தமிழுக்கு அப்பால்-12

நம்மில் பலபேரும் லால்குடி (திருச்சி மாவட்டம்) என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய நாவல்களைப் படிப்பவர்களுக்கு மால்குடி என்ற பெயர் மிகப் பரிச்சயம். காலத்தில் வளர்ந்த இந்தக் கற்பனையூரையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் உருவாக்கியவர் ஆர். கே. நாராயண் (1906-2001).

அக்மார்க் தமிழ்நாட்டுக்காரர். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். ஆனால் இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் அவரைக் குறிப்பிடுவோர் இந்திய ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார்களே ஒழியத் தமிழர் என்று குறிப்பிடுவதில்லை. இத்தனைக்கும் நீதிக் (கட்சிக்) கொள்கைகளை வலியுறுத்திய ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் அவர் பணியாற்றியிருக்கிறார்; கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்!

ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி ஐயர் நாராயணசுவாமி என்பது அவர் முழுப் பெயர். சுருக்கமாக ஆர். கே. நாராயண். இந்தியாவில் ஆங்கில எழுத்தை உருவாக்கிய மூன்று நாவலாசிரியர்களில் ஒருவர். (மற்ற இருவர், ராஜாராவ், முல்க்ராஜ் ஆனந்த்). இவரது இளவல் ஆர். கே. லக்ஷ்மண், புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்.

இவரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கிரஹாம் கிரீன் என்ற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். பிறகு ஆர்.கே., பிரபலமாகி, சாகித்திய அகாதெமி விருதையும் பத்ம பூஷண், பத்ம விபூஷண் பட்டங்களையும் பெற்று ராஜ்ய சபா உறுப்பினராகவும் ஆனார். 94 வயதுவரை எழுதிக் கொண்டே இருந்தார்.

மிகப்பல ஆங்கில நாவல்களை எழுதிய ஆர். கே. நாராயணனின் புகழ் பெற்ற படைப்பு ‘வழிகாட்டி’ (தி கைட்-1956). நாவலின் கதை வித்தியாச மானது. இதன் நாயகன், ராஜூ, ஒரு பச்சோந்தி. சந்தர்ப்பத்திற்கேற்பத் தன்னையும் மாற்றிக் கொண்டு, பிறரையும் தன் வசப்படுத்தும் திறன் உள்ளவன். மால்குடியில் வசிக்கிறான். அதன் ரயில்நிலையம் அருகில் கடை வைத்திருக்கிறான். “ரயில்வே ராஜூ” என்று பிரசித்தம். அருகிலுள்ள ஊரின் (நமக்கு மாமல்லபுரம் நினைவுக்கு வருகிறது) குகைச் சிற்பங்களுக்குச் சில சமயங்களில் வழிகாட்டியாகவும் பணிபுரிகிறான்.

தேவதாசிக் குடும்பத்தைச் சேர்ந்த ரோஸி என்ற பெண்ணை ராஜூ  சந்திக்கிறான். அவளுக்கு நாட்டியத்தில் விருப்பம். அவள் கணவன் மார்க்கோ. தொல்லியலாளன், சென்னைக்காரன். ஆனால் அவள் நாட்டியம் பிரயோஜனமில்லை என்று கருதுகிறான்.

பணத்துக்காகவே அவள் மார்க்கோவிடம் இருக்கிறாள் என்று கணித்து அவளைத் தன் வயப்படுத்துகிறான் ராஜூ. அவளுக்கு வழிகாட்டியாகி பயிற்சியளித்து, அவளைப் புகழ்பெற்ற பெரீஇய நர்த்தகி ஆக்குகிறான். அவளுக்குப் புகழும், இவனுக்குப் பணமும் கிடைக்கின்றன. ஆனால் மார்க்கோ அவளுக்கு அனுப்பும் காசோலையில் இவன் பொய்க் கையெழுத் திட்டதால் இரண்டாண்டுகள் சிறைக்குச் செல்கிறான். ரோஸி அவனிட மிருந்து பிரிகிறாள்.

சிறையில் எளிதில் நற்பெயர் பெறுகிறான். சிறையிலிருந்து வெளிவந்த வுடன், மால்குடிக்குச் செல்ல விருப்பமின்றி, அருகிலுள்ள ‘மங்கல்’ (மங்கலம்) என்ற ஊரின் அருகிலுள்ள கோயிலில் தங்குகிறான். அங்கு இவனைச் சந்திக்கும் வேலன் என்ற விவசாயி, இவனை ஓர் ‘ஸ்வாமிஜி’ – – அதாவது துறவி என்று கருதுகிறான். அவ்விதமே இவனது புகழைப் பரப்பி விடுகிறான். வேலனின் ஒன்றுவிட்ட தங்கை அவர்கள் குடும்ப விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு செய்கிறான், ராஜூ.

