தமிழுக்கு அப்பால் 49

A Doll's House | Summary, Characters, & Facts | Britannicaநார்வே நாட்டு எழுத்தாளர் இப்சன் (1828-1906) எழுதிய உலகப் புகழ் பெற்ற நாடகம் இது (1879). ஐரோப்பியக் கற்பனாவாத நாடகத்தை யதார்த்த உலகிற்குக் கொண்டுவந்தவர் இவர். இந்த நாடகமன்றி, மக்களின் பகைவன், ஹெட்டா கேப்ளர், பேய்கள், காட்டுவாத்து என மேலும் பல புகழ் பெற்ற நாடகங்களை எழுதியவர். இந்த நாடகம் பெரும் வெற்றி பெற்றது என்பதோடு கடுமையான விமரிசனத் திற்கும் உள்ளாயிற்று. பெண்கள் (ஐரோப்பியப் பெண்களும்கூட!) கடுமையான அடிமைத் தனத்திற்கு ஆளாகியிருந்த அக்காலத்தில் இந்நாடகத்தின் கதாநாயகி நோரா, பெண்களின் விடுதலைப் படிமமாகக் கருதப்பட்டாள். இந்நாடகக் கதையை இங்கு நோக்குவோம்.

நாடகம் கிறிஸ்துமஸுக்கு முன்னாள் மாலையில் தொடங்குகிறது. கடைக்குப் போய்விட்டு நோரா ஹெல்மர் வீடு திரும்புகிறாள். அவள் கணவன் டோர்வால்ட், ஒரு வங்கி மேலாளர். ஒரு பிசிநாறியும் கூட. என் வானம்பாடியே, என் செல்லக்குருவியே, என் இனிய பொம்மையே என்றெல்லாம் கொஞ்சும் அவன், எவ்வளவு பணம் செலவிட்டாய் என்றும் கேட்கிறான். அவன் பதவி உயர்வு பெற்றிருப்பதால் கொஞ்சம் தாராளமாகச் செலவிடலாமே என்று அவள் சொல்கிறாள்.

இச்சமயத்தில் இரண்டு விருந்தினர் – அவள் தோழி லிண்டாவும் மருந்தற்ற ஒரு நோயினால் செத்துக் கொண்டிருக்கும் டாக்டர் ரேங்க் என்பவனும் வருகின்றனர்.

டோர்வால்ட் வாயிலாகத் தனக்கு வேலை கிடைக்கும் என லிண்டா எதிர்பார்க்கிறாள். அவள் ஒரு விதவை. ஆதரிப்பார் இன்றி இருப்பதால் நோராவிடம் தனக்குக் கணவனிடம் சொல்லி, வேலை வாங்கித் தருமாறு வேண்டுகிறாள். நோராவும் ஒப்புக் கொள்கிறாள்.

தன் இல்வாழ்க்கை முதலாண்டு அனுபவங்களை லிண்டாவை நம்பி நோரா சொல்கிறாள். அப்போது டோர்வால்டு அதிகப் பணிச்சுமை யால் நோய்வாய்ப் பட்டிருந்தான். அவனுக்கு உடல்நலம் கிடைக்க நோரா அவனை இத்தாலிக்கு அழைத்துச் செல்கிறாள். அதற்கான பணத்தை நோரா கிராக்ஸ்டெட் என்பவனிடம் கடன் வாங்குகிறாள்.

என்னதான் தன் கணவனால் கொஞ்சப்படும் “பொம்மை”யாக (doll) (இப்படியிருக்குமாறுதான் அக்காலத்தில் நடுத்தர வர்க்கப் பெண்கள் வளர்க்கப்பட்டார்கள்) நோரா இருந்தாலும், தன் வீட்டுச்செலவுப் பணத்திலிருந்து தவறாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து கடனை அடைத்து வருகிறாள்.

