கிழியாத பக்கங்கள்  5

டெல்லிப் பட்டணத்திலிருக்கும் ஐஐஎம்சியில் இதழியல் படிப்பிற்குத் தேர்வானதில் மகிழ்ச்சி ஒரு புறமிருந்தாலும் சென்னையைக் கூட முழுமையாகப் பார்த்திராத இந்த திருச்சிக்கார ’திராவிடனுக்கு’ ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் இந்தியை மற்றுமே பேசுவோம் என்று பிடிவாதம் பிடிக்கும், தெற்கில் விந்திய மலைக்குக் அப்பால் இருக்கும் அனைவருமே மதராசிகள் என்று நினைக்கும் மக்களிடையே 9 மாதங்கள் வாழ வேண்டுமே என்கிற அச்சமும் தொற்றிக் கொண்டது. நுனிநாக்கு ஆங்கிலம் சரளமாக விளையாடும் அந்த வளாகத்திற்குள் ஆங்கிலத்திலேயே பேச வேண்டுமே என்கிற உதைப்பு வேறு.

ஐஐம்சி வளாகத்திற்குள் உற்சாகக் குரல்கள்.  இந்திய, வெளி நாட்டு மாணவர்கள் குழுமியிருந்த அந்த ஹாலில் எனக்கு அடுத்து அமர்ந்த தமிழ்நாட்டு மாணவர் தேசிங்குராஜன் வகுப்புக்கு வரும் போது சட்டையை டக் இன் செய்யுங்கள், ஷூ அணியுங்கள், தாடியை ட்ரிம் செய்யுங்கள், தோளில் தொங்கும் ஜோல்னாப் பையைத் தூக்கி எறியுங்கள் என்று அக்கறையுடன் கூறினாலும் என் பீதி அதிகரித்தது.  தேசிங்கு ராஜன் திருச்சி பிஷப் ஹீபரில் படித்தவர் என்பதால் என் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்தது.

மாணவர்களில் பெரும்பாலோனோர் அழகான, அறிவான பெண்கள், ஆங்கிலமும் இந்தியும் சரளமாகப் பேசக் கூடியவர்கள் என்பதால் ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விட்டது.

ஏறக் குறைய நூறு பேர் இருந்த அந்த இடத்தில் கல்வியாண்டைத் துவக்கி வைத்துப் பேசியவர் நிறுவன இயக்குனர் என்.எல். சாவ்லா.  அவரைப் பற்றி நண்பர் சொன்னது இதுதான்: “இந்திரா காந்தியின் அவசரநிலைக் காலத்தில் தகவல் ஒளிபரப்புத் துறைச் செயலாளராகச் செயல் பட்டவர் இவர். எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு அவசர நிலைக்கு எதிராக அமைத்த ஜனதா கட்சி, டெல்லி போட் கிளப் மைதானத்தில் ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த போது, அங்கு கூட்டம் சேராமலிருக்க தூர்தர்ஷனில் பாபி என்கிற திரைப் படத்தை ஒளிபரப்பலாம் என்று ஆலோசனை சொல்லி அதனை அமுல் படுத்தியவர் இவர்தான்.” இந்திரா காந்தி ஆலோசனை சொல்லும் நிலையில் இருந்த ஒருவர் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்றதும், ஆஹா இந்த ஊரில் தடுக்கி விழுந்தால் அதிகார வர்க்கத்தின் காலில்தான் கிடக்க வேண்டும் போலிருக்கிறது என்று தோன்றியது.  டெல்லியில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் பலர் அதிகார மையங்களின் தொடர்பில் தொடர்ந்து இருப்பதால் ஆணவமாக நடந்து கொள்வது அனுபவம். படிப்பு முடிந்து டெல்லியை விட்டு நான் ஓடி வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இது குறித்து பின்னர் பார்ப்போம்.

இப்படிக் கோலாகலமாகத் தொடங்கிய படிப்பில் பாதி நாட்கள் நான் பயத்துடனேயே வாழ்ந்தேன். அதிகம் யாருடனும் பேச மாட்டேன். வகுப்பிற்குள் ஏதாவது ஒரு புத்தகதைப் படிப்பது போல் பாவனை செய்து பேச்சினைத் தவிர்ப்பேன். ஒரு ஆர்ட் சினிமாவின் இடதுசாரித் தோற்றத்தையும், பயத்தினால் நான் காத்த என் அமைதியையும், கையில் எப்போதுமிருந்த புத்தகத்தையும் பார்த்த சக மாணவர்களுக்கு நான் ஓர் அறிவு ஜீவி என்கிற மாயை உருவாகியிருந்தது போலிருந்தது. எனக்கும் அது வசதியாகப் போய் விட்டது.

