கிழியாத பக்கங்கள்- 4

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் வாங்கிய பின் இதழியல் எங்கே படிப்பது என்கிற கேள்வி எழுந்தது. 1980களில் இதழியல் கற்றுத் தரும் கல்லூரிகள் மிகக் குறைவு. அப்போது வந்தார் என்னுடைய நிரந்தர கிருஷ்ண பரமாத்மாவான பி. ராமச்சந்திரன் என்கிற என் அப்பா.

புது டெல்லியில் இருக்கும்  இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனில் (ஐ.ஐ.எம்.சி) இதழியல் முதுகலை டிப்ளமா கோர்ஸ் இருக்கிறது என அப்போது கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தினல் முழு நேர ஊழியராகப் பணியாற்றி வந்த தோழர் நம்பிராஜன் 9 (தற்போது சென்னையில் இருக்கிறார்) கூறியதாக என்னிடம் சொன்னார்.

1965 ஆம் ஆண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அவர்களால் துவக்கி வைக்கப் பட்ட இந்த நிறுவனம் அதே அமைச்சகத்தின் நிதியுதவியால் நடத்தப் படுவது.

அந்த நிறுவனம் வழங்கும் படிப்பின் பெயர் வளர்ந்துவரும் நாடுகளுக்கான இதழியல் டிப்ளோமா. (Post-Graduate Diploma Course for Developing Countries).

இந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு சர்வதேச அரசியல் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக உலகின் பல பகுதிகளை ஆண்டு வந்த ஏகாதிபத்தியம் விடுதலைப் போராட்டங்களினால் விரட்டியடிக்கப்பட்ட பின்னரும் அது ஏற்படுத்திய உலகளாவிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இன்னமும் தொடர்கின்றன. ஏகாதிபத்திய நாடுகளின் தொடரும் ஆதிக்கத்தை எதிர்த்து அணிசேரா இயக்கம் போன்ற அமைப்புகள் போராடி வந்தன (இந்தியா, எகிப்து, யுகோஸ்லாவியா, க்யூபா போன்ற நாடுகள் கை கோர்த்து நின்ற அது ஒரு கனாக்காலம்)

ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் தொடரும் உலக பொருளாதார வரிசை முறை  மாற்றாக புதிய உலக பொருளாதார அமைப்பு (New World Economic Order) ஒன்று உருவாக வேண்டுமென்ற எண்ணம் வலுவாக எழுந்தது. அதே நேரத்தில் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்பு அமைப்புக்கும் ஒரு மாற்றம் தேவை என்பதையும் பல வளர்ந்து வரும் நாடுகள் உணர்ந்தன. பொருளாதார ஆதிக்கம் தகவல் தொடர்பு ஆதிக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எனவே புதிய உலக செய்தி மற்றும் தகவல் தொடர்பு வரிசைமுறை (New World Information and Communication Order) ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியை வளரும் நாடுகள் எடுத்தன.

இது குறித்த விவாதம் 1970களில்  யுனெஸ்கோ அமைப்பில் நடந்தது. சமத்துவமற்ற செய்தி மற்றும் தகவல் தொடர்பில் இருக்கும் பிரச்சினைகளை ஆய்ந்து அறிக்கை தர மாக்பிரைட் கமிஷனை 1980இல் யுனெஸ்கோ நியமித்தது. ’ஒரே உலகம் பல குரல்கள்” (One World Many Voices) என்கிற தலைப்பில் வெளியான மாக்பிரைட்  அறிக்கை சுட்டிக் காட்டியது.  அப்போது யுனெஸ்கோ அமைப்பில் நடந்த விவாதங்கள் கீழ்காணும் பிரச்சினைகளின் பால் உலகின் கவனத்தை திசை திருப்பின. (அடைப்புக் குறிக்குள் இருப்பது என் விளக்கங்கள்):

