காலத்தின் மேல் வரைந்த கோடுகள்-3

ஓவியம் –மாவீரன் நெப்போலியனின் முடிசூட்டு விழா(The Coronation Of Napoleon)1806

ஓவியர் – ஜேக்கஸ் லூயிஸ் டேவிட்(Jacques Louis David)1748 – 1825

நவீன ஓவியம் பற்றிய ஜெயமோகனின் பார்வை,

“நவீன ஓவியங்களைப் பொறுத்தவரை இங்குள்ள இடர் முற்றிலும் வேறுபட்டது. அவை ஐரோப்பாவில் வேர் கொண்டவை. இங்கு வந்தமைந்தவை. அவற்றை ரசிக்க நாம் அவற்றின் வளர்ச்சிவரலாற்றை, தத்துவப் பண்பாட்டுப் பின்புலத்தை அறியவேண்டியிருக்கிறது. அதுவும் இங்கே முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை. இயல்பாக நாம் அவற்றுடன் ஈடுபடவும் முடிவதில்லை. உதாரணமாக பிகாஸோவின் குவார்னிகாவை ரசிக்க வரலாற்று அறிதல்கள், மேலைத்தத்துவ அறிதல்கள், மேலைக் கலைக்கோட்பாட்டுப் புரிதல்கள் நமக்கு தேவையாய் இருக்கிறது “

லூயிஸ் டேவிட் 1748 ஆம் ஆண்டு பாரிஸில் பிறந்தார்.பாரிஸ் என்ற கலைக்கூடம் இவரை புகழின் உச்சியில் ஏற்றியது.இவரது ஓவியங்கள் அனைத்தும் புகழ்பெற்றவை.ஆனால்,நெப்போலியனின் முடிசூட்டு விழா(The Coronation of Napoleon),சாக்ரடீஸின் மரணம்(The Death of Sacrates) குறிப்பாக இரண்டு படைப்புகள் பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது.

லூயிஸ் டேவிட் தனது பள்ளிப் பருவத்தில் பாதி நாட்கள் பாடங்களையே கவனிக்காத இவர் உலகின் மிகச் சிறந்த ஓவியர்களுள் ஒருவராகிறார்.நியோ கிளாசிக்கலிசம் (NeoClassicalism) என்ற கலையை தன் வாழ்நாள் முழுவதுமாக திறம்பட கையாண்டு உள்ளார்.ஓவியத்தில் ஆர்வம் இருந்தாலும் முறைப்படி கற்றுக் கொண்டார்.

இவர் வரைந்த அனைத்து ஓவியங்களும் நுண்கலை உணர்வோடு கையாளப்பட்டிருக்கும்.அக்காலத்திய வரலாற்றை ஆவணப்படுத்தும் விதத்தில் இவரது ஓவியங்கள் தனித்துவம் பெற்றதாகத் திகழ்கிறது.

இந்த ஓவியம் வாழ்நாள் முழுவதும் போர்க்களத்திலேயே காலங்களை கழித்த மாவீரன் நெப்போலியன் அவர்களின் நியமனத்தின் படி 1804-ல் தீட்டப்பட்டது.

பின்னாளில் 1808 இல் முக்கியமான உயர் அதிகாரப் பொறுப்பும் லூயிஸ் டேவிட் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.மேலும் இந்த ஓவியத்திற்காக அவருக்கு 24000 பிராங்குகள் வழங்கப்பட்டது.அதாவது இந்திய மதிப்பில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொகை.

நெப்போலியன் சக்கரவர்த்தியான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிக் காலகட்டம் பாரீஸுக்கு பெருந்துயராய் அமைந்தது.அந்நேரம் பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சி அதிகாரத்தால் பிரான்சின் நிலைமை மிகவும் மோசமானது.அந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே லூயி மன்னர்கள் கேளிக்கைகளிலும்,கொண்டாட்டங்களிலும் நேரத்தை விரயம் செய்தனர்.பாரிஸ் பண வீக்கத்தால் அல்லாடியது.பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் எதனையும் சரி செய்ய முடியவில்லை. பொருளாதாரம்,அரசியல்,நிதிநிலைப்பாடு என எல்லா துறையும் சீர்குலைந்து போனது.பாரிஸ் மக்கள் கொதித்தெழுந்தனர்.ஆங்காங்கே ரகசியக் கூட்டங்கள் நடைபெற்றது.என்னவோ பேசினார்கள்.பேசிய செய்தி ராகசியமாகப் பரிமாறப்பட்டது.அவர்கள் ஏதோவொரு மாறுதலுக்கு தங்களை தயார்படுத்தினார்கள்.

