அத்தியாம் – 3
முன் கதை – 1989.
பேருந்து சிறிது ஓய்விற்காக நின்றுகொண்டிருந்தது. எங்கே நின்றுகொண்டிருக்கிறது என்று சுரேஷிற்கு தெரியவில்லை. அவன் அருகில் கமலா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவன் மெல்ல எழுந்து பேருந்தைவிட்டு வெளியே வந்தான். பேருந்து நின்றிருந்த இடத்தைத் தவிரச் சுற்றிலும் இருட்டாக இருந்தது. லேசாகப் பனி பொழிந்துகொண்டிருந்தது. அவன் எதிரில் ஒரு சிறிய உணவகமும் அதன் வாசலில் ஒரு டீக்கடையும் இருந்தது. பேருந்தை விட்டு இறங்கியவர்கள் சிலர் டீகுடித்துக்
கொண்டிருந்தனர். ஓட்டுநரும் நடத்துனரும் உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சுரேஷ் சுற்றி ஒரு முறைப் பார்த்தான் தூரத்தில் இருளும் வெளிச்சமும் மெல்லப் புணர்ந்துகொண்டிருந்த இடத்தில் சில ஆண்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். சுரேஷும் மெல்ல அந்த இடத்தை நோக்கி நகர்ந்தான். அவனுள் இருந்த அச்சம் அவன் நடையில் நன்றாகத் தெரிந்தது. மேல் பாக்கெட்டையும் கீழே பேண்ட் பாக்கெட்டையும் ஒருமுறைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். பின் திரும்பி பேருந்து நின்றுகொண்டிருக்கிறதா என்று ஒருமுறைப் பார்த்துக்கொண்டான். சிறுநீர் கழித்துவிட்டு வேகமாகச் சென்று பேருந்தில் ஏறி கமலாவின் அருகில் உட்கார்ந்துகொண்டான். கடையைச் சுற்றிப் பல வண்ணங்களில் எறிந்துகொண்டிருந்த விளக்குகள் அவன் கண்களைக் கூசியதும் தலையைப் பேருந்தினுள் திருப்பிக்கொண்டான். கண்களை மூடியவாறே கமலா “இது எந்த இடம்” என்றாள்.
“தெரியல”
“யாரையாவது கேக்கலாம்ல”
“வேணாம். எப்படியும் பஸ் காலையில தான் போயி சேறும். உனக்கு எதாவது வேணுமா”
“ஒன்னும் வேணாம். நீங்க எங்கயும் போகாம பக்கத்துலயே இருங்க”
சுரேஷ் எதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில் நடத்துனரும் ஓட்டுனரும் பேருந்தில் ஏறினர். நடத்துனர் “பக்கத்துல எல்லாரும் இருக்காங்களா, யாருனா இன்னும் ஏறனுமா” என்றார். அனைவரும் ஒருமுறை தலையை மட்டும் சுற்றிச் சுற்றிப் பார்த்தனர். ஆனால், யாரும் அவருக்குப் பதில் சொல்லவில்லை. சில நொடிகள் காத்திருந்தவர், “ரைட்” என்று கத்தினார். பேருந்து மெல்ல பின்வாங்கி பிறகு சாலையில் தன்னை இணைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தது.
கமலா, சுரேஷின் தோல்களில் சாய்ந்துகொண்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். அவள் இவ்வளவு நேரமும் தூங்கிக்கொண்டிருப்பதாகவே சுரேஷ் நினைத்துக்கொண்டிருந்தான். அவள் துளிகூட தூங்கவில்லை. அவள் விழித்திருந்தாள் அவள் முகத்தில் தெரியும் அச்சம் அவனை மேலும் கலவரப்படுத்தும் என்று நினைத்தாள். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் இருவரும் ஊரைவிட்டு வந்துவிட்டோம். இனி என்ன என்ற கேள்வி இருவருக்குள்ளும் இருந்தது. அதைக் கேள்வி என்பதை விட அச்சம் என்று சொல்வதுதான் சரி. போனமுறை ஊருக்கு வந்த சுரேஷின் மாமா விஷயம் கேள்விப்பட்டு இருவரையும் தனியாக அழைத்துப் பேசியிருந்தார். எதாவது பிரச்சனையென்றால் தயங்காமல் ஊருக்குப் புறப்பட்டு வரும்படி சொல்லியிருந்தார். அவர் சொன்னதுபோலவே சிலநாட்களில் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. அதை முற்றவிட்டால் அதன்பிறகு ஒன்றும் செய்ய இயலாது என்று இருவருக்குமே தெரிந்தது. மாமாவிற்கு தந்தி அடித்துவிட்டு இருவரும் புறப்பட்டனர். கமலா கையில் கொஞ்சம் நகைகளும் சுரேஷிடம் கொஞ்சம் சேமிப்பும் இருந்தன. பெரும் இருட்டுக்குள் சிறிது வெளிச்சத்தை மட்டுமே நம்பி போயிக்கொண்டிருக்கும் இந்தப் பேருந்தப் போல அவர்களும் சென்றுகொண்டிருந்தனர்.
