தமிழுக்கு அப்பால் (2)

நண்பர்களே, முதல் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸின் ‘ஆலிவர் ட்விஸ்ட்’  பற்றிப் பார்த்தோம். ஆனால் ஆங்கில நாவல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. அதனால் பதினெட்டாம் நூற்றாண்டின் நாவலிலிருந்து தொடங்குவதுதான் முறை.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டேனியல் டேஃபோ என்பவர் எழுதிய ராபின்சன் குரூஸோ என்ற நாவல் வெளியானது. பலரும் இதைத்தான் முதல் ஆங்கில நாவல் என்று கொள்கிறார்கள. இதற்குப் பின் பல நாவல்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றினாலும், அவற்றில் மிக முக்கியமானதென்று பலரும் சொல்லுவது லாரன்ஸ் ஸ்டெர்ன் என்பவர் எழுதிய டிரிஸ்ட்ரம் ஷேண்டி என்னும் நாவலை. முதலில் இங்கு ராபின்சன் குரூஸோ நாவலைப் பற்றிக் காண்போம்.

முதல் நாவல் என்ற தகுதி ஒருபுறமிருக்க, இந்த நாவலுக்கு முதல் கடற்பயண நாவல் என்ற தகுதியும் காலனியாதிக்க நாவல் என்ற தகுதியும் உண்டு. ஆங்கிலத்தில் கடற்பயண நாவல்கள் என்பது ஒருவகை. கோரல் ஐலண்ட், டிரெஷர் ஐலண்ட் போன்றவை இவற்றுள் பிரபலமானவை. இவற்றுக்கு முன்னோடி ராபின்சன் குரூஸோ.  இவை யாவும் சிறுவர்கள் படிக்கின்ற அட்வென்ச்சர் (சாகசச் செயல்) நாவல்களாகவும் இருக்கின்றன.

நம்மில் பலரும், முறையாக இந்த நாவலைப் பற்றி அறியாவதவர்களும், ராபின்சன் குரூஸோ பற்றியும் அவனது அடிமையான ஃப்ரைடே என்பவன் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். ராபின்சன் ஒரு ஜெர்மானிய மரபில் வந்த தந்தைக்கு இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவன். இளம் வயதில் சட்டம் படிக்குமாறு கூறும் தந்தையின் சொல்லைக் கேளாமல் மனம்போன போக்கில் கடற் பயணங்களில் ஈடுபடுகிறான். அவ்வாறு சென்ற பயணம் ஒன்றில் கப்பல் உடைந்து ஒரு மூர் இனத்தவனிடம் அடிமையாகிறான். இரண்டாண்டுகள் கழித்து ஜூரி என்ற சிறுவனுடன் அவனிடமிருந்து தப்புகிறான். ஒரு போர்ச்சுகீசிய கப்பல் தலைவன் இருவரையும் காப்பாற்றி பிரேசில் அழைத்துச் செல்கிறான். ஜூரியை அவனிடம் விற்றுவிட்டு பிரேசிலில் ஒரு பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரனாகிறான் குருஸோ.

அந்தப் பண்ணைக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவரக் கப்பலில் புறப்படுகிறான். மீண்டும் கப்பல் கவிழ்ந்து தான் மட்டும் தப்பி ஒரு தீவில் சேர்கிறான். அங்கு இவனைத் தவிர வேறு எவரும் இல்லை. முயற்சி செய்து தனக்கு ஒரு இருப்பிடம் அமைத்துக் கொள்கிறான். கப்பலிலிருந்து மீட்ட பொருள்களையும் கருவிகளையும் கொண்டு பயிர் செய்து வாழத்தொடங்குகிறான். பைபிள் ஒன்றும் கப்பலிலிருந்து கிடைக்கிறது. ஒரு நாள்காட்டியை அவனே உருவாக்குகிறான். இவ்வாறு 15 ஆண்டுகள் வாழ்கிறான். அந்தத் தீவில் தன்னைத் தவிர மனிதனை உண்ணும் பழங்குடிகளும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். அவர்களிடம் சிக்கிய இருவரை மீட்கிறான், ஒருவனைத் தப்பவிட்டு, மற்றொருவனுக்கு ஃப்ரைடே (அவன் கிடைத்த நாள்) என்று பெயரிட்டு அவனுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்து, கிறித்துவனாக்குகிறான்.

மீண்டும் பழங்குடியினரிடமிருந்து இரண்டுபேரைக் காப்பாற்றுகிறான். அதில் ஒருவன் ஃப்ரைடேயின் தந்தை, மற்றொருவன் ஸ்பெயின்நாட்டவன். வேறு மக்களும் தீவின் மத்தியில் இருக்கிறார்களா என்று தேடிவர அவனை அனுப்புகிறான். அதற்குள் தீவுக்கு வந்த ஒரு கப்பலில் எழுச்சி ஏற்படுகிறது. அதன் தலைவனைத் தீவில் விட்டுவிட முயலும்போது, அவனைக் காப்பாற்றி, எழுச்சியை அடக்கி, மற்ற மாலுமிகளையும் துணைக்கு வைத்துக் கொள்கிறான். 28 ஆண்டுகள் தனிமை வாழ்க்கைக்குப் பிறகு தீவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தை அடைகிறான். இங்கிலாந்தில் அவன் இறந்துவிட்டதாகக் கருதியதால் அவன் தந்தையின் சொத்து அவனுக்குக் கிடைக்கவில்லை. பிரேசிலின் பண்ணையிலிருந்து கிடைத்த செல்வத்தை ஃப்ரைடேயின் உதவியுடன் போர்ச்சுகலுக்குக் கொண்டுவந்து, பிறகு கடைசியாகச் சில வீரச் செயல்களுக்குப் பிறகு அவற்றை இங்கிலாந்திற்குத் தரைவழியே மாற்றிக்கொண்டு சுகமாக வாழ்கிறான். கதை இவ்வளவுதான்.  ஆனால் அதை ஆழ்ந்த படிக்கும்போது அது பலவித ஆதிக்கப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது புரிகிறது.

