தமிழுக்கு அப்பால்  50

உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்கா எழுதிய நாவல் ‘தி டிரயல்’ (The Trial) என்பது. இவர்தான் ‘உருமாற்றம்’ (மெடமார்ஃபசிஸ்) என்ற புகழ்பெற்ற கதையையும் எழுதியவர். (அந்தக் கதையின் நாயகன் ஒரு நாள் காலை தூங்கி எழும்போது தான் ஒரு பெரிய பூச்சியாக மாறியிருப்பதைக் காண்கிறான். காஃப்காவின் நாவல்களில் இம்மாதிரி சர்ரியலிசத் தன்மையும், அபத்தத் தன்மையும் மிகுதி.

உலகப்போர்க்காலத்திலேயே “தி டிரயல்” எழுதப்பட்டாலும் அவர் மறைவுக்குப் பிறகு 1925இல்தான் வெளியானது. ஜெர்மன் மொழியில் அவரிட்ட தலைப்பு Der Prozess. அதாவது ஒரு “செயல்முறை”. டிரயல் என்ற ஆங்கிலச் சொல் சாதாரணமாக “விசாரணை” என்று மொழிபெயர்க்கப் பட்டாலும் இதன் கதைத்தலைவனின் அனுபவத்தை வைத்து அதனை “அரசாங்க நிகழ்முறை” என்றே கூறலாம். எப்படி ஒரு சாதாரண இளைஞன் இதயமற்ற அதிகாரவர்க்கச் சட்டமுறைகளுக் கிடையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகிறான் என்பதுதான் கதை.

“ஜோசப் கே. மீது எவரேனும் அவதூறு கூறியிருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நாள் காலை எந்தத் தவறும் செய்யாமலேயே அவன் கைது செய்யப் பட்டான்” என்பது நாவலின் தொடக்க வரி. அன்றைக்கு அவனது 30ஆம் பிறந்தநாள். அவன் ஒரு வங்கியின் தலைமைக் கணக்காளர். அவனை யாரோ இரு காவலர்கள் கைதுசெய்து அழைத்துச் சென்று ஒரு காவல்ஆய்வாளர் முன் நிறுத்துகிறார்கள். அவன் “உன் மீதுள்ள குற்றங்கள் என்ன என்று தெரியாது, ஆனால் முன்போலவே உன் வாழ்க்கையை நடத்து” என்று நடப்புகளின் கமிட்டி சொன்னதாகச் சொல்கிறான். ஆகவே தான் பணிசெய்யும் வங்கிக்கு வழக்கம்போல் கே, செல்கிறான்,

அவன் வீட்டு உரிமையாளர் திருமதி க்ருபக் என்பவள் ஒரு தாய் போல அவனைத் தேற்றுகிறாள். ஆனால் அடுத்தவீட்டுப் பெண்ணான பஸ்னர் என்பவளுடன் அவன் தொடர்பு கொண்டிருப்பதால் இந்த வழக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்கிறாள். ஜோசப் கே. பஸ்னர் வீட்டுக்குச் சென்று தன் கவலைகளைக் கூறி அவளை முத்தமிடுகிறான். சில தினங்களுக்குப் பிறகு பஸ்னருடன் மாண்டாக் என்ற மற்றொருத்தி தங்கியிருப்பதை அறிகிறான். இது தன்னை பஸ்னரிடமிருந்து விலக்கும் முயற்சி என நினைக்கிறான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக ‘ஈரங்கிகள்’ (விசாரணைக் கேட்புகள்) நடப்பதை வங்கியில் அறிகிறான். அவனுக்கு அழைப்பு வருகிறது. கே-வுக்கு எந்த நேரத்தில் எந்த அறைக்கு விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை கேட்பு நடக்கும் மேற்கூரை அறையைக் கஷ்டப்பட்டு கண்டுபிடித்துச் செல்கிறான். அங்குள்ள மாஜிஸ்திரேட் இவனைக் காரணமின்றித் திட்டுவதோடு, கேட்பில் பங்கேற்காமல் வழக்கைப் பாழாக்கிவிட்டதாகக் குறை சொல்கிறான். ஜோசப் தன்னைக் காரணமின்றிக் கைதுசெய்ததும் வரவழைத்ததும் தவறு என்று வாதிடுகிறான். அது அங்குள்ளவர்களின் எரிச்சலைத் தூண்டுகிறது.