இந்தச் சமயத்தில் கிராக்ஸ்டெடும் அங்கு வருகிறான். டோர்வால்டுக்கு யார் பொய் சொன்னாலும், கள்ளக் கையெழுத்து போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டாலும் பிடிக்காது. கிராக்ஸ்டெட் அப்படிப்பட்ட தவறான மனிதன் என்பதால் அவனை வேலையிலிருந்து டோர்வால்ட் நீக்குவதாக இருக்கிறான். கிராக்ஸ்டெட் அவனிடம் கெஞ்சுகிறான்.

அக்காலத்தில் பெண்கள் பொதுக்களத்தில் வரலாகாது, வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது, கடன் வாங்கக்கூடாது. ஆகவே நோரா தன் தந்தையின் கையெழுத்தைத் தானே போட்டுக் கடன் வாங்கியிருக்கிறாள். அதைக் கணவனுக்குச் சொல்லவில்லை. இது நோராவின் “குற்றம்”. இது கிராக்ஸ்டெடுக்குத் தெரியும்.

தன்னைப் பணியிலிருந்து நீக்கினால் நோராவின் ரகசியத்தை அவள் கணவனுக்குச் சொல்வதாக கிராக்ஸ்டெட் பிளாக்மெயில் செய்கிறான். ஆகவே அவனை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என்று நோரா வாதாடுகிறாள். அதை டோர்வால்ட் ஏற்கவில்லை. மேலும் குடும்பத்தில் இரகசியங்களை மறைக்கும் பெண்கள் குடும்பத்தைக் கெடுப்பவர்கள் என்கிறான்.

கிராக்ஸ்டெடின் பணிநீக்க உத்தரவு அவனுக்குப் போய்விடுகிறது. இடையில் டாக்டர் ரேங்க் வருகிறான். அவனிடம் நோரா உதவி கேட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே கிராக்ஸ்டெட் வந்து விடுகிறான். லிண்டா அவனிடம் தன் இரகசியத்தைச் சொல்ல வேண்டாம் என்று வேண்டுகிறாள். மாறாக கிராக்ஸ்டெட் நோரா செய்த “குற்றத்தை” ஒரு கடிதம் வாயிலாக டோர்வால்டுக்கு எழுதுகிறான். அதை டோர்வால்டுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லிச் செல்கிறான். அடுத்த நாள் நோரா கிராக்ஸ்டெடின் கடிதம் தன் கணவனுக்கு வரும் என்று எதிர்பார்த்திருக்கிறாள்.

இடையில் லிண்டாவுக்கு கிராக்ஸ்டெட் பற்றிய உண்மைகளை கூற, அவள் கிராக்ஸ்டெட் உடன் உறவு வைத்திருப்பதாகச் சொல்கிறாள். தான் உதவுவதாகவும் சொல்கிறாள். அப்போது டோர்வால்ட் வந்துவிட, அவனிடம் கடிதம் சேர்க்கப்படுகிறது. அக்கடிதத்தைக் கணவன் உடனே படிக்காமல் தடுப்பதற்காக நோரா அடுத்த நாள் பார்ட்டியில் நடனமாட இருப்பதால் அதற்கான ஒத்திகை பார்ப்பதாகச் சொல்கிறாள்.

Symbolism in "A Doll's House" by Henrik Ibsenமறுநாள் மாலை கணவன்-மனைவி பார்ட்டிக்குச் செல்கின்றனர். அவர்கள் வீட்டில் கிராக்ஸ்டெடும் லிண்டாவும் சந்திக்கின்றனர். இருவரும் ஒருவர் ஏழ்மை நிலையை மற்றவர் புரிந்து கொள்வதால் காதலர்கள் ஆகின்றனர். டோர்வால்ட் கிராக்ஸ்டெடின் வேலையை லிண்டாவுக்கு அளித்திருக்கிறான். ஆனால் இப்போது லிண்டா மாறிவிடுகிறாள். நோரா தன் கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும், அதனால் கிராக்ஸ்டெடின் கடிதம் டோர்வால்டைச் சேரட்டும் என்கிறாள்.

