அத்தியாயம் 5
1999க்கு பிறகு.
பாண்டிச்சேரியில் டெம்போ என்று ஒரு பொது போக்குவரத்து நீண்ட காலமாகவே உண்டு. அதன் வடிவமும் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். முன்பு அதை சிலர் விக்ரம் என்ற பெயரிலும் அழைத்தனர். பெரும்பாலும் பாண்டிச்சேரியின் டவுன் பகுதிகளில் மட்டுமே செயல்படும் ஒருவகையான ஷேர் ஆட்டோ. ஆட்டோ போன்று மூன்று சக்கர வாகனம் தான் என்றாலும் அதை நிச்சயம் ஆட்டோ கிடையாது. ஓட்டுநரின் அருகில் இரண்டு பேரும். பின்பக்கத்தில் ஏழிலிருந்து பத்துபேர் வரை அடைத்துக்கொண்டு செல்லும். புதுச்சேரிப் பேருந்து நிலையத்தின் வெளியே அதற்கென ஒரு தனி ஸ்டாண்டு உண்டு. பேருந்து நிலையத்திலிருந்துப் புறப்பட்டால் சில டெம்போக்கள் அண்ணாசாலையின் வழியாகவும் சில டெம்போக்கள் புஸ்ஸி வீதி வழியாகவும் செல்லும். புஸ்ஸி வீதி வழியாகச் செல்லும் டெம்போக்களில் அதிகம் பயணிப்பது பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களாகவே இருப்பார்கள்.
குமார் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சிலகாலம் அங்குமிங்குமாக சுற்றிக்கொண்டிருந்தான். பிறகு வீட்டின் அருகிலிருந்த ஒரு ஆட்டோ மெக்கானிக்கின் சகவாசம் ஏற்பட்டு அவருடனே சுற்ற ஆரம்பித்தான். விழித்திருக்கும் பெரும்பாலான நேரம் அவன் அவருடைய ஷெட்டிலேயே கழித்தான்.
முதலியார்பேட்டை ஆலை ரோட்டில் இருந்தது சுபாஷின் ஆட்டோ ஷெட். ஒரு சிறிய கடையும் அதன் வெளியே ஒரு கொட்டகையுமாக இருந்தது. கருவிகளையும் கழற்றிய பாகங்களையும் கடையின் உள்ளே இருக்கும். கொட்டகையில் நிறுத்தித்தான் ஆட்டோக்கள் வேலைப்பார்க்கப்படும். சுபாஷின் தொழில் நேர்த்தி சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி என்பதால் சுபாஷிற்கு எப்போதும் வேலை இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனால், அவன் தனக்கென ஒரு உதவியாளனை வைத்துக்கொண்டதே இல்லை. பெரும்பாலும் ஆட்டோவைக் கொண்டுவரும் டிரைவர்களையே அவன் வேலை வாங்குவான். குமார் அவனிடம் ஒட்டிக்கொண்டதும் சுபாஷிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் குமார்தான் செய்தான். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் குமார் சுபாஷிடம் வேலை செய்வதாகவே கருதினர். சிலர் குமாரிடம் “இன்னா சம்பளம் கொடுக்கறான்” என்பார்கள். அதற்கு குமார் அவசரமாக “நான் அங்க வேலலாம் செய்யல” என்பான். கேட்டவர்கள் சிரித்துக்கொள்வார்கள். ஆனால், சுபாஷ், குமாரை ஒரு வேலையாளைப் போலத்தான் நடத்தினான். அவன் சொல்வதை சரியாகச் செய்யவில்லையென்றால் திட்டுவான். சில சமயம் ஸ்பேனரால் கூட அடிப்பான். குமார் அவனையும் அறியாமல் சுபாஷின் தொழிலை மெல்லக் கற்றுக்கொண்டான். சுபாஷும் சில சமயம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்தான்.