“இந்நேரம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்ல” என்றான் சுரேஷ்.
“நான் தூங்கலன்னு உனக்கு தெரியுமா?” என்று கண்களை மூடிக்கொண்டே கேட்டாள் கமலா.
“தெரியாது. ஆனா தூங்கறியா இல்லயான்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்.”
அவள் கண்களை திறக்காமலே மெல்லச் சிரித்தாள்.
“என்ன”
“ஒண்ணுமில்ல”
“தெரிஞ்சிருக்குமா”
“ம்”
இருவருமே அமைதியானார்கள். சுரேஷ் ஜன்னல் பக்கம் தலையைத் திருப்பிக்கொண்டான்.பனிக்காற்று உடலை நடுங்க செய்தது. நீண்ட நேரமாக எதிரில் எந்த வாகனமும் அவர்களைக் கடக்காததால் அவன் தடைபடாமல் தன் நினைவுகளில் மூழ்கியிருந்தான். இந்நேரம் என்ன ஆகிக்கொண்டிருக்கும். கமலா வீட்டிலிருந்து வந்து பிரச்சனை செய்ய தனக்கு ஊரில் யாருமில்லை என்று தோன்றியபோது முதல்முறையாக தனக்கு இதுவரை யாருமில்லை என்று நினைத்து மகிழ்ந்தான். ஆனாலும் அவர்கள் தன் முதலாளியிடம் சென்று தகராறு செய்ய வாய்ப்புள்ளது என்று அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும் தன் முதலாளியும் லேசுப்பட்ட ஆள் இல்லை என்று அவனுக்குத் தெரியும். அவரை நெருங்குவது அவர்களுக்குத்தான் சங்கடமாக முடியும். தனது நண்பர்களைக் குறித்து நினைத்தான் . அவர்கள் யாரிடமும் தான் சொல்லிவிட்டு வரவில்லை என்பது அவனுக்கு மிகுந்த வேதனையளித்தது. அவர்களுக்கு விஷயம் தெரியவரும் போது நிச்சயம் தன் மீது கோபம் கொள்வார்கள் என்று அவனுக்குத் தெரியும். மேலும் அவன் எங்கே சென்றிருப்பான் என்று அவர்கள் நிச்சயம் ஊகித்திருப்பார்கள். ஆனால், கோபத்தில் நிச்சயம் அவனைக் காட்டிக்கொடுக்கமாட்டார்கள் என்று நம்பினான். ஒருநாள் அவர்களுக்குப் புரிய வைத்துவிடலாம் என்றும் நினைத்துக்கொண்டான்.
பேருந்தில் கிட்டதட்ட அனைவருமே உறங்கிவிட்டனர். கமலாவும் உறங்கிவிட்டதை அவளின் மெல்லிய குறட்டையொளியின் மூலம் சுரேஷ் தெரிந்துகொண்டான். நூலிழையின் மீது ஏறும் எறும்பைப் போல் பேருந்து பார்த்து பார்த்து ஜாக்ரதையுணர்வுடன் மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தது. நேரம் என்னவென்று தெரிந்துகொள்ள விரும்பினான். எதிர் இருக்கையில் உட்கார்ந்திருந்தவர் கையில் கடிகாரம் இருந்தாலும் இருட்டில் எதுவும் தெரியவில்லை. தன் வாழ்நாளில் இதுவே மிகநீண்ட இரவாக இருக்கும் என்று அவன் நம்பினான். ஏதேதோ நினைவுகள் அந்த இரவில் அவனைக் கட்டியிழுத்து ஊஞ்சாலாட செய்துகொண்டிருந்தது. பேருந்து ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறிய அதிர்வில் உறங்கிக்கொண்டிருந்த பலர் சட்டென விழித்தனர். சிலர் மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றனர். சிலர் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். சுரேஷ் கமலாவைப் பார்த்தான். அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். இதுபோலவே அவள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு இரவும் நிம்மதியாக உறங்க வேண்டும். அதற்காகத் தான் என்ன வேண்டுமோ அத்தனையும் செய்ய வேண்டுமென்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
சுரேஷ் கண் விழித்தபோது விடியத் தொடங்கியிருந்தது. தான் எப்போது தூங்கினோமென்று யோசித்தான். அவனால் தன் நினைவுகளிலிருந்து அந்த தருணத்தை மீட்டெடுக்க முடியவில்லை. திரும்பி கமலாவைப் பார்த்தான். அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் திறுதிறுவென விழித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துச் சிரித்தாள்.
