அத்தியாயம் 6

கோபி பாண்டிச்சேரிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்தது. அவன் மெல்ல மெல்ல இழைக்கப்பட்டு ஒரு வடிவத்திற்கு வந்திருந்தான். உலகம் புரியத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு காசும் அவனுக்கு முக்கியமாகப்பட்டது.தன் ஊரிலிருந்து வந்ததற்கும், தன் அம்மாவைப் பிரிந்ததற்கும் யார் யாரோ காரணமென்று இத்தனைக் காலம் அவன் நினைத்துக்கொண்டிருந்தது தவறு என்று புரிந்திருந்தான். அனைத்திற்கும் மூலகாரணம் பணம். அவன் வீட்டை அபகரித்தவர்கள், அவனை அவன் அம்மாவிடமிருந்து பிரித்தவர்கள், அவர்களைக் கேவலமாகப் பேசியவர்கள் என்று அவன் யார் மீதெல்லாம் கோவமாக இருந்தானோ அத்தனையும் தேவையற்றது என்று உணர்ந்திருந்தான். அவனது கோவம் அனைத்தையும் பணம் சம்பாதிக்கும் வெறியாக மாற்றினான். கிளாஸ் கழுவவும், டீக்கொண்டு கொடுக்கவும் அழைத்துவர பட்டவன் மெல்ல அடுப்பில் நின்று டீ போடத் தொடங்கியிருந்தான். சம்பாக் கோவிலின் அருகிலிருந்தது அந்த டீக்கடை.

‘மழைக்காலம் என்பது இந்நீண்ட வாழ்க்கையின் கசடுகளை தன் உடலிலிருந்து கழுவிக்கொள்வதற்காகக் கடவுள் தெளிக்கும் புனித நீர். அதில் நாம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நனைந்துவிட வேண்டும். மழையில் நனைதல் எப்போதும் குழப்பங்களிலிருந்து விடுவித்து நமக்குள் புதிய சிந்தனைகளை ஊட்டும். அது நம் வாழ்க்கையின் பாதைகளைத் திறக்கும்’ என்று எப்போதே அருகிலிருந்த மாதாகோவிலுக்கு வந்த ஒரு பெரியவர் இவன் கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும் போது யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தது கோபியின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அதன்பிறகு  எப்போது மழை பெய்தாலும் அதில் நனைய ஆசைப்படுவான். சில சமயம் நனையவும் செய்வான். அவ்வாறு அவன் நனையும் போதெல்லாம் ஒரு மழை நாளில் தான் தன் வீடு பிடுங்கப்பட்டு தானும் தன் அம்மாவும் துரத்தப்பட்டோம் என்று அவன் நினைவுகளில் சுரந்துகொண்டேயிருக்கும். அந்த மழையின் நீர் மட்டும் அவன் உடலிலேயே தங்கிவிட்டது. அது எப்போதும் அவனுள் வழிந்தவாறு அவனைத் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு மழை நாளில் நனைந்துகொண்டே நடந்து சென்றுகொண்டிருக்கும் போது தான் இனி வேலை செய்வது கூடாது. தான் சொந்தமாக டீக்கடை போட வேண்டுமென்று முடிவெடுத்தான். ஆனால், இந்த யோசனை அவனுள் வருவதற்குள் எட்டு ஆண்டுகள் கடந்திருந்தது.

இந்த எட்டு ஆண்டுகளில் அவன் ஊரைப் பிரிந்ததற்கோ, அம்மாவை பிரிந்ததற்கோ, தான் இப்படி கஷ்டப்படுகிறோமே என்றோ அவன் வருந்தியதேயில்லை. உண்மையில் அவன் கஷ்டப்பட்டதெல்லாம் இந்த ஊரைப் புரிந்துகொள்வதற்குத்தான். அதுதான் அவனைப் பாடாய்ப் படுத்தியது.

