மானிட வாழ்க்கையின் இருண்ட இயல்பைக் காட்டும் ஈக்களின் தலைவன், டாக்டர் ஃபாஸ்டஸ் ஆகிய இரண்டு கதைகளைப் பார்த்ததனால் இன்று ஒரு தமாஷான, இனிய கதையைக் காணலாம். A Midsummer Night’s Dream என்ற இக்கதையை நாங்கள் எங்கள் எஸ்.எஸ்.எல்.சி (பதினோராம்) வகுப்பில் ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் ஏறத்தாழ 10 பக்கங்கள் கொண்ட உரைநடைக் கதையாகப் படித்தோம். (ஆண்டு 1963). அதற்கேற்றவாறு கவிதைப் பகுதியில் Puck என்ற குட்டித் தேவதை (Fairy) பாடும் பாடல் ஒன்றும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ஆம், இவை இரண்டுமே A Midsummer Night’s Dream என்ற ஷேக்ஸ்பியரின் நாடகத்தை ஒட்டியவைதான்.

ஒரு காலத்தில் ஏதென்ஸ் நகரத்தை தெஸீயஸ் என்பவன் ஆண்டு வருகிறான். அவன் ஹிப்போலிடா என்னும் பெண்ணை மணந்து கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருக்கும்போது அவன் அரசவையைச் சேர்ந்த ஒருவன் – எகீயஸ் – குறுக்கிடுகிறான். அவன் தன் மகள் ஹெர்மியா வுக்காக டிமிட்ரியஸ் என்பவனை மணமகனாக ஏற்பாடு செய்திருக்கிறான். ஆனால் அதற்கு ஹெர்மியா மறுக்கிறாள். அவள் லைசாண்டர் என்பவனைக் காதலிக்கிறாள். தெஸீயஸ், ஹெர்மியாவைத் தன் தந்தைக்குப் பணிந்து போகுமாறு அறிவுரைக்கிறான். அல்லது அந்நாட்டின் பழைய சட்டப்படி, அவள் இறக்க வேண்டும் அல்லது டயானாவின் கோவிலில் கன்யாஸ்திரீயாகக் காலம் கழிக்கவேண்டும் என்கிறான்.

இதனால் லைசாண்டரும் ஹெர்மியாவும் பக்கத்திலுள்ள ஒரு காட்டுக்கு ஓடித் திருமணம் செய்துகொள்ள முனைகிறார்கள். ஹெர்மியா இந்த ரகசியத்தைத் தன் தோழி ஹெலினாவுக்குச் சொல்கிறாள். ஹெலினா, டிமிட்ரியஸைக் காதலிப்பவள். அவனுக்கு ஹெர்மியா ஓடிப்போகப் போவதைச் சொல்கிறாள்.

அன்றிரவு லைசாண்டரும் ஹெர்மியாவும் ஓடிப்போகிறார்கள், ஆனால் காட்டில் வழி தெரியாமல் பிரிந்து போகிறார்கள்.

ஹெலினாவை விட ஹெர்மியாவைத் திருமணம் செய்து கொள்வதே பயனளிப்பது என்று நினைக்கும் டிமிட்ரியஸ், அந்தக் காதலர்களைத் தடுக்க வேண்டித் தானும் காட்டுக்குச் செல்கிறான். ஹெலினா அவனைப் பின் தொடர்கிறாள்.

இடையில், தெஸீயஸின் திருமணத்தில் நடிப்பதற்கு, பிரமஸ்-திஸ்பி என்ற ஜோடியின் சோகக் காதல் கதையை ஏற்பாடு செய்கிறார்கள், சில பணியாளர்கள். நிக் பாட்டம் என்ற நெசவாளன், பிரமஸாக நடிக்கிறான். இந்த ஆயத்தமும் காட்டில்தான் நிகழ்ந்தவாறிருக்கிறது.

அந்தக் காட்டில் தேவதைகளின் தலைவன், ஓபிரான். அவன் தன் மனைவி டைடானியாவுடன் சண்டையிட்டிருக்கிறான். அவளுக்கு ஒரு புதிய இந்தியப் பையன் வேலையாளாகக் கிடைத்திருக்கிறான். அவன் தனக்கு வேண்டும் என்று ஓபிரான் கேட்கிறான், ஆனால் டைடானியா தரவில்லை. அதுதான் சண்டைக்குக் காரணம். அவளைத் தன் வழிக்குக் கொண்டு வருவதற்காகத் தன் வேலையாள் பக் என்பவனை ஒரு ஊதாப் பூவின் சாற்றினைக் கொண்டுவருமாறு அனுப்புகிறான். அந்தச் சாற்றினைத் தூங்குபவர் கண்ணில் விட்டால், அவர்கள் எழுந்தவுடனே எந்தப் பிராணியை / மனிதனை முதலில் காண்கிறார்களோ அவர்கள்மீது காதல் வயப்பட்டு விடுவார்கள். ஆக, காதல் சாறு முதலில் உறங்கும் டைடானியாவின் கண்களில் ஊற்றப்படுகிறது.