இறுதியாக மக்களால் புரட்சிப் படை என்ற ஒரு குழுவான இயக்கம் உருவாக்கப்பட்டது.அது தேசிய சபை (National Assembly) யின் கீழ் செயல்பட்டது.தேசிய சபை அரசுக்கும்,மக்கள் கட்சிக்கும் இடையில் நடக்கும் பிரச்சினைகளை விசாரித்தது.அதன் பல உட்பிரிவுகள் கொண்ட அமைப்பில் ஒரு முக்கியமான பொறுப்பில் லூயிஸ் டேவிட் இருந்தார்.

வாக்குரிமை கொண்டு வந்து மன்னராட்சி தகர்த்தப் படும் என்ற கருத்து மக்களிடையே மேலோங்கியது.ஆனால்,நாட்டு மக்கள் அனைவரும் சமமாகப் பார்க்கப்படவில்லை.மதகுருமார்கள்,பிரபுக்கள்,உயர்மட்ட வகுப்பினர் போன்றோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது.

வாக்குரிமை இல்லாத பாட்டாளி வர்க்கத்தினர் சார்பாக மாரா,தந்தோன்,ஹேமர்,ராப்ஸ்ப்பியர் என்று பல்வேறு ஆதரவாளர்கள் போராடினர்.தேசியப் படை அமைப்பு பேரம் பேசுகிறது என்றும் புரட்சிப் படை மிதவாதத்தின் கீழ் செயல்படுகிறது என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.அதன் விளைவு,புரட்சிப் படை இரண்டாகப் பிரிந்தது. ழகோபெனியர்கள்,கர்தலியே கிளப் போன்ற தீவிரவாத இயக்கங்கள் தோன்றின.பல கிளப்புகள்,பத்திரிக்கைகள் உருவாயின.மக்கள் தனது இயல்பு வாழ்க்கையை இழந்தனர்.பாரிஸ் எப்பொழுதும் பரபரப்பாகவே இருந்தது.நிறைய விவாதம் நடந்தது.சில நேரங்களில் விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கும் போதே இருதரப்பினரும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வார்கள்.

இப்போது நேரடியாகவே தாக்குதல்கள் தொடர ஆரம்பித்தது.மன்னர் வம்சத்தினை சேர்ந்த தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு பொற்காசுகள் பரிசளிக்கப்பட்டது.சாமானியர்கள் கூட வாளையும்,கத்தியையும் தூக்கிக் கொண்டு போர் முனையில் நின்றார்கள்.அரசும் அமைதியாக இல்லை.கில்லெட்டுகள்(Gillette) எனப்படும் கூர்மையான பட்டை வடிவ கத்தியால் ஆன இயந்திரத்தால் தேசத்திற்கு எதிரானவர்கள் சிரச் சேதம் செய்யப்பட்டனர்.இறுதியில் பதினாறாம் லூயியும்,அவரது மனைவியையும் சிறையில் அடைத்தது புரட்சிப் படை.அதே சிரசேதம் செய்யும் கருவியால் இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.

இதில், லூயிஸ் டேவிட்டும்

அரசுக்கெதிராக போராடி சிறை சென்றார்.இவ்வாறு பல போராட்டங்களுக்குப் பின்னரும் கூட மதகுருமார்கள்,பிரபுக்கள் போன்ற மேல்தட்டு வர்க்க அமைப்பின் ஆட்சியே நிலவியது.இந்த எல்லா நிகழ்வுகளையும் டேவிட் தனது படைப்புகளில் பதிவு செய்துள்ளார்.”The Tennis Court Oath” எனும் ஓவியத்தில் தேசிய சபையில் நடந்த ஒரு களேபகரக் காட்சியை ஓவியமாக தீட்டியிருப்பார்.அந்த ஓவியம் புரட்சிப் படையும்,மன்னரின் சபையில் உள்ள அரசு நிறுவனர்களும் என இரு தரப்பினரும் மோதிக் கொள்வது போல சித்தரிக்கப் பட்டிருக்கும்.