ஆயினும் வேலனிடம் தான் ஒரு ‘ஸ்வாமிஜி’ அல்ல, ‘சாதாரணன்’தான் என்று தவறுகளை ஒப்புக் கொள்ளும் தருணம் வருகிறது. ஆனால், சிறைக்குப் போனாலும், தவறுகளை ஒப்புக் கொண்டாலும், ஸ்வாமிஜீ, ஸ்வாமிஜீதானேஇந்தியாவில் எத்தனை ஆச்சாரியர்கள், சத்குருக்கள், பாபாக்கள்! எவருக்கு மவுசு எப்போது குறைந்திருக்கிறது, நமது ராஜூ ஸ்வாமிக்குக் குறைய?   

எப்போதும் பிறருக்கேற்ப மாறும் பண்புடைய ராஜூ, இங்கும் முதலில் தன் ஆன்மிக ‘வேலை’ யைச் சிறப்பாகவே செய்கிறான், ஆனால், உண்மையில் அவ்விதமே கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் போகிறான். எவ்விதச் சுயநலமும் இன்றிப் பிறருக்கு உதவும் பண்பைப் பெறுகிறான்.

இப்போது அவனிருக்கும் ஊரில் மழை பெய்யாமல் வறட்சி ஏற்படுகிறது. அவன் உபவாசம் இருந்தால் மழைபெய்யும் என்று ஊரார் நம்புகிறார்கள். மக்களுக்காக அவன் பட்டினி கிடக்கிறான். தான் நடக்கவே இயலாத தளர்ந்த நிலையில் அருகிலுள்ள சரயூ ஆற்றில் குளிக்க அழைத்துச் செல்லுமாறு கூறுகிறான். ஆற்றில் இறங்கியவுடன், “வேலன், மலையில் மழை பொழிகிறது. அது என் பாதங்களில், என் காலில் சிலிர்த்து எழுந்து வருகிறது” என்று கூறிச் சரிகிறான். இறந்துபோகிறான்.

ஒரு சாதாரண டூரிஸ்ட் கைடு, எவ்விதம் ஓர் ஆன்மிக வழிகாட்டியாகத் தன்னை யறியாமலே உயர்கிறான் என்று காட்டுகிறார் ஆர். கே. நாராயண். நம் வாழ்க்கை நம் கையில் இல்லை, நமக்கு அப்பாலுள்ள பிரபஞ்ச சக்திகள் செயல்பட்டு நம்மை வழிநடத்துகின்றன என்று இக்கதையில் அவர் கூறுவதாகத் தோன்றுகிறது. இது ஓர் ஆன்மிக மாற்றத்திற்கான, தன்னை உணர்தலுக்கான கதை என்றும் பாராட்டப்படுகிறது.

பம்பாய்த் திரையுலகம் இதை ஓர் திரைப்படமாக எடுத்திருக்கிறது. தேவ் ஆனந்த், வஹீதா ரெஹ்மான் நடித்த இந்தப்படம் 1965இல் வெளியாகிப் பணமும் புகழும் பெற்றது!

ஆர். கே. நாராயண், பின்னாட்களில் மைசூரில் வசித்ததால் பலர் அவர் கன்னட எழுத்தாளர் என்று எழுதினர். (இதே கதிதான் தமிழரான ஏ. கே. இராமானுஜனுக்கும் ஏற்பட்டது.) ஆனால் ஆர்.கே., இறுதி நாட்களில் சென்னைக்குப் பேத்தி வீட்டுக்கு வந்துவிட்டார்.

கன்னடர் என்று அவரைக் குறிப்பிட்டதைவிட ஆச்சரியம், அவர் படைத்த மால்குடி என்ற ஊர் கர்நாடகத்தின் ஆகும்பே அருகிலோ, சித்ரதுர்க்கா அருகிலோ இருக்கிறதா எனத் தேடியவர்கள் உண்டு. ஒரு அம்மையார் “சரயூ” என ஆற்றின் பெயர் வந்ததால் மால்குடி உத்தரகாண்டில் உள்ளது என்று தேடிக் கொண்டிருக்கிறார், பாவம்! அங்கே வேலன், மணி போன்றவர்கள் இருக்கிறார்களா, எல்லம்மன் தெரு இருக்கிறதா, அறுவடைத்திருவிழா (பொங்கல்) கொண்டாடுகிறார்களா என்றும் அவர் தேடலாம். நாம் “இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்” என்று பாடலாம்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
 2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
 3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
 4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
 5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
 6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
 7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
 8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
 9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
 10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
 11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
 12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
 13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
 14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
 15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
 16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
 17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
 18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
 19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
 20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
 21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
 22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
 23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
 24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
 25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
 26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
 27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
 28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
 29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
 30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
 31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
 32. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
 33. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
 34. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
 35. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
 36. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
 37. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
 38.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
 39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
 40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
 41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
 42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
 43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
 44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
 45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
 46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
 47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
 48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
 49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்