காலத்தின் மேல் வரைந்த கோடுகள்-4
ஓவியம்: டெறேன்ஸ் கஃபேவின் அழகிய மாலைப் பொழுது.(Cafe Terrace At Night 1888)
ஓவியர்: வின்சென்ட் வில்லியம் வான்கோ.(Vincent William Van goah 1853 – 1890)
வான்கோ 1853 ஆம் வருடம் நெதர்லாந்தில் பிறந்தார்.இவரது தந்தை தியோடர் கிறித்தவ மத நல்லிணக்கத்தை மக்களிடையே கொண்டு செல்லும் மதபோதாகராக இருந்தார்.
வான்கோ ஏழை மக்களுக்கு தொண்டு செய்வதென,பள்ளியை துறந்து ஐரோப்பா,லண்டன், ஆம்ஸ்டர்டாம்,வாஸ்மே என பல்வேறு நகரங்களுக்கு பயணிக்கிறார்.ஆனால் திருச்சபை அவரை ஒரு மதபோதகராக மட்டும் பணியாற்றுங்கள் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்காதீரென்று எச்சரித்தது.மதநல்லிணக்கத்தை மட்டும் போதித்தால் வறுமை போய் விடாதே என்ற கேள்வியுனூடே நகரத்தை விட்டு வெளியேறினார்.
வான்கோ தன் வாழ்நாளில் நிறைய ஓவியங்களை வரைந்தார்.ஆனால்,அப்போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.
உன் ஓவியம் ஒரு அனா மதிப்பைக் கூடப் பெறாது என்று சாடினார்கள் அவரது ஓவிய சகாக்கள்.உண்மையில் அவரது ஓவியங்களை சந்தையில் பார்த்து மக்கள் சிரிக்கத்தான் செய்தார்கள்.
அவர் வரைந்ததில் ஒரு சில ஓவியங்களே சந்தையில் விற்பனையாயின.படைப்பவன் மறைந்தாலும் படைப்புகள் என்றும் அழிவதில்லை.அது காலத்தின் படிமங்களாக உருப்பெருகிறது.அதைப் புரிந்துகொள்வதற்கு மக்களுக்கு போதிய அளவுக்கு பரிச்சயம் இருந்திருக்கவில்லை.
தன்னுடைய ஓவிய சகா பால் காகின் கூட வான்கோவின் ஓவிய முறையும்,தூரிகையைக் கையாளும் தன்மையையும் எந்தவித பரிசீலனைகளும் இல்லாமல் எதிர்த்தார்.உன்னால் சந்தையில் இந்த தோற்றமற்ற முகபாவங்களையும், மரங்களையும்,பூக்களையும் எச்சூழ்நிலையிலும் விற்கமுடியாது என்று கூறினார்.
ஆமாம்.அவர் கூறியது சரிதான்.ஆனால் இப்போது வான்கோவின் சாதாரண பென்சில் ஓவியம் உங்களிடம் இருந்தால் கூட நீங்கள் பல மில்லியன்களுக்கு சொந்தக்காரர்.
கருத்தியல் அமைப்பில் டாவின்சி, பிக்காசோ, ரெம்பனாட், போன்ற ஆளுமைகளுக்கு நிகராக வான்கோவின் ஓவியங்களும் ஒப்பிடப்படுகிறது.பல நிபுணர்கள் அதனை ஆராய்கிறார்கள்.மக்கள் ஒருசில குழுக்களாகப் பிரிந்து அந்த ஓவியங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.
20 ஆம் நூற்றாண்டில் வான்கோவினுடைய ஓவியங்கள் பரவலாக அறியப்படுகிறது.அந்நேரம் வானியல் நிபுணர்கள் கூட அவர் இரவுப் பொழுதுகளை வரைந்த விதத்தினையும், அவர் வரைந்த நட்சத்திரங்களின் அமைப்பையும் பார்த்து வியந்தனர்.ஆய்வுகளின் முடிவு அவர்களை ஆச்சரியப்பட வைத்தது. வான்கோ பௌதிகம்,வானியல், புவியியல் ஆகியவைகளின் இயக்க வேறுபாடுகளையும்,கால நிலை,நட்சத்திரங்களின் நகர்வு போன்ற அறிவியல் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருந்தார்.
