தமிழுக்கு அப்பால் 47

ஃபிரான்சிஸ் ஹாட்ஜ்சன் பர்னெட் என்ற நாவலாசிரியை எழுதிய ஒரு சிறந்த சிறுவர் நாவல் இரகசியத் தோட்டம் (The Secret Garden) ஆகும். அமெரிக்கன் மேகசின் பத்திரிகையில் தொடராக வெளிவந்த அது, பிறகு நூலாக வெளியிடப் பட்டது (1911). ருட்யாட் கிப்லிங், கென்னத் கிரஹாம் போன்றோர் இவரது சமகால ஆசிரியர்கள்.

எவ்விதத் திருப்பங்களும் அற்ற மிக நேரான கதை இது. ஒரு சிறுமி பெற்றோரை இழக்கிறாள்–நண்பர்களைப் பெறுகிறாள்–ஒரு தோட்டத்தைக் காண்கிறாள்–ஒரு பையன் அங்கு அவளோடு இணைந்துகொள்கிறான்–தன் நோயிலிருந்து விடுபடுகிறான்–அவ்வளவுதான்.

இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயப் பெற்றோருக்குப் பிறந்தவள் மேரி  லெனாக்ஸ். அவள் தந்தை பிரிட்டிஷ் படையில் ஓர் அதிகாரி. தாய், அழகானவள், செல்வச் செழிப்பினால் விருந்துகள் தந்தும் தோழிகளுடன் நேரத்தைக் கழித்தும் வந்தவள்.இக்குழந்தை பிறந்தவுடனே ஓர் “ஆயா”விடம் வளர்ந்துவருமாறு அளிக்கப் படுகிறாள். அதனால் இச்சிறுமி ஒரு செருக்குள்ள பெண்ணாக வளர்கிறாள். அவள் விரும்பியதை எல்லாரும் செய்தாக வேண்டும்.

அவள் ஆறு வயதாக இருக்கும் போது, காலரா பரவுகிறது. அதில் அவள் பெற்றோர் இறந்துபோகிறார்கள். முதலில் ஒரு மதபோதகரிடம் வளருமாறு அவள் விடப்படுகிறாள். அந்த ஏற்பாடு ஒத்து வராததால் தன் தாய்மாமனான ஆர்ச்சிபால்ட் கிரேவன் என்பவரிடம் வளருமாறு வடக்கு இங்கிலாந்தில் மிசல்வைத் மேனர் என்ற பெரிய வீட்டுக்கு அவள் அனுப்பப்படுகிறாள்.

அவள் வந்து சேர்ந்தபோது கடுங்குளிர் காலம். அவள் மாமன் அவளைப் பார்க்க விரும்பவில்லை. அவர் ஒரு கூனன் எனத் தெரிகிறது. தன் மனைவி லிலியாஸ் இறந்தபிறகு அந்த வீட்டுக்கு அவர் வருவதைத் தவிர்த்து, ஐரோப்பாவில் பல ஊர்களையும் சுற்றி வருகிறார்.

அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது. அது அவள் மாமி லிலியாஸ் என்பவளுக்கு விருப்பமான இடம். அவளுக்கு ஓர் ஆண் குழந்தை–காலின். அவன் பிறந்த போது அந்தத் தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து லிலியாஸ் விழுந்து அவன் பிறந்த கையோடு இறந்து விடுகிறாள். அவளை மிகுதியாக நேசித்த கிரேவன், அந்தத் தோட்டம் துரதிருஷ்டத்தின் அடையாளம் எனக் கருதி, அதைப் பூட்டிவைத்து, ஒருவருக்கும் தெரியாதவாறு செய்துவிடுகிறார். அங்கு ஒருவரும் செல்லலாகாது என்றும் கூறிவிடுகிறார். அதனால் அது ஓர் இரகசியத் தோட்டமாகவே இருந்துவருகிறது.

மேரிக்கு அதிர்ஷ்டப் பறவையாகக் கருதப்படும் ராபின் என்ற குருவியின் தொடர்பு கிடைக்கிறது. அதன் உதவியால் தோட்டத்திற்குள் செல்லும் சாவி அவளுக்குக் கிடைக்கிறது. தோட்டத்திற்குள் செல்லும் மேரி, அதைக் களையெடுத்துச் சுத்தம் செய்கிறாள். அவள் பணிப்பெண் மார்த்தா, தன் தம்பி டிக்கனை அறிமுகப் படுத்துகிறாள். அவன் செடிவளர்ப்பில் ஆர்வம் கொண்டவன். அந்த இரகசியத் தோட்டத்தின் செடிகொடிகளை அறிமுகப்படுத்தி அவற்றை வளர்க்கும் முறை பற்றிச் சொல்கிறான். தொடர்ந்து தோட்டத்தைப் பண்படுத்தும் வேலையில் மேரி ஈடுபடுகிறாள். உண்மையில் அந்த வேலை அவளைப் பண்படுத்துகிறது. அதன் வாயிலாக, அவளது சுயநலச் செருக்கு குறைந்து, நற்பண்பு ஏற்படுகிறது.

