தமிழுக்கு அப்பால் – 36

(நமது உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்பார்கள். அதுபோல பாரன்ஹீட் 451 (ஏறத்தாழ 232.8 டிகிரி செல்சியஸ்) என்பது காகிதம் (புத்தகங்கள்) தீப்பிடித்து எரிகின்ற வெப்பநிலை ஆகும் என்று இந்நூலின் ஆசிரியர் ரே பிராட்பரி விளக்குகிறார்.)

புத்தகங்களால்தான் மனித வாழ்க்கை குழப்பமடைகிறது, கலகங்களும் புரட்சிகளும் உண்டாகின்றன, இந்நிலையைத் தடுக்க வேண்டும், ஆகவே எவரும் புத்தகங்கள் படிக்கலாகாது, எல்லாப் புத்தகங்களையும் எரித்துவிட வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு ஒடுக்குமுறைச் சமுதாயத்தை இந்த நாவல் காட்டுகிறது. தங்கள் சமூக மக்கள் சிக்கல், முரண்பாடு, குழப்பம் என்பவைகளை அறியலாகாது, அவற்றின் மூலங்களை அழித்துவிட வேண்டும், குடிமக்களுக்கு எல்லாம் எவ்விதச் சிக்கலுமற்ற மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கவேண்டும் என்று அந்நாட்டை ஆள்வோர் நினைக்கின்றனர்.

கை மாண்டாக் என்பவன் இந்தச் சமூகத்தில் வாழும் ஒரு மனிதன். சாதாரண மனிதனல்ல, புத்தகங்களை எரிக்கும் படைவீரர்களில் ஒருவன். அந்த நிலையிலிருந்து மாறி, புத்தகம் படிக்கும் புரட்சியாளனாக அவன் எப்படி மாறுகிறான் என்பதைத்தான் பிராட்பரியின் பாரன்ஹீட் 451 என்ற கதை விவரிக்கிறது.

ஆனால் நாவலின் போக்கில் மாண்டாக் அவனது சக-தோழர்கள், குடிமக்கள் அவ்வளவு ஒன்றும் நன்றாக வாழவில்லை என்பதையும் அவர்கள் ஆன்மிக ரீதியாக உள்ளீடற்றவர்களாக இருப்பதையும் அறிகிறான். இவ்வுலகின் மக்கள் தொடர்ந்து விளம்பரங்களாலும், ஆழமற்ற பொழுதுபோக்குகளாலும் தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தங்களைப் பற்றிச் சிந்திக்க நேரம் தரப்படுவதில்லை. தங்களது உணர்வுநிலைகளைப் பற்றி ஆராயவும் அவர்களால் முடிவதில்லை. இதன் விளைவு, தொடர்ந்து சுயநலவாதிகளாகவும், இன்பத்தைத் தேடுவதாகவும், தொடர்பற்றவர் களாகவும், வெற்றுமனம் படைத்தவர்களாகவும் மட்டுமே வாழும் ஒரு சமூகம் உருவாகிறது.

நாவலின் தொடக்கத்தில் அவன் ஒளித்துவைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத் தொகுப்பை எரித்துகொண்டிருக்கிறான். தனது அனுபவத்தால் மகிழ்கிறான். எரிப்பது எவ்வளவு இன்பமானது? திரும்பி வரும்போது கிளாரிஸா மெக்லெல்லன் என்ற சுதந்திரமாகச் சிந்திக்கும் பெண்ணை முதன்முதலாக மாண்டாக் சந்திக்கிறான். முதலில் அவள் நடத்தை தன்னைக் குழப்புவதாக அவன் நினைக்கிறான். “நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?” என்று அவள் அவனைக் கேட்கிறாள். உடனடியாக பதில் சொல்ல முடியாமல் போனாலும், அதைப் பற்றியே அவனுக்குச் சிந்தனை ஏற்படுகிறது. முதலில் தனக்குள் எதிர்மறையாகவே பதில் சொல்லிக் கொள்கிறான். நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? அவள் என்ன நினைக்கிறாள்? நான் மகிழ்ச்சியாக இல்லை என்றா? ஆனால் பின்னால் அவனுக்குள் ஒரு உணர்தல் ஏற்படுகிறது. நான் நன்றாக இல்லை. மகிழ்ச்சியை நான் ஒரு முகமூடி போல அணிந்து கொண்டிருந்தேன். அதை அவள் கொண்டு ஓடிப்போய்விட்டாள். அவள் வீட்டுக்கதவைத் தட்டி அதைத் திரும்பப்பெற எனக்கு வழியில்லை என்று நினைக்கிறான்.