அதற்குமேல் அவனுக்கு அழைப்பாணைகள் வராவிட்டாலும் அடுத்த ஞாயிறு நீதிபதியின் இடத்துக்குச் சென்றபோது அங்கு வேலையாள் ஒருவனின் மனைவிதான் இருக்கிறாள். அவள் அங்கிருக்கும் முறைமைகள் பற்றிச் சொல்லிவிட்டு அவனை மயக்க முயல்கிறாள். அதற்குள் ஒரு சட்ட மாணவன் நுழைந்து அவள் தன்னுடையவள் என்று அவளைத் தூக்கிச் செல்கிறான்.

அந்த வேலையாள் கே-யை வரிசையாகப் பல நீதிமன்ற அலுவலகங்களுக்குக் கூட்டிச் செல்கிறான். களைப்படைந்து பசியால் மயக்கமாகும்போது கே-வுக்கு இரு அலுவலர்கள் உதவி செய்கின்றனர்.

சில நாட்களுக்குப் பின் தனது அலுவலக ஸ்டோர் ரூமிலிருந்து சத்தம் வருவதைக் கே- கேட்கிறான். அங்கு அவனைக் கைதுசெய்த காவலர்கள் அடிக்கப்படுகின்றனர். கே- அடிப்பவனைத் தடுக்க முனைந்தாலும் அவன் ஏற்கவில்லை. அடுத்த நாள் அவன் அந்த ஸ்டோர் ரூமுக்குச் செல்லும்போது அதன் நிலைமை காவலர்கள் உட்பட அப்படியே இருப்பதைப் பார்க்கிறான்.

கே-யின் ‘அங்கிள்’ (உறவினன்) ஒருவன் டாக்டர் ஹுல்ட் என்ற வழக்கறிஞனிடம் கே-வை அழைத்துச் செல்கிறான். வழக்கறிஞனும் கோர்ட் குமாஸ்தாவும் இவன் வழக்கைப் பற்றி உசாவுகின்றனர். அங்கிருக்கும் லெனி என்ற பெண் அவனைக் கவர்ந்து அழைத்துச் செல்கிறாள், ஆனால் அவன் மிகப் பிடிவாதமாக இருப்பதாகவும் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறாள். கோபமுற்ற அவனது அங்கிள், அரசாங்கச் செயல்முறை மீது கே-யின் மரியாதை யின்மை காரணமாக அவன் வழக்கு தீவிரமாகி விட்டது என்கிறான். அந்த வழக்கறிஞனும் இவனுக்கு உதவுபவனாக இல்லை.

மறுபடியும் கே ஹுல்டைச் சந்திக்கப் போகும்போது ரூடி பிளாக் என்ற மற்றொரு வாடிக்கையாளனைச் சந்திக்கிறான். அவன் ஐந்தாண்டுகளாக நடக்கும் தன் வழக்கினாலும் லெனியினாலும் பணத்தை எல்லாம் இழந்து வறுமையிலிருக்கிறான். வழக்கறிஞன் அவனை ஒரு நாய் போல நடத்துகிறான். வழக்கறிஞனை கே- விட்டுவிடுகிறான்.