இந்த இடைவெளியில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏதோ ஓர் சுற்றுப்பயணம் போவதைப் போல எளிதாக அண்டை நாடுகள் அனைத்தையும் தனது வசம் கொண்டு வருகிறார் நெப்போலியன்.அவரது போர் வியூக யுக்தி மிகவும் அபாரமானவை.ஆனால்,நெப்போலியன் வென்று தந்த நாடுகளை பிரான்சால் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை.பிரான்சில் உள்நாட்டுக் கலகம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது.தேசிய சபை அமைப்பு விலை போனது.மீண்டும் போராட்டம்,ரத்தம், உயிர்கள் பலி,பஞ்சம்.நெப்போலியன் பெருங்கோபத்துடன் பிரான்சுக்கு திரும்பினார்.

இந்த முறை அரசுக்கெதிராக போராடியது நெப்போலியன் என்ற அடையாளத்துடன் கூடிய ஒரு பலம் வாய்ந்த படை வீரர்களின் அணி.நெப்போலியன் ஆட்சியில் இருந்த அதிகாரத்தை தூள்தூளாக நொறுக்கி தனியாளாக பிரான்சின் மன்னரானார்.அவரை எதிர்க்க அங்கே யாருமே இல்லை.அப்போது,இந்த உலகை ஒரேநிழலின் கீழ் ஆளவேண்டுமென்ற நோக்கத்துடன் மன்னராகப் பொறுப்பேற்கிறார்.

1804 ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னை மன்னராக முடிசூட்டிக் கொண்ட நிகழ்வின் சித்தரிப்பே இவ்வோவியம்.

நோட்டர் டாம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற தேவாலயத்தின் முன்பு முடிசூட்டும் விழா அரங்கேறியது.பாரிஸின் முக்கிய அடையாளங்களுள் இந்த பழம்பெருமை வாய்ந்த தேவாலயமும் ஒன்று.இந்த தேவாலயத்தினை ஏழாம் லூயி கட்டினார்.இந்த தேவாலயத்தினைப் பற்றி விரிவாக “பற்றி எரிந்த தேவாலயம்” என்ற தலைப்பினைக் கொண்ட முதல் கட்டுரையில் பார்த்திருப்போம்.மாபெரும் திரளான மக்களுக்கு நடுவில் மன்னராகப் பதவியேற்றார் நெப்போலியன்.மெல்லிய இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

சரியான முறையில் வண்ணங்களைக் கையாண்டு திட்டமிட்டு தீட்டப்பட்ட ஓவியம்.இதை  இரண்டு ஆண்டுகாலம் செலவழித்து வரைந்து முடித்தார் டேவிட்.

இந்த ஓவியத்தில் நெப்போலியன் தனது கைகளில் தங்க நிறத்திலான ஒரு கிரீடத்தினை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துள்ளார்.வழக்கமாக எல்லா லூயி மன்னர்களுக்கும் கத்தோலிக்க மதகுருவின் தலைவரான போப் அவர்களின் கையாலேயே மகுடம் சூட்டப்படும் பாரம்பரியம் இருந்தது.

நெப்போலியன் அருகில் பெரிய இருக்கையில் அமர்ந்திருப்பவர் ஏழாம் போப் பியூஸ்(Pius Vll)

ஆனால் புரட்சிப் போரின் போது ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள்,மதகுருக்களின் மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி போன்ற காரணங்களால் நெப்போலியன் தானே தனது கைகளால் கிரீடம் வைத்துக் கொள்கிறார்.

அந்த கிரீடம் ஜோசப் பைன் என்ற அவரது மனைவியின் கைகளால் கொடுக்கப்படுகிறது.உலகத்தில் உள்ள புகழ்பெற்ற காதல் கதைகளினூடே இவர்களின் காதல் தனித்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் இறுதி வரையிலும் நெப்போலியனின் வாழ்க்கையில் கறை படிந்த ஒன்றாகவே அது இருந்தது.இவர்களை நினைவு படுத்தும் விதத்தில் சதுரங்க ஆட்டத்தில் Napoleon Trap என்று ஒரு நகர்த்தல் முறையின் பெயரே உள்ளது.(d3×e4×Qf3)

ஓவியத்தில் நெப்போலியனுக்கும்,ஜோசப் பைனுக்கும் சிவப்பு நிற அங்கி உடுத்தப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர் ஒரு சிறுவன் பெண்ணின் கையைப் பிடித்து நிற்கிறான்.கையில் ஒரு தொப்பியை வைத்துள்ள அவன்தான் சார்லஸ் போனப்பார்ட்.நெப்போலியனின் மகன்.இந்த சிறுவனும் பின்னாளில் நெப்போலியனின் வீழ்ச்சியின் போது கொல்லப்பட்டான்.