மாண்டாக் தன் மனைவி மில்ட்ரட் மிகுதியாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு உணர்வற்றுக் கிடக்கிறாள் என்பதை அறிகிறான். அவளைப் பார்ப்பதற்கு முன்னரே இந்த மாற்றம் ஏற்படுகிறது என்பது முக்கியமானது. மருத்துவக் குழுவினர் வந்து அவள் வயிற்றைச் சுத்தம் செய்து இரத்தம் ஏற்றுகிறார்கள். அவர்கள் இந்த மாதிரிதான் இப்போதெல்லாம் எங்கும் நிகழ்கிறது என்று அவனுக்குச் சொல்கிறார்கள். ஏறத்தாழ மரணத்துக்கருகில் செல்லும் அனுபவம் ஏற்பட்டும் அவன் மனைவிக்குள் எந்த மாற்றமும் இல்லை. அவள் மனம் முற்றிலும் வெற்றிடமாகி அவள் எப்போதும்-விழித்துக் கொண்டிருக்கும் போதும் கூட உணர்வற்றுத் தூங்கிக் கொண்டே இருக்கிறாள் என்பது அவனுக்குப் புலனாகிறது.

இடையில் கிளாரிஸா ஒரு காரில் அடிபட்டு இறந்துபோனாள் என்று அறிகிறான்.

தனது மகிழ்ச்சியின்மைக்கும், தனது மனைவியின் வெற்று நிலைக்கும் இடையில் இப்போதிருக்கும் நிலையில் ஏதோ குளறுபடி உள்ளது என்பது அவனுக்குப் புலனாகிறது. அவன் ஓய்வெடுக்கலாம் என்று கூறும்போது அவன் மனைவி சுவர் முழுவதும் தொலைக்காட்சிகள் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்த தன் வீட்டைவிட்டு வர மறுக்கிறாள்.

அவன் புத்தகங்களை எரிக்கச் செல்லும் இடத்தில் அதைத் தடுப்பதற்காக ஒரு பெண்மணி தன்னைத் தானே தீயிட்டு எரித்துக் கொண்டு சாகிறாள். இந்நிகழ்வு அவனுக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. இதனால் அவன் பிரக்ஞைக்குள் தன் சமூகத்தில் ஆழமான பிரச்சினைகள் உள்ளன என்ற எண்ணம் ஆழத் தோன்றுகிறது.

அவன் அந்தப் பெண்மணியின் வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தைத் திருடிக் கொண்டு வருகிறான். அது தற்செயலாக ஒரு பைபிளாக அமைந்துவிடு கிறது. அதனை எடுத்துக் கொண்டு வந்ததால் அவன் மேலதிகாரி கேப்டன் பியாட்டிக்கும் அவனுக்கும் இ்டையில் மோதல் உண்டாகிறது. இவன் இப்படித்தான் திருடித் திருடிப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான் போலும் என்ற சந்தேகம் பியாட்டிக்கு எழுகிறது. உடனே அவன் வீட்டுக்கு பியாட்டி வருகிறான். அப்போது அவன் சமூகத்தில் புத்தகங்களைத் தடை செய்யவேண்டி ஏற்பட்ட சமூக, தொழில்நுட்ப மாற்றங்களின் வரலாற்றைச் சொல்லுகிறான். இந்தக் கதை மாண்டாக்-கின் உள்ளத்தில் எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. அவனை மேலும் புத்தகங்களைப் படிக்குமாறு தூண்டுகிறது. தான் செய்யும் தொழிலை அவன் வெறுக்கத் தொடங்குகிறான்.