சம்பளம் தான் தரவில்லையே தவிர வாராவாரம் சினிமாவிற்கும், குடிப்பதற்கும் சுபாஷ் நன்றாகச் செலவு செய்தான். சுபாஷ் தனக்கு இருந்த அனைத்துக் கெட்டப் பழங்களையும் குமாருக்குக் கற்றுக்கொடுத்தான். சுபாஷ் இல்லாத ஒரு மதிய நேரத்தில் அவசரமாக பிரேக் ஒயர் மாட்ட வந்த ஒரு ஆட்டோவிற்கு குமாரே ஒயரை மாற்றிவிட்டு காசை வாங்கி வைத்து, சுபாஷ் வந்ததும் அவனிடம் கொடுத்தான். சுபாஷ் எதுவும் பேசாமல் அதை வாங்கி வைத்துக்கொண்டு, அன்று இரவு குமார் வீட்டிற்குப் போகும்போது அவனுக்கு முதல் முறையாகச் சம்பளம் கொடுத்தான். அன்றிலிருந்து குமார் சுபாஷின் அதிகாரப்பூர்வ உதவியாளன் ஆனான்.
குமாரின் கிரீஸ் கண்களில் காதல் துளிர்விட்டிருப்பதை சுபாஷ் தெரிந்துகொண்டபோது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. மாலை வேளைகளில் அவன் சட்டென மறைந்துவிடுவதைத் தொடர்ந்து சுபாஷ் கவனிக்கத்தவரவில்லை. அப்படி ஒரு மாலை குமார் வெளியே சென்று திரும்பி வருகையில் அவனுக்காகவே கோவத்துடன் காத்திருந்த சுபாஷ், அவர் வந்தவுடனேயே தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினான்.
“எங்கடா போயி மேஞ்சிட்டு வரப் பொறம்போக்கு”
சுபாஷ் இந்த கேள்வியை குமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுபாஷ் குமாரைத் திட்டியிருக்கிறான். இப்போது கேட்ட இந்த தொனி புதியது. அது குமாருக்கு அச்சமேற்படுத்தியது. அவன் அதிர்ச்சி கலந்த பார்வையுடன் சுபாஷைப் பார்த்துக்கொண்டிருந்தான். சுற்றி இருந்த ஆட்டோ டிரைவர்கள் சுபாஷை சமாதானப்படுத்த முயன்றார்கள்.
“வுடு சுபாஷ்…”
“கம்முன்னு இருணா” என்று அவர்களை அதட்டியவன் மீண்டும் குமாரிடம் எகிறினான்.
“ங்கோத்தா உன்னத்தாண்டா கேக்கறன். எவக்கூட போயி மேஞ்சிட்டு வர”
சுபாஷின் கடைசி வார்த்தைகள் குமாரின் அச்சத்தின் பாதையிலிருந்து கோவத்தின் பாதைக்குத் திருப்பியது.
“ண்ணா… உனுக்கு அவ்ளோ தான் மரியாத… தேவ இல்லாத பேச்செல்லாம் பேசாத”
“அடிங்கோத்தா பொறம்போக்கு… என் சோத்த துண்ட்டு எங்கிட்டயே எகுர்ரியா. த்தா… இனிமே உன்ன இந்த ஷெட்டாண்டப் பாத்தேன்… அத்துப்போட்டுவேன்…”
குமார் எதுவும் பேசாமல் சுபாஷை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். சுற்றியிருந்த ஆட்டோக்காரர்களுக்கு சங்கடமாக இருந்தது.
அலைகள் பாறைகளில் தெறித்து சிதறிக்கொண்டிருந்தது. கடற்கரையை ஆக்கிரமித்திருக்கும் பாறைகளில் பல இடங்களில் பாசி படிந்திருந்தது. சிலர் பாறைகளில் நின்றும் உட்கார்ந்தும் அலைகளோடு விளையாடிக்கொண்டிருந்தனர். சிலர் பாறைகளில் மறைவுகள் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தனர். குமாரும், சுஜாதாவும் கடற்கரையின் வடக்கு திசையின் கடையிலிருந்த சாராய ஆலையின் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர். இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நடைபயிற்சியிலிருந்தவர்களும் அந்த பக்கமாக சென்றுகொண்டிருந்தவர்கள் ஒருகணம் இவர்களைப் பார்த்துவிட்டே சென்றனர். அவர்கள் அவ்வாறு பார்க்கும் போதெல்லாம் குமார் எரிச்சலடைந்தான்.