 1. உலகின் செய்திகளில் 80 சதவீதம் லண்டனிலிருக்கும் அஸ்ஸோசியேட்டட் பிரஸ் (AP) மற்றும் ராய்ட்டர்ஸ் (Reuters). வாஷிங்டனிலிருக்கும் யுனைடெட் பிரஸ் இண்டர்நேஷனல் (UPI), பாரிஸிலிருக்கும் ஏஜென்ஸ் ஃபிரான்ஸ் பிரஸ் (AFP) ஆகிய நான்கு அமைப்புகளிலிருந்துதான் வருகின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் நடக்கும் இயற்கைப் பேரிடர், ராணுவப் புரட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஏஜென்சிகள் அங்கு நிலவும் அடிப்படையான வாழ்வாதரப் பிரச்சினைகளை செய்தியாக்குவதில்லை. (அப்பிரச்சினைகளின் வேர்கள் ஏகாதிபத்திய அமைப்பிலிருப்பதால்)
 2. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் ஊடகச் செய்திகளில் சமத்துவமற்ற நிலை இருக்கிறது. வளரும் நாடுகளில் பலரும் அமெரிக்க சினிமாக்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றனர் (முன்பெல்லாம் சோவியத் யூனியனின் சதிகளை முறியடித்துவந்த ஜேம்ஸ் பாண்ட் போன்ற சகலகலா வல்லவர்கள் பின்னர் மாறிவரும் உலக சூழலுக்கேற்பசீனத்தையும், அதற்குப் பின்னர் ”இஸ்லாமிய பயங்கரவாதிகளையும்” குறி வைத்துத் தாக்கத் துவங்கினர். இப்போதெல்லாம் எதிரிகளாக வேற்று கிரக மனிதர்களையும் சித்தரித்து அவர்களை அமெரிக்க சூப்பர் ஹீரோக்களின் தலைமையில் செல்லும் சர்வதேச குழுக்கள் நிர்மூலம் செய்கின்றன)
 3. வளர்ந்த நாடுகளின் பகாசுர விளம்பர நிறுவனங்களும் வளரும் நாடுகளிலுள்ள வெகுஜன ஊடகங்களில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த விளம்பரங்கள் மூன்றாம் உலக நாடுகளுக்குத் தகுந்தவை அல்ல.
 4. மிகச் சில வளர்ந்த நாடுகள் ரேடியோவின் அலைப்பட்டியில் (ஸ்பெக்ட்ரம்) 90 சதவீதத்தை தம் கட்டுப் பாட்டில் வைத்திருக்கின்றன. இது பெரும்பாலும் ராணுவ நடவடிக்கக்களுக்காகப் பயன்படுத்தப் படுகிறது.
 5. ஜியோஸ்டேஷனரி சாட்டிலைட் எனப்படும் விண்கோள்கள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுக்குச் சொந்தமானதால் வளர்ந்து வரும் நாடுகளின் தகவல் தொழில்நுட்பத் தேவைக்கேற்ற அளவு அவற்றில் இடம் ஒதுக்கப் படுவதில்லை.
 6. இந்த விண்வெளி ஏகபோகத்தின் காரணமாக, மூன்றாம் உலக நாடுகளின் அனுமதியின்றி அவற்றின் தேச இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதும் நடந்தது. இத்தகைய ஒளிபரப்புக்கு எதிராக 1970ல் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தையே நிறைவேற்றியது. மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள், பயிர்கள் குறித்த விவரங்களச் சேகரிப்பதற்கும் இந்த சாட்டிலைட்டுகள் பயன்படுத்தப் படுகின்றன.
 7. மெயின்ஃபிரேம் கம்யூட்டர் என்கிற பெரிய ஆரம்ப கால கணிணிகள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்ததால் பல நாடுகளின் முக்கிய விவரங்கள் அடங்கியதரவுத்தளங்கள் (database) அந்த நாட்டின் வசம் இருந்தது. வளரும் நாடுகள் கணிணித் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காண்பதற்கும் இது தடையாக இருந்தது.
 8. 1970களில் பத்திரிக்கையாளர்கள் மீது நடந்த தாக்குதல்களும் (குறிப்பாக அமெரிக்காவின் ஆசியுடன் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சி செய்த சர்வாதிகாரிகளின் தாக்குதல்கள்) பெரும் கவலையளிப்பதாக இருந்தன. பத்திரிக்கையாளர்களைப் பாதுகாப்பது குறித்துப் பேசிய மாக்பிரைடு ஆணையம், அவர்களில் பலர் நெறி பிறழ்ந்து செயல்படுவதையும் சுட்டிக் காட்டியது.
 9. எல்லைகளைத் தாண்டி எந்த ஊடகத்தின் வாயிலாகவும் செய்திகளையும் சிந்தைனைகளையும் தேடுவதும், பெற்றுக் கொள்வதும், பிறருக்குச் சொல்வதும் ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படை உரிமை என்று ஐக்கிய நாடுகள் நிறைவேற்றிய உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) கூறுகிறது. புதிய உலக செய்தி, தகவல் தொடர்பு வரிசை முறை இந்த சாசனத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று ஆணையம் கூறியது.

இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் வளரும் நாடுகளில் இருப்பவர்களுக்கான இதழியல் படிப்பினை வடிவமைத்தது ஐ.ஐ.எம்.சி.

இது தவிர வளரும் நாடுகளிலிருக்கும் செய்தி நிறுவனங்களில் (பி.டி.ஐ, யு.என்.ஐ உட்பட) பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு ஒரு டிப்ளமா படிப்பும், விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு சார்ந்தவர்களுக்கு பயிற்சி தரும் டிப்ளமா படிப்பும் அங்கு இருந்தன.