புத்தகங்களின் மதிப்பைத் தேடும் முயற்சியில் மாண்டாக் ஈடுபடுகிறான். அவன் மனைவி மில்ட்ரட் அவன் படிப்பதை மிகக் கடுமையாக எதிர்க்கிறாள். ஒருநாள் அவன் பணிக்குச் சென்று வரும்போது மில்ட்ரடும் அவள் தோழியர் சிலரும் முற்றத்தில் உள்ள தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கிடையே சண்டை முற்றுகிறது.

அவர்களின் ஆழமின்மையைப் பொறுக்காத மாண்டாக், அவர்களைப் புத்தகத்திலிருந்து தான் படிக்கும் ஒரு பகுதியைக் கேட்குமாறு கட்டாயப் படுத்துகிறான். இதையெல்லாம் ஒரு ஜோக் போல அவன் செய்தாலும் அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக அவனை எரிக்கும் படையிடம் பிடித்துக் கொடுக்கிறார்கள்.

சிக்கல் முற்றுகிறது. அவன் தலைவனான பியாட்டி, மான்டாக்-ஐக் கூப்பிட்டு “உன் வீட்டை எரித்துவிடு” என்கிறான். அவனுக்கு மான்டாக் தன் வீட்டில் ஏதேனும் புத்தகங்களை ஒளித்து வைத்திருக்கலாம் என்று சந்தேகம். ஆனால் கட்டளையை மான்டாக் ஏற்பதற்கு பதிலாக, பியாட்டியைக் கொளுத்திவிட்டு ஓடிப்போகிறான். நகரத்தைவிட்டு வெளியே வந்து ஓர் ஆற்றில் மிதந்து சென்று நாட்டுப்புறத்திற்குள் செல்கிறான். அங்கே அவன் ஓர் கூட்டத்தைக் காண்கிறான். அவர்கள் அரிய புத்தகங்களைத் தாங்கள் மனப்பாடம் செய்துவைத்துக் காப்பாற்றுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நகரத்தின்மீது ஒரு குண்டு விழும் சத்தம் கேட்கிறது. நகரம் எரிந்து பாழாகிறது. மாண்டாக், அந்த அறிஞர்கள் குழுவை நகரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறான். மீண்டும் அந்த நகரத்தைப் புதிய முறையில் ஆக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.

நாவலின் இறுதி, மாண்டாக் முற்றிலும் புதிய மனிதனாக மாறிவிட்டதைக் காட்டுகிறது. அவனால் புத்தகங்களைப் படித்து முற்றிலும் செரித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், தனது சமூகத்தைவிட்டு வெளியேறி, புதியதொரு சமூகத்தைக் கட்ட வேண்டும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறது. பழைய சமூகம் அறிவை மறுத்ததால் அழிந்து போன சமூகம். புதிய சமுகத்தின் அடித்தளமாக அறிவே இருக்கும்.

ரே பிராட்பரி ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். 1920இல் பிறந்து 2012இல் மறைந்தார். இந்த நாவலைத் தவிர, டான்டிலியன் ஒயின், தி வெல்ட், செவ்வாய்க் கிரகக் கதைகள் எனப் பல நாவல்களை எழுதியுள்ளார். அவரது கதைகள் ஒரு உடோப்பிய வகையான சமூகத்திற்கு பதிலாக, அதற்கு நேர் எதிரான ஒரு அவலமான (டைஸ்டோபிய வகைச்) சமூக அமைப்பைக் காட்டுகின்றன.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
 2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
 3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
 4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
 5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
 6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
 7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
 8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
 9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
 10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
 11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
 12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
 13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
 14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
 15. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
 16. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
 17. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
 18. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
 19. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
 20. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
 21. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
 22. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
 23. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
 24. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
 25. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
 26. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
 27. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
 28. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
 29. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
 30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
 31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
 32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
 33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
 34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
 35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
 36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
 37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
 38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
 39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
 40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
 41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
 42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
 43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
 44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
 45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
 46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
 47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
 48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
 49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்