராணம் போதும், சப்ஜெக்டுக்கு வாங்க என நீங்கள்  நினைப்பது தெரிகிறது.

இதுதான் சப்ஜெக்ட்.

34 ஆண்டுகள் பத்திரிக்கைத் துறையில் அனுபவம் என்கிற நினைவே லேட்டாகத்தான் வந்தது. அதை முகநூலில் பதிவு செய்த போது சுமார் 2000 எதிர்வினைகள் வந்தன. எனக்கு இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று, 34 ஆண்டுகள் கடந்திருக்கும் வேகம். இரண்டு, 34 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததை விட அதிக வேகத்துடனும் உற்சாகத்துடன் இன்றும் பணியாற்ற முடிகிறது. நாம் செய்ய வேண்டிய பணி இன்னமும் இருக்கிறது, செய்ய முடிய வில்லை என்கிற குற்ற உணர்வுடன்தான் இப்போதும் இருக்கிறேன் என்று சொன்னால் மிகையாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை.

எனக்கு வாழ்த்துச் சொன்னவர்களில் பலர் இளைஞர்கள்/இளைஞிகள். நீங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று என்னை ஒரு முறை கூடச் சந்தித்திராத, என்னுடன் நேரடியாகப் பேசியிராத இளம் பத்திரிக்கையாளர்கள் சொல்லும் போது இந்தக் குற்ற உணர்வு குறைந்து மகிழ்ச்சி பொங்குகிறது. இவர்களுடன் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் எனத் தோன்றுகிறது. என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டிய அதே நேரத்தில் என்ன மாதிரியான தவறுகளைச் செய்தேன் என்று எழுதுவதும் பயனுள்ளதாக இருக்கும்.

எழுத வேண்டும் என்று நினைக்க இன்னொரு காரணமும் இருக்கிறது.

நாம் சரியான பாதையில் செல்லும் போது, சிலவற்றை சாதிக்கும் போது எரிச்சலினால் நம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளும் உருவாகி விடுகிறார்கள். அடிக்கடி என் காதுகளில் விழும் கருத்துகள் இவை:

1. கொஞ்ச நாளில் பத்திரிக்கையை மூடி விடுவார்கள் (குறைந்தது 10 ஆண்டுகளாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்?. என்னிடம் நேர்மையாக நேரடியாகக் கேட்டவர்களிடம் சொன்னது இதுதான்: இரவு 9 மணி அளவில் அலுவலகத்தை மூடி அடுத்த நாள் காலை 9 மணிக்குத் திறந்து விடுவார்கள். என்னிடமும் மாற்று சாவி இருக்கிறது)

2. அவருக்கிருக்கும் அரசியல் ரீதியான தொடர்புகளினால் பெரிய ஆளாகி விட்டார் (5 அடி 9 அங்குலம்)

3. இவர் பொறுப்பு ஆசிரியர்தான். பின்னாலிருந்து இயக்குபவர் வேறு ஒருவர் (திரும்பிப் பார்த்தால் மின் விசிறி ஓடிக் கொண்டிருந்தது). 4. சில நேரங்களில் ஒரு இதழை அறிமுகம் செய்யும் விதத்தில் ஒரு பக்கம் எழுதினால் கூட இது நீங்களே எழுதியதா என்று சிலர் கேட்ட நக்கீரன்-தருமி தருணங்களும் உண்டு. 5. தலைக் கனம் அதிகம் (சைனசிடிஸ் எனக்கு இருப்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்?) 6. இவர் ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கிறார் (இனிமேல்தானா?)

