தமிழுக்கு அப்பால்-16
பிரெஞ்சு இலக்கியத்தில் முக்கிய இடம் வகிப்பவர் விக்டர் ஹ்யூகோ. அவர் எழுதிய “ லே மிசரப்ளே “ (வறுமைவாய்த் துயரப்பட்டவர்கள்) என்ற நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐரோப்பிய நாவலாகக் கருதப்படுகிறது. 1862இல் வெளிவந்தது. ஐந்து பாகங்களாக அமைந்துள்ளது. சிக்கலானதொரு கதை. தைரியம், காதல், மனிதனின் இடைவிடாத் தாங்கும் சக்தி போன்ற பல செய்திகளை உள்ளடக்கியது. எல்லாவற்றையும் விட மேலாக, மானிட மாண்பினை வலியுறுத்தும் நாவலாக இது அமைந்துள்ளது என்பதுதான் இதன் இடைவிடாப் புகழுக்குக் காரணம்.
ழான் வல்ழான் (Jean Valjean) ஒரு மரம் வெட்டும் தொழிலாளியின் மகன். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்தவன். கணவனை இழந்த ஆதரவற்ற தனது சகோதரிக்காகவும் அவளது ஏழு குழந்தைகளுக்காகவும் பாடுபடுகிறான். ஒருசமயம் ரொட்டிக் கடையில் திருடும்போது பிடிபடுகிறான். ஐந்தாண்டுகளுக்கு தண்டிக்கப்பட்டாலும், இடையிடையே சிறைச்சாலையிலிருந்து தப்புதல், சின்னச் சின்னக் குற்றங்கள் என்று தண்டனை நீண்டு, பத்தொன்து வருட சிறைத் தண்டனை அனுபவிக்கிறான். பின்னர் விடுதலையாகி வெளியில் வரும்போது அவன் ஒரு குற்றவாளி என்பதைக் குறிக்கும் மஞ்சள் பாஸ்போர்ட் தரப்படுகிறது. எங்குச் சென்றாலும் அவன் அதனைக் காட்டியாக வேண்டும். அவன் குற்றவாளி என்பதால் அவனுக்கு உண்ண உணவோ தங்கும் இடமோ எவரும் தருவதில்லை.
அவனது சகோதரியைப் பற்றியும் அவள் குழந்தைகளைப் பற்றியும் விசாரிக்கிறான். அவள் பாரீசில் ஏழு வயதான ஒரு குழந்தையோடு அச்சுக் கூடத்தில் கூலி வேலை செய்வதாகக் கேள்விப்படுகிறான். பின்னர் அவன் பாரிசுக்கு அருகில் திக்னே என்ற நகருக்கு வருகிறான். அங்கு தனக்கு அடைக்கலம் கொடுத்த மிரியேல் என்ற பாதிரியார் வீட்டில் வெள்ளி விளக்குகளைத் திருடிக் கொண்டு ஓடுகிறான். போலீசாரிடம் சிக்கிக் கொள்கிறான். அவர்கள் ழான் வல் ழானைப் பாதிரியாரிடம் கொண்டு வருகிறார்கள். அந்த வெள்ளி விளக்குகளை அவன் திருடவில்லை என்றும், தானே அவனுக்கு கொடுத்தத்தாகவும் சொல்லிப் பாதிரியார் அவனைக் காப்பாற்றுகிறார். இதனால் மனம் திருந்திய ழான் தனது பழைய வாழ்க்கையை மறந்து மதிலெய்ன் என்ற பெயரில் தன்னுடைய உழைப்பால் மாண்ட்ரியால் நகரில் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையை நிறுவி ஏழை மக்களுக்கு உதவுகிறான். அவனுடைய சேவை மனப்பான்மை யைக் கண்ட அந்நகர மக்கள் அவனை மேயராக்குகிறார்கள். அப்போது ழானின் பழைய வாழ்க்கையைத் தெரிந்திருக்கும் இன்ஸ்பெக்டர் ஜாவர் அந்த ஊருக்கு போலீஸ் அதிகாரியாக வருகிறான். அவன் பழைய குற்றவாளியான, இப்போது மேயராக இருக்கும் ழானைக் கைது செய்ய அலைகிறான்.
மதிலெய்னின் தொழிற்சாலையில் பாந்தீன் என்ற பெண் வேலை செய்து வருகிறாள். காதலனால் கைவிடப்பட்டு ஒரு குழந்தைக்குத் தாயான அவளை விபச்சாரம் செய்ததாகக் கருதி இன்ஸ்பெக்டர் ஜாவர் கைது செய்கிறான். அவளது துன்பக் கதை ழான் மனத்தை உருக்குகிறது. தெனாடியர் என்பவனது விடுதியில் அவளது மகள் கோஸத் வேலைக்காரி யாகக் கஷ்டப்படுவதையும் அறிகிறான். மேயர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பாந்தீனை விடுதலை செய்கிறான் ழான். அவளது மகளை தெனாடியரிடமிருந்து மீட்டுத் தருவதாகவும் உறுதி சொல்கிறான். இதற்கிடையே ஒரு திருடனை ழான் வல் ழான் என்று கைது செய்கிறார்கள். மனச்சாட்சி உறுத்த, கோர்ட்டில் தான்தான் உண்மையான ழான் வல் ழான் என்று சொல்லி அந்தக் கைதி விடுதலை பெற வழி வகுக்கிறான். இன்ஸ்பெக்டர் ஜாவர் ழானைக் கைது செய்து சிறையில் அடைக்கிறான். தனது மகள் என்ன ஆவாளோ என்ற அதிர்ச்சியில் பாந்தீன் இறந்து விடுகிறாள்.