இச்சமயத்தில் காட்டில் ஹெலீனாவும் டிமிட்ரியஸும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த ‘ஆளின்’ கண்களில் சாற்றினை ஊற்றுமாறு பக்கிடம் ஓபிரான் சொல்கிறான். அப்போதுதான் அவன் ஹெலீனாமீது காதல் கொள்வான். ஆனால் பக், ‘ஆளை’த் தவறாகப் புரிந்துகொண்டு லைசாண்டர் கண்களில் மருந்தினை ஊற்றிவிடுகிறான். ஆகவே ஹெலீனா அவனை எழுப்பும்போது, லைசாண்டர் அவள்மீது காதல் கொண்டு விடுகிறான்.

பணியாட்களின் நாடகத்தைக் காணும் பக், வேடிக்கைக்காக பாட்டத்திற்கு கழுதைத் தலையை அளித்துவிடுகிறான். டைடானியா தூக்கத்திலிருந்து எழும்போது முதன்முதலில் கழுதைத் தலை கொண்ட பாட்டத்தைக் காண்பதால் அவன்மீது காதல் கொண்டு கொஞ்சுகிறாள். தன் ஃபேரிகளைக் கொண்டு அவனை மகிழ்விக்கிறாள்.

இடையில், டிமிட்ரியஸும் லைஸாண்டரும் ஹெலீனாவைத் தொடர்கின்றனர். ஹெர்மியா குழப்பமடைகிறாள். இதை கவனித்த ஓபிரான், இந்நிலையை பக் சரிசெய்யுமாறு ஆணையிடுகிறான். பக் காதலர்களை திசைதிருப்பிவிட்டுத் தூங்குமாறு செய்கிறான். நான்கு பேரும் உறங்கும்போது லைஸாண்டர் கண்களில் மாற்று மருந்தை பக் விடுகிறான்.

ஓபிரான் டைடானியாவுக்கு மாற்று மருந்தளித்து அவளை எழுப்புகிறான். ஒரு கழுதையின் அருகில் தான் இருப்பதை உணர்ந்து அவள் அருவருப்பும் வருத்தமும் அடைகிறாள். ஓபிரானின் சொல்படி நடப்பதாக வாக்களிக்கிறாள். பாட்டத்தின் கழுதைத் தலையும் நீக்கப்படுகிறது. அவன் நாடகத்தில் நடிக்கச் செல்கிறான்.

தெசீயஸும் ஹிப்போலிடாவும் இளங்காலையில் ஒரு வேட்டைக்காகக் காட்டுக்குள் வருகிறார்கள். உறங்கும் நான்கு காதலர்களையும் எழுப்புகிறார்கள். இப்போது பிரச்சினை முடிந்துவிட்டது. லைசாண்டர் பழையபடியே ஹெர்மியாவின்மீது காதல் கொண்டிருக்கிறான். டிமிட்ரியஸ், ஹெலீனாவின் மீது. ஆகவே தீர்க்கவேண்டிய வழக்கு எதுவும் இல்லை. காதலர்கள் ஒன்று சேர, தெஸீயஸின் திருமணத்தில் பங்கேற்கிறார்கள். பிரமஸும் திஸ்பியும் என்னும் சோக நாடகம் தெஸீயஸ் முன்பு வேடிக்கையான இன்பியலாக நடிக்கப்படுகிறது. பக்கும் அவனைச் சேர்ந்த தேவதைகளும் “இதை ஒரு முதுவேனில் இரவின் வெறுங் கனவாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டி அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றனர்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
 2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
 3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
 4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
 5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
 6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
 7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
 8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
 9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
 10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
 11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
 12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
 13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
 14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
 15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
 16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
 17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
 18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
 19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
 20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
 21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
 22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
 23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
 24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
 25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
 26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
 27. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
 28. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
 29. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
 30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
 31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
 32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
 33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
 34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
 35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
 36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
 37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
 38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
 39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
 40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
 41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
 42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
 43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
 44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
 45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
 46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
 47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
 48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
 49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்