பொதுவாகவே வான்கோவின் ஓவியங்கள் மிகுதியான விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.அவரது கலை ரியலிசம் என்ற அமைப்பை உடைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்பவை.அவை கோடுகளால் வரையப்பட்ட வண்ணங்கள்.அதாவது இந்த வகை ஓவியர்களுக்கு குறியீடுகளை பதிவு செய்ய ஒருசில கோடுகளே போதுமானவை.
நாம் இந்த ஓவியத்தினை உற்று கவனித்தால் முழுவதுமாக கோடுகளால் நிரம்பியிருக்கும்.
வான்கோ கருப்பு நிறத்தை உபயோகப்படுத்தாத பல ஓவியங்களில் இதுவும் ஒன்று.அவர் பெரும்பாலும் கருப்பு நிறங்களை கையாள்வதில் விருப்பம் கொள்ளவில்லை.பார்த்தவுடன் மனங்களை வசீகரிக்கச் செய்யும் நீலம், மஞ்சள்,வயலைட், ஆரஞ்சு போன்ற வண்ணங்களையே பெரும்பாலும் தனது ஓவியங்களில் பயன்படுத்தினார்.
Terrace Cafe At Night பல நுட்பங்கள் நிறைந்த ஓவியம்.இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள், வீதியில் நடந்து செல்பவர்கள் என யாருடைய முகபாவனைகளும் காட்டப்படவில்லை.கட்டிடங்களின் முன் ஒளியூட்டப்பட்ட விளக்குகள்,ஜன்னலில் மிளிரும் விளக்குகள் என வெளிச்சங்கள் நிறைந்துள்ளது.
அந்த மஞ்சள் நிற விளக்கு.மஞ்சள் வான்கோவிற்கு மிகவும் பிடித்தமான வண்ணம்.அதனாலேயே அவர் தீட்டும் ஓவியங்களில் இடம் பெறும் மஞ்சள் நிறம் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அந்த முகப்பு விளக்கின் வெளிச்சம் ஓவியத்திற்கு உயிரோட்டம் கொடுக்கிறது.மஞ்சள் நிறத்தின் பிரதிபலிப்பு வீதிகளில் வழிந்து சிதறிக் கிடக்கிறது.
உணவு விடுதியின் மேலடுக்கில் ஜன்னல்கள் திறந்தவாறு உள்ளது.குதிரை பூட்டப்பட்ட வண்டி ஒன்று முன்னோக்கி வருகிறது.
விண்மீன்கள் நிறைந்த நீல வானத்துடன் ஒரு பிரகாசமான விளக்கை கொண்ட விடுதி.அதன் மாடியின் இரவுகளில் பல கைகள் ஒயின் பாட்டில்களை உயர்த்துகிறது.தெருவின் குமிழ் கற்கள் கூட ஒளியினை உமிழ்கிறது.
வான்கோவால் கையெழுத்திடப்படாத ஓவியம்.
இன்னும் ஒரு சாரார் இதன் மையத்தினை முக்கிய குறியீடாக பார்க்கின்றனர்.
தேநீர் விடுதியில் உள்ள இருக்கைகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் ஒரு குறியீடு.15ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் லியானார்டோ டாவின்சி வரைந்த The last supper கடைசி விருந்து என்ற ஓவியத்தில் பன்னிரண்டு சீடர்கள் இடம் பெற்றிருப்பர்.இயேசு அவர்களுக்கு அப்பத்தை பிட்டுக் கொடுப்பது போன்று சித்தரிக்கப் பட்டிருக்கும்.அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருப்பர்.அதனையே வான்கோவும் குறிப்பதாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.
வான்கோ எப்போதும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார்.Terrence விடுதியைப் பார்த்தவுடன் Maupassant எழுதிய Bel-Ami நாவலில் இதே மாதிரியான ஒரு தேநீர் விடுதி காட்சியமைப்பு இருந்ததை நினைவு படுத்தி தம்பி தியோவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.Maupassant எழுதிய அந்த வர்ணனைதான் வான்கோவின் இந்த ஓவியத்திற்கான மூலாதாரம்.
வான்கோ தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருந்தார்.தனது தம்பி தியோவிற்கு அதிகமாக எழுதினார்.தியோ வான்கோவை முழுமையாக நம்பினார்.