கோபி மாஹேவிலிருந்து பாண்டிச்சேரிக்கு வந்த போது அவனுக்குத் தோன்றியதெல்லாம் தான் ஏன் இவ்வளவு தூரம் தள்ளி இங்கு வந்து மொழி புரியாத ஒரு இடத்தில் கஷ்டப்பட வேண்டும் என்று தான். அவன் அம்மா அவனிடம் சொல்லியிருக்கிறாள் திருவனந்தபுரத்தைப் பற்றி, கண்ணூரைப் பற்றி, கொச்சியைப் பற்றி அல்லது பக்கத்திலேயே இருக்கும் கன்னியாகுமரியைப் பற்றி. ஆனால், நம்ம ஊர் ஆட்கள் மட்டும் ஏன் அவ்வளவு இடத்தையும் விட்டுவிட்டு இங்கு வந்து இருக்க வேண்டும். நாம் ஏன் வேறு ஒரு மொழிக்காரனிடம் திட்டு வாங்க வேண்டும்.

“டேய் கோபி… சீக்கிரம் தமிழ் கத்துக்கனும். அப்பத்தான் பொழைக்க முடியும்” என்று தன்னை அழைத்துவந்த மணி அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். மணி எப்போதும் ஞாயிறு மட்டும் மூன்று மணிக்கு கடையை அடைத்துவிடுவார். எப்போதாவது அவருக்குத் தோன்றினால் அருகில் இருக்கும் கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வீட்டிற்குச் செல்வார். அப்படி ஒருநாள் கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது தான் கோபி மணியிடம் கேட்டான்.

“சேட்டா… நாம ஏன் இந்த ஊர்ல இருக்கோம். நம்ப பாஷை பேசறவங்க இருக்க ஊர் நிறைய பக்கத்திலேயே இருக்கும் போது இவ்வளவு தூரம் தள்ளி ஏன் இங்க வந்து இருக்கோம்.”

மணி லேசாகச் சிரித்துக்கொண்டார்.

“என்ன சேட்டா”

“டேய் கோபி, இந்த பாண்டிச்சேரி இருக்கே இது மத்த ஊருங்க மாதிரி பிரிட்டீஷ்காரன் கட்டுப்பட்டுல இல்ல, இது பிரெஞ்சுக்காரன் கட்டுப்பாட்டுல இருந்துச்சு. அதனால தான் இங்க தமிழ் பேசனாலும் அது தமிழ்நாட்டோட இல்லாம தனியா இருக்கு. அதே பிரெஞ்சுக்காரன் கட்டுப்பாட்டுல இருந்த மத்த எடங்களும் சுதந்திரத்துக்கு பின்னாடி பாண்டிச்சேரியோடவே சேந்துடுச்சி. பாண்டிச்சேரி மொத்தம் நாலு இடமா பிரிஞ்சி கெடக்குது, பாண்டி, தமிழ்நாட்டுல காரைக்கால், ஆந்திராவுல யானம், கேரளாவுல இருக்கற நம்ப மாஹே. நாம் கேரளவுல இருந்தாலும், மலையாளம் பேசனாலும் நாம பாண்டிச்சேரிக்காரங்கத் தான். இது நம்ப ஊருதான். நாம ஒன்னும் வேற எங்கேயே பொழைக்க வரல. இங்க நமக்கும் எல்லா உரிமையும் இருக்கு”

கோபிக்கு மணி சொன்னதில் கொஞ்சம் புரிந்தாலும் அவனுள் நிறையக் கேள்விகள் எழுந்தன. குழப்பங்கள் மட்டுமே அவன் மனதில் அப்போது குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. ஆனால், ஒன்றை மட்டும் அவன் அப்போது மனதில் நிறுத்திக்கொண்டான், இது நம்முடைய ஊர். நம் வேற்று ஆள் கிடையாது என்பதை.