முதலில், மதம். குரூஸோ தனியாக இருக்கும்போது அவனுக்கு ஆறுதல் தருவது பைபிள்தான். விருப்பப்பட்ட போதெல்லாம் பைபிளில் ஏதாவதொரு பக்கத்தைப் படித்து ஆறுதல் அடைவதுடன் அது அப்படியே நடக்கும்  என்று நம்புகிறான். காட்டுமிராண்டிகளின் மதத்தை அவன் வெறுக்கிறான். ஃப்ரைடேயைக் கிறித்துவனாக ஆக்குகிறான். அவன் காலத்தில் உலகெங்கும் சென்று கிறித்துவத்தை போதித்த குருமார்களின் வாழ்க்கையை அவன் அப்படியே பின்பற்றுகிறான்.

இரண்டாவது, பொருளாதாரம். குரூஸோ ஒரு காலனியவாதி. புதிய நாட்டில் (தென் அமெரிக்காவில் ஸ்பெயின்) வளங்களை அபகரித்தல், புதிய நாடுகளில் பண்ணைகளை உருவாக்குதல், அவற்றில் வேலை செய்ய ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவர முயற்சி செய்தல், இறுதியாக எல்லாவற்றையும் தன் நாட்டுக்கு கொண்டு செல்லுதல் என அவன் செயல்கள் அமைகின்றன.

மூன்றாவதாக, கலாச்சாரம். தனது கலாச்சாரம் மட்டுமே உயர்ந்தது, அது பரப்பப்பட வேண்டியது என்ற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. அவனுக்கு ஏற்ற அடிமையாக ஃப்ரைடே அமைகிறான். 18-19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் உயர்வு மனப்பான்மையுடன் நடந்துகொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியர்களை அவர்கள் அடிமையாக நடத்தியது இவற்றுக்கு உதாரணமாக அவன் செயல்கள் உள்ளன. இந்தியர்களைப் பிரதிபலிக்கும் வடிவமாக ஃப்ரைடே இருக்கிறான்.

நான்காவதாக காலனி ஆதிக்கம். குறிப்பாக, அவன் பிரிட்டிஷ் காலனியாதிக்கக்காரர்களின் மூல உருவமாக இருக்கிறான். தனக்கு மட்டும் சுதந்திரத்தன்மை, ஆழ்மனத்திலிருக்கும் கொடுங்கோன்மை, விடாமுயற்சி, மெதுவாகச் செயல்படுகின்ற, ஆனால் திறன்மிக்க அறிவு, பாலியல் வெறுப்பு, அதிகம் பிறரிடம் பழகாமல் ஒதுங்கியிருக்கும் தன்மை ஆகிய ஆங்கிலேயத் தன்மைகள் அவனிடம் சிறப்பாக வெளிப்படுகின்றன என்று புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜாய்ஸ் குறிப்பிடுகிறார்.

ஐந்தாவதாகச் சுயநலமும் அடுத்துக் கெடுத்தலும். குரூஸோவை மூரிடமிருந்து தப்பிக்க உதவியவன் ஜூரி என்ற சிறுவன். ஆனால் அவன் கருப்பன் என்பதால் தனக்கு உதவி செய்த அவனையே போர்ச்சுகீசியனிடம் விற்றுவிடுகிறான். இந்திய மன்னர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு மக்களை அடிமையாக்கிய கிழக்கிந்திய கம்பெனி போல, தன் தீவுக்கு ஒரு கப்பல் வரும்போது, கப்பல் தலைவனை “தோஸ்த்” ஆக்கிக் கொண்டு மாலுமிகளை அடிமைப்படுத்துகிறான்.

இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்த, ஆங்கிலேயர்களுக்கு  அடிமையாக  ஃப்ரைடே போல உதவிசெய்த,  நம் இந்திய நாட்டு மேற்குடி மக்களும்  குரூஸோவின் இந்தப் பண்புகளைப் பின்பற்றியதில், இன்னமும் பின்பற்றுவதில், ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இப்படிக் கலாச்சாரச் சார்புத்தன்மை பற்றியும் பல செய்திகளை இந்நாவல் உணர்த்துகிறது. இந்த  அளவுக்கு  மிகச் சிறந்த நாவல் ஒன்றை ஆங்கிலத்தின் முதல் நாவலாக உருவாக்கிய டேனியல் டேஃபோ பாராட்டத்தக்கவர் என்பதில் ஐயமில்லை. இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியா போன்ற நாடுகளைக் காலனியாக அடிமையாக்குவதற்கு முன்னரே எழுதப்பட்டது இந்த நாவல் என்பது நமக்கு வியப்பளிக்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனியும் குரூஸோவைப் போல வியாபாரம் செய்யப் புறப்பட்ட ஒன்றுதானே!

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
 2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
 3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
 4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
 5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
 6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
 7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
 8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
 9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
 10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
 11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
 12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
 13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
 14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
 15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
 16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
 17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
 18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
 19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
 20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
 21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
 22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
 23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
 24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
 25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
 26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
 27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
 28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
 29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
 30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
 31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
 32. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
 33. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
 34. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
 35. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
 36. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
 37. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
 38.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
 39. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
 40. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
 41. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
 42. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
 43. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
 44. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
 45. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
 46. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
 47. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
 48. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
 49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்