வான்கோ எழுதிய கடிதங்கள் இலக்கிய உலகின் எழுத்தாக்கத்திற்கு சற்றும் சளைத்ததல்ல.
City scape,self portrait, naturism, போன்று still life art எனும் கலை நுட்பங்களையும் வான்கோ சிறப்பாக கையாண்டுள்ளார்.இவர் பாரிஸில் கழித்த காலங்களில் இந்த வகை ஓவியங்களை அதிகமாக வரைகிறார்.அதில் Pair of shoes என்ற தலைப்பில் நிறைய ஓவியங்கள் வரைகிறார்.
அவர் எப்போதும் உழைக்கும் கரங்களுக்கு தன்னுடைய படைப்புகளை சமர்ப்பித்துக் கொண்டே இருந்தார்.அந்த ஷூக்களைப் பார்த்தால் அது மிகவும் பழையதானகவும்,இன்னும் சில கிழிந்து போனதாகவும் இருக்கிறது.
வான்கோ முதன் முதலில் வாஸ்மே நகரில் வரைய ஆரம்பிக்கிறார்.மனிதர்களின் முகங்கள்,சில இயற்கை காட்சிகள் என்று வரைகிறார்.அந்நேரம் அவர் அந்த ஓவியங்களை பீட்டர்சன் என்ற பாதிரியாரிடம் காண்பிக்க 80 கி.மீ தூரம் நடந்தே செல்கிறார்.அவர் ஆரம்ப காலகட்டத்தில் வான்கோவை ஓவியங்கள் வரைய ஊக்குவித்தவர்.
இந்த ஓவியம் வான்கோ ஹேக் எனும் நகரத்தில் வசித்த போது வரைந்தது.அந்நேரம் அந்த நகரத்தின் நிலை எளிய மக்களை இடம்பெயரச் செய்யும் வகையில் இருந்தது.வான்கோ இயற்கையை விட எளிய மனிதர்களின் உணர்வுகளையே பெரும்பாலும் விரும்பினார்.அதையே அவர் ஓவியங்களிலும் முகபாவனையாக கொண்டு வந்தார்.
ஒரு வயதான சுரங்கத் தொழிலாளி தனது வேலையை முடித்து இரவு உணவு உண்பதற்கு முன் பிரார்த்தனை செய்யும் ஓவியம்.இன்னொரு ஓவியம் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு வயது முதிர்ந்த நபரின் வருத்தத்தின் வெளிப்பாடாக உள்ளது.இது அவர் 1890 ல் மனநல காப்பகத்தில் இருக்கும் போது வரைந்த ஓவியம்.முக அமைப்புகள் எதுவும் இல்லாத போதும் கூட ஓவியத்தின் உட்கருவினை நம்மால் முழுமையாக உணர முடிகிறது
வான்கோ தனது தம்பியான தியோ நடத்தும் ஓவிய விற்பனையகத்தில் ஆரம்ப காலத்தில் பணியினைத் தொடர்ந்தார். புதிதாக உலகின் சிறந்த ஓவியர்களுடன் பழக்கம் கிடைக்கிறது.ஆனால்,மேல்தட்டு வர்க்கத்தினரின் சார்பாகவும்,வியாபார ரீதியாக தீட்டப்பட்ட ஓவியத்திற்கும் கிடைத்த அங்கீகாரம் சாமானிய மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வான்கோவிற்கு கிடைக்கவில்லை. அவர் ஒரு கம்யூனிஸ்டு என்று குற்றம் சாட்டப் படுகிறார்.
இவரது திறமையை அறிந்த மவ் என்ற ஓவியரின் அறிவுறுத்தலால் ஆர்ள் என்ற இயற்கை எழில் மிகுந்த நகரத்திற்குச் செல்கிறார்.அங்குதான் தனது புகழ் பெற்ற பல ஓவியங்களை வரைகிறார்.