“என்ன”
“இப்படியா கொறட்ட விடுவ”
“அத நீ சொல்றியா”
“நான்லாம் கொறட்டயே விடமாட்டேன்”
“அதான் பாத்தேனே” என்று சொல்லிவிட்டு சுரேஷ் சுற்றி தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தான். கூஜா காலி என்றாள் கமலா. எச்சிலை விழுங்கிவிட்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். வானம் மெல்ல நிறமாறிக்கொண்டிருந்தது. பறவைகள் இயங்கத் தொடங்கிவிட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் தெரிந்தது. அவர்களை சுரேஷும் கமலாவும் நன்றாக கவனித்தனர். யாருமே அவர்கள் ஊர்க்காரர்கள் போலவே இல்லை. அதுவே இருவருக்குள்ளும் ஒரு கலக்கத்தை உருவாக்கியது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. யாரும் யாரையும் அச்சப்படுத்த விரும்பாமல் இருந்தனர். பேருந்து ஒவ்வொரு ஊராக நின்று சிலரை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது. பேருந்தின் இருக்கைகள் காலியாகத் தொடங்கின. சுரேஷ் சட்டெனக் கமலாவிடம் கேட்டான், “உனக்கு தமிழ் எழுதத் தெரியுமா”.
“பேசவே தெரியாது, எங்கிருந்து எழுதறது” என்று மலையாளத்தில் சொன்னாள் கமலா.
அவன் அமைதியாக இருந்தான். பிறகு அவள் “உனக்கு” என்றாள்.
“பேசனா புரியும். கொஞ்சம் தமிழ் தெரியும்”
“என் கிட்ட நீ சொல்லவேயில்லை.”
“நீ எப்போ கேட்ட”
“தமிழ் தெரியாம எப்படி இங்க…”
“மாமா இருக்காருல… நம்ப ஆளுங்களும் இங்க நிறைய இருக்காங்க”
சட்டென கமலா “அய்யோ” என அதிர்ந்தாள்.
“என்ன” என்று பதறினான் சுரேஷ்.
“எங்க மாமா ஒருத்தர் இங்கதான் போலிஸா இருக்காரு”
“நாசமா போச்சி போ”
“இப்ப என்ன பன்றது”
“தெரில, பாத்துக்கலாம். அவருக்கு உன்ன அடையாளம் தெரியுமா”
“நாலு வயசுல பாத்திருக்காரு. நிச்சயம் அடையாளம் தெரியும். போலிஸ்ல”
சுரேஷ் திரும்பி கமலாவை முறைத்தான்.
“என்ன”
“ஒண்ணுமில்ல, நீ நல்லா முகத்தை மூடிக்க, இந்த ஜன்னல் வழியா பாத்து கண்டுபுடிச்சிடப்போறாரு” என்று சுரேஷ் சொன்னதும் கமலா தன் முகத்தை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள். சுரேஷ் மெல்லச் சிரித்துக்கொண்டான்.
இருவரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தனர். சரியாக அரைமணி நேரம் கழித்து சுரேஷ் கமலாவை கூப்பிட்டு “ஊர் வந்துடுச்சி” என்றான்.
“எப்படி சொல்ற”
“அங்கப்பாரு” என்றான்.
மாஹேவின் நுழைவாயிலில் இருப்பதைப் போன்ற ஒரு நுழைவாயில் தூரத்தில் தெரிந்தது. அதன் அருகில் ‘வெல்கம் டூ பாண்டிச்சேரி’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது. அதைக் கடக்கும் வரை இருவரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். பேருந்து பாண்டிச்சேரி எல்லைக்குள் நுழைந்து தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது.