தமிழுக்கு அப்பால்-20 

இப்போதும் நாம் அடிக்கடி நமது தொலைக்காட்சிச் சேனல்களிலும் பத்திரிகைகளிலும் பார்க்கும் செய்திதான். திருமணமாகி, குழந்தையும் பெற்ற பெண் ஒருத்தி, தன் முன்னாள் காதலனுடன் ஓடிப்போய் விடுகிறாள். கணவனை விட்டு, உறவினரின் ஆதரவை விட்டு, பாதுகாப்பான சமூக அந்தஸ்தினை விட்டு, ஏன் தன் குழந்தையைக் கூட விட்டுவிட்டுக் காதலனுடன் அவள் ஏன் ஓடவேண்டும்? நம் தமிழ்நாட்டுச் சமூக, குடும்ப மனோபாவம் அவள் நடத்தையைப் பற்றி எத்தகையதாக இருக்கிறது? அவள் கணவன் இந்த நிகழ்வை எப்படிச் சகித்துக் கொள்வான்? அல்லது புரிந்து கொள்வான்? இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ, அவனிடமும் அவளிடமும் என்ன என்ன குறைகள் இருந்திருக்கும்? ஒரு மண வாழ்க்கைக்குப் பின்னரும் அவள் தன் காதலனிடம் ஈடுபட, அவனிடம் என்னதான் இருந்திருக்கும்? இம்மாதிரிக் கேள்விகளுக்குப் பின் ஆழமான உளவியல், சமூகவியல் கேள்விகளும் இருக்கின்றன. திருமணம் என்ற சடங்கில் ஈடுபடும் ஆண்-பெண்களின் உணர்வுகள் மதிக்கப் படுகின்றனவா போன்ற எத்தனையோ கேள்விகள்.

இதே சமகாலக் கதையைத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவின் ஒரு ராஜகுடும்பப் பின்னணியில் வைத்து அன்னா கரீனினா (1878) என்ற நாவலில் சொல்கிறார் லியோ டால்ஸ்டாய்.

மாஸ்கோவில் நாவல் தொடங்குகிறது. இளவரசன் ஸ்டிவா-வுக்கும், தவறான ஓர் உறவில் அவன் ஈடுபட்டிருந்தததைக் கண்டுபிடித்த அவன் மனைவி டாலிக்கும் இடையில் புகைச்சல். (இவர்களின் முழுப்பெயர்கள் நீண்டவை, வாயில் எளிதில் நுழையாதவையும்கூட). அப்போது அவனுக்குத் தன் தங்கை இளவரசி அன்னா கரீனினா வரப்போவதாகச் செய்தி வருகிறது. (கரீனினா = கரீனின்-இன் மனைவி). அப்போது டாலியின் தங்கை காதரினாவை (கிட்டியைக்)கைப்பிடிக்க லெவின் என்ற அவன் நண்பன் வருவதாகவும் இருக்கிறது. ஆனால் கிட்டி, வ்ரான்ஸ்கி என்ற இராணுவ அதிகாரியைக் காதலிக்கிறாள்.

அன்னா, டாலியைச் சமாதானம் செய்து குடும்பத்தில் அமைதியை உருவாக்குகிறாள். ஆனால் திருமணமாகி ஒரு மகனைப் பெற்ற அவள், வ்ரான்ஸ்கியின் பால் ஈடுபாடு கொள்கிறாள். தன் கணவன் கரீனின்-உடன் அவள் வாழ்க்கை வறண்டதாகவும் கணக்குப் போலவும் ஆனால் உயர்குடிச் சமூகத்துக்கு ஏற்ற சடங்காகவும் இருக்கிறது. அதனால்தான் அவளுக்கு வ்ரான்ஸ்கியின்மீது ஈடுபாடு ஏற்படுகிறது, அது மிகத் தூய்மையான காதலாக மலர்கிறது என்கிறார் டால்ஸ்டாய்.

கிட்டியால் தான் ஒதுக்கப்பட்டதால் சோர்வடைந்து தன் பண்ணைக்குச் சென்று விடுகிறான் லெவின். கிட்டி, வ்ரான்ஸ்கியின் காதல் கிடைக்காத தால் உடல்நலம் குன்றுகிறாள்.

முதலில் அன்னா, இந்த மனச் சஞ்சலத்தை ஒதுக்கிவிட்டு, பீட்டர்ஸ்பர்கில் உள்ள தன் குடும்பத்துக்குத் திரும்பத்தான் செய்கிறாள். ஆனால் வ்ரான்ஸ்கி அவளைப் பின் தொடர்கிறான். முதலில் ஒதுக்கினாலும் பின்னர் அன்னா அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள். தன் கணவன் கரீனின்-இன் மறுப்புகளையும் சமாளிக்கிறாள். மேலும் கரீனினின் குழந்தை அவள் வயிற்றில் வளர்வதால் தன் தவற்றை ஒப்புக் கொள்கிறாள். ஒரு சமூகப் பழியாக அவள் ஆசை வளர்வதற்கு முன் அதை நிறுத்திவிடும்படி கரீனின் எச்சரிக்கிறான்.

இடையில் மாஸ்கோவில் கிட்டியும் லெவினும் மறுமுறை சந்திக்கும்போது திருமணத்திற்கு உடன்படுகின்றனர்.

அன்னாவின் தவறான தொடர்பு தொடர்வதால் கரீனின் மணவிலக்கிற்கு ஏற்பாடுசெய்கிறான். குழந்தை பிறந்ததால் உடல்நிலை மோசமாக இருந்த அன்னாவை மன்னிக்கிறான். சங்கடமடைந்த வ்ரான்ஸ்கி தற்கொலைக்கு முயலுகிறான். ஆனால் வ்ரான்ஸ்கி, அன்னா இருவருமே உடல் தேறி, ஐரோப்பாவுக்கு ஓடிவிடுகின்றனர்.

கிட்டிலெவினின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகச் சீரடைகிறது. ஐரோப்பாவுக்குச் சென்ற அன்னாவும் வ்ரான்ஸ்கியும் ஆசைவாழ்க்கை சலிப்புற்று பீட்டர்ஸ்பர்கிற்குத் திரும்புகின்றனர். திரும்பிவந்த வ்ரான்ஸ்கியை அவன் ஆண் என்பதால் ரஷ்ய சமூக உயர்வட்டம் பழையபடியே மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறது. அன்னாவின் நிலை அவ்வாறில்லை. அவள் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படுவதோடு அவள் மகனைப் பார்ப்பதற்கும் தடுக்கப் படுகிறாள்.

முற்றிலும் ஒதுக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்படும் அன்னா, பீட்டர்ஸ்பர்கை விட்டு வ்ரான்ஸ்கியின் கிராமப்புறப் பண்ணைக்குச் செல்கிறாள்.

அச்சமயம் லெவின், வ்ரான்ஸ்கி இருவர் பண்ணைகளுக்கும் வருகைதரும் டாலி, இரண்டு குடும்பங்களும் குழப்பத்திலும் கலக்கத்திலும் இருப்பதைக் கவனிக்கிறாள். இடையில் கிட்டியுடன் காதல் விளையாட்டில் ஈடுபடும் ஓர் உறவினனை லெவின் வெளித்தள்ளுகிறான். அதேசமயம் தன் அழகைப் பாதுகாத்துக் கொள்ள அன்னா கடும் முயற்சியில் ஈடுபடுகிறாள். தன்னைவிட்டு வேறு எவரிடமும் வ்ரான்ஸ்கி ஈடுபட்டுவிடக்கூடாது என்ற பொறாமையில் உழல்கிறாள்.

பல்வேறு காரணங்களால் எல்லாக் கதை மாந்தர்களும் மாஸ்கோவுக்கு இடம் பெயர்கிறார்கள். லெவின் அங்கு அன்னாவிடம் ஈடுபாடு காட்டுவதால் அவன் குடும்பத்தில் சண்டை வரும்போல இருந்தாலும் கிட்டி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள். அதனால் அவன் குடும்பத்தில் சமரசம் ஏற்படுகிறது. ஸ்டிவா, கரீனினை மணவிலக்குச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறான், ஆனால் கரீனின் மறுக்கிறான். மனம் தளர்ந்த அன்னா போதை மருந்துப் பழக்கத்தில் ஈடுபடுகிறாள். வ்ரான்ஸ்கியுடன் தன் உறவு பாழாகிவிட்டது என்ற கலக்கத்தில் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

கரீனின், அன்னாவுக்கும் வ்ரான்ஸ்கிக்கும் பிறந்த குழந்தையைத் தான் வளர்க்க ஏற்றுக் கொள்கிறான். மனமுடைந்த வ்ரான்ஸ்கி, ரஷ்ய-துருக்கியப் போரில் பணி செய்யச் சென்று விடுகிறான். லெவினுக்கு ஒரு திடீர் மனமாற்றம்-ஒரு வெளிப்படுத்தல் நிகழ்கிறது. கிறித்துவ மதிப்புகளில் ஈடுபாடு ஏற்படுகிறது. மனிதப் பிறவிகள் தவறுகள் செய்தாலும் அவர்கள் எப்படியாவது சுயநலம் சார்ந்த பேராசையிலிருந்து விலகி அன்புகொண்ட நல்வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுகிறது. எனவே தன் மனைவியுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வாழ்க்கையின் அர்த்தத்தையும் சமாதானத்தையும் பெற முனைகிறான். இக்கதையின் பிற கதை மாந்தர்களுக்குத்தான் அத்தகைய நல்வாழ்க்கை இசையாமல் போகிறது.

டால்ஸ்டாய் மாபெரும் எழுத்தாளர், போரும் சமாதானமும் போன்ற பெரும் வரலாற்றுக் கதைகளைப் படைத்தவர். அறநெறியில் ஈடுபாடு கொண்டவர். காந்திக்கும் வழிகாட்டி. அவரது மிகச் சிறந்த படைப்பு என்று கருதப்படுவது அன்னா கரீனினா. ஃப்ளாபேரின் மேடம் பவாரி என்ற நாவலை ஒத்ததாக இது நோக்கப்படுகிறது.

ஒரு குடும்ப வரலாற்றையே அநேகப் பாத்திரங்களுடன் நம் கண்முன் படைத்துக் காட்டியிருக்கிறார் டால்ஸ்டாய். இம்மாதிரி ஒரு சிறிய கதைச் சுருக்கம் எந்தச் சமூகத்திலும், குடும்பத்திலும் நிகழும் வரலாற்று மாற்றங்கள், சோகங்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், மகிழ்ச்சித் திளைப்புகள் ஆகிய அனைத்தையும் வெளிக் கொண்டுவர இயலாது என்பது வெளிப்படை.