அவர் வரைந்த Starry Night என்ற ஓவியம் இன்றளவும் மக்களிடையே அதிகமாகப் பகிரப்படுகிறது.அது நட்சத்திரங்களால் சூழப்பட்ட ஓர் இரவின் அமைதியான இசையுடன் கலந்த ஓர் அற்புதமான படைப்பு.வான்கோ மனநல காப்பகத்தில் இருக்கும் போது ஜன்னலின் வழியாக தெரிந்த விளக்குகள் மின்னும் நகரம். இந்த ஓவியத்திற்கென தனிப்பட்ட ரசிகர்கள் உலமெங்கும் உள்ளனர்.இது பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இதனை பார்ப்பவர்கள் பெரும்பாலும் கண்ணீர் விடுகின்றனர்.இந்த ஓவியத்தில் ஏதோ ஒரு முற்றுப்பெறாத புதிர் உள்ளது என கூறுகின்றனர்.
After noon rest எனும் ஓவியத்தில் மஞ்சள் வண்ணங்கள் மிளிர்கிறது.இது ஒரு நகல் ஓவியம். வயல்வெளிகளில் வேலை செய்து மதிய உணவிற்குப் பின் ஓய்வெடுக்கும் தம்பதியினரை குறிக்கும் ஓவியம்.
அந்த சமயம் வான்கோ ஒரு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.அங்கு தனிமையில் இருந்தவர்.நிறைய விஷயங்களை சிந்திக்கிறார்.அதனை கடிதங்கள் வழியாக தம்பி தியோவிடம் பரிமாறிக் கொள்கிறார்.வான்கோவின் மாமா பாரிஸின் முக்கிய ஓவிய விற்பன்னகராக இருந்தார்.அதனால் சிறுவயதிலிருந்தே ரெம்பனாண்ட், மைக்கேல்ஏஞ்சலோ போன்றோரது ஓவியங்களை பார்த்தே வளர்ந்தார்.அதனை நினைவில் வைத்து இந்த ஓவியங்களை வரைகிறார்
இந்த ஒவியத்தினை jean Francois millet என்ற Bostan ஐ சேர்ந்த ஓவியர் வரைந்தார்.1866 ஆம் ஆண்டு வரையப்பட்டது.இதை மாதிரியாக வைத்துதான் வான்கோ வரைந்தார்.1890 ஆம் ஆண்டு.ஆனால் வான்கோ இதன் வண்ணங்களின் மொழிகளை மாற்றியமைத்தார்.இம்ப்ரெஸ்ஸானிசம் என்ற கட்டுக்குள் புகுத்தி திறம்படத் தீட்டப்பட்ட நேர்த்தியான ஓவியம்.இந்த ஓவியம் சம்பந்தமாக சகோதரர் தியோவிற்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்..Gustave Dore என்ற ஓவியரின் The Prisoners Round கைதிகள்,Daumier -ன் Four Ages Of Drinkers என்று பல ஓவியங்களில் இவரது தனித்துவமான வண்ணங்களை பிரதிபலிக்கச் செய்கிறார்.
வான்கோவின் காதலினூடான நிகழ்வுகள் அவரை எந்நேரமும் துயரத்திலேயே ஆழ்ந்திருக்கச் செய்தது.மதபோதகராக இருந்து தேவாலய அமைப்பிலிருந்து வெளியேறுகிறார்.அதனூடே, இவரது சுய வாழ்வும் அலைக்கழிதலால் நிரம்பியது .பின்பு ஐரோப்பாவில் தனது தாய்மாமன் நடத்திக் கொண்டிருக்கும் ஓவியம் நகலெடுக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிறகு,அங்கிருந்து லண்டன் செல்கிறார்.அங்குதான் ஊர்சுலா அறிமுகமாகிறாள். இருவரும் நன்றாகப் பழகும் போது வான்கோ தன் காதலை அவளிடம் கூற இன்னும் சில நாட்களில் தனக்கு திருமணம் என மறுத்து விடுகிறாள்.அந்த வருத்ததில் மறுபடி சொந்த ஊருக்கு திரும்பிய வான்கோ,கடைசியாக தன் காதலி மனம் மாறுவாள் என்று எண்ணி சில நாட்களிலேயே லண்டனை நோக்கி ஓடுகிறார் ..கொட்டும் மழையில் ஊர்சுலாவின் வீட்டிற்குச் செல்லும் பாதையில் ஊர்சுலா திருமணமாகி தன் கணவருடன் காரில் செல்வதை காண்கிறார்.
