காலத்தின் மேல் வரைந்த கோடுகள் – 6

ஓவியங்களும் அதன் வரலாறும் ஐரோப்பாவின் அரசியலமைப்புக்கு வழிகோலியது.ஆனால் அது இந்தியாவிலிருந்து முற்றிலும் வேறானது. இங்கே மதங்களும் இனங்களும் பல்வேறு தரப்பட்ட படிநிலையில் உருப்பெற்று மக்கள் தங்களது கலை சார்ந்த பரிணாமங்களால் அடையாளப்படுத்தப் படுகின்றனர். சற்றே விரிவான பார்வையில் நோக்கினால் இதன் சாரத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பிறகு வந்த சொல்வழக்கு. ஆனால் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்கள், அவர்களது வாழ்க்கைமுறை, நிலையான ஆட்சியின்மை, போர் என இந்தியா முழுவதும் துண்டாடப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனால் இந்த காரணங்களை கொண்டு கலையின் வடிவங்களை , உத்திகளை நாம் தீர்மானிக்க முடியாது. அது தன்னை காலத்திற்கேற்றவாறு உருமாற்றம் செய்து பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டே இருக்கும்.

சித்திரம் வரைதல் என்பது கலைஞர்களின் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு என்பதை கடந்து அந்தந்த காலகட்டத்தின் நிலைப்பாடு மற்றும் கருப்பொருள் சார்ந்ததாக இருந்து வந்துள்ளது. இன்றைய கட்டுரைக்கான ஓவியம் ராமாயணம் சார்ந்தது என்பதால் அதனை உதாரணமாக பார்க்கலாம்.

படுவா கலைகள் என்ற பெயரில் வங்காள கலைஞர்கள் ராமாயணம் சார்ந்த ஓவியங்களை கோடுகளின் வளைவு நெளிவுகள் மூலமாக வரைகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் வரையப்பட்ட ராமாயணம் பற்றிய சித்திரங்கள் கோடுகள் மற்றும் புள்ளிகள் கொண்டு வரையப்பட்டாலும் அதன் வெளிப்பாடு வங்காளிப் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

இந்தியாவில் ஆரம்ப முதலே நிலக் காட்சிகள், புராணங்கள், இதிகாசம் என ஓவியங்களை வைத்து கதை கூறும் முறை கூட இருந்து வந்துள்ளது. அதற்கு சுவடி ஓவியம் என்று பெயராம்.

சுவடியில் வரையப்பட்ட ஓவியங்களை வைத்து பல ஊர்களுக்கு பயணம் செய்து கதை சொல்வார்களாம். துணிகளின் மூல்மாகவும் காகிதத் தாள்கள் மூலமாகவும் கதை சொல்லும் யுக்தி பரவலாக இருந்திருக்கிறது.இதற்கென்று தனியாக சித்திரச் சாலைகளும் கூட செயல்பட்டன.

