காலத்தின் மேல் வரைந்த கோடுகள்-5

ஓவியம்: கனாவில் நிகழ்ந்த திருமணம்(Wedding At Cana)1963

ஓவியர்:பாலோ வேறொன்ஸ்(Paulo Veronse)

தலைப்பினை கண்டவுடன் கனவிலே நிகழ்ந்த திருமணம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.இ°து கனா என்ற ஓர் ஊரில் நிகழ்ந்த ஓர் திருமண விழா என்ற தலைப்பை கொண்ட ஓர் ஓவியம்.

உலகின் அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு சூழ்நிலையில் போரை சந்தித்து மீண்ட வரலாறு ஒன்று இருக்கும்.ஆனால்,இதில் ஐரோப்பா சற்றே விதிவிலக்கானது.ஐரோப்பா எந்நேரமும் துண்டாடப்பட்டுக் கொண்டே இருந்தது.ஒவ்வொரு நூற்றாண்டிலும் அது தன்னை உருமாற்றிக் கொண்டேயிருந்தது. ஐரோப்பாவை பற்றி அறியாதவன் அரை மனிதன் என்று ஒரு கூற்று உண்டு.அப்படியானால்,மற்ற பண்பாட்டு மரபுகள் குறைவாக மதிப்பிடுகிறதா என்றால்,நிச்சயமாக இல்லை.ஐரோப்பா உலக வரலாறு மாறுவதற்கு முக்கிய காரணியாக இருந்துள்ளது என்பதைத்தான் அந்த சொற்சொடர் குறிக்கிறது.

நாம் வாழும் உலகம் அதனுள் அடங்கியிருக்கும் நிலப்பரப்பு என இயற்கை ஒரு புறம் மாற்றிக் கொண்டிருந்தாலும் மனிதர்களின் பங்களிப்பு புதிய பரிணாமங்கள் அடைவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து அவரவர் தம் சூழலுக்கேற்ப மரபினை உருவாக்குகிறார்கள்.

அதன் பிறகு அதில் சில சீர்திருத்தங்கள் நிகழ்ந்தாலும் முற்றிலும் மாறி விடாது.சிந்து சமவெளி,சுமேரியா,மெசபடோமியா,பைரன்,டான்யூக் என்று எத்தனையோ நதி நாகரிகம் தன்னிச்சையாக மக்கள் வாழ்க்கை முறையிலிருந்து தோன்றியது.அது மக்கள் வாழ்ந்த சூழலை பொறுத்து அமைந்தது.ஆனால்,ஐரோப்பியக் கலாச்சாரம் அப்படி உருவானது அல்ல.ஆரம்பத்தில் ஆசியா,ஆப்பிரிக்காவில் இருந்த நாகரிகம் கூட ஐரோப்பாவில் காணப்படவில்லை.அந்த பண்பாட்டுக் குழந்தையை திருச்சபை என்ற மதச்சார்பு முன்னின்று எழச்செய்து இன்றளவும் அதைத் தாங்கிக்கொண்டும் இருக்கிறது.கி.பி.மூன்றாம் நூற்றாண்டு.கிறித்தவர்கள் அதிகப்படியாக பரவிய ஓர் கால கட்டம்.ஐரோப்பா ஒரு பெரிய இடரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம்.