இதனால் நான் விண்ணப்பித்திருந்த படிப்பில் இருந்த 30 இடங்களில் 10 இடங்கள் ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு  ஒதுக்கப் பட்டிருந்தன. 20 இடங்கள் மட்டுமே இந்தியர்களுக்கு.

இதற்காக புது டெல்லியில் நுழைவுத் தேர்வும், நேர்காணலும். அது வரை சென்னைப் பட்டணத்தையே ஒரு முறை மட்டும் பார்த்திருந்த எனக்கு நாட்டின் தலைநகருக்குத் தனியாகச் செல்ல வேண்டுமென்று நினைத்து உதறல்.

அப்போது திருவனந்தபுரத்திலிருந்து ஈரோடு சேலம் வழியாக டெல்லி செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரசில் அப்பா டிக்கெட் புக் செய்திருந்தார். ஈரோட்டில் ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தேன். ஜன்னலுக்கு வெளியிலிருந்த அப்பா என் அருகில் அமர்ந்திருந்த ஒருவரைப் பார்த்து என்ன தோழர் டெல்லியா என்றார். சிரித்த படி அவரும் ஆமாம் தோழர் என்றார். இவன் என் மகன்… முதல் முறையாக டெல்லி செல்கிறான். நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்ன அப்பா என் பக்கம் திரும்பி இவர்தான் தோழர் நல்ல கண்ணு என்றார். அடுத்த 36 மணி நேரப் பயணத்திற்கு ஒரு  தோழர் துணையாக இருக்கப் போகிறார் என்பது அரண்டு போயிருந்த எனக்கு ஆசுவாசமாக இருந்தது.

தோழர் அதிகம் பேசவில்லையென்ற போதிலும் நான் சாப்பிட்டேனா, தூங்கினேனா என்று அவ்வப்போது விசாரித்து அன்பை வெளிப்படுத்தினார்.

டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் குடும்ப நண்பர் சிராஜுதீன் காத்திருந்தார். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைமையகத்தில் பணியாற்றி வந்த சிராஜ்,  முன்னாள் சென்னை நகர் பப்ளிக் புராசிக்யூட்டர் ஷாஜஹான் அவர்களின் இளைய சகோதரர். நாங்கள் உறையூர் நாச்சியார் பாளையம் எனப்படும் தெருக் காரர்கள். எனக்கு அடுத்த பெரிய ஆறுதலாகவும் மிகப் பெரிய உதவியாகவும் இருந்தவர் சிராஜ்.

அடுத்த நாள் நேர் முகத் தேர்வின் ஹாலுக்குள் சென்றேன். நுனி நாக்கு ஆங்கிலமும் இடையிடையே இந்தியும் வழிந்தோட பேசிக்கொண்டிருந்த  மேல்தட்டுக் குடும்பங்களை சேர்ந்த  அட்டஹாச உடையணிந்த யுவன்களும் யுவதிகளும் நிறைந்திருந்த அந்த ஏசி ஹாலுக்குள் எனக்கு வியர்க்கத் துவங்கியது.

ஆங்கில இலக்கியம் ஐந்து ஆண்டுகள் படித்திருந்தாலும்  சோழப் பேரரசின் முன்னாள் தலைநகர் வாசியான எனக்கு அப்போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது.  மூன்று முறை தனியாக இந்தி கற்க முயன்று தோற்றுப் போனவன் நான்.

இந்தக் கூட்டத்துடன் போட்டியிட்டு நான் எப்படித் தேறப் போகிறேன் என்று திகைத்து நின்ற எனக்கு கேள்வித் தாளைக் கையில் வாங்கியதும் ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது.  அது வரை கற்ற அனைத்தும் என்னைச் சுற்றி நடனமாடி மையாக மாறித் தாளில் படிந்தன.

அடுத்து நேர்காணல். குஷ்வந்த் சிங், சண்டே, எம்.ஜே. அக்பர், இந்திரா காந்தி, குல்தீப் நய்யார் என்று கேள்விகள் சுற்றி வர, தட்டுத் தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொல்லி விட்டேன்.

அக்னிப் பரிட்சைகள் முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்பினேன்.

ஒரு மாதத்திற்குள் வெற்றி செய்தியைத் தாங்கிய ஓலை வந்தது. என் வானில் மின்னல் கீற்றுகள். ஆனால் டெல்லியை நினைத்தபோது தூரத்து இடிமுழக்கமும் கேட்டது.

பயணத்தின் அடுத்த கட்டம் துவங்கியது.

(தொடரும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்
 2. அல்ஜீப்ராவில் வீழ்ந்த விண்வெளி வீரன் - ஆர். விஜயசங்கர்
 3. இளம் பத்திரிகையாளர்கள் படிக்கிறார்களா? - ஆர். விஜயசங்கர்
 4. கிழியாத பக்கங்கள் - ஆர். விஜயசங்கர்