காலம் செல்ல செல்ல கலைகளும், அதன் திரிபுகளும் மாறிக் கொண்டே இருந்தன.ஆட்சியும், அதிகாரமும் நிலையில்லாமல் இருந்தது.அதில் பெரும்பான்மையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் முகலாயர்கள்.முகலாய ஆட்சியின் போது கட்டிடக் கலையின் தன்மையும்,சித்திரக் கலையில் புதுமையும் இருந்தது. ஓவியங்களுக்கு மதிப்பளிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் ஓவியர்களையும் கொண்டாடினார்கள். முகலாயர்களையும், அக்காலத்து கலைப் பண்பாட்டையும் அடுத்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.அதே போல் ராஜஸ்தானில் மதுபாணி, பஹாரி, தமிழ் நாட்டில் தஞ்சாவூர் ஓவியங்கள்,கிராமிய ஓவியங்கள், சுவர் மற்றும் குகை ஓவியங்கள் இப்படி இன்னும் பலதரப்பட்ட பாணிகளில் ஓவியக்கலை இந்தியாவில் வளர்ச்சியடைந்தது.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணக் கொள்கையை மையமாக வைத்து உருவாக்கிய சித்திரங்கள் இன்றளவும் சித்தன்னவாசலில் நிலைத்து இருக்கிறது.இதனை ‘பௌத்த கால ஓவியம்’என்கிறார்கள் ஆய்வாளர்கள்.இன்னமும் கூட சில கோவில்களிலும், புனித ஸ்தலங்களிலும் கூட அதன் வரலாற்றுப் பின்னணியை குறிப்பால் உணர்த்தும் ஓவியங்கள் வரிசையாக சுவற்றில் பதித்திருப்பதை நாம் காணலாம்.இதெல்லாம் சுவடி ஓவியங்களின் நீட்சி எனப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் இயங்கிய சோழமண்டல ஓவியக் கலைக்கூடம் இந்திய ஓவிய மரபினை வேறொரு பரிணாமத்தில் அடையாளப்படுத்தியது. அச்சமயத்தில் உண்டான அதிர்வலைகள் அன்றைய மக்களிடையே கலை ஆர்வத்தை தூண்டுவதற்கான முக்கிய காரணமாக விளங்கியது.ஓவியமும் சிற்பக் கலையும் தனித்துவம் வாய்ந்தது .எழுச்சி பெற்றது.

பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள கடவுள் தத்துவம் கோவில்களில் குவிந்திருப்பதாக இந்திய மக்கள் நம்புகிறார்கள்.இங்கு கலை என்பது முற்றிலும் அறம் சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்பட்டது.அதனாலேயே கலை சார்ந்த துறை கோவில்,மதச்சார்பு என்ற அமைப்பின் கீழேயே அதிகளவு பயன்படுத்தப் பட்டிருக்கிறது.கலைத்துறை பெரும்பாலும் திருக் கோவில்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்துள்ளது.அவை திருவிழா சமயங்களில் மக்களின் பார்வையில் காட்சிக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டது.அடுத்தடுத்த கட்டுரைகளில் இந்திய ஓவியங்களின் வளர்ச்சியைப்பற்றி விரிவாகக் காண்போம்.

பொதுவாகவே ரவிவர்மன் என்ற பெயர் நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு பெயர் தான் என்றாலும், அவர் பின்புலத்தை அறிந்தவர் வெகு சிலரே.1848-இல் கிளிமானூரில் பிறந்த ரவிவர்மன் பதிமூன்று வயதிலேயே கலை நுட்பங்களை தனது தாய் மாமன் மூலம் கற்றுத் தேர்ந்தார்.

1800- களின் தொடக்கம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலகட்டம். இந்திய பாணிக்கும் ஐரோப்பிய பாணிக்கும் இடையே நிறைய வேற்றுமைகள் உள்ளது. இந்திய ஓவியங்கள் கருப்பொருள் சார்ந்து ஓவியங்களின் தன்மை, அதன் உருவம் ஆகியவற்றை சிதைத்து வெளிப்படும். ஆனால் ஐரோப்பிய ஓவியங்கள் நேரில் பார்க்கும் நில காட்சிகளையோ முக அமைப்புகளையோ அப்படியே நகல் எடுக்கும் யுக்தி. வண்ணங்களின் கலவை களிலும் பெரிய அளவில் வேறுபாடு இருந்தது.அயல் நாட்டு ஓவிய பாணியின் மோகம் பெரும்பாலான இந்திய ஓவியர்களை பாதித்திருந்தது. வண்ணங்களை நீரில் குழைத்து வரையும் முறை,எண்ணெய் வண்ணங்களில் படங்களை தீட்டும் முறை வழக்கத்திற்கு வரலாயின.