ஒரு சில கலைஞர்களின் வாழ்க்கை முறையினை அவர்களின் கலை மூலம் அறியமுடியும். அவ்வாறே,வான்கோவின் படைப்புகள் மூலம் அவரது வாழ்வியலை அறியலாம்.
அடுத்ததாக,ஹேக் நகரில் தனது மாமன் வீட்டிற்குச் சென்ற வான்கோவிற்கு பெரும் வெளிச்சம் போல் தோன்றியது மாமன்மகள் கே.இறுதியில் அவளுக்கும் திருமணமாகிவிட்டது என்று தெரிந்ததும் தன்னை ஓவியத்தில் தீவிரமாக ஈடுபடுத்துகிறார்.
காலவெள்ளத்தில் நியூனன் என்ற நகரில் ஒரு பெண்ணிடம் அறிமுகமாகிறார். பாலியல் தொழில் செய்யும் அந்தப் பெண் தன் மீது காட்டும் அக்கறை காரணமாக அவளது குடும்பச் சுமையைப் பொறுப்பேற்கிறார். தம்பி அனுப்பும் பணமும் போதாமல்,ஓவியத்திலும் லாபமில்லாமல் போக அந்த சூழலிலிருந்தும் வெளியேறுகிறார் வான்கோ.
அது வான்கோ ஆர்ள் நகரத்தில் இருந்த சமயம்.வான்கோவிற்கு அங்கு ரேச்சல் என்ற காதலி கிடைக்கிறாள். அறையில் தன்னுடன் தங்கியிருந்த ஓவிய சகாவான பால் காகி வான்கோவுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு இனி ஒன்றாக இருக்க முடியாது என சென்ருவிட்டார். அந்த சமயம் ரேச்சலிடம் சென்றால் நன்றாக இருக்குமென அவள் தங்கியிருந்த விடுதிக்கு செல்கிறார். அவளிடம் வாங்கியிருந்த 5 ப்ராங்குகளை தருவதாக அவர் சொல்லியிருந்தார். ஆனால் அவரிடம் அப்போது பணமில்லை.
இறுதியில் அவள் இந்த பண விவகாரத்தில் ‘ஒன்று பணம் தா அல்லது எக்கு பிடித்த உன் காதை அறுத்து தா’ என்று கேட்க வான்கோ சவரக்கத்தியால் தன் காதை அறுத்துக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
இதையறிந்த தம்பி தியோ பதறி அண்ணனை அழைத்துச் செல்கிறான்.கடைசியாக ஒரு மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார் வான்கோ.தன் வாழ்நாள் முடியப் போகிறதென்று அறிந்தாரோ என்னவோ,நிறைய ஓவியங்களை வரைந்து தீர்க்கிறார். ஒருநாள் தம்பி தியோவிற்கு மனநல காப்பகத்திலிருந்து அழைப்பு வருகிறது. வான்கோ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தர்கொலை செய்துகொண்டார் என்று . அடுத்த ஆறு மாதத்தில் தம்பியும் இறந்து விடுகிறார்.
வான்கோ கலை உலகில் ஒரு நிரந்தர படிமமாக தங்கிவிட்டார். அர்த்தம் மாறிக்கொண்டே இருக்கும் படிமமாக.
வான்கோவைப் பற்றிய பல புத்தகங்களும், திரைப்படங்களும் வெளி வந்துள்ளது.அதில் At Eternity’s Gate,Loving Vincent இந்த இரண்டு படங்களும் மிகவும் முக்கியமானவை.இந்த திரைப்படங்களை பார்த்தாலே வான்கோ உங்களுக்கு மிகவும் நெருக்கமாகி விடுவார்.
‘Lust For Life’ என்ற தலைப்பில் 1937ல் வெளியான வான்கோவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் மிகவும் பிரபலமானது.இதை Irving Stone என்ற எழுத்தாளர் எழுதியுள்ளார்.தமிழில் இதன் மொழிபெயர்ப்பினை நாயகன் வான்கோ என்ற பெயரில் அஜயன் பாலா மொழிபெயர்த்து புத்தகமாக வந்துள்ளது.
எழுத உதவிய நூல்கள் :
நாயகன் வான்கோ-அஜயன் பாலா