கணவன்-மனைவி பார்ட்டியில் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டு திரும்புகின்றனர். இடையில் டாக்டர் ரேங்க் வந்து தான் இறக்கும் நிலையில் இருப்பதால் தொலைவில் தன்னைப் பூட்டிக் கொண்டு தூங்கப் போவதாகச் சொல்கிறான். நோரா “நன்றாகத் தூங்கு, நானும் தூங்கப் போகிறேன்” என்கிறாள்.

நோரா வீட்டை விட்டுச் சென்று தற்கொலை செய்துகொள்ள ஆயத்தம் செய்கிறாள். டோர்வால்ட் கிராக்ஸ்டெடின் கடிதத்தைப் படிக்கிறான். தன் மனைவிமீது குற்றம் சுமத்துகிறான். தான் அவனைக் காப்பாற்றிய செயலுக்காகத் தன்னைக் கணவன் பாராட்டுவான் என்று நோரா நினைத்திருந்தாள். ஆனால் அவனோ அவளைக் கீழ்த்தரமானவள் என்று ஏசுகிறான். அவள் தன் குழந்தைகளைக் கெடுத்துவிடுவாள், ஆகவே தன் குழந்தைகளை அவள் பார்க்கக்கூடாது என்கிறான். அவன் இவ்வாறு பேசப்பேச நோரா இதயம் வெந்து போகிறாள். தான் நினைத்த மனிதன் அல்ல அவன் என்ற உண்மையை அவள் புரிந்துகொள்கிறாள்.

அடுத்து ஒரு கடிதம் கிராக்ஸ்டெடிடமிருந்து வருகிறது. அதில் நோராவின் கடனை அவன் ரத்து செய்துவிட்டதாக உள்ளது. அவளது பத்திரத்தையும் அவன் திருப்பி அனுப்பியிருக்கிறான். அதைப் படித்தவுடன் தான் கவலைப்படும் படியான குற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்று கூறி டோர்வால்ட் நோராவை மன்னித்து விடுகிறான்.

ஆனால் நோராவின் மனம் முறிந்துவிடுகிறது. அவள் தன் கணவனை விட்டுச் செல்வதாக அறிவிக்கிறாள். கணவனும் தன் தந்தையும் தன்னைக் குழந்தையாகவும் பொம்மையாகவுமே பாவித்து நடத்தினார்கள் என்றும் தான் ஒரு பொம்மை மனைவியாக இருப்பதை அவள் விரும்பவில்லை என்றும் கூறுகிறாள். பெண்கள் கடன் வாங்குவதைத் தடுக்கும் சட்டம் தவறு என்கிறாள். தான் அவனை இத்தாலிக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால் அவன் இறந்திருப்பான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். தன் மண மோதிரத்தை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவனது மண மோதிரத்தை அவனிடம் தந்துவிடுகிறாள். கதவை அடித்துச் சாத்திக் கொண்டு புறப்படுகிறாள்.

ஏறத்தாழ 1900களின் தொடக்கத்தில், இது மிகவும் புரட்சிகரமான ஒரு கதை. தன் கணவனை விட்டு மனைவி பிரிவது என்பது அக்காலத்தில் நிகழக்கூடியதல்ல. பிரான்ஸில் இந்நாடகத்தை முதன் முதலாக நிகழ்த்தியபோது, நோரா தன் கணவனைப் பிரியாமல் வீட்டுக்குள் செல்வதாக மாற்றி அமைத்திருந்தார்கள். ஆனால் இந்த மாற்றத்தை இப்சன் ஏற்கவில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  3. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  4. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  5. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  6. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  7. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  8. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  9. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  10. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  11. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  12. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  13. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  14. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  15. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  16. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  17. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  18. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  19. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  20. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  21. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  22. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  23. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  24. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  25. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  26. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  27. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  28. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  29. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்