கோயில் நுழைவு வாயிலின் முதல் அடுக்கில் மூன்று பெண்கள் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள்.அதில் நடுவில் அமர்ந்திருக்கும் பெண் கட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள்.அவள் நெப்போலியனின் தாய்.வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையில் 13 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தவள்.பல இன்னல்களை சந்தித்த போதிலும்,

நெப்போலியனின் வாழ்க்கையில் இறுதி வரை மாறாமல் அவர் மீது அன்பு கொண்டிருந்தது அவரது தாய் லெட்டிஷா மட்டுமே.

ஓவியத்தின் நுணுக்கங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.இது பல கட்டமைப்புகளை(Layers) உள்ளடக்கியுள்ளது. இந்த ஓவியத்தை தீட்ட இதில் உள்ள அனைவரும் தனித்தனியாக டேவிட்டின் ஸ்டூடியோவுக்கு வரவழைக்கப்பட்டு இதிலிருக்கும் படி நின்றார்கள்.அதை குறிப்பேடுத்தே டேவிட் இந்த ஓவியத்தினை வரைந்து முடித்தார்.

ஓவியத்தில் நிறைய குறிப்புகள்,பிரமுகர்கள் என நிறைய உள்ளது.நாம் சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

ஒவியத்தின் இடது ஓரத்தில் கம்பீரமாக இரு ஆடவர்கள் தலையில் தொப்பி அணிந்து நிற்கிறார்கள்.அவர்கள் இருவரும் நெப்போலியனின் சகோதரர்கள்.நெப்போலியன் பதவியேற்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மற்றவர்கள் வரவில்லை.லூயிஸ் போனபார்ட் மற்றும் ஜோசப் போனபார்ட் என இருவர் மட்டும் கலந்து கொண்டனர்.அதில் லூயிஸுக்கு ஹாலந்து நாட்டிற்கும்,ஜோசப் நேப்பில்ஸ்க்கும் மன்னராக அறிவிக்கப் பட்டார்கள்.

அவர்கள் அருகே நிற்கும் பெண்கள் நெப்போலியனின் சகோதரிகள். எலிசா(Eliza),பவுலின்(Paulin),கரோலின்(carolin).இவர்கள் எல்லோருமே பெரிய ராஜங்களில் உள்ள அண்டை நாடுகளின் மன்னர்களுக்கு மனம் முடித்து வைக்கப் பட்டார்கள்.இப்படி தனது உடன் பிறப்புக்கள் அனைவரையும் நல்ல நிலைக்கு உயர்த்திய நெப்போலியனை அவனது இடர்காலத்தில் அனைவரும் கைவிட்டனர்.எதிரி நாடான இத்தாலி,பிரிட்டன் போன்ற நாடுகளின் கைப்பாவையாக மாறி சகோதரனுக்கு எதிராகவே போர் புரிந்தனர்.இதில் அவனது சகோதரி பவுலின் மட்டுமே விதிவிலக்கு.ஹெல்பா தீவில் நெப்போலியன் தனிமைச் சிறையில் அடைப்பட்டிருந்த நாட்களின் போதும் கூட அவ்வப்போது நெப்போலியனைப் பார்க்கச் செல்வாள்.

அவ்வாறே,வலது புற ஓரத்தில் ஒரே போல உடை அணிந்து கைகளில் செங்கோலை உயர்த்தி பிடித்த படி நிற்பவர்கள்.நெப்போலியனுக்கு மிகவும் முக்கியமானவர்கள்.அவர்கள் போர்க்களத்தின் தூதரக அமைப்பினை செயல்படுத்தி வந்தனர்.அது மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வந்தது.

தூதரக அமைப்பின் தலைவர்களுக்கு அடுத்ததாக போர் மந்திரி தாலிரான்ட்(Talleyrand) இருக்கிறார்.அவரது தோள்பட்டையில் அரசு முத்திரைப் பொறித்த பதக்கம் பதிக்கப் பட்டுள்ளது. அரசு புரட்சிப் படை அமைப்பு செயல்பட்ட நேரத்தில் இருந்தே ஒரு சீரிய அரசு அமைவதற்கான கட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார் தாலிரான்ட். இவர் போர்க்கால நேரத்தில் தளபதிகளை ஆளுமைப் படுத்துதுபவர்.ஆனால் நெப்போலியனின் வீழ்ச்சியின் போது இவர்கள் யாரும் எவ்வகையிலும் உதவ முன் வரவில்லை.

