அத்தியாம் – 2

 1989, சென்னை.

வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருக்கும் ஒரு கோடை பகல். தனது ஜவுளிக்கடையில் தனியாக உட்கார்ந்திருந்தார் கணபதி. வேலையாள் மதிய சாப்பாட்டிற்குச் சென்றிருந்தார். சாலை வெறிச்சோடி போயிருந்தது. அவ்வப்போது சில சைக்கிள்களும் பல்லவன் பேருந்துகளும் சாலையைக் கடந்தவாறு இருந்தன. அந்த ஒருவழிச் சாலையில் எதிர் வந்த வாகனங்களையும் அதைச் சாக்காக வைத்து சற்று தள்ளி எதிரில் பூட்டப்பட்டிருந்த பாத்திரக்கடையையுமே மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கடையைப் பார்க்கப் பார்க்க அவர் தொண்டை அடைத்தது. தான் இத்தனை ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த காசும் மரியாதையும் அங்கே பூட்டப்பட்டு துருப்பிடித்துக்கொண்டிருப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒருபக்கம் கோபமும் மறுபக்கம் வருத்தமும் அவரை சுழற்றிக்கொண்டிருந்தன.  ஆனால், அவர் எப்போது எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாத ஒருவராகவே இதுவரை இருந்துள்ளார். அதிகபட்சமாக அவர் கோபப்படுவதையும் எரிச்சலாவதையும் யாராவது எப்போதாவது பார்த்திருக்கலாம். மற்றபடி அவர் உணர்ச்சிகளை மூடி மறைக்கும் வித்தையைக் கற்றவர்.

வேலையாள் சாப்பிட்டுவிட்டு வரும்போதே அவருக்குக் கூடையில் உணவுகளைக் கொண்டுவந்தார். கூடையை அவர் மேஜையின் அருகே வைத்துவிட்டு துணிப்படுதாவை எடுத்து வெய்யில் உள்ளே வராமல் இருக்க வாசலில் இருபுறமும் இருந்த கொக்கிகளில் மாட்டிவிட்டு வந்து உள்ளே மூலையில் தனது இருக்கையில் உட்கார்ந்துகொண்டார். வேலையாளின் செயலை ஒரு இயந்திரம் போல் கவனித்துக்கொண்டிருந்தார் கணபதி. அவருக்குச் சாப்பிட பிடிக்கவில்லை. வழக்கமாக அவர் வேலையாள் சாப்பிட்டு வந்ததும் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு சற்று ஓய்வு எடுத்துவிட்டு வருவார். கடந்த சில நாட்களாக அவர் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்குச் செல்லவில்லை. உண்மையில் அவருக்கு வீட்டிற்குச் செல்லவே பிடிக்கவில்லை. வீட்டிற்கு வந்து தங்கியிருக்கும் தனது மாமியாரையும் அவளது மருமகளையும் அவருக்குப் பார்க்கவே பிடிக்கவில்லை. கைக்குழந்தையுடன் அவள் எப்போதும் அவர் வரும் வழியில் உட்கார்ந்திருப்பதும் இவரைப் பார்த்ததும் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தனது மாமியாரையும் பார்க்கவே அவருக்கு வெறுப்பாக இருந்தது. மீண்டும் எட்டிப் பூட்டப்பட்டிருந்த கடையைப் பார்த்தார். அது அவர் தனது மனைவியின் தம்பிக்காக வைத்துக்கொடுத்த பாத்திரக்கடை. திறமையற்ற அவரது செயல்களால் அது மூடப்பட்டுக் கிடக்கிறது. மேலும் கடந்த பத்து நாட்களாக அவர் காணாமல் போய்விட்டார். அவர் பிரச்சனைக்குப் பயந்து ஓடிவிட்டதாகத் தகவல்கள் பரவ ஆரம்பித்திருந்தது. பிள்ளையைக் காணவில்லை என அவரது மாமியார் தனது மருமகளையும் அழைத்துக்கொண்டு வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறாள். காவல் நிலையத்தில் புகார் அளித்தாகிவிட்டது. சொந்தங்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியாகிவிட்டது. எந்த தகவலும் இல்லை. தான் தொடர்ந்து தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று மட்டும் கணபதிக்கு தோன்றிக்கொண்டேயிருந்தது.