நீரோ என்ற ரோம் மன்னர்.தனது மாளிகையை கூட தங்கத்தால் தான் கட்டியிருந்தார்.ரோம் அவ்வளவு செழிப்பு வாய்ந்த நகரம்.நாட்டை ஆள்வது மட்டுமல்லாமல் நிறைய கேள்விகளை எழுப்புகிறார்.நிறைய விஷயங்களை சிந்திக்கிறார்.ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே இருந்தது.கிறித்துவ அமைப்பு இருக்கும் நகரங்களில் எதிரிகளின் வரவு வெகுவாகக் குறைந்தது.அப்படியே படையெடுத்து வந்த ஒருசில மன்னர்களையே கத்தோலிக்க அமைப்புக்கு மாற்றும் அளவிற்கு திருச்சபையின் கை ஓங்கி இருந்தது.முன்னர் ஒரு கட்டத்தில் ஹூணர்களின் தலைவன் அட்டில்லா(Atila) ரோம் நகரின் அளப்பரிய பெருஞ்செல்வத்தை கொணரும் பொருட்டு கான்ஸ்டாண்டி நோபிள் வரை அசுரத்தனமாக போர் புரிந்து வந்து விட்டான்.இத்தாலியை சூறையாடிவிட்டு ரோம் நகரை நெருங்கினான்.நகரே பீதியில் ஆழ்ந்த சமயம் போப் முதலாம் லியோ தைரியமாக அவனை அணுகி மனம் மயங்கும் போதனைகளை உபதேசித்து விருந்து வைத்தார்.அட்டில்லாவும் வந்த வேலையை மறந்து துதிபாடி போகும் போது கையில் ஓர் சிலுவையையும் சுமந்து சென்றார்.மக்கள் கண்களில் போப் மாபெரும் சக்தி படைத்தவராக தெரிந்தார். ஆனால்,மன்னர் நீரோவிற்கு உள்ளூர பயம் தொற்றிக் கொண்டது.திருச்சபை எவ்வளவுதான் உயரிய தத்துவங்களைக் கொண்டிருந்த போதிலும் அது மனிதர்களால் நடத்தப்படும் நிறுவனம் என்பதை மறந்துவிடக் கூடாது என்பதில் மன்னர் தெளிவாக இருந்தார்.நீரோ பைபிளின் புனிதத்துவத்தை புறக்கணித்தார்.நிறைய விஷயங்களை அண்டை நாட்டு மன்னர்களுடன் விவாதிக்கிறார்.திருச்சபை தலைவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை அளிப்பது,அவர்களின் கீழ் மக்கள் பெரும் சபையாக திரள்வதையும் மன்னர் வெறுக்கிறார்.

ஒரு கட்டத்தில் மன்னரும் கூட திருச்சபையின் கீழ்தான் செயல்பட வேண்டும்.முக்கிய முடிவுகளை அவர்களுடன் ஆலோசனை செய்வது என்ற நிர்பந்தம் அவரை மேலும் கொதித்தெழ செய்தது.பேரரசரின் ஆணைப்படி கிறித்தவர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.பல்வேறு மக்கள் மிருக வதைக்கும்,சித்ரவதைக்கும் உட்படுத்தப்பட்டனர். ஆனால்,நீரோ நினைத்ததற்கு மாறாக கிறித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்க அவரது நடவடிக்கையே காரணமானது.பேரரசரின் படை தடுமாறியது.மன்னர் சரணடைந்தார்.போப் சமயத்தின் முக்கிய முடிவுகளை எடுத்தார்.இப்படி ஐரோப்பிய வரலாறு தன்னுள் பல கதைகளை பின்புலமாகக் கொண்டு இன்றளவும் சிறப்பாக இயங்கி வருகிறது.திருச்சபையின் பங்களிப்பு அதற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.அங்கு கலையோ, பண்பாட்டு அசைவுகளோ கிறித்துவத்தை சாராமல் தன்னிச்சையாக செயல்படுவது அரிதான ஓர் நிலைப்பாடு.கிறித்துவம், ஐரோப்பியக் குடிகளை ஒன்றிணைத்த ஓர் கட்டமைப்பு.

நாம் இந்த விதத்தில் ஐரோப்பியக் கலாச்சாரத் தெளிவை அடைய விரும்பினால்,நமக்கு கிறித்துவ மத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதல்களும் அவசியமாகிறது. இதனை எடுத்துரைக்கவே பின்புலமாக ஒரு வரலாற்றுக்குறிப்பு தேவையுள்ளது.அதனாலே மேற்கண்ட விவரணைகளை எழுத வேண்டியதாயிற்று.இந்த ஓவியம் இத்தாலியை சேர்ந்த பாலோ வேறொன்ஸ் என்பவரால் வரையப்பட்டது.இதில் ரியலிசம் என்ற பாணியை பயன்படுத்தியுள்ளார்.பாரிஸில் ஆயிரக்கணக்கான பழமை வாய்ந்த கலைப்பொருட்களை லூவர் எனும் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.அதில் பழமை வாய்ந்த ஓவியங்களின் பிரிவில் இந்த ஓவியமே அளவில் மிகவும் பெரியது என்ற பெருமை பெற்றது.மோனேயின் மலர்கள் என்ற கட்டுரைத் தொகுப்பின் கடைசிக் கட்டுரையில் எஸ்.ரா ,லூவர் அருங்காட்சியாகத்தின் பழமையான வரலாற்றினை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

ஓவியத்தினை சற்று உற்றுப் பாருங்கள்.அந்த வர்ணங்கள் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்.அனைத்தும் செறிவான வண்ணங்களின் தேர்வு.நாம் சிறு வயதில் படம் பார்த்து கதை சொல் என்று ஒரு சில பக்கங்களை பார்த்திருப்போம்.அது போல் அல்லவா உள்ளது.