நெப்போலியன் ஒரு முறை இவ்வாறு கூறினாராம் “நான் ஒரு பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், என்னை முதலில் கைவிடுவது என் தளபதிகளாகத்தான் இருப்பார்கள்”

அதே போல அவரது இறுதி நாட்களில் நெப்போலியனைக் காட்டிக் கொடுத்து தனது முன்னேற்றத்தை தக்கவைத்துக் கொண்ட நம்பிக்கைத் துரோகி தாலிரான்ட்.

ஓவியத்தின் பின் வேலைப்பாடுகள் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.நோட்டர் டாம் கட்டிட அமைப்பு,அதிலிருக்கும் சிலைகளின் வடிவமைப்பு,என்று ஓவியத்தின் எல்லா பகுதிகளிலும் மெனக்கெட்டிருக்கிறார்.சிலுவை இருக்கும் அந்த தூணில் மிளிரும் பொலிவு,

வலது புறம் கடைசி வரிசையில் நிற்கும் ஒரு மனிதர் தண்ணீர் அருந்தும் காட்சியமைப்பு,

உடை வடிவமைப்பு,ஜரிகை வேலைப்பாடுகள் என இவையெல்லாம் தேர்ந்த கலைஞனாக லூயிஸ் டேவிட்டை வெளிப்படுத்துகிறது.

எத்தனையோ ஓவியர்கள் தத்துவ ஞானி சாக்ரட்டீஸின் இறுதிக் காலம் எனப்படும் விஷம் அருந்தும் காட்சியை ஓவியமாகத் தீட்டியுள்ளனர். ஆனால் லூயிஸ் டேவிட் தீட்டிய இந்த ஓவியம் மிகவும் விசாரனைக்குள்ளானது.

அந்த ஓவியத்தினை பற்றி குறிப்பு ஒன்றை பார்க்கலாம்.

சாக்ரட்டீஸ் இரண்டு விஷயங்களுக்காக கைது செய்யப்படுகிறார்.இளைஞர்ளுக்கு தவறான வழிகாட்டல்,அரசுக்கு எதிராக செயல்பட்டமைக்காக.

அவர் எந்நேரமும்,தனது கருத்துக்களை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார்.இதை அரசு எதிர்த்தது.

நாம் காணும் இந்த ஓவியம்,

ஒரு அறைக் காவலன் கையில் ஹெம்லாக்(Hemlock) எனப்படும் விஷ பானத்தினை சாக்ரட்டீஸுக்கு அருந்த கொடுக்கிறான்.முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் அதை அவர் வாங்குகிறார்.ஏதென்ஸ் நகர இளைஞர்கள் கண்ணீர் மல்க அவரை சூழ்ந்துள்ளனர்.

அவரது கால்களுக்கு கீழே அமர்ந்திருப்பது கிரிட்டோ.இவருக்கும் சாக்ரட்டீஸுக்கும் நிகழ்ந்த இறுதி உரையாடல் உலகப் புகழ் பெற்றது.இதைப் பற்றி பிளாட்டோ தனது Dialogue என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

படுக்கைக்கு அடுத்ததாக வெள்ளை நிற உடை அணிந்து மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருப்பவர் பிளாட்டோ.

அந்த காவலன் விஷக்கோப்பையை கையில் ஏந்தி நிற்கிறான்.நண்பனே,நான் இதனை எப்படி அருந்த வேண்டும், இதன் முறை என்ன என்று கேட்கிறார் சாக்ரடீஸ்.

சிறுது சிறிதாக அந்த பானத்தை அருந்துங்கள்.அங்குமிங்கும் நடந்து கொண்டே இருங்கள்.மெதுவாக உங்கள் உடம்பில் விஷம் பாய்ந்து செல்வதை நீங்கள் உணர்வீர்கள் என்று கூறுகிறான்.

மரணத்தை கூட புன்னகையோடு ஏற்றுக்கொண்ட மனிதன்.சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ் கிரிட்டோவிடம் கடைசியாக எனக்கொரு ஆசை அதை நிறைவேற்ற வேண்டுமென்று கூறுகிறார்.அசிலியஸ் என்ற கடவுளுக்கு கோழி ஒன்றை காணிக்கையாக்க விரும்பினேன். அதை மட்டும் செய் என்றாராம்.

