தமிழுக்கு அப்பால்-15 

பழைய கதைகளாகவே சொல்கிறீர்களே, அண்மைக் காலக் கதைகளை எழுதமாட்டீர்களா என்று நண்பர்கள் சிலர் கேட்டதால் இரண்டையும் மாற்றி மாற்றி எழுதுவதெனத் தீர்மானித்தேன். சற்றே அண்மைக்கால நாவல் கேட்ச்-22. இது வெளிவந்த ஆண்டு 1961.

எண்பதுகளில் ஒரு சமயம்.  திருச்சியில் (அது எங்களுக்கு வாசகர் வட்டக் காலம்)  புத்தகங்களைப் பற்றி உரையாடி இரசித்துக் கொண்டிருந்த ஒரு நன்னாளின்போது நண்பர் ராஜன் குறை “இந்த நாவலைப் படித்துப் பாருங்கள்” என்று கேட்ச்-22 ஐ என்னிடம் கொடுத்தார்.  உண்மையில் அப்போது இந்த நாவல் காட்டும் அபத்த வாழ்நிலை வேறெதோ உலகில் நிகழ்வது – இது மிகையாகச் சொல்கிறது என்று தோன்றியது.

கேட்ச் என்பதைக் கிடுக்கிப்பிடி என மொழிபெயர்க்கலாம். ஆனால் இருபத்திரண்டு என்பதற்கு மோனையாக இருக்கும் என்பதால் இறுக்குப்பிடி என மொழிபெயர்க்கிறேன். ‘கேட்ச்’ என்றால் என்ன? தன் (கு)தர்க்கத்திற்குள் மாட்டிக் கொள்ளும் எவரையும் தன்னை உருவாக்கிய மேலதிகாரிகளுக்கு பலியாக்கும் சட்டம் அல்லது நிலைமைதான் இறுக்குப்பிடி. எந்தப் பக்கமும் நீங்கள் தப்ப முடியாது. (22 என்பதற்கு அர்த்தம் ஒன்றுமில்லை).

உதாரணமாக நாட்டிலுள்ள எல்லா அலுவலகங்களிலும் மூன்றாண்டு முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பணியில் எடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் அந்த முன் அனுபவத்தை இளைஞர்கள் எங்கே பெற்றுவிட்டுப் பணியில் சேர்வது?

கடன் வாங்க ஒரு வங்கிக்குச் செல்கிறேன். வங்கி மேலாளர், “இந்தக் கடனுக்குப் பிணை காட்டும் அளவுக்கு உங்களுக்குச் சொத்து இருக்கிறது என்றால் கடன் தருகிறேன்” என்கிறார். கடன் தேவையில்லாத அளவுக்கு எனக்குச் சொத்து இருந்தால் நான் ஏன் கடன் வாங்கப் போகிறேன்?

இரண்டாம் உலகப்போரின் இறுதி. பியானோசா என்ற தீவிலுள்ள விமானப்படைப் பிரிவில் யோசேரியன் என்ற சிப்பாய் இருக்கிறான். தங்கள் மேலுள்ள கொடிய அதிகாரிகளால் வெறும் பொருள்கள் போலவே அவனும் அவன் நண்பர்களும் நடத்தப்படுகிறார்கள் என்ற உணர்வு அவனுக்கு இருக்கிறது . அவர்கள் வேலை விமானத்தில் வானில் பறந்து மோசமான சண்டை நிகழ்வுகளில் ஈடுபட்டு எதிரிப் படைத்தள இருப்புகளைப் படம் பிடித்து வருவதுதான். அவர்கள் வானில் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களும் வேண்டுமென்றே அதிகரிக்கப் படுகின்றன. போர் தன்னை அழிப்பதற்கென்றே நடக்கிறது என்கிறான் யோசேரியன். அவன் நண்பர்கள் “போர் எல்லாரையும்தான் இறக்கச் செய்கிறது, அதில் நீயும் ஒன்றுதானே” என்கிறார்கள். என்னைத் தனியாக அழித்தாலும் பலரோடு சேர்த்து அழித்தாலும், நான் அழிவது உறுதிதானே? அதனால் இது என்னை அழிக்கும் போர்தான்” என்று வாதிடுகிறான் யோசேரியன்.

மேலும் மேலும் வானில் பறப்பதுதான் அவர்கள் வேலை. அதிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. ஒருவனுக்கு மனநிலை சரியில்லை என்றால் அவன் விமானப் பயணமின்றி, தரையில் இருத்தப்படுமாறு வேண்டலாம். ஆனால் அப்படிக் கேட்பதே, அவன் தனது வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருக்கிறான், ஆகவே அவனது மனநிலை சரியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். ஆகவே அவன் பறந்தாக வேண்டும். இந்தச் சிப்பாய்கள் இருக்கும் நிலைதான் ‘கேட்ச்-22’ என்று விளக்குகிறார் டாக் டானீகா என்ற பாத்திரம்.

தன் குற்றம் எதுவும் இல்லாமலே தான் தொடர்ந்து அபாயத்தில் இருத்தப்படுவதனால் யோசேரியன் கோபமடைகிறான். அவனுக்கு வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அதனால் அவன் போலியான காரணம் கூறிப் பெரும்பாலான சமயத்தை மருத்துவ மனையில் கழிக்கிறான். தன் கையில் விழுந்து இறந்துபோன ஸ்னோடென் என்ற சிப்பாயின் நினைவு அவனை வாட்டுகிறது. தன் நண்பர்கள் தொடர்ந்து இறப்பதையும் மறைவதையும் அவன் காண்கிறான். தன் சொந்த அதிகாரிகளே அவர்கள் கெளரவத்துக்காக தங்கள் சிப்பாய்களை அழிப்பதையும் பார்க்கிறான்.