இப்படியே காலம் செல்கிறது. அவனால் தன் பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. வங்கி வாடிக்கையாளன் ஒருவன் டிடோரெலி என்ற கோர்ட்டுக்கு வண்ணமடிப்பவன் அவனுக்கு உதவக்கூடும் என்கிறான். தன் அனுபவம் மூலமாக டிடோரெலி, எவரும் குற்றமற்றவர் என்று இங்கு விடுவிக்கப்படுவதில்லை என்றும், ஆனால் கே- தற்காலிகமாக விடுவிக்கப்படலாம் என்றும், ஆனால் மீண்டும் அவன் மீது குற்றம் சுமத்தப்படலாம் அல்லது தற்காலிக விடுவிப்பே எல்லையின்றித் தொடரலாம் என்றும் பலவாறு கே-யிடம் கூறுகிறான். ஆயினும் தொடர்ந்து அவன் தொடர்ந்து வாதாடவும், கோர்ட் முன்பு தோன்றவும் வேண்டும்.

கே-வை ஒரு இத்தாலிய நபருடன் தேவாலயத்திற்குச் செல்லுமாறு சொல்கிறார்கள். தேவாலயத்தில் ஒரு மதகுரு தோன்றி தான் சிறைச்சாலைக்கான குரு என்றும், கே- குற்றவாளியாகக் கருதப்படுவதால் அவன் வழக்கு மோசமாகி விட்டது என்றும் சொல்கிறான். ஒரு குழப்பமான உருவகக் கதையையும் சொல்கிறான். அந்தக் கதை நீதிமன்றத்தின் பழங்காலப் பிரதி. ஆனால் அதன் பொருளைப் பல தலைமுறைகளாகப் பலவாறாக விவாதித்து வருகிறார்கள். அது கே-யின் நிலையைப் பிரதிபலிக்கிறது என்கிறான் மதகுரு.

கே-யின் 31ஆம் பிறந்தநாளுக்கு முன்னாள் மாலை நேரம். இரண்டு அரசாங்க அதிகாரிகள் அவனது கைகளைப் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். யாருமற்ற ஒரு குவாரிக்கு அவனை அழைத்துச் சென்று அவன் தலையை ஒரு கல்லின்மீது சாய்த்து அமருமாறு சொல்கின்றனர். பிறகு ஒரு கத்தியை வைத்து குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ச்சுவது போல் விளையாடுகின்றனர். அவர்களில் ஒருவன் கே-யின் மார்பில் அந்தக் கத்தியைப் பாய்ச்சி அவனைக் கொல்கிறான். கே, தடுக்காமலே “ஒரு நாய்போல…” எனக் கூறியவாறு மரணத்தை ஏற்றுக் கொள்கிறான்.

இந்தக் கதையின் உள்ளர்த்தம் பலவாறாக விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நமது அரசாங்கங்களின் இதயமற்ற, ஈவிரக்கமற்ற நடைமுறைகளில், குறிப்பாக வழக்குகளில் சாதாரண மக்கள் எவ்வாறு மாட்டிக் கொண்டு திண்டாடுகிறார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. இன்றும் சாதாரண மக்களும், சமூக உதவியாளர்களும் காரணமின்றிச் சிறையில் இடப்படுகிறார்கள். (சென்ற ஆண்டு நம் நாட்டிலும் சமூக செயல்பாட்டாளரான ஸ்டான் சுவாமி அவர்கள் தமது 84ஆம் வயதில் சிறையில் நீர்கூடக் குடிக்க அளிக்கப்படாமல் இறந்தார் என்பதை நாம் அறிவோம்.) பல அரசியல் தலைவர்களும் இன்றும் காரணமின்றிக் கைது செய்யப்படுகிறார்கள், சிறையில் இடப்படுகிறார்கள். 75ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் இன்றைய இந்தியாவின் நீதியற்ற நிலையைச் சுட்டிக் காட்டுவதாக, மிகப் பொருத்தமானதாக இந்த நாவல் அமைந்துள்ளது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  2. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  3. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  4. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  5. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  6. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  7. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  8. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  9. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  10. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  11. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  12. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  13. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  14. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  15. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  16. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  17. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  18. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  19. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  20. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  21. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  22. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  23. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  24. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  25. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  26. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  27. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  28. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  29. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்