கிறித்துவர்களின் புனித நூலான பைபிள் ஒரே நபராலோ,கதை முடிவாக்கம் செய்தோ எழுதப்பட்ட புத்தகம் கிடையாது.அது ஒரு முன்னூறு ஆண்டு காலகட்டத்தின் தொகுப்பு.கிறித்து இறப்பிற்கு முன்னும் பின்னுமாக பல கதைகளை உள்ளடக்கியது.சிலவற்றிற்கு ஆதாரங்கள் உள்ளது இன்னும் சிலவைகள் செவிவழிச் செய்திகளாய் வந்தமைந்த கட்டுக்கதைகள்.இயேசு மிகப்பெரிய மதத்தினை ஸ்தாபித்தவர் என்றாலும் இந்த வகையான பைபிள் கதைகளில் பெரும்பாலும் அவர் ஒரு கதாப்பாத்திரமாகவே வந்து செல்கிறார்.பைபிள் என்பது ஒவ்வொரு மணிகளையும் சேர்த்து மாலையாக கோர்க்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் தொகுப்பு.கணக்கிற்கு ஒரு முன்னூறு ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம்.என்னதான் கிறித்தவம் கீழை நாடுகளின் அடையாளமாகத் திகழ்ந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிறைய உள்ளது என்பதே நிதர்சனம்.நான் பயின்றது ஒரு கிறித்தவ பள்ளி என்பதால் கத்தோலிக்க அமைப்பின் தாக்கம் எனக்குள் என்றும் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.

ஐரோப்பியாவில் கலை,பண்பாடு,என்று நாகரிகம் வளர்ந்தவுடன் ஓவியர்கள் கிறித்தவம் சார்ந்த ஓவியங்கள் திட்டுவது, சிற்பங்கள் செய்வதென அதனை ஒரு பெருஞ்செல்வமென கருதி பாதுகாத்தும் வந்தனர்.இன்னும் சொல்லப்போனால் அங்கு உள்ள கலைஞர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.பைபிளிலிருந்து இன்றளவும் பல கதைகள் ஓவியமாக தீட்டப்பட்டு வருகிறது.அதில் குறிப்பிட்டு சில ஓவியங்களை நாம் பார்த்தோமானால்,மேரி மக்தலோனா,யோவான் தலை கொய்தல்,பாராபாஸ்,யூதாஸ்,இயேசு சிலுவையில் அறையப்படுதல், உயிர்த்தெழுதல், என இந்த நிகழ்வுகள் பல ஓவியர்களால் மீண்டும் மீண்டும் சித்திரமாக வரைந்து ஒப்பிடப்படுகிறது.இப்படி பைபிளில் வரும் பல கதாப்பாத்திரங்களும், கதைகளும் பல்வேறு கலைஞர்களால் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது.அதில் குறிப்பிட்டு கூறும்படியான ஒருசில ஓவியத்தில் பாலோ வேறொன்ஸ் தீட்டிய கனாவில் நிகழ்ந்த திருமணமும் ஒன்று.

பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகம் இதனை இன்றளவும் பாதுகாத்து வருகிறது.காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஓவியங்களில் அளவில் மிகவும் பெரியது இந்த ஓவியம் தான்.ஏற்கனவே பாவ்லோ வேறொன்ஸ் கிறித்தவம் சார்ந்த ஓவியங்கள் தீட்டியிருந்தார்.அவர் தீட்டிய அனைத்து ஓவியங்களிலும் சிறிய வேலைப்பாடுகள் கூட அத்தனை அழகானதாகவும் பின்புலமாக ஒரு கதையமைப்பைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