இந்த சமயத்தில் அவரது மாமா பரிந்துரையின் பேரில் ரவிவர்மன் அரண்மனையில் வேலைக்கு சேர்கிறார்.இதன் காரணமாக அவரது கலை உலகில் அவருக்கான சுதந்திரம் கிடைக்கிறது. எண்ணெய் வண்ணங்கள் பயன்படுத்தி வரையும் மேற்கத்திய கலை பாணியைக் கையாள்கிறார். அதில் பல புதிய பரிசோதனைகளைச் செய்கிறார்.அதனுள் இந்திய பாரம்பரியமிக்க நடன அசைவுகளையும்,பெண்களின் முக பாவனைகளையும் அரசவைக் காட்சிகள்,அலங்காரப் பண்பு,விலங்குகள், பறவைச் சித்திரங்கள் எல்லாவற்றையும் புகுத்துகிறார். இது பின்னாட்களில் இந்தோ-ஐரோப்பிய கலைப்பாணி என்று குறிப்பிடப்பட்டது.

சிறுவயதிலிருந்தே இவருக்கு இதிகாச புராணங்களின் மீதான ஈர்ப்பு இருந்தது. ராமாயணம், மகாபாரதம், காளிதாசன் காவியம், அதில் வரும் மும்மூர்த்திகள் கணபதி லட்சுமி போன்ற தெய்வங்களையும் அசுரர்கள் சகுந்தலை துஷ்யந்தன் தமயந்தி போன்ற கதாபாத்திரங்களையும் இன்னும் பல பெண்ணுருவங்களையும் ஓவியமாக தீட்டினார். ரவி வர்மாவுக்கு வடமொழியிலும் நல்ல புலமை இருந்தது.

இந்த ஓவியத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கின்றது. பார்த்தவுடன் உங்கள் மனதை முழுவதுமாக அதன் செறிந்த வண்ணங்கள் மீது கவனம் கொள்ளச் செய்யும் படைப்பு. நான் சிறு வயதில் ஏதோ ஒரு வார இதழின் பின் அட்டையில் இந்த ஓவியத்தை பார்த்தேன். அன்றிலிருந்தே இந்த சித்திரம் எனது மனதில் பதிந்து விட்டது. அன்று எனக்கு இது ஒரு புகழ் பெற்ற ஓவியர் வரைந்த ஓவியம் அதில் இவ்வளவு நுட்பங்கள் புதைந்திருக்கிறது என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

இந்த ஓவியத்தின் சாரம் ராமாயணத்தில் வரும் ஒரு காட்சியின் வெளிப்பாடாக உள்ளது. பெரும்பாலும் தமிழர்களுக்கு ராமாயணம் என்றால் கம்பர் எழுதிய ராமாயணமே நினைவிற்கு வரும். ஆனால் நான் கம்பராமாயணம் வாசித்தது கிடையாது.மேற்கோள் காட்டுவதற்காக ஒரு சில பாடல்களை வாசித்தேன்.தெலுங்கு மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்ட ‘ராமகதரஸவாஹினி ‘ என்ற புத்தகத்தை வாசித்து இருக்கிறேன். ஆனால் அந்த புத்தகம் முழுவதும் பக்தி மார்க்கத்தை மையமாக வைத்தே எழுதப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். கம்ப ராமாயணத்தை நாங்கள் ஒரு குழுவாக சேர்ந்து வாசிக்க ஆரம்பித்து இருக்கிறோம் ஆனால் போதிய அளவு இலக்கண ரீதியான புலமை எங்களிடம் இல்லை என்று ஐயம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

ஜெயமோகன் அவர்கள், நீங்கள் குழுவாக வாசிப்பது உங்களது வாசிப்பை எளிதாக்கும் என்றும், கவிதை வாசிப்பதில் உள்ள நுட்பமான உணர்வு கம்பராமாயணத்தை வாசிக்க வைக்கும் என்றும் பதிலளித்திருந்தார்.

சித்திரத்தில் ராமாயணத்தில் நடைபெற்ற முக்கியமான ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ராவணன் சீதையை பஞ்சடியில் இருந்து தூக்கிச் செல்லும்போது இடையூறாக வந்த ஜடாயுவை வீழ்தியதே இந்த ஓவியத்தின் கருப்பொருள்.

சடாயுவின் பின்புலக் கதைகள் என சில பாடல்கள் கம்பராமாயணத்தில் உள்ளது.சாடாயுவின் சகோதரன் சம்பாதியின் மரணம். தசரதனிடம் நட்பு கொண்ட தருணம் இவற்றையெல்லாம் பாடல்கள் மூலம் கம்பராமாயணம் விளிக்கிறது.

சடாயு உயிர் நீத்த படலம் என்று சடாயுவிற்கும் ராவணனுக்கும் நிகழ்ந்த போரையும், ஜடாயுவின் வீழ்ச்சியையும் கம்பர் கம்பராமாயணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்போது கழுகு வேந்தனாகிய சடாயு அசம்பாவிதம் உணர்ந்து வனத்தில் இருந்து ஆகாயம் நோக்கி செல்கிறார். ராவணனுடன் போர் புரிகிறார்.

போரில் இராவணனின் கொடி, குண்டலம், கவசம், வில் முதலியவற்றையும் தேரையும் தேர்ப்பாகனையும் சிதைத்து அழித்தான் சடாயு. இதனால் பெரும் கோபமுற்ற ராவணன் சிவனிடமிருந்து வரம் வாங்கி பெற்ற தனது சந்திரஹாசம் எனும் வாளால் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி எறிகிறான்.

வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால்

நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும்

மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன்

குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். – 3544

இந்தப் பாடல் வரிகளைத் தான் சித்திரமாக ரவிவர்மா வரைந்துள்ளார். ஜடாயுவின் சிறகுகள் இராவணன் வாளால் வெட்டி எறியப்படுகின்றன. ராவணனின் வெற்றிக்களிப்பில் சீதையின் பயத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

வீழ்ந்து போன ஒரு அரசனின் பாழடைந்த அரண்மனையில் ஒரு செல்லக்கிளி சுவரில் தீட்டப்பெற்றுள்ள அரசிளங்குமரி அவள் சேடிப்பெண் இவர்களின் ஓவியங்களை உயிர் உள்ளவர்கள் என தவறாக கருதி அவர்களிடம் தனக்கு உணவு கேட்பதாக ஒரு சோகமான பாடல் கூட உள்ளது.இவ்வாறு தமிழிலேயே பல பாடல்கள் ஒவியர்களையும் ஓவியங்களையும் குறித்து பாடப்பட்டிருக்கிறது.

ரவிவர்மாவின் ஓவியங்கள் உலகின் பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரது ஓவியங்கள் இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவானது. அது தவிர இந்திய ஓவிய மரபின்படி அந்த ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கவில்லை. மாறாக அவர் இறுதிவரை ஐரோப்பிய கலைப் பானியையே பின்பற்றினார்.

கேரளாவில் சடையமங்கலம் என்னும் ஊரில் jatayu Nature Park என்ற பெயரில் ஒரு பூங்காவை அமைத்து பராமரித்து வருகிறது. ஜடாயு காயமடைந்த சிறகுகளோடு தரையில் வீழ்ந்து கிடப்பதைப் போன்ற பெரிய சிற்பத்தினை வைத்துள்ளனர்.உலகின் மிக பெரியதான பறவையின் சிற்பம் ஜடாயு சிற்பம்தான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கனாவில் நிகழ்ந்த திருமணம் : எம்.சரவணக்குமார்
  2. டெறேன்ஸ் கஃபேவின் அழகிய மாலைப் பொழுது : எம்.சரவணக்குமார்
  3. மாவீரன் நெப்போலியன் முடிசூடும் விழா : எம்.சரவணக்குமார்
  4. இருளை வரைந்த ஓவியன்-எம்.சரவணக்குமார்
  5. பற்றி எரிந்த தேவாலயம் : எட்வர்ட் லியான் கோர்டஸின் ’நோட்டர் டாம்’-எம்.சரவணக் குமார்