இந்த இறுக்குப் பிடி நாவலில் பல இடங்களில் வருகிறது. ஓரிடத்தில் இறுக்குப்பிடியைப் பற்றி அறிவதே சட்டப்படி தவறு எனப்படுகிறது. அப்படிச் சொல்வது யார்? கேட்ச்-22 சட்டத்திற்குள் ளாகவே அப்படி எழுதப் பட்டுள்ளது! நம் நாட்டிலும் பெகாசஸை ஆராய்வது குற்றம், ரஃபேலைப் பற்றி ஆராய்வது குற்றம், விவசாயச் சட்டங்களை எதிர்ப்பது குற்றம். எங்கே அப்படியெல்லாம் இருக்கிறது? நம் நாட்டு அமைச்சர்களின் மனங்களில்தான்!

இப்படிப்பட்ட அபத்தமான சூழலில்தான் யோசேரியனின் பல நண்பர்கள் கதை நிகழ்கிறது. ஒரு அதிகாரி- மைண்டர்பைண்டர் என்பவன், தானே பல குழுமங்களை நடத்தி அவற்றிற்குள்ளாகவே வணிகம் செய்து மிகப் பெரிய பணக்காரன் ஆகிறான். (உங்களுக்கு நமது பெருமுதலாளிகள் ஞாபகம் வரலாம்!) தன் முதலீடு எதுவுமின்றி, அவன் இராணுவ விமானங்களைக் கடன் வாங்கி, ஐரோப்பாவின் பல இடங்களுக்கு உணவை சப்ளை செய்து, மிகப் பெரிய செல்வம் சேர்க்கிறான், அதனால் பாராட்டப்படுகிறான்.

யோசேரியனுக்கு நேட்லி என்று ஒரு நண்பன். ஒரு வேசியைக் காதலிக்கிறான். முதலில் நேட்லியை வெறுக்கும் அவள், பின்னர் ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அடுத்த பறக்கும் பணியில் அவன் உயிரிழக்கிறான். அச்செய்தியைக் கொண்டுவரும் யோசேரியனையே அந்த இறப்புக்குக்காரணம் என்று கூறி அந்த வேசி அவனைக் கொல்ல முயலுகிறாள்.

இந்த நாவல் காட்டுகின்ற அபத்தமான வாழ்க்கை, உண்மையில் நம் வாழ்நிலைதான் என்பது 2016இல் திடீரென ஒருநாள் இரவு “இன்றுமுதல் காந்திஜி படம்போட்ட நோட்டுகள் (ரூ.1000, ரூ.500) செல்லாது” என்று அறிவிக்கப்பட்டபோதுதான் புரிந்தது. பிறகு ஜிஎஸ்டி. இவை போன்ற இறுக்குப்பிடிகள் ஏழைகள்மீது இல்லாவிட்டால் அதானி இந்தக் கொரோனா காலத்தில் தன் செல்வத்தை மூவாயிரம் நாலாயிரம் மடங்கு பெருக்கிக் கொள்வதும் பல கோடி ஏழைகள் மேலும் மேலும் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை இழந்து செத்துக் கொண்டிருந்தாலும் ஆளும் தலைவர் பதினாலு லட்சம் ரூபாய் கோட்டுப் போடுவதும் எப்படி நடக்க முடியும்?

இந்த ஐந்தாண்டுகளில் இந்த அபத்த வாழ்நிலை நமக்குப் பழக்கம் ஆகிவிட்டது.  இப்போதும் திடீர்திடீரென மீனவர் சட்டம், துறைமுகச் சட்டம், ஆறுலட்சம் கோடிக்கு மக்கள் சொத்துகளைத் தனியாருக்கு வழங்கும் சட்டம் என அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திடீர்திடீரென புதிய சட்டங்கள் வரும், நம் வாழ்க்கை அடியோடு மாறிவிடும் என்பது நமக்கு இன்று நிச்சயமாகிவிட்டது!

தனக்கான அபத்தங்களுக்கு மத்தியில் வாழும் யோசேரியன், தப்பி ஓடி ரோம் நகரில் சுற்றுகிறான். அடையாள-கார்டு இல்லாததால் கைது செய்யப்படுகிறான். அவனது மேலதிகாரிகளான கேத்கார்ட், கார்ன் என்பவர்கள் அவனுக்கு இரண்டு தேர்வுகளை அளிக்கிறார்கள். ஒன்று, அவன் குற்றத்துக்காக இராணுவக் கோர்ட்டை எதிர்கொண்டு தண்டனை பெறவேண்டும். அல்லது, எல்லாச் சிப்பாய்களும் எண்பது முறை பறக்க வேண்டும் என்ற அந்த அதிகாரிகளின் கொள்கையை அவன் பரப்ப வேண்டும். ஆனால் அது பிற மனிதர்களின் உயிரைப் பணயம் வைப்பதாகும் என்று மறுக்கிறான். இனியேனும் இந்தப்பிடிகளிலிருந்து நீங்கி, தன் சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவன் நோக்கமாக இருக்கிறது. எப்படியோ ஸ்வீடனுக்குத் தப்பி ஓடிவிடுகிறான் என்று நாவல் முடிகிறது!

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
 2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
 3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
 4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
 5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
 6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
 7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
 8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
 9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
 10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
 11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
 12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
 13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
 14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
 15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
 16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
 17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
 18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
 19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
 20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
 21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
 22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
 23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
 24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
 25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
 26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
 27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
 28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
 29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
 30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
 31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
 32. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
 33. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
 34. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
 35. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
 36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
 37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
 38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
 39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
 40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
 41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
 42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
 43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
 44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
 45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
 46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
 47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
 48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
 49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்