கணபதி தான் தன் மச்சானுக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். அவரை வளர்த்துப் படிக்க வைத்ததும் அவர்தான். ஒரு தொழில் வேண்டுமே என்று தனது கடைக்கு எதிரியிலேயே ஒரு கடையை அமைத்துக்கொடுத்தார். ஆனால், எதுவும் அவர் எண்ணம் போல நடக்கவில்லை. அவர் கஷ்டப்பட்டுப் போடும் கோடுகளையெல்லாம் காலத்தின் அலைகள் கொஞ்சம் கூட தயவு தாட்சண்ணியமில்லாமல் அழித்துக்கொண்டேயிருந்தது. அதற்கேற்றாற்போல் அவர் பார்த்துவைத்த பெண்ணும் குடும்பத்தைக் கரை சேர்பவளாக இல்லை. தான் வளர்த்து ஆளாக்கியவன் இப்படி தன் கண்ணெதிரே சீரழிகிறானே என அவர் நாளுக்கு நாள் வேதனையடைந்தாலும் வழக்கம் போல் அவர் அந்த உணர்ச்சியைக் கூட வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

வேலையாள் “சாப்பாடு எடுத்தாந்து நேரமாச்சி” என அவருக்கு நினைவூட்டினான். அவர் தலையை மட்டும் அசைத்துவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். மதிய நேரத்தில் அவர் கடைக்கு யாரும் வருவதில்லை. வியாபாரமெல்லாம் காலையிலும் மாலையிலும் தான். தூரத்தில் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு மனிதனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவன் நெருங்க நெருங்க அவர் கண்கள் சட்டென இருட்டியது. ஒருகணம் தலையைக் குலுக்கி நிமிர்ந்தார். அந்த மனிதன் அவரைக் கடந்து சென்றுகொண்டிருந்தான். தான் பசி மயக்கத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தார். பின் எழுந்து வெளியே சென்று கைகளைக் கழுவிவிட்டு வந்து கூடையை எடுத்து மேஜை மீது வைத்த நொடி அவர் மாமியார் வேகமாகக் கடைக்குள் நுழைந்தார். அவர் கைகளில் ஒரு கடிதம் இருந்தது. அவர் என்ன என்பது போலப் பார்த்தார்.

“இப்பதான் வந்துச்சி” என்று கடிதத்தை தன் மருமகனிடம் நீட்டினார். கடைக்குப் பக்கத்துத் தெருவில் தான் அவர் வீடு இருந்தது. தபால்காரர் சற்று முன் தெருவுக்குள் நுழைந்ததைக்கூட அவர் பார்த்திருந்தார். கடிதத்தை வீட்டில் ஏற்கனவே படிக்கச்சொல்லிக் கேட்டுவிட்டு விஷயம் முக்கியமானது எனத் தெரிந்து தான் தனது மாமியார் வந்திருக்கிறார் எனக் கணபதிக்குத் தெரியும். கணபதி கடிதத்தின் வரிகளில் தன்னை நுழைத்துக்கொண்டார். பசி மயக்கம் மறந்துவிட்டது. இனிதான் செய்தியைப் புதிதாகக் கேட்கப் போவது போல அவர் மாமியார் தவிப்புடன் இருந்தார். கடிதத்தைப் படித்து முடித்த கணபதி சோர்வாகத் தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். கடிதத்தை மேஜை மீது எறிந்தார். அவரது மாமியார் அவர் என்னச் சொல்லப் போகிறார் என்ற ஆவலுடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென எரிச்சலடைந்த அவர், “இப்ப எதுக்கு என் மூஞ்சிய பாத்துனு இருக்கீங்க. அதான் உங்கப்புள்ள சொல்லிட்டான்ல, பாண்டிச்சேரில இருக்கேன். அங்கயே தொழில் பண்ணப்போறேன், வீடு பாத்துட்டு வந்து கூட்டிகினு போறன்னு. போங்க. போயி ஆவுறக் கதையப் பாருங்க” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். சிறிது நேரம் நின்றுகொண்டிருந்த அவரது மாமியார் பின் கடிதத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