கோபிக்குத் தனியாக டீக்கடைப் போட வேண்டும் என்ற எண்ணம் வந்த சிறிது காலத்திலேயே காற்று அவன் பக்கம் வீச ஆரம்பித்தது. மணியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவளை ஊருக்கே அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கலாமென்று முடிவெடுக்கப்பட்டது. மணிக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் கோபியை முழுவதுமாக நம்பினார். அவனது பொறுப்பில் கடையை விட்டுவிட்டு ஊருக்குச் சென்றார். மணி ஊருக்குச் சென்ற அந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு காசுக்கும் சரியாகக் கணக்கெழுதி வைத்தான் கோபி. அவர் மாதத்திற்கு ஒருமுறை வந்து அனைத்தையும் சரிபார்த்துவிட்டுச் சென்றார். கோபியின் வேலை அவருக்கு முழு திருப்தி. ஊருக்குச் சென்றவர் எப்போதும் கோபியின் புராணத்தையே பாடிக்கொண்டிருந்தார். எப்போதாவது கோபியின் அம்மாவைச் சந்திக்க நேரும் போது, “நாராயணி உன் புள்ளயப் பத்தி மட்டும் நீ கவலைப்படாத, அவன் பொழைச்சிக்குவான், கெட்டிக்காரன்” என்று சொல்லிக்கொண்டிருப்பார்.

மருத்துவம் எதுவும் பலனளிக்காமல் மணியின் மனைவி இறந்துபோனாதால்  நொடிந்துபோயிர்ய்ந்தார். அவருக்கு இனி பாண்டிச்சேரிக்குப் போக வேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் போனது. இருந்தாலும் கடையென்று ஒன்று உள்ளதே. ஒருமுடிவுக்கு வந்தவராகப் பாண்டிக்குக் கிளம்பிச் சென்றார்.

“என்ன சேட்டா வந்ததுலருந்து ஒரு மாதிரியாவே இருக்க”

“ஒன்னுமில்லடா கோபி”

“எதுவா இருந்தாலும் சொல்லு சேட்டா”

“இனிமே கடை நடத்துற என்னமில்லடா, அதான் கடைய வித்திட்டு வீட்ட காலிபண்ணிட்டு ஊருக்கே போகலாம்னு இருக்கேன்”

“சேட்டா”

“புரியுதுடா கோபி, நீ திறமைசாலி, எங்க போனாலும் பொழச்சுக்குவா, நானே உனக்கு ஒரு ஏற்பாடு செஞ்சிட்டு போறேன்.”

அங்கே நீண்ட அமைதி நிலவியது. கோபியின் முகத்தைப் பார்க்கவே மணிக்குத் தயக்கமாக இருந்தது.

“சேட்டா”

“என்னடா”

“ஏதாவது பணக்கஷ்டமா, அவசரமா பணம் வேணுமா”

“ஏன்டா”

“சொல்லு சேட்டா”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா, வயசாயிடுச்சி, இனிமே இங்க இருந்து என்னப் பண்ணப்போறேன். ஊர்லயாவது பசங்க, சொந்தமுன்னு இருக்கு”

சிறிது யோசித்த கோபி, “அப்படினா இந்த கடைய எனக்கு குடு நானே நடத்துறன், உனக்குக் கொஞ்ச கொஞ்சமா காசு தந்துடறேன்.”

மணி உடனடியாக எந்த பதிலும் சொல்லவில்லை. உண்மையில் அதன் பிறகு அவர் அந்த இரவு முழுக்க அவனிடம் பேசவேயில்லை. கோபிக்கு தான் தவறாகக் கேட்டுவிட்டதாகவே தோன்றியது. காலையில் கோபி எழுந்திருக்கும் முன்பே  மணி எழுந்து எங்கோ சென்றிருந்தார். கோபி வழக்கமாக தன் வேலைகளைத் தொடங்கினான். கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினான். உதவிக்கு புதிதாக ஒரு சிறுவனை வேலைக்குச் சேர்த்திருந்தான். சிறிது இடைவெளி கிடைக்கும்போதெல்லாம் கோபிக்கு மணி ஞாபகம் வந்தது. எங்கே சென்றிருப்பார் இவர். தான் கேட்டது அவருக்கு கோவத்தை ஏற்படுத்தியிருக்குமே என்று குழப்பமாக இருந்தது. காலை ஒன்பது மணிக்கு மேல கடைக்கு வந்தார் மணி.