கலிலீயில் நிகழ்ந்த திருமணம்தான் என்ன.பைபிளில் யோவான் எழுதிய இரண்டாம் அதிகாத்தின் ஒன்று முதல் பதினொன்றாம் வாசகம் வரையில் இந்த கலிலீயின்(Galilee) கல்யாணக் கதை இடம் பெற்றுள்ளது.கலிலீயில் உள்ள ஒரு திருமண வீட்டிற்கு இயேசுவும்,அவரது சீடர்களும் திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.அவரது தாயாருமான அன்னை மாதாவும் அவர்களுடன் அருகில் அமர்ந்திருக்கிறாள்.இங்கே தான் இயேசு தனது முதல் அதிசயத்தை நிகழ்த்தினார் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் மிகவிமரிசையாக நடந்தேறியது.பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து விழாவில் கலந்து கொண்டனர்.அப்போது ரோம் நகரை ஆண்ட ஐந்தாம் சார்லஸும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.கையில் ஒயின் குப்பியை வைத்து இடுப்பில் கை வைத்திருப்பவர் துருக்கி மன்னர் சுலைமான்.பச்சை நிற உடையணிந்து கக்கத்தில் குறுவாளும் வைத்திருப்பவர் புகழ்பெற்ற ஓவியர் டைட்டன்.இவர் பல நாடுகளின் அரசர்களையும் பண்பாட்டு சின்னங்களையும் தேடித்தேடி வரைந்தவர்.மரியாதை நிமித்தமாக இவரையும் இந்த ஓவியத்தில் கற்பனையாக சித்தரித்துள்ளார்.கதைப்படி பார்த்தால் அந்த கல்யாணம் இன்னாருக்கு என்று எந்த விதமான குறிப்பும் பைபிளில் எழுதப்படவில்லை.ஒருவேளை இந்த நிகழ்வின் முக்கியத்துவம் சார்ந்து அதை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.

திருமணம் முடிந்தவுடன் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.விருந்தில் அருந்தப்படும் முக்கிய பானமான திராட்சை ரசம் தீர்ந்து விடுகிறது.இந்த விஷயத்தினை அன்னை மரியாள் இயேசுவிற்கு தெரிவிக்கிறார். இயேசு அங்குள்ள பணியாட்கள் இருவரை அழைத்து இரண்டு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி ஒயின் குப்பியில் நிரப்பச் சொல்கிறார்.பின்னர்,பந்தி பரிமாறுபவர்கள் அதனை எடுத்து குவளைகளில் ஊற்றி கூடியிருந்தவர்களுக்கு கொடுக்கையில் அது திராட்சை ரசமாக மாறியிருந்தது.இதுதான் இந்த திருமனத்தினைப் பற்றி பைபிளில் கூறப்பட்டுள்ள விடயம்.

பாலோ வேறொன்ஸ் இதில் பல காட்சியமைப்புகளை சித்தரித்துள்ளார். அது பல அடுக்குகள் கொண்டதாக உள்ளது.ஓவியத்தின் ஒவ்வொரு இடத்திலும் அதீத பொறுமையை கையாண்டு தீட்டியுள்ளார்.எல்லா முகபாவனைகளிலும் இந்த மெனக்கெடலினை காண முடிகிறது.அவர் பிரயோகித்திருக்கும் வண்ணங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இயேசுவும், மரியாளும், சீஷர்களும் ஏதோவொரு விஷயத்தை பற்றி கலந்தாலோசிக்கின்றனர்.இடது புறம் முதல் இருக்கையில் அமர்ந்திருக்கும் தம்பதியினர் ஐந்தாம் சார்லஸ் தம்பதியினர்.’ப’ வடிவ மேஜையில் முக்கிய பிரமுகர்களும் அமர்ந்திருக்கிறார்கள்.வெள்ளைநிற விரிப்புடன் கூடிய உணவுப் பொருட்கள் நிரப்பப்பட்ட மேஜை ஓவியத்தின் மையமாக உள்ளது.

அந்த மேஜைக்கு முன்னாள் இசை வாத்தியக் குழு அமர்ந்திருக்கிறது.குறிப்புகளை வைத்து வாத்தியங்களை சிரத்தையுடன் கையாளுகின்றனர். அவர்களுக்கு நடுவில் வைக்கப்பட்டிருக்கும் மேஜையில் ஒயின் நிறைந்த கோப்பைகள் உள்ளது.வயலின் முக்கிய வாத்தியமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.மனித உருவங்கள் மட்டுமல்லாமல் நடப்பன,பறப்பன என்று நிறைய உருவங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.ஒவ்வொரு முகபாவனைகளுக்கும் இடையே நிறைய மாறுதல்கள் கொண்ட முகங்கள்.அங்கங்கே குப்பிகளில் ஒயின்  நிரப்பப்படுகிறது.