“இப்ப என்ன பண்லாம்ன்னு இருக்க” என்று பேச்சைத் தொடங்கினாள் சுஜாதா.
“ஏதாவது செய்யனும்”
“வேற எங்கனா வேலைக்கு போவப்போறியா”
“இல்ல, தனியா ஷெட் போடனும்”
“காசு”
“தெரில”
“எங்கூட்டுல எப்ப வந்து பேசப்போற”
“இப்ப போலாமா”
“உங்கூட்டுலருந்து எல்லாரையும் கூட்டின்னு வா”
“எங்கூட்ல யாரு இருக்கா”
“ஊங்கப்பாவ இட்டுனுவா”
“அந்தாளு வரதுக்கு வராமலயே இருக்கலாம்”
“இப்ப இன்னாதான் பண்ணப்போற”
“நீ உங்கூட்டுல மொதல சொல்லு, இன்னா சொல்றாங்கன்னு பாப்போம்”
சுஜாதா அமைதியாக இருந்தாள்.
“இன்னா”
“இருட்டுது போலாமா”
“ம்”
குமார் பத்தாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சுபாஷிற்கு உதவியாளனாக மாறிய பின், ஒரு ஆட்டோவை முழுவதுமாக பிரித்து மாட்டும் வேலைக்காக இரண்டு முழு நாட்கள் உப்பளம் அவ்வை நகரில் சுபாஷுடன் வேலை பார்க்க நேர்ந்தது. அவர்கள் வேலை பார்த்த வீட்டிற்குப் பக்கத்து விட்டில் தான் சுஜாதா தன் அம்மாவுடன் இருந்தாள். முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். தன் மகள் எப்படியும் பாஸ் ஆகிவிடுவாள் , அவளை ஒரு டிகிரி படிக்க வைத்துவிட வேண்டும் என்ற கனவு அவள் அம்மா சரளாவிற்கு இருந்தது.
அந்த இரண்டு நாட்கள் குமார் தொடர்ந்து சுஜாதாவின் கண்களில் பட்டுக்கொண்டேயிருந்தான். அவளுக்கு அவன் ஒரு முழுக்கோமாளியாகத் தெரிந்தான். ஆனாலும் பிடித்திருந்தது. தன்னை சுஜாதா கவனித்துக்கொண்டிருக்கிறாள் என்பதும் தொடக்கம் முதலே குமார் கவனித்துக்கொண்டிருந்தான். முதல் நாள் வேலை முடிந்து அசெம்பள் செய்த ஆட்டோவை ஓட்டிப்பார்க்கும் போது ஒரு சிறு விபத்து ஏற்பட்டது. மறுநாள் குமார் வந்ததுமே சரளா அவனிடம் ‘ரொம்ப அடியா’ என்றாள். அவனுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. டூல் பாக்ஸ் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். பின்னால் சுஜாதா சிரிப்பது அவனுக்குக் கேட்டது. அன்று முழுவதும் சுஜாதாவின் உருவத்தை அவன் நினைவுகளில் பதிய வைத்துக்கொண்டிருந்தான். அன்று வேலை முடிய இரவு பதினொறு மணியாகிவிட்டது. அனைத்தையும் மூட்டைக்கட்டிக்கொண்டு அவர்கள் போனபோது சுஜாதா அவனைப் பார்த்து தலையசைத்ததை அவன் தன் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்க்கத்தக்க ஒரு நிகழ்வாக அமைந்தது. மறுநாளே குமார் தன் காதல் சித்து விளையாட்டை ஆரம்பித்தான். தினமும் மாலை நாலே கால் மணிக்குப் பள்ளியிலிருந்து வீடுவரை சுஜாதாவின் பின்னால் போவதை ஒரு தினசரி நடவடிக்கையாகச் செய்தான். பன்னிரண்டாம் வகுப்பில் சுஜாதா ஃபெயில் ஆகி ஒரு கம்பெனியில் வேலைக்குப் போகும் போது அவர்கள் காதல் முழுவதும் மலர்ந்திருந்தது. இந்த நேரத்தில் தான் சுபாஷுடன் ஏற்பட்ட தகராரில் அவன் வெளியே வந்து தனியாக ஒர்க் ஷாப் வைக்க முயற்சிதான். ஆனால், இருவருக்கும் பொதுவான சிலர் அவனை தடுத்தார்கள். ‘இப்போது அவனுக்குப் போட்டியாக ஒர்க் ஷாப் வைத்தால் பகை தான் வளரும் என எச்சரித்தார்கள்’. அவனுக்கு அது சரியென தோன்ற, தெரிந்த ஒரு ஆட்டோ டிரைவர் மூலமாக வாடகைக்கு ஆட்டோ எடுத்து சிலகாலம் ஓட்டினான். பிறகு அது சரிவராமல் டெம்போ ஓட்ட ஆரம்பித்து அதுவே அவன் முழு நேர வேலையானது. அவனது ஒர்க் ஷாப் கனவு கனவாகவே போனது.