இதில் ஆச்சரியம் என்னவெனில், இவர்களில் பலர் நம்முடன் ஒரே படகில் ஒரே திசையில் பயணிப்பவர்கள்  என நாம் நினைத்திருப்பவர்கள்தாம். ஆகவே, கிழியாத பக்கங்கள் என்று முகநூலில் ஒரு தொடர் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த முடிவை முகநூலில் அறிவித்தவுடன் நண்பர் மனுஷ்யபுத்திரன் (அன்போடு அப்துல் ஹமீது என்று சங்கிளால் தொலைக்காட்சிகளில் அழைக்கப் படுபவர்)

லைனில் வந்தார். இதை ஒரு தொடராக உயிர்மை இணைய இதழுக்கு எழுதுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். எனக்குள் ஒரு சிறு தயக்கம். அதற்கு இரண்டு காரணங்கள். 1. நாம் நினைத்த போது நினைத்த விதத்தில்  ஃப்ரீ ஸ்டைலில் எழுத முடியாது. ஒரு கட்டுரைத் தொடரின் அமைப்பு முறையில், விவரங்களைச் சேகரித்துக் கட்டுக் கோப்பாக எழுதினால் மிகவும் சீரியசாகப் போய் நம் கைகளைக் கட்டுப் படுத்தும். 2. குறிப்பிட்ட கால இடைவெளியில் வர வேண்டும் என்பதால் ஒரு அழுத்தம் ஏற்படும். ஆங்கிலத்தில் டெட் லைன் (deadline) எனப் படும் காலக் கெடு எழுத்தின் சுதந்திரத் தன்மையைப் பாதிக்கும். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில் எழுத்தாளர்களுக்கு காலக் கெடு விதித்துக் கொடுமைப் படுத்தும் ஜாதியைச் சேர்ந்தவன் நான். திருநெல்வேலிக்கே அல்வாவா, திருப்பதிக்கே லட்டா என்பது போல் ஆசிரியருக்கே டெட் லைனா என்கிற மலைப்பு வரும் வாய்ப்பு இருக்கிறது.

இதைக் கேட்ட மனுஷ்ய புத்திரன் உங்களுடைய முகநூல் எழுத்து ஸ்டைலிலேயே எழுதலாம் என்றும், இணைய ஊடகம் என்பதால் டெட் லைன் கட்டாயம் இருக்காது என்றும் கூறினார். பாவம், வகையாகச் சிக்கிக் கொண்டார் என்று நினைத்து ஒப்புக் கொண்டேன்.

34 ஆண்டுகளாக அச்சு ஊடகத்தின் எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருக்கும் என்னைப் போன்றோர் வெளி உலகத்திற்குத் தெரியாமலே ஓய்வு பெறுவதுதான் வழக்கம். செய்திகளையும் கட்டுரைகளையும் ஒவ்வொரு நாளும் எடிட் செய்து (பிழை திருத்துவது எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் செயல்), தலைப்புக் கொடுத்து, உரிய படங்களைத் தேர்ந்தெடுத்து, பக்கங்களை வடிவமைத்து, வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் இன்றியமையாத இந்த வேலை செய்யும் பிரிவினர்தான் அச்சு ஊடகத்தின் அச்சாணி என்பது இன்று வரை பலருக்கும் தெரியாது. இவர்கள்தான் பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புகழுக்குக் காரணம். ஆனால் இவர்களுக்கு அந்தப் பெருமையே கிடைக்காது. சில மேற்கத்திய பத்திரிக்கைகள் எழுதியவரின் பெயருடன் எடிட் செய்தவரின் பெயரையும் வெளியிடும் வழக்கத்தை வைத்திருக்கின்றன. இங்கு அது கிடையாது. அதனால்தான் திறமை மிக்க இளைஞர்களில் பெரும்பாலானோர் எடிட்டிங் துறைக்கு வருவதில்லை. அச்சு ஊடகத்தில் எடிட்டிங் என்கிற கலை அழிந்து கொண்டிருக்கிறது என்றே சொல்வேன். மொழிக் கல்வியின் தரம் குறைந்தததும் இதற்கு முக்கியக் காரணம். அச்சில் வரும் மொழி, தகவல் பிழைகளை நீக்குவதை விட பிழைகளைக் குறைப்பதே இப்போதெல்லாம் நோக்கமாக இருக்கிறது.