இந்த ஓவியத்தில் நிறைய நுண்வேலைகளை டேவிட் கையாண்டிருப்பார்.சூரிய ஒளியின் திசைப்படி சுவர்மீது விழுந்து கிடக்கும் நிழல்.அவிழ்ந்தபடி கீழே கிடக்கும் சங்கிலிகள். படிக்கட்டின் அருகிலிருந்து திரும்பிப் பார்க்கும் மனிதனின் முகபாவனை.

உடற்கட்டமைப்புகள்,சுவரின் மீது பதிக்கப் பட்டிருக்கும் இரும்பு வளையம்,கிரிட்டோ அமர்ந்திருக்கும் இருக்கையின் பக்கவாட்டில் ஏதென்ஸ் நகரத்தின் சின்னம்.

ஆனால்,சாக்ரடீஸை நாம் ஒருசில வரிகளுக்குள் புரிந்து கொள்ள முடியாது.அவரது சிந்தனை மிகவும் பரந்தவை. அவரைப் பற்றி தேடி அறிதலே அதற்கு விடை.

லூயிஸ் டேவிட் “The Anger of Achilles” என்ற தலைப்பில் அசிலியஸ் என்ற கிரேக்க கடவுளின் உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நெப்போலியன் வரை, பல்வேறு இந்திய ராஜ்ஜியதிற்கும்,பாரிஸுக்கும் இடையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டது.இத்திட்டம் பிரங்கோ – இந்தியக் கூட்டணிகள்(Franco – Indian Alliance) என்று அழைக்கப்பட்டது.அப்போது இருந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை வெளியேற்றும் முயற்சி திப்பு சுல்தான் ஆட்சியின் போது மிகவும் தீவிரப்படுத்தப் பட்டது.பிரான்சுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்தார் திப்பு.இது தொடர்பாக 1789 ஆம் ஆண்டு ஹைதர் அலி பிரெஞ்சு சென்று படைகளுடனான சந்திப்பை நிகழ்த்தினார்.ஜே.பி.மொராட்(J.B.Morret)என்ற பிரெஞ்சு ஓவியர் இதனை நினைவுகூறும் வகையில் இச்சந்திப்பின் நிகழ்வினை ஓவியமாகத் தீட்டியுள்ளார்.

திப்புவின் தொடர் முயற்சி பயனளித்தது.1798 ஆம் ஆண்டு போர் மந்திரியான ‘தாலிரான்ட்’டிடமிருந்து மைசூருக்கு ஒரு அறிக்கை வந்தது.நெப்போலியன் படையின் கீழ் 124 அதிகாரிகள் குழுவின் மேற்பார்வையில் 14000 போர் வீரர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.நெப்போலியன் படை எகிப்தினை வென்று செங்கடல் வழியாக சூயஸ் கால்வாயினைக் கடந்து இந்திய மன்னர்களுடன் இணைந்து அங்கிலேயர்களைத்  தாக்குவார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால்,அதன் பிறகு ஏற்பட்ட ஒரு சில எதிர்பாராத தோல்விகள்,அரசியல் காரணங்கள் என இந்த திட்டம் தள்ளிப் போனது.1802 ஆம் ஆண்டு இன்னொரு முயற்சியும் எடுத்து அதுவும் பலனளிக்கவில்லை. பிரங்கோ-பாரசீக உடன்படிக்கை கையெழுத்தானது.அதன் பின்னர்,பிரெஞ்சு ரஷ்யாவின் மீது போர் புரிய முனைந்தது.இந்தியாவின் மீதிருந்த பிடிப்பும் தளர்ந்து போனது.

ஒருவேளை, அன்று சூழ்நிலை சாதகமாக இருந்து நெப்போலியன் படைகள் சரியான நேரத்தில் சூயஸ் கால்வாயினைக் கடந்து வந்திருந்தால் இந்தியாவின் வரலாறு மாறியிருக்கக் கூடும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. ஓவியர்: ராஜா ரவிவர்மா : ஓவியம்: சடாயுவின் வீழ்ச்சி(1895) - எம்.சரவணக்குமார்
  2. கனாவில் நிகழ்ந்த திருமணம் : எம்.சரவணக்குமார்
  3. டெறேன்ஸ் கஃபேவின் அழகிய மாலைப் பொழுது : எம்.சரவணக்குமார்
  4. இருளை வரைந்த ஓவியன்-எம்.சரவணக்குமார்
  5. பற்றி எரிந்த தேவாலயம் : எட்வர்ட் லியான் கோர்டஸின் ’நோட்டர் டாம்’-எம்.சரவணக் குமார்