கட்டிடத்தின் மேலடுக்கில் மீன் உணவு பரிமாறப்படுகிறது.பெரிய மீன் ஒன்றினை நீளமான பலகையில் சுமந்து வருகின்றனர்.வெனிசு நகர மக்கள் மீனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள்.மீனானது உண்பதற்காகவே படைக்கப்பட்ட ஓர் உயிரினமென்றும்,அதனால் தான் வல்லத்தில் அள்ள அள்ள குறையாது கோடிக்கணக்கான மீன்களை இறைவன் ஜனங்களுக்கு கொடையளிக்கிறான் என்று அந்த மக்கள் நம்பினர்பின்னர்,ஓவியத்தின் ஒட்டு மொத்த வசீகரத்திற்கும் காரணமாயிருக்கும் அந்த நீலம்.முகில்கள் நிறைந்த வானம்.அதில் வரிசையாக பறக்கும் பறவைகள்.இடது புறம் மேல் பக்கம் தூண்களின் விளிம்புகளுக்கிடையில் ஒரு நாயும்,அதன் மேல் வரிசையில் மனிதனும் தலையை நீட்டியவாறு உள்ளனர்.ஆனால் அது ஏதேனும் குறியீடா என்றெல்லாம் தெரியவில்லை.

விழா நடக்கும் கட்டிட அமைப்பை கவனியுங்கள்.கலிலீயில் நிகழ்ந்த திருமணம் பல ஓவியர்கள் வரைந்துள்ளனர்.அனைவருமே இது போன்ற ஒரு கட்டிட அமைப்பை ஒத்தவாரே வரைந்துள்ளனர்.நீண்ட தாழ்வாரங்கள்,வளைவு மாடங்கள்,வரி அமைப்புகள் கொண்ட தூண் வரிசைகள் உடைய மண்டபம்,பிரமாண்டம் நிறைந்ததாக உள்ளது.ஆரம்பத்திலேயே கூறியது போல இந்த கலை நாகரிகத்தின் தொடக்கம் கிரேக்கத்திலிருந்தும்,கிரீசிலிருந்தும் ஐரோப்பாவிற்கு வந்தமைந்தவை.அந்த தூண்களின் நேர்த்தியான வடிவமைப்பு.இவ்வகை தூண்கள் கொண்ட கட்டிட அமைப்பு டோரிக் ஐயோனிக் சொரிந்தியர்(doric ionic and corinthian architecture)எனப்படும் கிரேக்கப் பாணியின் படி கட்டப்பட்டது.இதன் வடிமைப்பு ஏதென்ஸில் உள்ள கிரேக்க கோயிலான அக்ரோபொலிஸ்(Acropolis) போன்ற தோற்றத்தினை கொண்டுள்ளது.இதனை ஆதாரமாக கொண்டுதான் பாலோ ஓவியத்தின் பின்னணியில் இந்த கட்டிட அமைப்பை பொறுத்தியுள்ளார்.ஆக்ரோபொலிஸ் கிரேக்க கடவுளான ஆதென்னாவும்,பின்னர் கிறித்துவ தேவாலயமாகவும்,கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளின் மத்தியில் மசூதியாகவும் நகரின் மத்தியில் முக்கிய பாரம்பரியம் மிக்க கலைக் கோவிலாக இருந்தது.அதன் பின்னர் நடந்த துருக்கியப் போர்களில் இதன் பெரும்பகுதிகள் சேதப்படுத்தப்பட்டது.இப்போது அதன் எச்சங்களின் ஒரு பகுதியாக பார்த்தினன் (Parthenon) என்ற பளிங்குகளால் செய்யப்பட்ட தூண்கள் மட்டுமே உள்ளது.

அதன் தூண்களின் பகுதி மற்றும் அதில் உள்ள தெய்வங்களின் சிலைகள் இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இன்றளவும் இந்த சிலைகளை கிரீஸ் மக்கள் பெற போராடுகின்றனர்.இங்கிலாந்து அதன் மீது கவனம் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

அலெக்ஸ்சாண்டருக்கு முன்னாள் டேரியஸின் குடும்பம் (The family of darius before alexander.)1965 இந்த ஓவியம் மாவீரர் அலெக்சாண்டரின் வாழ்வில் நிகழ்ந்த ஓர் நிகழ்வை அடிப்படையாக வைத்து தீட்டப்பட்ட ஓவியம்.

