“எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? -உண்மையும், உருட்டலும்”

-நூல் அறிமுகம்   

இரா.முரளி

வெகு காலமாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டும், எதிர்பார்க்கப்பட்டும் வருவது ஏழு தமிழர் விடுதலை. ஆனால் சமீபகாலமாக எழுவர் விடுதலை என்ற முழக்கம், ஒருவர் விடுதலை என்று மாறி வருவதை நாம் காணமுடிகிறது. பேரறிவாளனுக்கு மட்டுமே விடுதலை எளிதில் சாத்தியம், அவர் வெளியே வந்தால்தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு எனக் கூறி பேரறிவாளனுக்கு மட்டும் குரல் எழுப்புபவர்கள் உண்டு.

இந்நிலையில் “எழுவர் விடுதலையா?ஒருவர் விடுதலையா? உண்மையும் உருட்டலும்” எனும் தலைப்பில் ஏழு தமிழரில் ஒரு சிறைவாசியாக உள்ள இரா.பொ.ரவிச்சந்திரன் ஒரு சிறு நூல் ஒன்றை சமீபத்தில் எழுதியிருக்கின்றார். இவரது மூன்றாவது நூல் இது. “ராஜீவ் கொலை- சிவராசன் டாப்சீக்ரெட்” எனும் இவரது நூல் ராஜீவ் கொலையில் உள்ள பல மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

இப்போது வெளியாகி உள்ள சிறு நூல் பொதுவெளியில் கவனத்தை ஈர்க்காமலேயே போய் விடக்கூடும். எனவேதான் இந்த நூல் அறிமுகம்.

அரசியல் முயற்சிகள்

கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா ஆட்சி செய்த காலங்களில் ஏற்பட்ட பல சட்ட பூர்வமான முயற்சிகளை அவற்றின் அரசியல் பின்னணியுடன் விளக்கும் ரவிச்சந்திரன் ஏழு தமிழரின் இன்றைய  நிலை குறித்து மிகவும் தெளிவாக பல பிரச்சினைகளை முன் வைக்கின்றார்.

2014இல் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு நியாயம் வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வழக்கை மீண்டும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அவர்  தீர்ப்பு எழுதியது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

பின்னர் ஒருவழியாக 02-12 -2015ல் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது. அதன் தலைவராக அப்போதைய தலைமை நீதிபதி தத்து அவர்கள் இருந்தார்.

அவரது தீர்ப்பில் எழுவரை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம்? மத்திய அரசுக்கா? மாநில அரசுக்கா? என்ற கேள்விக்கு விடை அளிக்கப்பட்டது. அதில் பல விளக்கங்கள் தரப்பட்டிருந்த போதிலும் இரண்டு விளக்கங்கள் மட்டுமே தங்கள் விடுதலைக்கானவையாக ரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

தமிழக அரசு எடுத்த விடுதலை முடிவில் சிபிஐ விசாரிக்கும் வழக்கு சம்பந்தப்படுவதால் மத்திய அரசின் அனுமதி இருந்தால் மட்டுமே ஏழு பேரையும் விடுவிக்க முடியும் என்றனர் நீதிபதிகள். மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை எனத் தமிழக அரசு கருதினால் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள சுயாதீனமான சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.

செல்வி ஜெயலலிதா இவர்களை உடனடியாக விடுதலை செய்ய முனைப்புக் காட்டியபோதும், பல சட்ட சிக்கல்கள் அவரை பிரிவு 161 ஐ உடனடியாக பயன்படுத்த இயலமல் தடுத்துவிட்டன. வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஒருவழியாக 23-11-18 உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் தங்கள் நிலைப்பாட்டை கூற வலியுறுத்தியது.

மத்திய அரசு ஏழு பேர் விடுதலை என்பது சர்வதேச அரசியலில் பின் விளைவுகளை உண்டாக்கும் என்று கூறியது.

ஒருவழியாக இந்த இழுத்தடிப்புக்கு உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியது. அரசியல் சாசனப் பிரிவு 161ஐ தமிழக அரசுப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே அந்த முடிவு. ஆனால் பின்னர்.பல் நோக்கு கண்காணிப்பு முகமை (எம்.எம்.டி.ஏ) அறிவிக்கை வந்தால் தான் முடிவெடுக்க முடியும் என்றும் கூறிவிட்டது.