எங்களைப் போன்றோர் மீது உலக வெளிச்சம் விழ முக்கியக் காரணம் தொலைக் காட்சிகளும், இணைய தளங்களும், சமூக ஊடகங்களும்தான். எனவேதான் இணைய ஊடகத்தில் எழுத உற்சாகத்துடன் ஒப்புக் கொண்டேன். ஊடக உலகத்தினையே உள்நோக்கிப் பார்ப்பதற்கு மட்டுமின்றி, ஊடகங்களின் அரசியல். பொருளாதார அடித்தளத்தினைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் அவற்றின் மீதிருக்கும் தவறான புரிதல்களையும், பிரம்மைகளையும் ஓரளவு உடைக்கவும் முடியும் என்று நினைக்கிறேன். இதை என் அனுபவங்களின் வாயிலாகவே சொல்ல முயற்சிப்பேன்.

பேனா முனை கத்தி முனையை விட வலிமை வாய்ந்தது என்று வீரமாகப் பேசிய காலம் முடிந்து விட்டது. இதற்கு முக்கியக் காரணம் பத்திரிக்கைத் துறையில் பேனா காணாமல் போய் கம்யூட்டர்களைக் கொண்டு வந்த அபரிமிதமான தொழில் வளர்ச்சிதான். கணிணியின் மவுசுக்கும் கீ போர்டுக்கும் தான்  மவுசு அதிகம் இப்போது. கையெழுத்தைத் தவிர வேறு எதையும் எழுத முடியாத அளவு கை நடுங்குகிறது. துப்பாக்கியை விட மவுஸ் வலிமை வாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

என் சிறு வயதில் செய்தித் தாளும், ரேடியோவும் மட்டுமே ஊடகங்கள். இப்போது, தொலைக் காட்சி, இணையம், சமூக வலைத்தளம் என்று பல வடிவங்களை எடுத்து விட்டது ஊடகம்.

ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட அளவிற்கு ஊடகத்தின் கலகக் குரல் உயரவில்லை. அதிகார மையங்களை நோக்கி உண்மையை உரக்கச் சொல்வதுதான் ஊடகம் என்கிற நிலை மாறி அவற்றின் குரலாக ஊடகம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அரசியல், சமூகச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் சிந்தனைகளைச் செதுக்கும் வேலையைச் செய்து வந்த ஊடகம் பெரும்பாலும் அவர்களை நுகர்வோர்களாகக் கருதி செய்தியைப் பண்டமாக மாற்றி லாபமீட்டும் மற்றொரு தொழிலாகி வருகிறது. பொதுச் சேவையாக இருக்க வேண்டிய ஊடகங்கள் அரசியல் பொருளாதாரத் தளங்களிலிருக்கும் ஆதிக்க சக்திகளின் சேவை அமைப்புகளாக மாறியது இந்த 34 ஆண்டுகளில் என் கண் முன்னாலேயே நடந்தது..

ஓடும் வெள்ளத்திற்கு மேல் கழுத்தை வைத்துக் கொண்டு நம்பிக்கையிழக்காமல் செல்வதே சவாலாக இருக்கிறது. இப்படிச் சொல்வதால் நான் ஒரு இரங்கற்பா எழுதப் போகிறேன் என்று நினைத்து விட வேண்டாம். என் அனுபவப் புத்தகத்தில் நம்பிக்கை தரும் பல பக்கங்கள் கிழியாமல் இருக்கின்றன. அவற்றைப் பகிர்ந்து கொள்வது வரலாற்றின் திசையை மாற்றப் போவதில்லை _ இப்போதைக்கு. ஆனால் மாற்றுப் பாதையைக் காட்டும் ஒரு விரலாக நான்  இருந்தால் மகிழ்வேன். இனி…

கிழியாத பக்கங்கள்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்
  2. புதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்
  3. அல்ஜீப்ராவில் வீழ்ந்த விண்வெளி வீரன் - ஆர். விஜயசங்கர்
  4. இளம் பத்திரிகையாளர்கள் படிக்கிறார்களா? - ஆர். விஜயசங்கர்