“என்ன சேட்டா கோவமா” என்றான் கோபி.

மணி லேசாகச் சிரித்துக்கொண்டார். கோபி அவருக்கு ஒரு டீ போட்டுக் கொண்டுவந்து கொடுத்தான். அதை வாங்கியவர், கோபியிடம், “கடைய மதியானத்தோட சாத்திடு” என்றார்.

கோபி சந்தேகமாக, “ஏன் சேட்டா” என்றான்.

“சாயங்காலம் ஊருக்கு போறேன். என் கூட கொஞ்சம் வா”

கோபி பதிலேதும் சொல்லவில்லை. மதியம் கடையை அடைக்கும் வரை மணி அங்கேயே உட்கார்ந்திருந்தார். இருவரும் எதுவும் பேசவில்லை. கடையை மூடியதும் கோபியிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டார். கோபிக்கு இது இந்தக் கடையில் தன்னுடைய கடைசி நாள் எனத் தோன்றியது. அவன் கண்கள் கலங்கியது. ஆனால், மணியிடம் அவன் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை. இருவரும் போகும் வழியில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றனர். மணி ஊருக்குப் புறப்பட ஆரம்பித்தார். அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை ஒருமுறைச் சுற்றிப்பாத்துவிட்டு வெளியே வந்தார். கோபி வீட்டைப் பூட்டியதும் வீட்டுச் சாவியையும் அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார். இருவரும் ஆட்டோ பிடித்தனர். மணி கோவிலுக்கு போயிட்டு போலாம் என்றார். ஆட்டோ மணக்குள விநாயகர் கோவிலை நோக்கிச் சென்றது. கோபிக்கு உடல் நடுங்கத் தொடங்கியிருந்தது. தீடீரென்று நடுத்தெருவுக்கு வந்ததுபோன்ற உணர்வு. ஒரு மழை இரவில் தன் அம்மாவுடன் வீட்டைவிட்டு வெளியே அதே நிமிடம் மீண்டும் தான் வாழ்வினுள் நுழைந்துவிட்டதோ என்று அவனுக்கு அச்சமேற்பட்டது. மணியிடம் கேட்களாமா என்றுகூட தோன்றியது. மணியின் மீது ஆத்திரமாக வந்தது. என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம் என்று பொருமையாக இருந்தான். ஆட்டோ மணக்குள விநாயகர் கோவில் அருகில் நின்றது. இருவரும் இறங்கி ஆட்டோவிற்கு காசுக் கொடுத்துவிட்டு கோவிலுக்குச் சென்றனர். மணி நீண்ட நேரம் ஏதோ வேண்டினார். பின்னர் கோபியிடம் வந்து, “வீட்டுக்காரர் கிட்ட பேசிட்டேன். சரியா வாடகை கொடுத்துடு. கடைய நல்லா நடத்து. எல்லாம் நல்லாதேவே நடக்கும்” என்று சொல்லிவிட்டு சாவியை வீடு மற்றும் கடை சாவியை கோபியிடம் கொடுத்தார். கோபியின் கண்கள் கலங்கியது. மணி அதன் பிறகு பாண்டிச்சேரி பக்கம் வரவேயில்லை. இது நடந்து சரியாக மூன்று மாதத்தில், ஆக்கிரமிப்பு என்று கூறி முனிசிபாளிட்டி காரர்கள் கோபியின் கடையை இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  2. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  3. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  4. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  5. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்