ஒருவர் விடுதலையா?

இந்தச் சூழலில் எழுவர் விடுதலை என்ற முழக்கம் மாற்றப்பட்டு ஒருவர் விடுதலை என்ற முழக்கமாக மாறி வருவதை ரவிச்சந்திரன் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

என்மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதை விசாரணை அதிகாரியே கூறியிருப்பதால் நான் குற்றம் செய்யவில்லை, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் முறையிட்டு இருக்கிறார்.

இதற்கான பதிலில் எம்.டி.எம்.ஏ விசாரணையின் முடிவில்தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

பேரறிவாளனின் எம்எம்டிஏ வழக்கு என்பது மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட விவகாரம் என்கிறார் ரவி.

அது வேறு. தமிழ்நாடு அரசின் எழுவர் விடுதலை தீர்மானம் வேறு.

பேரறிவாளன் 2016ல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த எம்.டி.எம்.ஏ வழக்குக்கும் 2017இல் தொடுத்த தனிநபர் விடுதலையும் வேறுவேறு. அதை 2018-ஆம் ஆண்டில் தமிழக அரசின் 7 பேர் விடுதலை தீர்மானத்தோடு ஆளுநர் 2020இல் சம்பந்தப்படுத்தியது ஏன் என்று ரவி வினவுகிறார்.

விடுதலைப்புலிகளுக்கு அப்பால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ராஜீவ் கொலை செய்த சக்திகள் யாவை என்பதை அறிய மிலாப் சந்த் ஜெயின்  தலைமையில் விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து அதாவது 1998இல், அதுவும் இறுதி அறிக்கையை சமர்ப்பித்து விட்டது.

1998ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் இதன் பரிந்துரையை ஏற்று இக்கொலைக்கு பின்னுள்ள சதியைக் கண்டுபிடிக்க எம்.டி.எம்.ஏ வை உருவாக்கியது .

இதில் IB,RAW, RI (நிதி நுண்ணறிவுப் பிரிவு) போன்றவை அடங்கும்.

22 ஆண்டுகளுக்கு மேலாகியும் எம்.டி.எம்.ஏ விசாரணையை முடிக்கவில்லை. ஆனால் எம்.டி.எம்.ஏ  தான் கண்டுபிடித்தவரை தகவல்களை சீலிட்ட உறைகளில் போட்டு நீதிமன்றத்திடம் ஒவ்வொரு ஆண்டும் ஒப்படைத்து வந்தது. இன்னும் அதை நீதிமன்றம் திறக்கவே இல்லை. விசாரணை  இன்னும் முடியவில்லையாம்.

இதற்கிடையில் 2013இல் பேரறிவாளன் எம்.டி.எம்.ஏ அளித்துள்ள தகவல்களிலிருந்து, வெடிகுண்டு சம்பந்தப்பட்ட தகவல்களை தனக்கு தர வேண்டும், தன் வழக்க்கிற்கு அது உதவியாக இருக்கும் என வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு விடுமுறை மனு இன்றளவும் முடியாது நீண்டு கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தனி விடுதலை வழங்க மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் பேரறிவாளன். விசாரணை அதிகாரி தியாகராஜனுடைய பிரமாணப் பத்திரம் பேரறிவாளன் விடுதலைக்கு உதவக்கூடும் என்று நினைத்தனர் சிலர்.அதுகுறித்து போடப்பட்ட மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

எனவே தனி நபர் ஒருவரை விடுதலை செய்யும் வழக்குக்கும், எம்.டி.எம்.ஏ விசாரணை அறிக்கைக்கும், 7 தமிழர் விடுதலைக்கும் சற்றும் சம்பந்தமே இல்லை. இதுகுறித்து ரவி முதல்வருக்கு ஒரு விளக்கமும் அனுப்பியிருக்கிறார்.

பேரறிவாளன் விடுதலை முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர் 7 பேர் விடுதலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார்.