கைதிகளிடையே கப்பலில் வேலை செய்தபோது பாய்மரத்தில் ஏறிய ஒரு மாலுமி கீழே விழும் நிலையில் அவனைக் காப்பாற்றி விட்டு, கடலில் விழுந்து யாருக்கும் தெரியாமல் தப்பி விடுகிறான். உலகம் அவன் இறந்துவிட்டதாக நம்புகிறது.
தப்பிய அவன் போஷல்வான் என்ற பெயரில் வாழும்போது, கோஸத்தைக் கண்டு பிடிக்கிறான். விடுதி நடத்தி வந்த தெனாடியரிடமிருந்து அவளைப் பணம் கொடுத்து, விடுதலை செய்து அவளை ஒரு கிறித்துவக் கன்னி மடத்தில் படிக்க வைக்கிறான். கோஸத்தை தனது வளர்ப்பு மகளாகவே ஏற்றுக் கொள்கிறான். வளர்ந்து பெரியவளான கோஸத்தை மாரியஸ் என்ற இளைஞன் விரும்புகிறான். அவளும் அவனை விரும்புகிறாள். ழான் வல் ழான் இறந்ததை நம்பாத இன்ஸ்பெக்டர் ஜாவர் கடைசியில் அவனைக் கண்டு பிடித்து கைது செய்யப் போகிறான். ஆனால் தனது மனசாட்சி உறுத்த, அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸீன் நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். இறுதியில் மாரியனையும் கோஸத்தையும் சேர்த்து வைத்துவிட்டு ழான் இறக்கிறான்.
பிரான்சில் இந்தக் கதை நடக்கும் சமயம் பிரெஞ்சுப் புரட்சிக் காலம். இது வெளியான ஆண்டு 1862. அக்கால நிகழ்வுகளை இந்த நாவல் மிக யதார்த்தமாகச் சித்திரிக்கிறது. குறிப்பாக ‘கேலீஸ்’ என்ற தண்டனைக் கப்பல்களில் குற்றவாளிகள் படும் துயரம் அளவற்றது. இருப்பினும் நமது பார்வையில், ஒரு ஐரோப்பிய ஏழையால் கூட தொழிற்சாலை அமைக்க முடிகிறது, மேயர் ஆகும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது, ஜாதிகளால் பிளவுண்டு, மிகக் கேவலமான தொழில்களையும் செய்ய வைக்கப்படுகின்ற நம் நாட்டு ஏழைகள் இம்மாதிரிக் கனவு காணவும் முடியாது. இதைவிட மோசம், அடிமைகளாகவே விற்கப்பட்ட ஆப்பிரிக்கக் கருப்பர்களின் துயரம் இதைவிடப் பன்மடங்கானது.
இந்த நாவலை ”ஏழைபடும் பாடு“ என்ற பெயரில் யோகி சுத்தானந்த பாரதியார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இது திரைப்படமாகவும் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
திரைப்படத்தில், ஜாவர் என்ற இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் எழுத்தாளரான சீதாராமன். தன் மிகச் சிறந்த நடிப்பினால் ஜாவர் சீதாராமன் என்றே அவர் அழைக்கப் படலானார். உடல் பொருள் ஆனந்தி, பணம் பெண் பாசம் போன்ற கதைகளை எழுதியுள்ளார். இவர்தான் ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படத்தில் ‘ஜீ பூம்பா’ என்ற பூதமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- விசாரணை – க. பூரணச்சந்திரன்
- பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
- ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
- இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
- பரஜன் - க. பூரணச்சந்திரன்
- வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
- மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
- கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
- சூளாமணி – க. பூரணச்சந்திரன்
- மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
- விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
- வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
- மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
- உடோபியா - க. பூரணச்சந்திரன்
- பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
- ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
- நீலகேசி - க.பூரணச்சந்திரன்
- சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
- பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
- ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
- மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
- பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
- நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
- விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
- குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
- சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
- ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
- தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
- ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
- சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
- அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
- பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
- செம்மீன் : க.பூரணச்சந்திரன்
- ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
- கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22) : க.பூரணச்சந்திரன்
- புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
- மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
- வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
- ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
- விசித்திர உலகில் ஆலிஸ் : க.பூரணச்சந்திரன்
- காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
- சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
- கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
- ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
- பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
- அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
- ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
- ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன்
- தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்