இந்த மாளிகைக்கு அவள் வந்து சேர்ந்த நாள் முதலாக தினமும் இரவுகளில் அவளுக்கு ஓர் அழுகுரல் கேட்கிறது. தேடும்போது, அது ஏறத்தாழ அவள் வயதுள்ள காலினிடமிருந்து வருவது தெரிகிறது. அவன் தனது மாமன் கிரேவனின் மகன் என்பதை அறிகிறாள். அவன் பிறந்தவுடன் அவனும் தன்னைப் போல அங்கஹீனம் உள்ளவன், நன்கு வாழ இயலாதவன் என்று கருதி அவன் தந்தை அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறார். அவனும் நோய்பிடித்த, பலவீனமான, செருக்குள்ள, சக்கர நாற்காலியில் இயங்கும் பையனாக இருக்கிறான். அவனுக்கு அங்க ஹீனம் எதுவும் இல்லாவிட்டாலும் தன்னால் நடக்கமுடியாது என்று நினைத்த அவன் சக்கர நாற்காலியில் இயங்குகிறான். தன்னால் வாழமுடியாது, இறந்து போகப் போகிறோம் என நினைத்து அனைவருக்கும் தொல்லை கொடுத்து வருகிறான். அவனைத் தேற்றி, ஆறுதல் கூறி, தான் கண்டுபிடித்த தோட்டத்தைப் பற்றி மேரி கூறுகிறாள்.

அவர்கள் தோட்டத்தில் நுழையும்போது தோட்டக்காரன் பென் என்பவன் கோபித்துக் கொள்கிறான். வாயில் பூட்டப்பட்டிருந்ததால், அவன் எப்போதாவது சுவரேறிக் குதித்து அங்குள்ள சில ரோஜாச் செடிகளை மட்டும் வளர்த்து வருகிறான். அவன் லிலியாஸுக்கு வேண்டப்பட்டவன். காலினைப் பார்த்து அவன் ஆச்சரியமடைகிறான். “வளைந்த முதுகும் கால்களும் கொண்ட நீ எப்படி இங்கே வந்தாய்” என்று கேட்கிறான். அதைக் கேட்ட காலின் கோபமடைந்து தன் கால்களால் எழுந்து நிற்கிறான். அதன் பிறகு அவனுக்கே ஒரு பெரும் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தான் பிறரைப் போன்று சுயமாக வாழ முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பிறகு பென், அந்த மூன்று சிறார்களுக்கும் தோட்டத்தைப் பண்படுத்தச் சொல்லித் தருகிறான். காலினும் தன்னைச் செம்மைப் படுத்திக் கொள்ளவும் நோயிலிருந்து விடுபடவும் முனைகிறான். தான் உடல்நலம் பெற்றுவிட்டால் தன் தந்தை தன்னை நேசிப்பார் என்று கருதுகிறான். இந்தச் சிறார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் தோட்டத்தைப் பண்படுத்துகிறார்கள். அதன் உரிமையாளரான கிரேவனோ, தன் மனைவியின் ஞாபகங்களின் இருப்பிடமான அந்த வீட்டைத் தவிர்த்துவந்ததோடு, தன் பலவீனமான மகன் இறந்துவிடுவான் என்றும் நினைத்திருக்கிறார்.

ஒரு நாளிரவு தனது தோட்டத்திற்கு வருமாறு மனைவி அழைப்பதாக அவர் கனவு காண்கிறார். அதனால் ஐரோப்பாவிலிருந்து தன் இங்கிலாந்து வீட்டுக்கு ஓடிவந்து தோட்டத்திற்கு வருகிறார். அது முன்போல் மூடியிராமல் திறந்திருப்பதைப் பார்த்து வியப்படைந்து உள்ளே நுழைகிறார். அங்கு அவர் தன் சகோதரி மகளையும், பிற சிறாரையும் காண்கிறார். அவர் மகன் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதையும் கண்டு ஆச்சரியம் அடைகிறார். தந்தையும் மகனும் ஒன்று சேர்கின்றனர். அவர் உள்பட அனைவரையும் அந்தத் தோட்டம் செம்மைப்படுத்தி, நலமுறச் செய்து விட்டது. படிக்கும் சிறார்களுக்கு நம்பிக்கையை ஊட்டி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நினைத்ததைச் சாதிக்கும் பண்பை அளிக்கின்ற நாவலாக இது இருப்பதால் தொடர்ந்து சிறார்களால் உலகம் முழுவதும் படிக்கப்பட்டு வரும் நூலாக இது உள்ளது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
 2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
 3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
 4. பரஜன் - க. பூரணச்சந்திரன்
 5. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
 6. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
 7. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
 8. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
 9. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
 10. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
 11. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
 12. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
 13. உடோபியா - க. பூரணச்சந்திரன்
 14. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
 15. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
 16. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
 17. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
 18. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
 19. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
 20. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
 21. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
 22. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
 23. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
 24. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
 25. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
 26. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
 27. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
 28. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
 29. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
 30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
 31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
 32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
 33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
 34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
 35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
 36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
 37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
 38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
 39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
 40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
 41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
 42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
 43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
 44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
 45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
 46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
 47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
 48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
 49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்