எம்.டி.எம்.ஏ வின் இறுதி அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகுதான் அரசின் பரிந்துரை குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் செயலகம் தெரிவித்து இருப்பதாக அரசு கூறுகிறது. இது எழுவர் விடுதலையை கால வரம்பின்றி தள்ளிப்போடும் யுக்தியாகும்.

உருட்டலும், உண்மையும்

இதனிடையே பேரறிவாளனின் ஆதரவாளர்களில் சிலர் பேரறிவாளனின் விடுதலைதான் எளிதானது என்ற பாணியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள் என்று இந்நூலில் குறிப்பிடுகின்றார் ரவி.

அவர்கள் பரப்புரையில் பேரறிவாளன் புலிகளுடன் சம்பந்தம் இல்லாதவர். ஏனைய அனைவரும் அப்படி அல்ல என்றும், ஏழு தமிழர்களில் நான்கு பேர் வெளிநாட்டவர், மேலும் அவர்கள் புலிகளுடன் உறவு கொண்டவர்கள் என்பதால் அவர்களை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது என்றும் பரப்புரை செய்கிறார்கள். இது மிகவும் தவறானதாகும் என்கிறார் ரவி.

ராஜீவ் கொலையில் முதலில் கைது செய்யப்பட்ட பல ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, முகாமிலே வைக்கப்பட்டும், பின்னர் அவர்கள் தாய் நாட்டிற்கு  திருப்பி அனுப்பி வைக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்பதை சுட்டுகின்றார் ரவி.

ஏழு தமிழர்களுக்குள்ளாகப் பிரிவினைகளை ஏற்படுத்தி, பேரறிவாளனுக்கு மட்டும் விடுதலிக்கானப் பரப்புரை மேற்கொள்வது என்பது சரியல்ல என்கிறார் ரவி.

மேலும் அற்புதம்மாள் மட்டுமே விடுதலைக்காகபோராடுகிறார் வீதிகளில் அலைகிறார் என்ற பரப்புரையின் சரியல்ல என்கிறார் ரவி

இருவரில் ஏழு பேரில் சாந்தன் முருகன் ராபர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகியோரின் அம்மாக்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து கலந்துகொள்ள முடியாது. இலங்கையிலும் அவர்கள் வெளிப்படையான ஆதரவை திரட்ட முடியாது. சிங்கள ராணுவத்தின் நெருக்கடியை சந்திக்க வேண்டி இருக்கும் என்கிற நிலையில் அவர்களும் மிகுந்த வலியோடு நடைப்பிணங்களாக வாழும் நிலை உள்ளது.

ரவிச்சந்திரனின் தாய் சில கூட்டங்களில் கலந்து கொண்டது என்பதும், தொலைக்காட்சி ஊடகங்களுக்க் பேட்டி கொடுத்தார் என்பதும் கவனிக்கப்படவில்லை.

எங்களை விடுவிப்பது என்பது மாநில அரசின் உரிமை. சிறையில் உள்ள ஏழு பேரும் 30 ஆண்டுகளுக்கு மேல் தண்டனையை அனுபவித்து விட்டனர்

இப்போது நீதிமன்றம் கூறியிருப்பது தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது தான். எழுவருக்குமான விடுதலை என்பது பற்றி தான்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 7 பேருக்கும் நிறைவேற்றப்பட்ட மனிதாபிமான அடிப்படையிலான விடுதலைத் தீர்மானத்தை ஆளுநர் தாமதப்படுத்தி கொண்டே இருக்கிறார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம் ஆகும். எனவே தமிழக அரசு ஆளுநர் தரப்பில் கூறப்படும் எம்.எம்.டி.ஏ அறிக்கை வரவேண்டும் என்பன போன்ற போலிக் காரணங்களை ஏற்காமல் எழுவர் விடுதலைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே ரவிச்சந்திரனின் வேண்டுகோளாக இந்நூலில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————-

“எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? -உண்மையும், உருட்டலும்”

இரா.பொ.ரவிச்சந்திரன்

நூல் வெளியீடு:

யாப்பு வெளியீடு

5, ஏரிக்கரை சாலை, 2வது தெரு, சீனிவாசபுரம்,கொரட்டூர், சென்னை -600076

பேச: 9080514506

அன்பளிப்பு: Rs.100/-

————————————————————————————————-