சில நாட்களுக்குப் பின், வகுப்பின் முதல் தேர்வு நடந்தது. அறையில் ஒலி பரப்பான இந்திரா காந்தியின் உரையை செய்தியாக எழுதித் தர வேண்டும். நானும் அதிக நம்பிக்கையில்லாமல் எழுதினேன்.

அடுத்த நாள் விடைத் தாள்களை எடுத்துக் கொண்டு இந்திலீஷ் (ஆம் இந்திலீஷ்தான்) பேசும் ஆசிரியர் எம்.ஆர். துவா வகுப்புக்கு வந்தார். ஒவ்வொரு விடைத் தாளையும் எடுத்து அதன் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி சம்பந்தப் பட்ட மாணவர்களிடம் கொடுக்கத் துவங்கினார். ஒவ்வொரு தாளை அவர் எடுக்கும் போதும் இன்று நாம் அவமானப் படப் போகிறோம் என்கிற பயத்தில் என் படபடப்பு  கூடியது. என்னுடைய விடைத்தாள் வரவே இல்லை. ஆசிரியர் தனியாக வைத்திருந்த ஒரு கோப்பிலிருந்து ஒரு தாளை எடுத்தார்.

தாளை உயர்த்திப் பிடித்து யார் விஜயசங்கர் என்று அவர் கேட்டவுடன், சினிமாவில் வருவது போல் எதிரொலி மீண்டும் மீண்டும் கேட்டது. அழகான பெண்கள் என்னப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கப் போகிறார்கள் என்றும் பயம் தொற்றிக் கொண்டது. நாளைக்கே சென்னைக்கு டிக்கெட் எடுத்து  விட வேண்டியிருக்கும் என்று காலையிலிருந்தே நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆசிரியர் சொன்னது இதுதான்: “இந்த விடைத் தாளை நான் ஏன் தனியே எடுத்து வைத்தேன் தெரியுமா? ஒரு உரையினை செய்தியாக்குவது எப்படி என்பதற்கான மாடல் இதுதான். யார், என்ன, எங்கே, எப்போது, ஏன், எப்படி என்று வாசகருக்குத் தெளிவாக உணர்த்தும் வகையில் செய்தி இருக்க வேண்டும் என்பது இதழியல் இலக்கணம் (ஆங்கிலத்தில் இதை 5 Ws and one H என்பார்கள். அதாவது Wவில் தொடங்கும் Who, What, When, Where, When, Why மற்றும் Hஇல் தொடங்கும் How). ஒரு பாராவிலிருந்து அடுத்த பாராவிற்கு வாசகர் எளிதாகச் செல்லும் வகையில் செய்தி கோர்வையாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான இணைப்பு சொற்கள் இருக்க வேண்டும். இவையனைத்தும் இதில் இருக்கின்றன. ஆகவே மாணவ மாணவியரே நீங்கள் ஒவ்வொருவரும் விஜயசங்கரின் இந்த விடைத்தாளை ஒரு முறை பார்த்துப் பயில வேண்டும்.”

எழுந்து என்ற என்னைச் சுற்றிலும் கரவொலிகள். நான் ’அறிவு ஜீவிதான்’ என்று ஊர்ஜிதமாகி விட்டது என்று உணர்த்தும் பல பார்வைகள் என் பக்கம் திரும்பின.

என் உருவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்ன தேசிங்கு ராஜன் நீங்களும் தமிழ்நாட்டுக் காரர், திருச்சியில் படித்தவர் என்று நான் பெருமைப் படுகிறேன் என்றார்.

அதற்குப் பின் அவர் என் நடை, உடை, பாவனை குறித்துப் பேச வில்லை.

உள்ளடக்கம் எப்போதும் வெல்லும் என்பது அவருக்கும் அப்போது புரிந்திருக்கும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. புதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்
  2. அல்ஜீப்ராவில் வீழ்ந்த விண்வெளி வீரன் - ஆர். விஜயசங்கர்
  3. இளம் பத்திரிகையாளர்கள் படிக்கிறார்களா? - ஆர். விஜயசங்கர்
  4. கிழியாத பக்கங்கள் - ஆர். விஜயசங்கர்