பாண்டிச்சேரியில் அவர் மச்சான் சந்திரன் தனது தங்கையின் வீட்டில் தான் இத்தனை நாட்களாக இருந்தார் என்று தெரிந்ததும் தான் கணபதிக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. உண்மையில் அவர் வெளியே சொல்லவில்லையென்றாலும் எதாவது விபரீதமாக நடந்திருக்குமோ என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார். இப்போது சந்திரன் பாண்டிச்சேரியில் இருப்பது அவருக்குச் சற்று ஆறுதலாக இருந்தாலும், அங்கே என்னத் தொழில் செய்து எப்படிப் பிழைக்கப் போகிறான் என்ற கவலை புதிதாக அவர் மனதில் துளிர்விட்டது.

சரியாக ஒருமாதம் கழித்து சந்திரன் வந்தார்.அதற்குள் பாண்டிச்சேரியில் வீடு பார்த்து குடும்பத்தை அங்கே மாற்றியிருந்தார். கடைக்குள் நுழைந்த சந்திரன் நீண்ட நேரம் கணபதியின் எதிரில் நின்றுகொண்டிருந்தார். இருவரும் எதுவும் பேசவில்லை. பிறகு பொறுமையிழந்த சந்திரன், “நான் துணி வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன்” என்றார். கணபதி பதிலும் எங்கோ பார்த்தபடி “ம்” என்றார். அதன் பிறகு மீண்டும் மெளனம்.

இருவராலும் பார்வையை பரிமாறிக்கொள்ள முடியவில்லை. கேட்கவும் சொல்லவும் ஆயிரம் இருந்தாலும் இருவருக்குள்ளும் வார்த்தைகள் ஒளிந்துகொண்டன. எதாவது தவறான ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்துவிடுவோமோ என்று இருவருமே அஞ்சினர்.

“செரி நான் கிளம்பறன்”

“இரு” என்று சொல்லிவிட்டு உள்ளே இருந்து ஒரு துணிப்பையை எடுத்து அவரிடம் கொடுத்தார் கணபதி. அதை வாங்கிய சந்திரன் உள்ளே இருக்கும் பணத்தைப் பார்த்துவிட்டு, “இல்ல இருக்கட்டும்” என்று திரும்பக் கொடுக்க முயல, கணபதி முறைப்பதைக் கண்டு “வரேன்” என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். கணபதி பதிலேதும் சொல்லவில்லை.

வெளியே வந்த சந்திரன் அந்த சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு நேராகப் பூட்டப்பட்டிருந்த தன் கடையின் அருகில் சென்று நின்று அதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டதைத் தனது இருக்கையிலிருந்து கணபதிப் பார்த்துக்கொண்டிருந்தார். கடையின் ஷட்டரை ஒருமுறை தடவிப்பார்த்தவர் சட்டெனத் திரும்பி வேகமாக நடக்கத் தொடங்கினார். இதைக் கணபதியைத் தவிர அருகிலிருந்த சில கடைக்காரர்களும் பார்த்துக்கொண்டிருந்தனர். சந்திரன் அங்கிருந்து சென்றது, பக்கத்துக்கடைக்காரர் வந்து கணபதியிடம் “என்ன மச்சான் வந்துட்டு போறாரு போல” என்றார். கணபதி ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தார். அவர் அப்போதும் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

சந்திரன் பேருந்தில் பாண்டிச்சேரிக்குச் சென்றுகொண்டிருந்தார். எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிட்டதாக அவர் நம்பினாலும் அவர் மனம் முழுக்க அச்சம் மட்டுமே நிரம்பியிருந்தது. அந்த அச்சம் மட்டுமே அவரை தொடர்ந்து வீழ்த்திக்கொண்டிருந்தது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  2. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  3. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  4. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  5. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்