எனக்கு இந்த ஓவியத்தை பார்த்தவுடன் சமீபத்தில் நான் வாசித்த அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் புத்தகம் நினைவிற்கு வருகிறது.அதன் அட்டைப் படமே அழகான வடிவமைப்பினைக் கொண்டது.எம்.ஜி.சுரேஷ் அதன் அட்டைப் படத்திலேயே இந்நாவலை தன்பெருக்கி நாவல் என்று குறிப்பிட்டிருப்பார்.ஒரே நாவலில் அறிவியல்,வரலாறு,எதிர்கால இயக்கம்,திரில்லர் என்று நாவல் அட்டகாசமாக இருக்கும்.அதில் வரும் எல்லா நான்கு பிரிவுகளுக்குமான காதநாயகர்களுக்கும் அலெக்ஸாண்டர் என்ற ஒரே பெயரையே குறிப்பிட்டிருப்பார்.நாவலின் நகர்வும் கடந்த காலம்,நிகழ் காலம்,எதிர் காலம் என்று பின்னிப் பயணிக்கும்..

இதில் வரலாற்றுப் பிரிவில் அலெக்ஸாண்டரின் வரலாற்றினையும், அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் அழகாகப் பதிவு செய்திருப்பார்.மரணத் தருவாயிலிருக்கும் மாவீரர் அலெக்ஸாண்டர் தன் சுயவாழ்வு பற்றிய நினைவுப்பாதையின் சிதறல்களே இந்த நாவல்.

கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் இந்த உலகையே ஒரே குடையின் கீழ் ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பல நாடுகளை வென்று பாரசீகம் வருகிறான்.பாரசீகப் படையெடுப்பு அலெக்ஸ்சாண்டரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ஓர் நிகழ்வு.போரில் பாரசீக மன்னர் டேரியஸ் துரோகத்தால் வீழ்த்தப்படுகிறான்.அரசன் இல்லாத நாடு அடி பணிகிறது.டேரியசின் மனைவி ருக்ஸானா மிகவும் கவலையடைகிறாள்.

இந்த பிம்பத்தைத்தான் பாலோ தனது கற்பனைத்திறன் கொண்டு ஓவியமாகத் தீட்டியுள்ளார்.தனது நண்பனும் படைத்தளபதியுமான ஹிப்போஸ்டியன் அவருக்கு இடது புறத்தில் உள்ளார்.பொலிவான முகத்துடன் தரையில் அமர்ந்திருப்பவள் ருக்ஸானா.அவளது கவலை ஏனோ அலெக்ஸ்சாண்டரின் மனதை உருக்குகிறது.அவள் அழகாக இருக்கிறாள்.அலெக்சாஅண்டர் அவளையே திருமணம் செய்து பாரசீக நாட்டிலேயே அரசனாகி ஆள்கிறார்.

இந்த ஓவியம் பாரசீகத்தின் அரண்மனையில் டேரியஸ் மறைவிற்குப் பின் ருக்சானாவிற்கும்,அலெஸ்சாண்டருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் காட்சியமைப்பு.ருக்சானா சமயோஜிதமாக சிந்தித்து அந்த காதலை ஏற்று மனம்புரிய சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்கிறாள்.அதன் படி அலெக்ஸ்சாண்டர் தனது இறுதிக்காலம் வரையில் பாரசீகத்திலேயே கழித்தார். இந்த சித்திரத்திலும் கிரேக்க கட்டிடக் கலையின் சாயலை அற்புதமாகக் காட்சி படுத்தியுள்ளார்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. ஓவியர்: ராஜா ரவிவர்மா : ஓவியம்: சடாயுவின் வீழ்ச்சி(1895) - எம்.சரவணக்குமார்
  2. டெறேன்ஸ் கஃபேவின் அழகிய மாலைப் பொழுது : எம்.சரவணக்குமார்
  3. மாவீரன் நெப்போலியன் முடிசூடும் விழா : எம்.சரவணக்குமார்
  4. இருளை வரைந்த ஓவியன்-எம்.சரவணக்குமார்
  5. பற்றி எரிந்த தேவாலயம் : எட்வர்ட் லியான் கோர்டஸின் ’நோட்டர் டாம்’-எம்.சரவணக் குமார்