சுஜாதாவின் பிரசவத்தின் போது பெரிய சிக்கலை சந்தித்தான் குமார். இரட்டைக் குழந்தை என்பதாலும் வேறு சில மருத்துவ காரணங்களுக்காகவும் சுஜாதாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். தேவைபட்ட ரத்தம் எங்கேயும் கிடைக்கவில்லை. கடைசியாக சுஜாதாவின் அம்மா, தன் வேலைப் பார்த்த உணவகத்தின் கேஷியரான சந்திரனை அழைத்துக்கொண்டு வந்தாள். சந்திரனும் எவ்வித தயக்கமும் இல்லாமல் ரத்தம் கொடுத்ததோடு, தனது மருத்துவமனை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களைக் கொண்டு சுஜாதாவை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டினார். மேலும் அறுவை சிகிச்சை முடியும் வரை அவர்களோடு இருந்தார். அன்றிலிருந்தே குமாருக்குச் சந்திரனை மிகவும் பிடித்துவிட்டது. டெம்போ ஓட்டும் போது வழக்கமாக அந்த ஓட்டலிலேயே டீ குடிக்கவும், உணவருந்தவும் தொடங்கினான். சந்திரனும் குமார் வரும்போதெல்லாம் அவனுடன் நன்றாகப் பேசி கவனிப்பார். குமாரின் மூலமாக மேலும் சில டெம்போ டிரைவர்கள் சந்திரனுக்கு பழக்கமானார்கள்.
வழக்கமாக காலையில் பேருந்து நிலையத்திலிருந்து அஜந்தா தியேட்டர் வரை இரண்டு டிரிப் ஓட்டிவிட்டு உணவகத்திற்கு சாப்பிட வந்தான் குமார். அவன் வரும்போதே சந்திரன் தூரத்தில் பெருமாளிடம் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தான். அவன் நேராக உள்ளே வரும் போதே மனோஜ் கல்லாவில் இருப்பதைப் பார்த்தான். நேராக சென்று டேபிளில் உட்கார்ந்தான். அவன் வழக்கமாக என்ன சாப்பிடுவான் என்று அங்கு அனைவருக்கும் தெரியும். அவன் மாமியார் இன்னும் அந்த உணவகத்தில் தான் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவன் வருவதையும், போவதையும் அவள் கண்டுகொள்வதில்லை. அவள் ஒன்றை மட்டும் அவனிடம் திடமாக சொல்லியிருந்தாள், ‘என் பேரச் சொல்லி ஓசியில் சாப்பிடாத’ என்று. அவனும் இதுவரை அப்படிச் செய்ததில்லை. குமார் சாப்பிட ஆரம்பித்தபோது மனோஜ் டீ மாஸ்டரிம் விசாரித்ததையும், அவன் அழுது புலம்பியதையும் கவனித்தான். அவர்கள் இருவருமே சந்திரனை ஒருமையில் பேசியதையும், கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டியதையும் அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. என்ன நடக்கிறது பார்ப்போம் என்று பொறுமையாகக் காத்திருந்தான்.